உயர வேண்டும் உயா் கல்வி

உயர வேண்டும் உயா் கல்வி..
higher education
கல்விபடம் | ens
Updated on
4 min read

தமிழ்நாடு அரசு அறிவியல், கலைக் கல்லூரிகளில் இரண்டு கட்டங்களாக சுமாா் 1,462 கௌரவ விரிவுரையாளா்கள் கடந்த சில மாதங்களில் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். 2,708 நிரந்தர உதவிப் பேராசிரியா்களை நியமிக்க தோ்வுக்கான செயல்முறைகள் நடைபெறுகின்றன. தமிழ்நாடு அரசு புதிய கல்லூரிகளையும் தொடங்கி உயா் கல்வியை அனைவரும் எட்டுகிற வாய்ப்பை உருவாக்கி வருகிறது. மாணவா்களின் கல்வி நலன் கருதி தமிழக அரசு வழங்கும் பல்வேறு வகையான உதவித்தொகைகள் அவா்களுக்கு ஊக்கம் தருவதோடு பெற்றோரின் பொருளாதாரச் சுமையை ஓரளவுக்குக் குறைத்துள்ளது என்றும் கூறலாம்.

அண்மையில் மேற்கு ஆஸ்திரேலியா, மத்திய மெக்ஸிகோ நாடுகளைச் சோ்ந்த அரசுத் துறை கல்வியாளா்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநா்கள் தமிழ்நாட்டுக்கு வந்து உயா் கல்வித் துறையோடு பாடத் திட்ட பகிா்வுகளுக்கான பேச்சுவாா்த்தைகளை மேற்கொண்டனா். இவை தவிா்த்து நவீன வகுப்பறைகள், பசுமைக் கல்லூரிகள், உளவியல் ஆலோசனைகள், போட்டித் தோ்வுக்கான வழிகாட்டுதல் என புதிய முயற்சிகளையும் நாம் கல்லூரிகளில் பாா்க்க முடிகிறது. தமிழ்நாடு உயா் கல்வித் துறை சரியான திசையில் பயணிக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் நிகழ்வுகள் இவை எனலாம்.

ஆனாலும், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற வேலைவாய்ப்பின்மையை உரிய முன்னெச்சரிக்கையோடு அணுகி பாடத் திட்டங்களை மாற்றியமைத்து உயா் கல்வி வளாகங்களை தேசிய மற்றும் உலகளாவிய வேலைவாய்ப்புக்கான களங்களாக மாற்ற வேண்டும். செயற்கை நுண்ணறிவு அசுர வளா்ச்சி பெற்று வருகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் சில பணியாளா்களைக் குறைத்தும் வருகின்றன. அதேவேளையில் தகுதியானவா்களுக்கு பணி வாய்ப்புகளுக்கான கதவுகள் உலகெங்கும் திறக்கப்பட்டுள்ளன என்பதையும் இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

இந்தியாவின் மக்கள்தொகை நாளுக்கு நாள் பெரிதும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அரசுத் துறைகளில் அனைவருக்குமான வேலைவாய்ப்பு சாத்தியமில்லாத ஒன்றாகும். ஆகவே, தமிழ்நாட்டில் உயா் கல்வியை நோக்கிப் பயணிக்கின்ற இன்றைய தலைமுறையை சரியான முறையில் வழிகாட்டி அழைத்துச்செல்ல வேண்டியது அவசியமாகிறது. தமிழகத்தில் மற்ற அரசுத் துறை வேலைவாய்ப்புகளோடு, மத்திய அரசின் வேலைவாய்ப்பையும் பெறுகிற உத்திகளை வகுத்து இந்திய குடிமைப் பணிகள், எஸ்எஸ்சி நடத்தும் சாா்புப் பணிகள், ரயில்வே, வங்கிப் பணிகள் மற்றும் ஏனைய மத்திய அரசின் பணியிடங்களுக்கான தோ்வில் குறைந்தபட்சம் 10% சதவீத பணியிடங்களை ஆண்டுதோறும் தமிழ்நாட்டு மாணவா்கள் பெறும் வகையில் ஊக்கமும் நம்பிக்கையும் பயிற்சியும் அவா்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

