

சந்தையில் விற்கப்படும் பொருள்கள் தரமானதாக இருக்க வேண்டும் என அரசின் தரக் கட்டுப்பாட்டுத் துறை சான்றிதழ் வழங்குகிறது. மக்கள் சேவையில் இயங்கும் நிறுவனங்கள் தங்களை தரப்படுத்திக் கொள்ள தரச் சான்றிதழ் பெறுகின்றன.
அதேபோல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தங்களைத் தரப்படுத்திக் கொள்ள தரநிர்ணயம் செய்யும் தேசிய அமைப்பிடம் தங்களை ஆய்வு செய்து தரச் சான்றிதழ் பெற்று தங்கள் நிறுவனங்கள் எந்தத் தரத்தில் இருக்கின்றன என்பதை விளம்பரப்படுத்திக் கொள்கின்றன.
பொதுமக்கள் தரமான வாழ்க்கை வாழ வேண்டும். அந்தத் தரமான வாழ்க்கை மக்களுக்கு கிடைக்கிறதா, அதை எப்படி மதிப்பீடு செய்வது என்பதை அறிவியல் பூர்வமாக விஞ்ஞானிகளை வைத்து நிர்ணயம் செய்கிறது ஐ.நா. நிறுவனம். அதற்கு மானுட மேம்பாட்டு அறிக்கை எனப் பெயர்.
இதேபோன்ற அமைப்புகளால் அரசு செய்யும் ஆளுகையும் தர மதிப்பீடு செய்யப்பட்டு உலக அளவில் அறிக்கைகள் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன. இதன் அடிப்படையில் மேற்கத்திய நாடுகளில் பொது விவாதங்கள் நடைபெறுகின்றன. அவை பெருமளவில் மக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. இதற்கொரு முக்கியக் காரணம், நிதி மேலாண்மையை மையப்படுத்தி இந்த ஆய்வுகள் உலக வங்கியின் கண்ணோட்டத்தில் செய்யப்படுவதால் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அடுத்து இதற்குத் தொடர்புடைய மற்றொரு கருத்து தலைமைத்துவம். ஆட்சி, ஆளுகை, நிர்வாகம் இவை அனைத்துக்குமான தலைமைத்துவம் மிகவும் முக்கியமானது. இதுவும் அரசால், ஆய்வு நிறுவனங்களால் கவனிக்கப்படாத ஒரு பகுதி. இன்று நாம் பொதுத் தளத்தில் தலைமைத்துவம் என்று விவாதிப்பதெல்லாம் சந்தையிலிருந்து தருவிக்கப்பட்ட மேய்ப்புக்கான தலைமைத்துவம் குறித்துத்தான். காரணம், தரமான மக்களுக்கு வழிகாட்டும் தலைமை எது? அதன் கூறுகள் என்ன? எப்படி அந்தத் தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும்?
என்பன குறித்து பெரும் ஆய்வுகள் அரசியலில் ஆட்சியில், ஆளுகையில் உலக அளவில் வரவில்லை. தலைவர்கள் குறித்து தனித்தனியே ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இந்த ஆய்வுகள் அனைத்தும் ஆளுமை குறித்து கூறுமேயன்றி ஆளுகைக்கான தலைமைத்துவம் குறித்துக் கூறுவதில்லை.
மக்களுக்கு வழிகாட்டும் தலைமைத்துவத்தின் அடிப்படைக் கூறுகள், தரம் எவ்வாறு நிர்ணயிப்பது என்பதற்கான ஆய்வுகள் முழுமையாக நடத்தப்படவில்லை; செய்யப்படவில்லை. அதே நேரத்தில் எல்லை இல்லாத அளவுக்கு தலைமைத்துவம் குறித்த ஆய்வுகள் உலக அளவில் பெரும் நிதி ஒதுக்கீட்டில் நடைபெற்றிருக்கின்றன; அது சந்தைக்கான தலைமைத்துவம். சந்தைத் தலைமை கூறுவது வெற்றி, லாபம், சாதனை, உத்தி போன்றவற்றைத்தான்.
இந்தத் தலைமைக்கு மானுடம் குறித்து எந்தக் கவலையும் இல்லை. இதற்கு லாபத்தை ஈட்டுவதுதான் குறிக்கோள். இந்தத் தலைமைத்துவத்தை இரவல் வாங்கித்தான் "அரசியல் தலைமைத்துவம்' என்ற பெயரில் பயிற்சி அளிக்கப்படுகிறது. சந்தைத் தலைமை என்பது வேறு; சமூகத் தலைமை என்பது வேறு.
