அறமும் தமிழும் வளர...

தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியம் முதற்பொருளில் முதலாவதாகத் தெய்வத்தை வைக்கிறது.
அறமும் தமிழும் வளர...
Updated on
3 min read

தமிழர் வாழ்வியலில் மெய்யியல் கோட்பாடுகள் சிறப்பான இடம்பெறுகின்றன. அதனால்தான் தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியம் முதற்பொருளில் முதலாவதாகத் தெய்வத்தை வைக்கிறது.

பிறவாப்பெருநிலை என்பதே உயிர்களின் லட்சியம் என தத்துவ ஆராய்ச்சிகள் தமிழில் எல்லாக் காலத்திலும் இருந்துள்ளன. கற்றலின் பயன், அறம், பொருள், இன்பம், வீடடைதல். வீடடைதல் என்பது தமிழ் மரபில் இல்லை. அறம், பொருள், இன்பம் என்று மூன்று பகுப்புகளை மட்டுமே திருக்குறள் சொல்கிறது; அதனால் தமிழர் மோட்சம் என்ற கருத்தியலை ஏற்கவில்லை என்று வாதிடுகின்றனர்.

தமிழரின் பிறவாப்பெருநிலை என்ற வீடடைதலை வள்ளுவப் பேராசான் தனியே வைக்கவில்லை; ஆனால் அறம், பொருள், இன்பம் என்ற மூன்றின் பயனும் வீடடைதலில் முடியும் என்ற நம்பிக்கையோடு இந்த மூன்று பகுப்புகளின் உச்ச நிலையும் வீடடைதல் என்று சொல்லி வைத்துள்ளார்.

தெய்வமும் தத்துவமும் அதற்கான ஆராய்ச்சிகளும் சமூகத்துக்கு அவசியமானதாக இருந்ததை தமிழ் இலக்கியங்கள் சொல்லிக்கொண்டிருக்கின்றன. நிலையாமைத் தத்துவத்தை சங்க காலம் தொடங்கி இலக்கியங்களில் பார்க்கிறோம்.

சிலப்பதிகாரம், மணிமேகலை எனக் காப்பியங்கள் பல்வேறு சமயங்கள் முன்வைக்கும் தத்துவங்களைப் பேசுகின்றன. சமய விவாதங்கள் நடைபெற்றன, மணிமேகலைக் காப்பியத்தில் தத்துவங்களுக்கான விளக்கங்களுடன் நுட்பமாக விவரிக்கப்பட்டுள்ளது. ஆக, தமிழரின் மெய்யியல் கோட்பாடுகள் எல்லாக் காலத்திலும் மதிப்பு மிக்கதாகவே இருந்துள்ளன.

தமிழரின் தனிப் பெருமை சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது என்கிறோம். அதாவது, சமூகத்தில் எது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வளர்க்கவும் அமைப்பு தேவை என்பது நமது முன்னோரின் முடிவு.

தமிழ் வளர்க்க தமிழ்ச் சங்கம் வைத்தார்கள். நமது மெய்யியல் கோட்பாடுகளைப் பாதுகாக்கவும், வளர்க்கவும் வழிகாட்டுதலை வழங்கவும் மடங்களை அமைத்தார்கள்.

மடம் என்ற சொல்லுக்குத் தவம் புரிவோர் வாழும் இடம், முனிவர் வாழும் இடம், சந்நியாசிகளான ஆச்சாரியர்கள் வாழும் இடம் என்று அகராதிகள் பொருள் சொல்கின்றன. இவையெல்லாம் ஆரியத் திணிப்பு என்று சொல்வதற்கும் இல்லை. தமிழரின் முறைதான் என்பதற்குத் திருமந்திரமே சான்று.

திருமந்திரத்தின் ஒன்பதாம் தந்திரத்தில் மகுட ஆகமத்தில் குருமட தரிசனம் என்ற தலைப்பில்,

"பலியும் அவியும் பரந்து புகையும்

ஒலியும் எம் ஈசன் தனக்கென்றே

உள்கிக்குவியும் குருமடம்' (2649)

என்று மடங்களில் வேள்விகளும், தியானமும், மந்திர ஜபமும், நிவேதனங்களும் என வழிபாடுகள் சிவனடியார்களால் செய்யப்படுவதையும் குரு வாழ்வதையும் பதிவு செய்கிறது.

ஏழு மடங்கள் இருந்ததாகத் திருமந்திரத்தின் 101}ஆவது பாடல் சொல்கிறது.