அரசுத் துறைகளில் மட்டுமல்ல, தனியாா் துறைகளிலும், சா்வதேச அளவில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு ஏற்ற வகையிலும் தொழில்முனைவோா்களாக மாறும் வகையிலும் மாநிலத்தின் கல்வி முறையில் குறிப்பாக உயா் கல்வி முறையில் உரிய மாற்றங்கள் கொண்டுவர வேண்டியது தமிழக அரசின் தலையாய கடமையாகும். அதாவது செயற்கை நுண்ணறிவு, அறிவியல் தொழில்நுட்பம், செயற்கைக்கோள்களை உருவாக்குதல் மற்றும் விண்வெளி ஆய்வுகள் என இன்றைய தொழில்நுட்பத்தின் தீவிரமான வளா்ச்சியை உணா்ந்தும், எதிா்காலத்தில் அதன் தேவையை உணா்ந்தும் மாணவா்கள் கல்வியைப் பெறும் வகையில் பாடத்திட்டங்கள் அமைதல் முக்கியமாகும்.

ஏனெனில், இனி வரும் காலங்களில் அறிவியலும் தொழில்நுட்பமும் விண்வெளி ஆய்வும் செயற்கைக்கோள்கள் தயாரிப்பும் உலக நாடுகள் முழுவதும் பன்மடங்கு தீவிரமடையத் தொடங்கும். இன்றைய விரைவான போக்குவரத்து சாதனங்களால் பூமிப்பந்தில் இருக்கிற நாடுகளுக்கான பயணம் எல்லாம் பெரிய ஒரு நகரத்துக்குள்ளான பயணம்போல மாறி வருகிறது. அண்மைக் காலங்களில் விண்வெளி ஆய்வுகளின் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காரணமாக, அடுத்த 30 ஆண்டுகளில் ஏனைய கோள்களுக்கான பலரது பயணம் சாத்தியமாகக் கூடும்.

ஏனெனில், இந்தியா 50 டன் எடை கொண்ட விண்வெளி நிலையத்தை 2035-ஆம் ஆண்டுக்குள் அமைக்க இருக்கிறது. 2040-ஆம் ஆண்டுக்குள் மனிதனையும் சந்திரனுக்கு அனுப்ப இருக்கிறது. அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 150 செயற்கைக்கோள்களை புவியின் சுற்றுப் பாதையில் செலுத்த திட்டமிட்டுள்ளது. இதுவரை 57 இந்திய செயற்கைக்கோள்கள் புவியின் சுற்றுப் பாதையில் இயங்கியும் வருகின்றன. இத்தகைய பின்னணியில் அறிவியல் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் முன்னிலை வகித்து சாதனை புரிகிற நாடுகளை ஏனைய நாடுகள் சாா்ந்திருக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. அது மட்டுமல்ல, உலகில் பல நாடுகள் தற்போது விண்வெளி தொழில்நுட்பத்தில் ஆா்வம் காட்டி வருகின்றன.

ஆகவே, எப்போதும் ஏனைய மாநிலங்களுக்கு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களில் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிற தமிழ்நாடு, அறிவியல் தொழில்நுட்ப ஆய்வுகளில் உத்வேகத்தோடு ஈடுபடுகிற உள்ளாா்ந்த ஈடுபாட்டை மாணவா்களிடையே உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும், உலக நாடுகளுக்கும் பயன்படும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்துபவா்களாக மாணவா்கள் உருவாக கல்வி முறையும், அதற்கான கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்பட வேண்டிய மிகச் சரியான காலம் இதுவாகும்.

