

புதிய சாலைப் பாதுகாப்பு விதிகளை உருவாக்கும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய ஆட்சிப் பகுதிகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதசாரிகளின் பாதுகாப்பு, மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 138 (1ஏ), 210 டி பிரிவுகளின்படி மோட்டார் பொருத்தப்படாத சைக்கிள், சாலைக் கட்டுமானம், பராமரிப்பு ஆகியவற்றைக் கண்காணிப்பது, போக்குவரத்து விதிகளை மீறுவதைத் தடுப்பது எனப் பல முக்கியமான அம்சங்கள் சார்ந்து நீதிமன்றம் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
நாட்டில் சாலைகளில் பாதசாரிகளுக்கு எனத் தனிப் பாதை அமைக்கப்பட்டாலும், பயன்படுத்த முடியாத அளவுக்கு அது ஆக்கிரமிக்கப்படுவதையும், அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் அவற்றை அலட்சியமாகக் கையாள்வதையும் மறுக்க முடியாது. சென்னை போன்ற நகரங்களின் சில பாதைகளில் சைக்கிள்கள் இயக்கத்துக்கு எனத் தனிப் பாதை அமைக்கப்பட்டாலும், அதில் சைக்கிள் மட்டுமே செல்வது உறுதிப்படுத்தப்படவில்லை.
விதிகள் இருந்தாலும், அபராதங்கள் விதிக்கப்பட்டாலும் தலைக்கவசம் அணியாமல் செல்வது, எதிர்திசையில் பயணிப்பது எனப் போக்குவரத்து விதிகளை மக்கள் அலட்சியப்படுத்துவதும் சாலை விபத்துகளுக்குக் காரணமாகின்றன.
இந்தச் சூழலில் பொது இடங்கள், தேசிய நெடுஞ்சாலைகளில் மோட்டார் அல்லாத வாகனங்கள், பாதசாரிகள் நடமாட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை இதுவரை வகுக்கவில்லை எனில், மோட்டார் வாகனச் சட்டப் பிரிவுகளின் கீழ் அனைத்து மாநில, மத்திய ஆட்சிப் பகுதிகளில் சாலைப் பாதுகாப்பு விதிகளை ஆறு மாதங்களில் உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
அதே நேரத்தில், தேசிய நெடுஞ்சாலைகளில் பின்பற்றப்படும் விதிகளை அமல்படுத்த மாநில அரசுகள் விரும்பினால், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் கலந்தாலோசிக்கவும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் யோசனை கூறியுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பொதுப் பாதையை அடைப்பதும், அரசு புறம்போக்கு இடங்களை தனி நபர் ஆக்கிரமித்து வைத்திருப்பதும் பெரும் பிரச்னையாக தொடர்கிறது.
அவ்வாறு பொதுப் பாதையை 40 ஆண்டுகள், 50 ஆண்டுகள் எனப் பயன்படுத்தி வந்த எளிய மக்களுக்கு இடையூறாக தனி நபர்கள் ஆக்கிரமித்து வருவாய் அதிகாரிகளைத் தவறாகப் பயன்படுத்தி பட்டா வாங்கி வைத்திருப்பதும், நீதிமன்றத்தின் மூலம் பயனாளிகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு நீதிமன்ற உத்தரவு வாங்கி வைத்திருப்பதும் எனப் பிரச்னைகள் அதிகமாக உள்ளன.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை ஏற்று புதிய சாலைப் பாதுகாப்பு விதிகளை உருவாக்குவதற்கு அனைத்து மாநில அரசுகளும் முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்தியாவில் அதிக விபத்துகள் நிகழும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகமும் உள்ளது. எனவே, புதிய விதிகளை உருவாக்குவதில் தமிழக அரசு முனைப்புக் காட்ட வேண்டும்.
நீர்நிலைகள் உள்ளிட்டவற்றில் நீண்ட காலம் வசித்துவரும் மக்கள், போதிய சான்று ஆவணங்களை வைத்திருந்தும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அவர்களின் வீடுகள் இடிக்கப்படுவது, அந்த உத்தரவையே கேள்விக்கு உள்ளாக்கும் சூழல் மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு நிலைமைகளை விளக்கி நீதிமன்றத்தில் சீராய்வு மனு ஏன் தாக்கல் செய்யக் கூடாது என்ற விவாதமும் பொதுவெளியில் தொடர்வதை அரசு பரிசீலிக்க வேண்டும்.