சந்தைத் தலைமைக்கு தனக்குக் கீழ் உள்ளவர்களை மேய்க்கும் திறமை வேண்டும்; ஆனால், சமூகத் தலைமைக்கு அன்பு பாராட்டும் கருணை உணர்வு வேண்டும், சமூகத்துக்கு வழிகாட்டி அதை உயர்த்தும் அறிவும் தெளிவும் பார்வையும் தேவை. சந்தையையும், சமூகத்தையும் நெறிப்படுத்தும் உச்சம் பெற்ற அதிகார அமைப்புதான் அரசு. அந்த அமைப்பைக் கைப்பற்றவே அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. எனவே, ஒட்டுமொத்த அரசு, ஆளுகை, நிர்வாகம் அனைத்தையும் சீர் செய்யும், உயர்த்தும், நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய மாமனிதர்கள் அரசியல் கட்சிகளிலிருந்துதான் பதவிகளுக்குச் செல்கிறார்கள்.
இவர்கள் உள்ளத்தில் உயர்ந்தவர்களாகவும், திறமையுடையவர்களாகவும் பக்குவம் கொண்டவர்களாகவும் மக்கள் மீது கருணை கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட மனிதர்களா அங்கு செல்கிறார்கள்? அப்படிப்பட்டவர்கள் அங்கு சென்றிருந்தால் இன்று உலகுக்கு வழிகாட்டும் நாடாக இந்தியா மாறி இருக்குமே! அது நடைபெறவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை.
அதை எப்படிக் கொண்டுவருவது என்பதுதான் இன்று நம்முன் எழும் கேள்வி. இதற்கு ஒரே வழி, அரசியல் கட்சிகளைச் சீர்திருத்துவதுதான். இன்று தேர்தல் சீர்திருத்தம் என்று நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறுகிறது; அது தேவைதான். அதற்கு தேர்தல் ஆணையத்தால் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளை முதலில் எடுத்து அறிவு சார்ந்து விவாதிக்க வேண்டும். அரசியல் கட்சிகளை ஒழுங்குபடுத்த விரிவான நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்.
அவற்றை நடைமுறைப்படுத்த இன்றைய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் அல்லது புதிய அமைப்பை உருவாக்க வேண்டும். கட்டுப்பாடற்ற அரசியல் செயல்பாடுகளைச் செய்வது பொதுமக்கள் அல்ல; அரசியல் கட்சிகள்தான். இன்றுள்ள அரசியல் அவலங்களுக்கும் தேர்தல் அவலங்களுக்கும், ஆளுகை நிர்வாகம் அனைத்திலும் நடைபெறும் ஊழல்களுக்கும் அடிப்படைக் காரணம், கட்டுப்பாடற்ற அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள்தான். எனவே, அதை நெறிப்படுத்துவதுதான் தலையாய செயலாக இருக்க வேண்டும்.
எந்தத் தவறையும் செய்துவிட்டு கட்சிக்குள் வந்து, நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளுக்குச் சென்று விட்டால் சுகபோக வாழ்க்கை வாழலாம் என்பதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். அரசியல் கட்சிகளை எப்படி மதிப்பீடு செய்வது என்பது குறித்து விவாதிக்க வேண்டும்.
அரசியல் கலாசாரம் குறித்து ஆய்வு செய்த சிட்னி வர்பா, "எந்த நாட்டில் மக்கள் அரசியல் அறிவு பெற்று அரசியலிலும், ஆளுகையிலும் பங்கேற்கிறார்களோ அங்குதான் மக்களுக்கான மக்களாட்சி முறை ஆளுகையை உருவாக்க முடியும்' என்றார். எனவே, அந்த விவாதத்தை பொது விவாதமாக்க வேண்டும்.
நாடு விடுதலை பெற வேண்டும் என்று மக்களிடம் விவாதத்தை நம் தலைவர்கள் உருவாக்கினார்களோ, அதேபோல் நல்லாட்சியை உருவாக்கத் தேவையான தரமான அரசியல் எது என்பதை விவாதமாக்க வேண்டும். இன்று இந்த அரசியல் கட்சிகள் நடத்தும் கட்சி அரசியலுக்கு தரக் கட்டுப்பாடுகள் எதாவது இருக்கின்றனவா? அவற்றை ஒழுங்குபடுத்துவது யார்? அதற்கான கட்டமைப்புகள் இருக்கின்றனவா என்ற கேள்விகள் நம் அனைவர் மனதிலும் எழுகின்றன.
அரசியல் கட்சிகள் என்ற பெயரில் ஒரு கட்டுப்பாடற்ற அரசியல் நிகழ்வதை அரசியலை அறிவியலாகப் பார்ப்பவர்களுக்குத் தெரிகிறது. தேநீர்க் கடை விவாதத்தையே நாடாளுமன்றம், சட்டப்பேரவை வரை கொண்டு செல்லும் நம் கட்சிகளுக்கு புலப்படுவது இல்லை. ஒரு நாட்டை வழிநடத்துவது அரசு. அதற்கு நெறிமுறைகளைக் காட்டுவது அரசமைப்புச் சாசனம். ஓர் அரசு உருவாவது கட்சிகள் பங்கேற்கும் தேர்தல் வழியாகத்தான்.
