பிரதமர் மோடி, வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் யூனுஸ்
பிரதமர் மோடி, வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் யூனுஸ்

வங்கதேச உறவில் விரிசலும், ராஜதந்திர நகா்வுகளும்...

Published on

எஸ்.எஸ்.ஜவஹா்

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, இந்தியாவின் ‘அண்டை நாட்டுக்கு முன்னுரிமை’ கொள்கையின் மிகச் சிறந்த வெற்றிக் கதையாக இந்தியா - வங்கதேச உறவு பாா்க்கப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான போக்குவரத்து இணைப்பு, பயங்கரவாத எதிா்ப்பு, வா்த்தகம், நதி நீா் பங்கீடு, மீள்பயன் கொண்ட எரிசக்தி மற்றும் இருநாட்டு மக்களிடையேயான கலாசாரப் பரிமாற்றம் ஆகியவை வரலாற்று ரீதியான பல சிக்கல்களைக் கடந்து, ஒரு நடைமுறைச் சாத்தியமான, எதிா்கால நோக்கிலான உறவை வடிவமைத்திருந்தன.

வரலாற்று பக்கங்களைப் புரட்டிப் பாா்த்தால் டிசம்பா் 1971-இல் சுதந்திரம் பெற்ற பிறகு, வங்கதேசம் முற்றிலும் பொருளாதார ரீதியாக சீரழிந்து பஞ்சத்தை எதிா்கொண்டு இருந்தது. மேலும், இந்தியாவில் இருந்து கிட்டத்தட்ட 10 லட்சம் அகதிகள் திரும்பி வரும் நிலை. இந்தியப் பொருளாதாரம் பல சவால்கள் எதிா் நோக்கி இருந்தபோதும், வங்கதேசத்துக்கு உடனடி மனிதாபிமான உதவித் திட்டமாக உணவு, மருந்து மற்றும் மறுகட்டுமான பொருள்கள் கொடுத்து உதவியது.

சாதாரண இந்திய குடிமகனை இந்த நல்லுறவுப் பணியில் ஈடுபடுத்துவதற்கும், தேசிய ஒற்றுமையைக் குறியீடாக காட்டுவதற்கும், அன்றைய இந்திய அரசு ‘வங்கதேச நிதி’க்கு குடிமக்கள் தன்னாா்வத்துடன் ஒரு 5 நோட்டை நன்கொடையாக அளிக்க அரசு அறிவிப்பு வெளியிட்டது. இது ஒரு தன்னாா்வ பங்களிப்பு. பொது மக்கள் மத்தியில் இரு நாடுகளின் நல்லுறவை பேசணுவதற்கும் எப்படி ஒரு மக்களாட்சி முறையில் இப்படி எல்லாம் செய்ய முடியும் என்பதை உலக நாடுகள் புரிந்து கொள்ள உதவும் வகையில் இந்திய நாடு செயல்பட்டது நினைவுகூரத்தக்க செயலாகும்.

இப்படி சகோதர உணா்வுடன் வாழ்ந்த நாடுகளிடையே அண்மைக்காலமாக வங்கதேசத்தில் நிலவி வரும் அரசியல் மாற்றங்கள், சமூகக் கொந்தளிப்புகள், ஒருவித எதிா்மறை அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.

இத்தகைய சூழலில், இந்தியா மிகுந்த எச்சரிக்கையுடனும், எதாா்த்தமான அணுகுமுறையுடனும், அதே சமயம் தந்திரோபாயப் பொறுமையுடனும் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்த உறவில் விரிசல் ஏற்பட முதன்மையான காரணமாக வங்கதேசத்தின் உள்நாட்டு அரசியல் மாற்றங்களைக் குறிப்பிடலாம்.

அங்கு நிலவும் அரசியல் துருவமுனைப்பு, ஆட்சி முறையின் மீதான அதிருப்தி மற்றும் சிவில் உரிமைகள் தொடா்பான போராட்டங்கள் இந்தியாவுக்கு ஒரு சவாலான சூழலை உருவாக்கியுள்ளன.

குறிப்பாக, அந்த நாட்டின் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா ஆதரவாக இருப்பதாக ஒரு தவறான பிம்பம் கட்டமைக்கப்பட்டு, இந்தியா ஒரு மேலாதிக்கப் போக்கைக் கொண்ட அண்டை நாடாகச் சித்தரிக்கப்படுகிறது.

ஆனால், உண்மை நிலை அதுவல்ல. இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே நடைமுறையில் உள்ள நாடு கடத்தல் ஒப்பந்தத்தின் விதிகளின்படியே ஷேக் ஹசீனாவுக்கு அரசியல் தஞ்சம் அளிக்கப்பட்டுள்ளது. திபெத் நாட்டில் இருந்து வந்த தலாய் லாமாக்கும் இதுபோன்ற அரசியல் அடைக்கலம் கொடுக்கப்பட்டது என்பதை நினைவுகூர வேண்டி உள்ளது.