அரசு புறம்போக்கு இடங்களை நீண்ட காலம் பொதுப் பாதையாகப் பயன்படுத்தி வருவதை ரகசியமாக பட்டா வாங்கி வைத்துக்கொண்டு, இதை யாரும் பயன்படுத்தக்கூடாது என்ற முறையில் தனி நபர்கள் நீதிமன்றத் தடை உத்தரவு பெற்று வைத்திருப்பதையும் அரசும், வருவாய்த் துறையும் நியாயபூர்வமாக ஏன் பரிசீலிக்க முடியவில்லை? இப்படி தமிழகம் முழுவதும் பொதுப் பாதையை அடைப்பதும், அரசு புறம்போக்கு நிலத்தை பட்டா வாங்கிக்கொண்டு வேறு யாரும் பயன்படுத்த முடியாது என்ற வக்கிர புத்தியோடு சிலரின் நடவடிக்கைகள் தொடர்கின்றன.
பொதுப் பாதை ஆக்கிரமிப்பு (பொது பாதை ஆக்கிரமிப்பு மனு ) அல்லது பொதுப் பாதை வழக்கு அல்லது வண்டி பாதை - இன்றைய சூழ்நிலையில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. இதில் அரசு நிலமும், தனியார் நிலமும் ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாகின்றன. இதைக் கருத்தில் கொண்டு அரசு, அரசாணை 540 எண் சட்டம் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பான விவரங்கள் எதுவாக இருந்தாலும், அரசாணை எண் 540-ஐ கொண்டு அகற்றலாம் எனச் சட்டம் சொல்கிறது. பொதுப் பாதை ஆக்கிரமிப்பு குறித்து ஊராட்சியாக இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் மனுக்களைக் கொடுக்கலாம் அல்லது நகராட்சியாக இருந்தால் ஆணையரிடமும் மனுக்கள் கொடுக்கலாம்.
தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம் 1905-ன்படி இவர்கள் நடவடிக்கைகள் எடுக்காவிடில் வட்டாட்சியரிடம் பொதுப் பாதை ஆக்கிரமிப்பு மனு எழுதிக் கொடுக்கலாம். அப்படி மனுக்கள் எழுதிக் கொடுத்த பின்னர் தகுந்த ஆவணங்களாக உள்ள கிராம வரைபடம், அடங்கல் நகல் அல்லது அந்தப் பாதையை ஆக்கிரமிப்பு செய்ததற்கான ஆதாரம் இவை இருந்தால் நிச்சயம் அதை வட்டாட்சியர் கிராம நிர்வாக அலுவலரிடம் சரிபார்த்து நடவடிக்கை எடுக்கச் சொல்வார் என்று சட்டம் சொல்கிறது.
வாகனங்கள் செல்ல வண்டிப் பாதையை அடைத்து அதில் சுவர் கட்டுதல், ஆடு, மாடுகளைக் கட்டுதல் மற்றும் அந்தப் பாதையை அவர்கள் மட்டுமே பயன்படுத்தினாலும் மனுக்கள் வட்டாட்சியரிடம் கொடுக்க முடியும். முடிந்த அளவுக்கு இதையெல்லாம் ஒழுங்குபடுத்துவதற்கு குறைந்தபட்சம் புதிய சாலைப் பாதுகாப்பு விதிகளை அரசு உருவாக்க வேண்டும்.
இப்படியான பிரச்னைகள் குறித்து தொடர்புடைய பயனாளிகளோ அல்லது பொதுநல வழக்கோ நீதிமன்றத்தில் தொடரும்போது, அவை மீது முழுமையாக ஆய்வு செய்து உரிய நியாயம் வழங்க நீதிமன்றமும் முன்வர வேண்டும் என்று எளிய மக்கள் எதிர்பார்ப்பதும் நியாம்தானே?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.