"வந்த மடம் ஏழு மன்னும் சன்மார்க்கத்தின்

முந்தி உதிக்கின்ற மூலன் மடம் வரை'

என்று சன்மார்க்கத்தைப் போதிக்க மடங்கள் இருந்ததைச் சொல்கிறது.

தற்போதைய அரசியல், சைவ மடங்களை விமர்சித்தும் வள்ளலாரின் சன்மார்க்க சங்கத்தைக் கொண்டாடியும் வருகிறது. சன்மார்க்கம் பரவ வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளே மடங்களுக்கும்

வள்ளலார் நிறுவிய அமைப்புக்கும் இருப்பதைப் புரிந்துகொள்ளாதது அறியாமையே. திருமந்திரத்தில் ஏழு மடங்கள் சொல்லப்பட்டிருக்க, காளமேகப்புலவர், சைவத் திருமடங்கள் பதினெட்டு என்கிறார். இதைத் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையரும் ஒப்புக்கொண்டு விளக்கியிருக்கிறார். பெரியபுராணம் மடங்கள் பற்றிய செய்திகளைப் பல இடங்களில் பதிவு செய்கிறது.

பல்கும் செந்தீ வளர்த்த பயில்வேள்வி

எழும் புகையும்

மல்கு பெரும்கிடை ஓதும் மடங்கள் (1068)

என்று பெரியபுராணமும் வேள்விகளும் வேத பாடசாலைகளும் மடங்களில் நடைபெற்றன என்கிறது. இதுவே சைவ மடங்களையும் பெரியபுராணத்தையும் முற்போக்காளர்கள் என்போர் விமர்சிக்கக் காரணம்.

இந்த சைவம் வளர்க்கும் திருமடங்களே ஆதீனங்கள் என்று வழங்கப்படுகின்றன. அதினம் என்பதே ஆதீனம் ஆயிற்று. ஆதீனம் என்ற சொல்லுக்கு உரிமை என்று பொருள். வழிபாட்டுக்குரிய ஆலயங்கள், வழிபாட்டு மரபுகள், அதற்கான தத்துவம் இவற்றுக்கெல்லாம் உரிமை கொண்ட அமைப்பே ஆதீனம்.

ஆதீனங்களின் உரிமை போலவே அவற்றுக்கென கடமைகளும் உண்டு. தமிழும் சைவ சமயமும் தழைக்கப் பாடுபடுபவது அவர்களின் கடமை. மடங்கள் என்ற சொல் பாரத தேசம் முழுவதும் இருந்தாலும் ஆதீனம் என்ற சொல் தமிழுக்கு உரியது.

மு.வ. தனது தமிழ் இலக்கிய வரலாறு நூலில் ஆதீனங்கள் சமயப் பணியோடு தமிழ் இலக்கியத்துக்கும் பெரும் தொண்டாற்றியுள்ளன, ஆதீனகர்த்தர்கள் தமிழ்மொழிப் புலமையோடு இருந்தனர், அவர்களே நூல்கள் எழுதியும் பழந்தமிழ் நூல்களுக்கு விளக்க உரை எழுதியும் தமிழ்ச் சேவை செய்ததோடு தமிழ் அறிஞர்களை ஆதரித்து தமிழ்க் கல்வியை வழங்கியதையும் பதிவு செய்திருக்கிறார்.

தமிழ் இலக்கியப் பதிப்புத் துறையின் முன்னோடியான சி.வை.தாமோதரம் பிள்ளை இலக்கிய வரலாற்றில் சங்க இலக்கிய காலம் "காப்பியக் காலம்' என்று சொல்வதைப்போல "ஆதீனங்கள் காலம்' என்றே தனிப் பகுப்பு வைத்துச் சொல்கிறார் எனில், ஆதீனங்கள் ஆற்றியுள்ள தமிழ்ப் பணியின் பெருமையைப் புரிந்து கொள்ளலாம்.

பதினான்காம் நூற்றாண்டு முதலே ஆதீனங்கள் செயல்படுகின்றன என்று சொல்லப்பட்டாலும், திருஞான சம்பந்தர் மதுரையில் மடம் ஏற்படுத்தி அதற்கும் பல நூற்றாண்டுகள் முன்னதாகவே இதைத் தோற்றுவித்து விட்டார் என்றும் நம்புகிறோம். அதனால் தானே ஏறத்தாழ 1,500 ஆண்டுகளுக்குப் பிறகும் அவரை இன்னிசையால் தமிழ் வளர்த்த ஞானசம்பந்தர் என்று தமிழ் கொண்டாடுகிறது.