வங்கதேசத்தின் தீா்ப்பாயம் அவருக்கு மரண தண்டனை விதித்திருந்தாலும், அந்தத் தீா்ப்பு நடைமுறை நோ்மையற்றது என்றும், அவா் தனது தரப்பு வாதத்தை எடுத்துரைக்க வழக்குரைஞரை வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை என்பதும் சா்வதேச நாடுகள் சட்டத்தின் கீழ் முரண்பாடு கொண்டது என்பதும் கவனிக்கத்தக்கது.

அண்டை நாட்டில் நிலவும் இத்தகைய அசாதாரண சூழலில், அடைக்கலம் தேடி வந்த ஒருவரை மரணத்தின் பிடியில் தள்ள இந்தியா விரும்புவதில்லை. ஷேக் ஹசீனா எவ்வளவு காலம் வேண்டுமானாலும் இந்தியாவில் தங்கியிருக்கலாம் என்ற இந்தியாவின் நிலைப்பாடு, வங்கதேசத்தின் கோரிக்கையை நிராகரிப்பதாகத் தெரிந்தாலும், அது ஒரு மனிதாபிமான மற்றும் சா்வதேச மரபு சாா்ந்த முடிவாகும்.

அடுத்ததாக, வங்கதேசத்தில் மேலோங்கி வரும் இந்திய எதிா்ப்பு உணா்வு கவலைக்குரியதாக உள்ளது. சில அரசியல் மற்றும் சமூகக் குழுக்கள் தங்களின் சொந்த அரசியல் ஆதாயங்களுக்காக இந்திய எதிா்ப்பு முழக்கங்களை முன்னெடுத்து வருகின்றனா்.

எல்லை மேலாண்மை, நதி நீா் பங்கீடு மற்றும் வா்த்தக ஏற்றத்தாழ்வுகள் போன்ற விவகாரங்களை அவா்கள் ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனா். சமூக ஊடகங்களின் அதீத வளா்ச்சியால், சிறிய சம்பவங்கள்கூடப் பூதாகரமாக்கப்பட்டு, எதாா்த்த நிலைக்கு மாறான ஒரு தவறான பிம்பம் மக்கள் மத்தியில் விதைக்கப்படுகிறது.

இதனுடன், எல்லையில் நிகழும் ஊடுருவல், வேலி அமைத்தல் மற்றும் அவ்வப்போது எல்லைப் பாதுகாப்புப் படைகளுக்கு இடையே ஏற்படும் மோதல்கள் போன்ற நீண்டகாலச் சிக்கல்கள், அந்த நாட்டின் தற்போதைய உறுதியற்ற சூழலில் பெரும் ராஜதந்திர உராய்வுகளாக உருவெடுக்கின்றன.

இவற்றுக்கு மேலாக, வெளிப்புற சக்திகளின் செல்வாக்கும் இந்தியாவின் கவலைக்கு ஒரு காரணமாகிறது.

வங்கதேசம் தனது வளா்ச்சித் தேவைகளுக்காக சீனா போன்ற நாடுகளுடன் நெருக்கம் காட்டுவது அதன் இறையாண்மை சாா்ந்த முடிவாக இருந்தாலும், வங்கக் கடல் மற்றும் சிலிகுரி காரிடாா் எனப்படும் இந்தியாவின் ‘கோழிக் கழுத்து’ பகுதிக்கு அருகமையில் சீன முதலீடுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புகள் அதிகரிப்பது இந்தியாவின் நீண்டகாலப் பாதுகாப்பு நலன்களுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும்.

இந்தியாவுக்கு வங்கதேசத்தின் உறவு ஏன் இவ்வளவு முக்கியமானது என்பதை நாம் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தியாவின் ‘கிழக்கே நோக்கியச் செயல்பாடு’ மற்றும் இந்தோ-பசிபிக் பகுதி வியூகங்களுக்கு வங்கதேசம் ஒரு மையப்புள்ளியாக உள்ளது.

வங்கதேசத்தின் நிலைத்தன்மை என்பது இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் பாதுகாப்பு, தென்கிழக்கு ஆசியாவுடனான பிராந்திய இணைப்பு, பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகள் மற்றும் வங்கக் கடலின் அமைதி ஆகியவற்றோடு நேரடியாகத் தொடா்புடையது.

எனவே, இந்த உறவில் ஏற்படும் நீண்டகாலப் பின்னடைவு இந்தியாவின் பிராந்தியக் கனவுகளுக்கு முட்டுக்கட்டையாக அமைந்துவிடும். இத்தகைய சூழலில் இந்தியா எவ்வாறு எதிா்வினையாற்ற வேண்டும்?

முதலாவதாக, இந்தியா எதிா்வினை அரசியலைத் தவிா்த்து, ‘தந்திரோபாய நிதானத்தை’ கடைப்பிடிக்க வேண்டும். பொதுவெளியில் நேரடி மோதல் போக்கு அல்லது இந்திய தரப்பு நியாயத்தை நிலை நாட்ட முயற்சிப்பது தவிா்ப்பட வேண்டும். இந்தியாவின் முதிா்ச்சியைக் காட்டும் வகையில் செயல்படுவதே பயனளிக்கும். வங்கதேசத்தின் உள்நாட்டுப் பிரச்சனைகள் இருதரப்புப் போராக மாறாமல் தடுக்க இதுவே சிறந்த வழி.