அந்தத் தேர்தலில் நம் அரசியல் கட்சிகள் நடத்திய முறைகேடுகள் கொஞ்சமல்ல. அதைப் பட்டியலிட்டால் இந்தக் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையத்தை கேள்வி கேட்கும் எந்த தார்மிகமும் கிடையாது. ஓர் அரசை உருவாக்குபவர்கள் மக்கள்தான். அவர்கள் அரசியல் வயப்படுத்தப்படாமல், அவர்களை அரசியல் அறியாமையில் வைத்து நடத்தும் ஓர் அரசியலில் தரமான அரசியல் கலாசாரம் உருவாக வாய்ப்பில்லை.
அப்படி இருக்கும்போது, அங்கு நடக்கும் அரசியல் தரமற்றதாகத்தான் இருக்கும். அதிலிருந்து எப்படி தரமான அரசு உருவாக முடியும் என்பது அடிப்படையான கேள்வி. கோடானு கோடி மக்களின் எதிர்காலம் பற்றி முடிவெடுக்கும் நாடாளுமன்றமும், சட்டப்பேரவைகளும் எவ்வளவு தரமாக சுமுகமாக, பக்குவமாக, அமைதியாக இந்த நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் செயல்பட வேண்டும். ஆனால், அவை அப்படிச் செயல்படுகின்றனவா என்ற கேள்விக்கு நம் அரசியல் கட்சிகளிடம் பதில் இல்லை.
இன்று அரசியல் கட்சிகள் நடத்தும் அரசியல் மக்களுக்கானதா என்று கேள்வி கேட்க வைத்துவிட்டது. இந்த 70 ஆண்டுகால மக்களாட்சியில் சாதாரண மக்கள் பெற்றது என்ன? அரசைப் பயன்படுத்தியவர்களும் கட்சிக்காரர்களும் பெற்றது என்ன என்பதை அரசே புள்ளிவிவரங்களுடன் தெரிவிக்கும்போது அரசு யாருக்கானது, அரசியல் யாருக்காக நடைபெறுகிறது என்ற கேள்வி பிறக்கிறது.
மக்களாட்சியில் வாழ்வதாக நாம் கூறிக்கொண்டாலும், அந்த மக்களாட்சி முடக்கப்பட்டு மக்களுக்கான அரசியலாக இல்லாமல் கட்சிக்காரர்கள் நடத்தும் அரசியலாக பயணிப்பதைத்தான் இன்று நம்மால் பார்க்க முடிகிறது. மக்களாட்சி எல்லோருக்கும் பலனளிக்கும் ஒரு மாபெரும் ஆயுதம். அதை மக்கள் குடிமக்களாக பொறுப்புடன் அறிவார்ந்து அரசியலில் பங்கேற்கும்போது, மக்களாட்சி அனைவருக்கும் நன்மை பயப்பதாக மாறும். ஆனால், அந்த மகத்தான ஆயுதத்தை கைகொள்ள மக்களிடம் நாம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தவில்லை; திறனையும் உருவாக்கவில்லை.
இதன் விளைவுதான் ஒரு சுரண்டல் முறை வாழ்க்கை மக்களாட்சியில் மிக எளிதாக நடைபெற்று வருகிறது. இன்று நடப்பதை 1779-இல் அமெரிக்க சுதந்திரப் போராட்ட வீரரும், அதிபருமாய் இருந்த தாமஸ் ஜெபர்சன், "விடுதலை, மக்களாட்சி என்று நாம் பிரகடனம் செய்கிறோம். அது எப்போது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பலனளிக்கும் என்றால், அறிவார்ந்த குடிமக்களை அந்த நாட்டில் உருவாக்கும்போது மட்டும்தான்.
விடுதலைக்கான அறிவு, உணர்வு, மக்களாட்சிக்கான அறிவு உணர்வு என்பதை குடிமக்களிடம் உருவாக்கும் முக்கியப் பணி ஒரு நாட்டில் நடைபெறவில்லை என்றால் அங்கு சுரண்டல் மட்டுமே நடக்கும்' என்றார். இன்று நிலவும் ஓர் அலங்கோல மக்களாட்சியை முறைப்படுத்த, முதலில் அரசியலைச் சீர்திருத்த வேண்டும். இன்று நமக்குத் தேவை அரசியல் கட்சிகள் சீர்திருத்தம். அரசியலுக்கான தர நிர்ணயம் செய்ய வேண்டும்;
அதன் குறியீடுகளை உருவாக்க வேண்டும். அரசியல் கட்சிகளை அந்தக் குறியீடுகளை வைத்து மதிப்பீடு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் அரசியல் கட்சிகளுக்குத் தரச் சான்றிதழ் வழங்க வேண்டும். அதற்கான தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் உருவாக்கப்படல் வேண்டும்.
கட்டுரையாளர்: பேராசிரியர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.