திருக்கயிலாய பரம்பரை என்று அழைக்கப்படும் ஆதீனத் துறவியர் மரபில் துறவு சிவபெருமானால் இவர்களுக்கு அளிக்கப்பட்டது. எப்படிப் பார்த்தாலும் பலநூறு ஆண்டுகளாகத் தமிழ்ப் பணி ஆற்றிவரும் அமைப்பு ஆதீனம். தமிழர்களின் மெய்யியல் கோட்பாடான சைவ சித்தாந்தத்தை இன்றளவும் காத்து வருவன ஆதீனங்கள்.

கால மாற்றத்தால் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப, அந்நிய மதங்களும் அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்த காலங்களில் மொழியை, சமயத்தை, ஆலயங்களை மடங்கள் காத்துத் தந்தன. இன்றைக்கும் தங்களிடம் இருக்கும் முன்னோர் தந்த செல்வங்களைக் கொண்டு கல்விப் பணி, மருத்துவப் பணி என்று எளிய மக்களின் வாழ்வில் முன்னேற்றத்துக்கு உதவுகின்றன.

துறவு, இறைவனை நோக்கிய சிந்தனை கொண்டவர்களாக இவ்வுலக வாழ்க்கையின் இன்பங்களை நோக்காத துறவிகள் தங்கள் தமிழ் வளர்ப்பை விளம்பரப்படுத்திக் கொள்ள அவசியம் இருக்கவில்லை. தற்காலத்தில் அரசியல் செய்வோர் விளம்பரத்தை மட்டுமே நம்பியிருக்கின்றனர். இவர்கள் சீர்திருத்தம், சீர்கேடு போன்ற சொற்களை வைத்துக் கொண்டு சுயநல நோக்கோடு மாய பிம்பத்தை மட்டுமே ஏற்படுத்துகிறார்கள்.

நமது சமயத்தை வீழ்த்தி விட்டால் அறமற்ற சமூகம் உருவாகிவிடும். மொழியை வீழ்த்தி விட்டால் அடையாளமற்ற சமூகமாகக் காணாமல் போவோம் என்ற உண்மையை உணர்ந்து நம் முன்னோர் அவற்றைக் காக்க ஏற்படுத்திய அமைப்புகளின் வளர்ச்சி சமூகத்தின் மேன்மையான வருங்காலத்திற்கு அவசியமானது.

"தெளிவு குருவின் திருமேனி காண்டல்

தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்

தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே''

என்று திருமூலர் தமிழ்ச் சமூகத்துக்கு வழிகாட்டியிருக்கிறார். திருமூலரைக் காட்டிலும் நமது முற்போக்காளர்களும் அரசியல்வாதிகளும் அறிவிற் சிறந்தவர்களா?

குருமார்கள், தான், தன் குடும்பம், தனது வாரிசுகள் என்ற சுயநலமற்றவர்கள். அவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் உலக நன்மைக்கானதே. நமது தலைமுறைகளின் மேன்மைக்கானதே. அவற்றைப் புரிந்து கொள்ள சுயநல உள்ளம் கொண்டவர்களால் இயலாது. விமர்சிக்க நமக்குத் தகுதியும் இல்லை.

இன்றைக்கு மேலைக் கலாசாரத்தின் தாக்கத்தாலும் எண்ம உலகின் முறைகேடுகளாலும் திசைமாறிப் போய்க் கொண்டிருக்கும் இளைய தலைமுறையை நல்வழிப்படுத்த சமூகத்தில் மலிந்து கிடக்கும் குற்றங்கள் குறைந்து அறவழிப்பட்ட சமூகம் உருவாக மடங்கள் இன்னும் தீவிரமாகவும் சுதந்திரமாகவும் தமிழ்ப் பணியும் சமயப் பணியும் ஆற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்; குருமார்களின் வழிகாட்டுதல் செய்வதறியாது திகைத்து நிற்கும் சமூகத்துக்கு அவசர அவசியத் தேவை.

மன்னராட்சிக் காலத்தில் தன்னாட்சி பெற்ற அமைப்புகளாக ஆதீனங்கள் விளங்கின, துறவு கொண்ட ஆதீனகர்த்தர்கள் குருமார்களாக வழிகாட்டினர். தமிழ் வளர்ந்து சிறந்தது. தமிழ்த் தாத்தா போன்ற அறிஞர்களை உருவாக்கியது. இன்றைக்குத் தமிழ் அறியாத தலைமுறை உருவாகி இருப்பதற்குக் காரணத்தைப் புரிந்து கொள்ளவேண்டியது தமிழரின் கடமை.

கட்டுரையாளர்:

ஊடகவியலாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com