வாசலில் விரியும் வாழ்வியல் அறிவியல்

மார்கழிக் கோலங்கள் என்பவை பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு கலைச் செல்வம். ஆனால், அவை வெறும் காட்சிப் பொருளாக மட்டும் மாறிவிடக்கூடாது என்பதைப் பற்றி...
மார்கழிக் கோலங்கள்..!
மார்கழிக் கோலங்கள்..!படம்: எக்ஸ்.
Updated on
2 min read

மார்கழி மாதம் இறை வழிபாட்டுக்கும் அகத் தூய்மைக்கும் உரிய உன்னதக் காலமாகக் கருதப்படுகிறது. பனியும் குளிரும் சூழ்ந்த அதிகாலைப் பொழுதுகளில், உறக்கத்தைத் துறந்து விடியலுக்கு முன்பே விழித்தெழும் தமிழ் வீதிகள், இந்த மாதத்தின் தனித்துவமான அடையாளம்.

உத்தராயணக் கால தொடக்கத்தைக் குறிக்கும் இந்த மாற்றத்தின்போது, வீட்டு வாசல்களில் வரையப்படும் கோலங்கள் வெறும் அரிசி மாவுச் சித்திரங்கள் மட்டுமல்ல; பக்தியையும் தாண்டி, கணிதமும், சூழலியலும், சமூக அறிவியலும் சங்கமிக்கும் வாழ்வியல் சூத்திரங்களாகக் கோலங்கள் திகழ்கின்றன.

மேலைநாட்டினர் இன்று வியந்து பேசும் "காலை ஐந்து மணி மன்றம்' என்ற சுய முன்னேற்றக் கோட்பாட்டை, நம் தமிழ்ச் சமூகம் பல நூற்றாண்டுகளாகவே ஒரு வாழ்வியல் நெறியாகக் கடைப்பிடித்து வருகிறது. "பிரம்ம முகூர்த்தம்' எனப் போற்றப்படும் அந்த அதிகாலைப் பொழுதில் விழித்தெழுவதன் அவசியத்தை அறிவியல் ரீதியாகப் பார்த்தால், அந்நேரத்தில் வளிமண்டல மாசு குறைந்தும், ஆக்சிஜன் மற்றும் உயிர் அயனிகள் செறிந்து காணப்படுவதும் உடலுக்கும் மனதுக்கும் பெரும் புத்துணர்வை அளிக்கின்றன.

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் துயிலெழுந்து, கோலமிடுதல் போன்ற கடமையைச் செய்யத் துணியும் அந்த மனத்திண்மை, வாழ்வில் விடாமுயற்சியைக் கற்பதற்கான முதல் படியாகும். அந்த வகையில், அதிகாலையில் கோலமிடுதல் என்பது ஒரு நாளின் தொடக்கத்தை ஒழுக்கத்துடனும், நேர்மறை ஆற்றலுடனும் கட்டமைக்கும் ஒரு சிறந்த உளவியல் கருவியாகத் திகழ்கிறது.

மேலோட்டமாகப் பார்த்தால் கோலங்கள் வெறும் புள்ளிகளும் கோடுகளும்தான். ஆனால், கணித நுட்பத்துடன் அணுகினால், அவை "வரைபடக் கோட்பாட்டின்' நடைமுறை வடிவங்கள் என்பது புலப்படும். குறிப்பாக, ஒரு புள்ளியில் தொடங்கி, கையை எடுக்காமல், மீண்டும் அதே புள்ளியில் வந்து முடிக்கும் "சிக்கல் கோலங்கள்' அல்லது "இழைக் கோலங்கள்', யூலரியன் பாதைகள் மற்றும் முடிவிலி (இன்பினிட்டி) தத்துவத்தை நமக்கு நினைவூட்டுகின்றன.

மையப் புள்ளியை ஆதாரமாகக் கொண்டு விரியும் கோலங்களின் சமச்சீர்மை, மூளையின் இரு அரைக்கோளங்களையும் ஒருங்கிணைக்கும் சிறந்த பயிற்சியாகும். இன்றைய மென்பொருள் பொறியாளர்களைப் போலவே, நம் முன்னோர்களும் எந்தப் பாடப்புத்தகமும் இன்றி, இடைவெளி மேலாண்மை மற்றும் வடிவவியல் அறிவை தரையில் வடிவமைத்திருக்கிறார்கள் என்பதே நிதர்சனம்.

"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற வள்ளலாரின் ஜீவகாருண்யத் தத்துவம், பச்சரிசி மாவில் இடும் கோலங்களில் உயிர்பெறுகிறது. விடியற்காலையில் உணவைத் தேடி வரும் எறும்புகளுக்கும், சிறு உயிரினங்களுக்கும் உணவளிக்கும் இந்த உன்னத அறத்தை, இன்றைய நவீன செயற்கை வண்ணங்களும், ஒட்டுவில்லைகளும் சிதைத்து விடாமல் காக்க வேண்டும்.

