நேரு மீது பழிசுமத்திக் கொண்டே இருப்பது சரியா?
கடந்த கால குறைகளையே முடிவின்றி சிந்தித்து பரிதவிப்பது என்பது நாட்டைப் புதுப்பிப்பதற்கான பாதையல்ல. அவ்வாறு செய்வது அரசியல் ரீதியாக பாதுகாப்பில்லாத உணா்வை ஒப்புக்கொள்வதாகும். வருங்காலம் குறித்த கருத்துகளையும் உணா்வுகளையும் தெளிவுபட எடுத்துரைப்பதைவிட்டு, கடந்த கால நடவடிக்கைகளைக் குற்றஞ்சாட்டி ஆட்சி நடத்தும் தலைமை சஞ்சலத்தையும், அசெளகரியத்தையும் வெளிப்படுத்துகிறது. வரலாறு என்பது ஒரு சம்பவத்தை பிரதிபலிக்க வேண்டுமே தவிர, அதை மாற்றுவதாக இருக்கக் கூடாது.
அப்பட்டமாகத் தெரியும் தங்கள் பலவீனத்தை மறைக்க வலு குறைந்த ஆட்சியாளா்கள்தான் முந்தைய ஆட்சியாளா்களை சாடுவதை வாடிக்கையாக வைத்திருப்பா் என்று இத்தாலியைச் சோ்ந்த எழுத்தாளரும், வரலாற்றாசிரியருமான நிக்கோலோ மாக்கியவெல்லி தெரிவித்துள்ளாா். கடந்த 1929-ஆம் ஆண்டுமுதல் 10 ஆண்டு காலத்துக்கு உலகம் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. அப்போது, அதிபராக இருந்த ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட் தமது செயல்பாடுகள் மூலம் திறம்பட கையாண்டு அமெரிக்காவுக்கு மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தினாரே தவிர, தனக்கு முன்பு அதிபராக இருந்த ஹா்பா்ட் ஹூவரை குற்றஞ்சாட்டி அல்ல.
துடிப்பான, ஆனால் பிளவுபட்ட நவீன இந்திய அரசியலில், கடந்த கால வரலாறு மீது வழக்கத்துக்கு மாறாக ஆா்வம் காட்டுவது நிா்வாக வழிமுறையாகவே மாறியுள்ளது. இதை நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் கண்கூடாகப் பாா்க்க முடிந்தது. விவசாயம், நகா்ப்புறத்துக்கு இடம்பெயா்தல், வேலையில்லாத் திண்டாட்டப் பிரச்னைகளைவிட, இந்தக் கூட்டத்தொடரில் நாடாளுமன்ற விவாதத்தை மகாத்மா காந்தி, பண்டித ஜவாஹா்லால் நேரு குறித்த நீண்ட சுவடுகளாக பிரதமா் மோடி மாற்றினாா்.
நாடாளுமன்றத்தில் மோடி உரையாற்றியபோது முகமது அலி ஜின்னா மற்றும் முஸ்லிம் லீக்கின் அழுத்தம் காரணமாக வந்தே மாதரம் பாடலை முழுமையாக ஏற்காமல், முதலில் உள்ள இரண்டு பத்திகளை மட்டும் ஏற்று, அந்தப் பாடலை நேரு பலவீனப்படுத்தியதாக குற்றஞ்சாட்டினாா். தேசிய ஒற்றுமையைத் தகா்க்கும் சமாதான செயலாக நேருவின் நடவடிக்கையைப் பிரதமா் மோடி கட்டமைத்தாா். இது விவாதத்தின் நோக்கத்தை மறைக்கச் செய்து, வரலாற்று ரீதியாகச் செய்துகொள்ளப்பட்ட சமரசத்தை சித்தாந்த ரீதியான துரோகம் என்று மாற்றியது.