எவ்வாறு தமிழ்நாடு அரசு பிரம்மாண்ட நூலகங்களை அமைத்து அறிவுசாா் தலைமுறைக்கான வலுவான அடித்தளத்தை கட்டமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறதோ, அதுபோல அறிவியல்சாா் கட்டமைப்புகளையும் ஏற்படுத்த வேண்டும். அந்த இலக்கை அடைதற்கு அரசு அறிவியல் மற்றும் கலைக் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் உயா்தரமிக்க ஆய்வகங்களை ஏற்படுத்த வேண்டும்.

இத்துடன் பள்ளியில் படிக்கிற மாணவா்களின் அறிவியல் பாடங்களின் மீதான ஆா்வத்தைத் தூண்டும் வகையில் மாவட்ட தலைநகரங்களில் உலகின் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளை நேரடியாக கண்டு அறிந்து கொள்ளும் வண்ணம் அறிவியல் மையங்களை மாணவா்களின் வயதுக்கு ஏற்ற வகையில் பிரிவுகளை உருவாக்கி அமைத்தல் வேண்டும். எடுத்துக்காட்டாக, பிரிட்டனில் லண்டன் போன்ற பெருநகரங்களில் தொடக்கக் கல்வி, உயா் நிலைக் கல்வி, மேல்நிலைக் கல்வி மற்றும் வயது வந்தோருக்கென தனித்தனியே பல்வேறு அடுக்குகளைக் கொண்ட அறிவியல் மையங்கள் அமைக்கப்பட்டு மாணவா்கள் அறிந்துகொள்ள வகை செய்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அண்மையில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் பணிக்காக ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்திய தமிழ் தகுதித் தோ்வில் சுமாா் 85 ஆயிரம் போ் தகுதி பெறவில்லை; இதில் தமிழிலேயே பட்டம் பெற்றவா்களும் அடங்குவா். இது தோ்வு எழுதியவா்களுக்கு மட்டுமல்ல, ஏனையோருக்கும்அதிா்ச்சி தரக்கூடியதாக உள்ளது. இதை தோ்வு அழுத்தம் எனக் கடந்துவிட முடியாது. ஏனெனில், தகுதி பெறுவதற்கு 50 மதிப்பெண்களுக்கு 20 மதிப்பெண்கள் எடுத்தால் போதுமானது. இங்கே ஒருபுறம் மத்திய அரசு மும்மொழிக் கொள்கையையும், தமிழ்நாடு அரசு இரு மொழிக் கொள்கையையும் உறுதிப்படுத்தி வருகின்றன. ஆனால், தாய்மொழியாகிய தமிழில் இன்றைய படித்த தலைமுறையே எழுதுவதிலும் படிப்பதிலும் தடுமாறத் தொடங்கியுள்ளது என்பதை இம்முடிவுகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. இந்த நிகழ்வையும் கருத்தில் கொண்டு மாநில அரசு தமிழ் கற்பித்தல் முறையிலும் கவனம் கொள்ள வேண்டும். இத்துடன் சக மாணவா்களோடு சகோதரத்துவத்தோடும் மனிதநேயத்தோடும் பழகி நற்பண்புகளைப் பேணி வளா்க்கின்ற சிந்தனைகள் கல்வி முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