"விருந்தினர் உண்ட பின்னரே தான் உண்ண வேண்டும்' என்ற தமிழரின் விருந்தோம்பல் பண்பு, வீட்டு வாசலிலேயே தொடங்கிவிடுகிறது. ஒரு கைப்பிடி அரிசி மாவில், "பல்லுயிர் ஓம்பல்' என்ற உயரிய சூழலியல் அறிவை நம் முன்னோர் பொதிந்துவைத்துள்ளனர் என்பது போற்றத்தக்கது.

"மாதங்களில் நான் மார்கழி' என்று பகவத் கீதையில் (அத்தியாயம் 10, ஸ்லோகம் 35) கண்ணன் உரைத்ததற்கேற்ப, இது இறைவழிபாட்டுக்கு உகந்த மாதமாகும். ஆனால், இயற்கையின் சுழற்சிப்படி இது கடும் பனிக்காலம்.

பனிக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதால், கிருமிகளின் தாக்கமும் இயல்பாகவே கூடுகிறது. புனிதமான இந்த மாதத்தில் நோய்த் தொற்றுகளை எதிர்கொள்ளவே, கோலத்தின் மையத்தில் பசுஞ்சாண உருண்டையை வைத்து, அதில் பூசணிப் பூவைச் செருகி வைக்கும் மரபு தோன்றியது. அறிவியல் ரீதியாகப் பார்த்தால், பசுஞ்சாணத்தில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்புச் சக்தி கிருமிகள் வீட்டினுள் நுழைவதைத் தடுக்கும் ஒரு இயற்கை உயிர்வேலியாகச் செயல்படுகிறது.

இன்றைய நவீன உடற்பயிற்சிக் கூடங்களில் நாம் செய்யும் பயிற்சிகளுக்கு இணையாக, கோலமிடுவதன் மூலம் நமது உடல் நலத்தைப் பேண முடியும். குனிந்து நிமிர்ந்து, இடுப்பை வளைத்து, கைகளை லாவகமாகச் சுழற்றிப் பெரிய கோலங்களை இடுவது, "சூரிய நமஸ்காரம்' போன்ற யோகாசன நிலைகளை ஒத்த ஒரு சிறந்த பயிற்சியாகும். இது முதுகெலும்பை வலுப்படுத்துவதோடு, ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, அதிகாலைக் காற்றை ஆழமாகச் சுவாசிப்பதன் மூலம் நுரையீரலுக்கும் வலுசேர்க்கிறது.

உடல் நலத்தைத் தாண்டி, சமூகப் பார்வையில் அன்றைய திண்ணைகளும் வாசல்களுமே இன்றைய சமூக ஊடகங்களுக்கு முன்னோடிகள். பெண்கள் வாசலில் கூடி உரையாடுவது சமூகப் பிணைப்பை வலுப்படுத்தியது. இன்றைய தனிமைப்படுத்தப்பட்ட அடுக்குமாடிக் கலாசாரத்தில், வாசலில் கோலமிடும் அந்தச் சிறு கால அவகாசமே, அண்டை வீட்டாருடன் ஒரு புன்னகையையோ, வாழ்த்தையோ பரிமாறிக் கொள்ளும் அரிய வாய்ப்பை வழங்குகிறது.

மார்கழிக் கோலங்கள் என்பவை பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு கலைச் செல்வம். ஆனால், அவை வெறும் காட்சிப் பொருளாக மட்டும் மாறிவிடக்கூடாது. ரசாயனக் கற்களையும், செயற்கை வண்ணங்களையும் தவிர்த்து, மீண்டும் அரிசி மாவுப் பயன்பாட்டுக்குத் திரும்புவதன் நோக்கத்தை நாம் உணர வேண்டும். இயற்கையிடமிருந்து நாம் எடுத்துக்கொண்ட வளங்களுக்குச் செய்யும் சிறிய கைம்மாறாக, எறும்புகள் போன்ற உயிரினங்களுக்கு உணவளிப்பது மன நிறைவைத் தருகிறது.

நகரமயமாக்கலின் நெரிசலில், அடுக்குமாடிக் குடியிருப்புகளின் குறுகிய வராந்தாக்களில் இந்தக் கலை சுருங்கிவிட்டாலும், அதன் தத்துவத்தைச் சுருங்கிவிடாமல் காப்பது நம் கடமை. வெறும் கோலப் போட்டிகள் நடத்துவது மட்டும் போதாது; அதன் பின்னால் உள்ள கணிதத்தையும், அறிவியலையும், ஈகையையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க இந்த மார்கழி மாதத்தைப் பயன்படுத்த வேண்டும். வாசலில் இடப்படும் ஒவ்வொரு புள்ளியும், நம்மைப் பிரபஞ்சத்தோடு இணைக்கும் ஒரு குறியீடு. அந்தப் புள்ளிகளை இணைக்கும் கோடுகள், மனிதனுக்கும் இயற்கைக்குமான உறவின் சாட்சிகளாகத் தொடரட்டும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com