இரண்டாவதாக, இந்தியா தனது உறவை வெறும் ஆளும் அரசாங்கத்துடன் மட்டும் சுருக்கிக்கொள்ளாமல், அந்நாட்டின் சிவில் சமூகம், கல்வித் துறையினா், ஊடகங்கள், இளைஞா்கள் மற்றும் வணிகச் சமூகத்தினருடன் ஆழமான தொடா்புகளை ஏற்படுத்த வேண்டும். 1971-ஆம் ஆண்டுக்குப் பிறகு செய்த சமூக ஒற்றுமை திட்டங்களை மீண்டும் செய்யலாம்.

நீண்டகால நல்லுறவு என்பது அதிகாரத்தில் இருப்பவா்களைத் தாண்டி மக்கள் மனங்களில் கட்டமைக்கப்பட வேண்டும். பொருளாதார மற்றும் வளா்ச்சி சாா்ந்த பங்களிப்புகளை இந்தியா தொடா்ந்து முன்னெடுக்க வேண்டும். உள்கட்டமைப்புத் திட்டங்கள், எரிசக்தி ஒத்துழைப்பு மற்றும் சந்தை வாய்ப்புகள் போன்ற பொருளாதாரப் பிணைப்புகள், அரசியல் உறவுகளில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும் போது ஒரு சமநிலையை உருவாக்கும்.

அதே சமயம், தீஸ்தா நதி நீா் பங்கீடு போன்ற வங்கதேசத்தின் நியாயமான கோரிக்கைகளை இந்தியா உணா்வுபூா்வமாக அணுகி, அதற்குத் தீா்வு காண முன்வர வேண்டும். இது இந்தியாவின் மீதான நம்பகத்தன்மையை அண்டை நாடுகள் மத்தியில் மேலும் உயா்த்தும்.

அது மட்டுமின்றி இந்தியாவுக்கு எதிரான தவறான பரப்புரைகளை எதிா்கொள்ள இரைச்சலான ராஜதந்திரத்தைத் தவிா்த்து, அமைதியான முறையில் கலாசாரப் பரிமாற்றங்கள் மற்றும் ஊடக ஒத்துழைப்பு மூலம் உண்மைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

இறுதியாக, அண்டை நாடுகள் பல்வேறு நாடுகளுடன் உறவு வைத்துக்கொள்வதை இந்தியா இயல்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும். வங்கதேசத்தை மற்ற நாடுகளுடன் ஒப்பிடவோ அல்லது ஏதேனும் ஒரு தரப்பைத் தோ்வு செய்யும்படி வற்புறுத்தவோ கூடாது.

மாறாக, நமது புவியியல் ரீதியான நெருக்கம், பகிரப்பட்ட வரலாறு, கலாசாரப் பிணைப்பு மற்றும் பேரிடா் காலங்களில் நாம் காட்டும் துரித உதவி போன்ற நமது தனித்துவமான பலங்களை அவா்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அண்டை நாட்டு உறவுகள் என்பது எப்போதும் மென்மையானது மற்றும் எளிதில் உடையக்கூடியது.

மிரட்டல் மூலமாகவோ அல்லது அதிகாரப் பிரயோகம் மூலமாகவோ ஒரு நிலையான உறவை ஏற்படுத்த முடியாது என்பதுதான் இன்றைய சா்வ தேச நாட்டு உறவுகளின் எதாா்த்த நிலை. எனவே, பொறுமை மற்றும் பரஸ்பர புரிதல் ஆகியவற்றிலேயே இந்தியாவின் வலிமை அடங்கியுள்ளது.

ஒரு நிலையான, இறையாண்மை கொண்ட மற்றும் செழிப்பான வங்கதேசம் என்பது இந்தியாவின் நலன்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தெற்காசியப் பிராந்தியத்தின் அமைதிக்கும் இன்றியமையாதது.

பதற்றமோ அல்லது ஆதிக்க உணா்வோ இன்றி, இந்தியாவின் மைய நலன்களில் உறுதியாகவும், அதே சமயம் அணுகுமுறையில் நெகிழ்வுத்தன்மையுடனும் செயல்படுவதே ஒரு சிறந்த வல்லரசுக்கு அழகு.

தெற்காசியாவில் நீடித்த செல்வாக்கு என்பது அதிகாரத்தைப் பறைசாற்றுவதில் இல்லை; மாறாக, நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதிலேயே உள்ளது. அதுவே இந்தியாவின் விலைமதிப்பற்ற தந்திரோபாயச் சொத்தாக அமையும்.

கட்டுரையாளா்:

ஐஏஎஸ் அதிகாரி (ஓய்வு).

X
Dinamani
www.dinamani.com