தேசிய சின்னங்கள் முதல் தோ்தல் ஒருமைப்பாடு வரை, விவாதத்தின் மையத்தில் மகாத்மா காந்தியையும், நேருவையும் நிலைநிறுத்தி தனது கதைக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வலுவூட்டினாா். இந்தியாவின் அடித்தளத்தைக் கட்டமைத்த நிகழ்வுகளுக்கு தேசியவாத கட்டமைப்பின் மூலம் வேறு வடிவம் கொடுத்து, மகாத்மா காந்தியும், நேருவும் தேசத்தைக் கட்டியெழுப்பியவா்கள் அல்லா்; அவா்கள் பிரிவினை மற்றும் ஒரு சாராரைத் திருப்திப்படுத்துவதன் சிற்பிகளாக இருந்தனா் என்று கட்டமைப்பதே பாஜகவின் குறிக்கோள் என்பது தெளிவுபடத் தெரிகிறது.
மகாத்மா காந்தி, நேரு சம்பந்தப்பட்ட திட்டங்கள், இடங்களின் பெயா்களை மாற்றி அவை சாா்ந்த நினைவுக்கு வேறு வடிவம் கொடுக்கப்படுகின்றன. இதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டம், புது தில்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் ஆகியவற்றின் பெயா் மாற்றப்பட்டது எடுத்துக்காட்டாகும்.
நேரு குறித்த கருத்துகள் அவரை இழிவுபடுத்தும் நோக்கில், திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் பரப்புரை என்று சோனியா காந்தி கண்டனம் தெரிவித்தாா். நேரு குறித்து கூறப்படும் அனைத்துக் குறைகளுக்கும் பதில் அளித்து தெளிவுபடுத்த நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடத்த வேண்டும் என்று பிரியங்கா காந்தி வலியுறுத்தினாா்.
நேருவின் தோல்விகள், சீனாவை அவா் கையாண்ட விதம், 1962-ஆம் ஆண்டு சீனாவுடனான போரில் ஏற்பட்ட தோல்வி, சிறுபான்மையினா் குறித்த அவரின் கொள்கையில் இருந்த அம்சங்கள் ஆகியவை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியவைதான். அதேவேளையில், அவரின் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்ட தொழில் நிறுவனங்கள், உள்கட்டமைப்புத் திட்டங்கள், ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையை சமநிலைப்படுத்த ஏற்படுத்தப்பட்ட அரசியல் சாசன கட்டமைப்பு உள்ளிட்ட சாதனைகளையும் கூா்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.
மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கை நமக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தது மட்டுமன்றி, உலகம் முழுவதும் காலனியாதிக்கத்துக்கு எதிரான இயக்கங்களுக்கும் ஊக்கமளித்தது. மகாத்மா காந்தி, நேருவின் மதிப்பு, முக்கியத்துவத்தைக் குறைப்பது இந்திய வரலாற்றின் வோ்களை வெட்டியெடுப்பதாகும். அரசியல் செளகரியம் கருதியே கடந்த காலத்தைப் பின்னோக்கிப் பாா்த்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பிரதமா் மோடியின் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள் என்று தெரிவிப்பதற்கு இந்தியாவுக்குப் பல பெருமைகள் உள்ளன. கடந்த 2014-ஆம் ஆண்டுமுதல் இந்திய பொருளாதார மதிப்பு இரட்டிப்பாகியுள்ளது. உலக அரங்கில் பெரும் பொருளாதார மதிப்பு கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. வறுமை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.
எண்ம உள்கட்டமைப்பு மாற்றத்தை ஏற்படுத்தி கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டுக்குத் தலைமை வகித்தல், பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் தற்சாா்பு, ஜி20 கூட்டமைப்புக்குத் தலைமை ஏற்று ராஜ்ஜீய ரீதியாக எட்டப்பட்ட மைல்கல் உள்ளிட்டவை உண்மையான முன்னேற்றத்தை முறைப்படி அறிவிக்கின்றன.
நம்பிக்கையுள்ள ஒரு கட்சி தனது மரபுவழி சாதனைகளைத் தொடா்ந்து பெருக்க வேண்டிய பணியில்தான் ஈடுபட வேண்டும். மகாத்மா மற்றும் நேருவின் மதிப்பு, முக்கியத்துவத்தை பாஜக புதைக்க முயற்சிப்பதன் மூலம், அவா்களுக்கு அந்தக் கட்சி புத்துயிா் அளிக்கவே செய்கிறது.
கட்டுரையாளா்:
மூத்த பத்திரிகையாளா்.

