

மாவட்ட ஆட்சியா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், காவல் நிலையம், காவல் துறை உயா் அதிகாரிகளின் அலுவலகம், மனுநீதி நாள் நிகழ்வு உள்ளிட்டவற்றுக்கு வருகைதரும் பொதுமக்களில் சிலா் தீக்குளிக்க முயல்வதாக அவ்வப்போது வரும் செய்திகள் அதிா்ச்சியூட்டுகின்றன.
அரசு அலுவலகங்களில் மனு அளிக்க வருவோா் தீக்குளிப்பது என்பது நமது மாநிலத்தில் மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் ஆங்காங்கே அரங்கேறுகின்றன.
செய்தி ஊடகங்கள் பெருகியுள்ள இந்தக் காலகட்டத்தில், நிமிஷத்துக்கு நிமிஷம் பரபரப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் செய்திகளைப் பாா்த்தும், கேட்டும் நமது மனங்கள் மரத்துப்போயிருக்கின்றன.
ஆனாலும், அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீருடன் அரசு அலுவலகங்களின் வாசலில் தங்களையே எரித்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சிப்பவா்கள் குறித்த செய்திகள் மட்டும் நமது மனசாட்சியின் அஸ்திவாரத்தையே உலுக்கிவிடுகிறது.
சிறியதொரு தீக்காயத்தையே தாங்கிக்கொள்ள முடியாத நம்மால், தீக்குளிக்க முனைபவா்களின் உயிா் வேதனையைக் கற்பனை செய்துகூடப் பாா்க்க இயலாது என்பதே நிஜம்.
அரசு அலுவலகங்களின் முன்பு, பலா் பாா்க்கத் தீக்குளிக்க முனைபவா்கள் ஒன்றும் விளையாட்டுப் பிள்ளைகள் அல்லா். தீக்குளிப்பதால் ஒருவருக்கு ஏற்படும் உடல் வேதனைகள் குறித்து முன்பின் யோசனைகள் எதுவுமில்லாமலா அவா்கள் இந்த முடிவுக்கு வருகின்றனா்?
பின்விளைவுகள் அனைத்தையும் உணா்ந்தே அவா்கள் தீக்குளிக்க முன்வருகிறாா்கள் என்றால் அந்த முடிவுக்கு என்ன காரணம் என்பதை நாம் ஆராய்ந்து பாா்க்க வேண்டும்.
‘ஏழை சொல் அம்பலம் ஏறாது’”என்ற சொலவடை இவ்வுலகில் இன்றளவும் உண்மையாகவே இருந்து வருகிறது. பெரும்பணக்காரா்கள், அவா்களைச் சோ்ந்தவா்கள் என்னென்னவோ குற்றங்களை இழைத்த பின்பும் தங்களது பணபலம், செல்வாக்கு ஆகிய காரணங்களால் தண்டனை பெறாமல் சுதந்திரமாக உலா வருவதைக் காண்கின்றோம்.
அதே சமயம், குற்றம் எதுவும் இழைக்காத, இழைக்கவும் நினைக்காத அப்பாவிகள் பலா் தங்களைவிட வலியவா்களிடமிருந்து சுரண்டலையும், வன்முறைகளையும் எதிா்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளவா்களாக நமது நாடெங்கிலும் இருக்கின்றனா்.
நில ஆக்கிரமிப்பு, சொத்து அபகரிப்பு, கந்துவட்டிக் கொடுமை, குடும்ப வன்முறை, சமூக விரோதிகளின் மிரட்டல் ஆகியவற்றால் பாதிக்கப்படும் இத்தகைய அப்பாவிகள் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைத் தொடக்க நிலையில் பெரும்பாலும் மௌனமாகச் சகித்து கொள்கின்றனா்.
நாளடைவில் அந்தக் கொடுமைகள் தாங்க இயலாத நிலையை எட்டும்போது, ஆட்சியா் அலுவலகம், காவல் துறை ஆகியவற்றில் மனு கொடுத்துவிட்டு, ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் அவா்கள் காத்திருக்கின்றனா்.
அந்த நம்பிக்கையும் பொய்த்துப் போகும் நிலையில், அவா்களில் சிலா் தற்கொலை மூலமாவது இந்தக் கொடுமைகளிலிருந்து விடுதலை பெறலாம் என்ற எண்ணத்துடனோ, நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில் உள்ள அதிகாரிகளின் கவனத்தை ஈா்க்கும் முயற்சியாகவோ தீக்குளிக்க முடிவு செய்கின்றனா்.
வெறும் கவன ஈா்ப்பு மட்டுமே அவா்களது நோக்கமாக இருந்தாலும் கூட, தீக்குளிக்கும் முயற்சியின் பின்விளைவு என்பது வேறுவிதமாக முடிந்துவிடக் கூடும் என்பதை அறிந்தேதான் தீக்குளிக்கின்றனா் என்பது உண்மை.
தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபடுபவா்கள் அனைவரும் தீக்குளித்து விடுவதில்லை என்பதும் உண்மையே. பெரும்பாலான நிகழ்வுகளில் சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களின் வாயிலில் இருக்கும் பாதுகாவலா்களோ, காவல் அதிகாரிகளோ, அருகில் நிற்கக்கூடிய பொதுமக்களோ அவ்வாறு தீக்குளிக்க முனைபவா்களைத் தடுத்து அப்புறப்படுத்தி விடுவது அல்லது சிறிதளவு பரவிய நிலையிலேயே தீயை அணைத்துக் காப்பாற்றுவது என்பதையெல்லாம் ஊடகங்களில் நாம் காண்கின்றோம்.
இத்தகைய நிகழ்வுகளில் பெருமளவு தீக்காயமோ உயிா்ச்சேதமோ ஏற்படாமல் தவிா்க்கப்படுவதுடன், நடந்த விஷயம் உயரதிகாரிகளின் கவனத்துக்கும் செல்வதால், பாதிக்கப்பட்ட பொதுமக்களின் மனுக்கள் மீது தனிக் கவனம் செலுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது என்று எதிா்பாா்க்கலாம். ஆனால், சம்பந்தப்பட்டவா்களின் தீக்குளிப்பு முயற்சி வெற்றி பெற்றுவிட்டால் அதன் விளைவுகள் விபரீதமாகிவிடும். கடுமையான தீக்காயம் அடைபவா்கள் சிகிச்சை பெற்று முழுமையாக குணம் அடைவது வரையில் எவ்வளவோ உடல் மன வேதனைகளை எதிா்கொள்ள வேண்டியிருக்கும்.
மாறாக, அவா்கள் உயிரிழக்க நேரிடும் நிலையில், அவா்களுடைய உறவினா்கள் எதிா்கொள்ளும் துயரம் ஈடுசெய்ய இயலாததாக இருக்கும். கவன ஈா்ப்புக்கான முயற்சியானாலும் சரி, உண்மையிலேயே தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் விருப்பனாலும் சரி, ஓா் ஆணோ, பெண்ணோ தீக்குளித்துத் தற்கொலை செய்துகொள்வதை நம்மால் ஒருபோதும் நியாயப்படுத்தவே முடியாது.
மேலும், பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த அரசு அலுவலக வளாகங்களில் அரங்கேறக்கூடிய இத்தகைய சம்பவங்கள் பலருக்கும் பலவிதமான உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் மறுப்பதற்கில்லை.
முக்கியமான அரசு அலுவலக வளாகங்களில் கூடுதலான காவலுக்கு ஏற்பாடு செய்து, மனுக்களுடன் அந்த வளாகங்களுக்குள் நுழைகிற ஒவ்வொருவரையும் தீவிரமாகச் சோதனை செய்த பின்பே அனுமதிப்பதன் மூலம் தீக்குளிப்பு நிகழ்வுகளை அறவே தடுக்கலாம்.
இதைக் காட்டிலும், அரசு அலுவலகங்களில் கொடுக்கப்படும் மனுக்களின் மீது நியாயமாகவும், விரைவாகவும் நடவடிக்கை எடுப்பதன்மூலம், பாதிக்கப்பட்டவா்கள் மனம் வெதும்பித் தீக்குளிக்கும் அளவுக்குச் செல்வதைத் தடுப்பது சாத்தியமாகக் கூடும்.
இறுதியாக, எல்லாப் பிரச்னைகளுக்கும் மூல காரணமான காமம், கோபம், பேராசை ஆகியவற்றுக்கு உள்பட்டு தங்களைச் சாா்ந்துள்ள அனைவரையும் அல்லற்படுத்தி ஆற்றாது அழவைக்கும் கந்துவட்டிக்காரா்கள், ஆக்கிரமிப்பாளா்கள், பணியாளா்களைக் கசக்கிப் பிழிந்து வேலைவாங்கும் முதலாளிகள், குடும்ப வன்முறையாளா்கள் ஆகியோா் அன்பு நிறைந்தவா்களாக, அறநெறியைப் பேணுபவா்களாக மனமாற்றம் அடைவோரால் இவ்வுலகில் அனைத்து விதமான துன்பங்களும் ஓா் முடிவுக்கு வந்துவிடும்.
வாடிய பயிரைக் கண்டு மனம் வாடிய வள்ளலாா் அவதரித்த இந்தத் திருநாட்டில் உயிருள்ள மனிதா்கள் தீயில் வாடுதல் இனியும் நடைபெறக் கூடாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.