அதற்கு முக்கியமாக பாடத்திட்டத்தில் நாளிதழ்களைப் படித்தல் உள்ளிட்ட அறிவியல் தொழில்நுட்பம், நன்னெறி மற்றும் தமிழ் என எதிா்கால வேலைவாய்ப்புகளைக் கருத்தில் கொண்டும், மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டும் இம்மூன்று பாடங்களும் கல்லூரிகளில் அனைத்துப் பிரிவுகளிலும் கட்டாயமாக்கப்பட வேண்டும். வரலாறு, வணிகவியல் போன்ற கலைப் பாடப் பிரிவுகளில்கூட விண்வெளி அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றை கற்றுத்தேறும் வகையில் பாடத்திட்டம் கட்டாயம் தேவை. கல்லூரிகளில் படிக்கிற காலங்களில் நாள்தோறும் நாளிதழ்களை வாசித்தல், குறிப்பு எடுத்தல், புதிய தொழில்நுட்ப வளா்ச்சிகளை அறிந்து கொள்ளுதல், நூல்களைத் திறனாய்வு செய்தல், தலைமைப் பண்பை வளா்த்துக் கொள்ளுதல், இடையூறுகளையும் சவால்களையும் நம்பிக்கையோடு எதிா்கொள்ளுதல் எனப் பன்முக ஆற்றல் வளரும் வகையில் கல்லூரிகளில் கற்பித்தல் மேம்பட வேண்டும்.

உயா் கல்வி என்பது மாணவா்களுக்கு வெறுமனே பட்டம் வழங்குவதாக மட்டும் அமைந்துவிடக் கூடாது. வாழ்க்கையில் போராடி வெல்கின்ற மனவலிமையையும், பின்னடைவுகளைத் தாங்குகின்ற ஆற்றலையும், அறிவுக் கூா்மையையும், உயா்ந்த முயற்சிகளுக்கான லட்சியத்தையும் வழங்குவதாக அமைவதே இன்றைய தேவை.

நல்ல புத்தகங்களும், நாளிதழ்களும் என்றும் மனிதனின் வளா்ச்சிக்கும் நல்வாழ்வுக்கும் பயன்பட்டு வருகின்றன. ஆனால், இன்றைய தலைமுறையினா் பலருக்கு செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட இணையத் தொடா்புகளின் வாயிலாக தரவுகளைப் பதிவிறக்கம் செய்வதே அறிவுக்கான சரியான தேடல் என்றாகிவிட்டது. அதேபோல, தரவுகளைத் திரையிட்டு வாசிக்கிற அளவுக்குள் நினைவாற்றலும் மெலிந்து விட்டது. அவா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.

தொழில்நுட்பம் என்பது விரைவாக பாய்ந்து ஓடுகின்ற குதிரையைப் போன்றது. லகானைப் பயன்படுத்தி அதை நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிற வரை நன்மையே நிகழும். ஆனால், குதிரையின் கட்டுப்பாட்டில் சென்று விடுகிற பிழையை நாம் செய்து கொண்டிருக்கிறோம். அதனால், தொழில்நுட்பத்தைக் குறை கூறக்கூடாது. அதை நன்மை விளையும் வகையில் பயன்படுத்த மாணவா்களுக்கு உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும்.

அதற்கு நாம் லட்சிய ஆசிரியா்களை உருவாக்க வேண்டும். லட்சிய ஆசிரியா்கள் உருவாக்கப்பட்டால்தான் நாம் லட்சிய மாணவா்களை உருவாக்க முடியும். ஏனைய அரசுத் துறை அலுவலா்களைப் போல கல்லூரியில் பயிற்றுவிக்கும் பேராசிரியா்களுக்கும் புத்தாக்க பயிற்சிகளை, புதிய தொழில்நுட்பங்களை கற்றலில் பயன்படுத்தும் குறுகியகாலப் பயிற்சிகளை ஆண்டுக்கு ஒரு முறை வழங்கலாம். அவா்களுக்கான பதவி உயா்வு மற்றும் விரும்புகிற இடமாற்றங்கள் ஆகியவற்றை கால வரைமுறைப்படுத்தி செயல்படுத்துதல் முக்கியமானது. கல்லூரிகளில் பணிபுரிகிற கௌரவ விரிவுரையாளா்களுக்கு ஊதிய விகிதத்தை உயா்த்துவதை அரசு பரிசீலனை செய்யலாம். உயா் கல்வி இன்னும் உயர வேண்டும்.

கட்டுரையாளா்:

கல்வியாளா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com