

முனைவர் பாலசாண்டில்யன்
மறைக்கப்பட்ட உண்மைகள் எல்லாம் சொல்லாத பொய்கள் என்று சொல்லுவார்கள். நாம் பார்ப்பதோ, ஒருவன் நினைப்பதோ அல்ல அவன். எதை மறைக்க முயல்கிறானோ அதுதான் அவன். நாம் மறக்க நினைக்கும் அல்லது மறைக்க நினைக்கும் ரகசியங்களைவிட நம்மை வேறெதுவும் தனிமைப் படுத்திவிடமுடியாது. ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல.
உலகத்தினருடன் நாம் பகிர்ந்து கொள்ளும் ரகசியத்தை வைத்து நம்மைக் கண்டறிந்துவிட முடியாது. மக்கள் அந்த ரகசியத்தில் மூழ்கிப் போகும்போது சொன்ன வரை மறந்து போவர்.
நமது ரகசியங்களை மறைப்பது புத்திசாலித்தனம்; அதைச் சொல்லிவிட்ட பிறகு மறைத்திருக்கவேண்டும் என்று எண்ணுவது முட்டாள்தனம். ரகசியம் என்பது யாருடனும் எந்தத் தருணத்திலும் பகிர்ந்து கொள்ள முடியாதது.
ரகசியம் பல வகை. அடுத்த வாரம் திருமணம்; பிள்ளையின் பிறந்த நாளுக்கு வாங்கி வைத்திருக்கும் பரிசு; காதல் செய் வது பெற்றோருக்குத் தெரியாமல் இருப்பது; புதிதாக ஏற்பட்டிருக்கும் (புகைத்தல்) பழக்கம் என இப்படி எல்லாமே ரகசியம் தான். ஒரு ரகசியத்தைக் காப்பது என்பது சொத்தைக் காப்பதைவிடக் கடினம்.
ரகசியங்கள் ஒருவரை நங்கூரம்போல முடக்கிப் போடும்; செயலிழக்க வைத்து விடும். ஒருவரின் உடல்நலன் சரியில்லை என்பது ரகசியம். அதை மிகவும் நெருக்கமானவர்களிடம் மறைக்கும்போது அந்த நோயின் தன்மையே அதிகம் ஆகிறது என்கின்றன பல ஆய்வுகள்.
உங்களிடம் ஒருவர் தனது ரகசியத்தைப் பகிர்ந்து கொண்டார் என்பது மகிழ்ச்சி. அதே சமயம் மிகவும் மனதின் பாரமும் கூட. உங்களை நம்பி ஒருவர் சொல்லி இருக்கிறார் என்பது நல்ல விஷயம்தான். அதை நீங்கள் எப்படிப் பாதுகாப்பீர்கள் என்பது நமது கவலைதானே தவிர, ரகசியம் சொன்னவரது அல்ல.
ஏற்கெனவே நீங்கள் மறைத்து வைத்திருக்கும் உங்கள் ரகசியம், கூடுதலாக பிறரின் ரகசியம் வேறு; மனதின் பாரம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. வளர்த்துக் கொள்ளும் மனஉறுதிதான் நமது நற் பெயர் மற்றும் நம்பகத்தன்மை இரண்டை யும் காப்பாற்றும்.
பிறர் நம்மிடம் ஒரு ரகசியத்தைச் சொல்கிறார் என்றால், அது சிறியதா அல்லது பெரியதா என்று பார்க்க வேண்டும். பெரியது என்றால் உங்கள் மீது அவர் வைத்திருக்கும் நம்பகத்தன்மை மிகவும் அதிகம் என்று அர்த்தம். நீங்கள் காக்க வேண்டியது இரண்டையும்தான். சில ரகசியங்கள் சட்ட ரீதியானதாக இருக்கலாம்; வணிக ரீதியாக இருக்கலாம்; அவை கசிந்து விட்டால் தெரிந்திருக்கும் நமது நிலை குறித்துத் தெரியாமல் போகலாம்.
குறிப்பாக, பிரபலங்களின் மறைவு வாழ்க்கை, சொத்துகள், அவற்றைச் சேர்த்த விதம், செய்யும் தொழில் என்று எல்லாமே ரகசியம் தான். அவை நமக் குத் தெரியாதவரை நல்லதுதான். அப்படிப்பட்ட சில ரகசியங்களை நம்மால் மனைவி அல்லது கணவரிடம்கூட சில நேரம் சொல்ல முடியாது. அதை மறைக்க நாம் படும்பாடு மிகக் கொடுமையானது. நமது சொந்த ரகசியம் என்றால், எவ்வளவு காலம் மறைக்கப்பட வேண்டும்; யாரிடம் இருந்து மறைக்கப்பட வேண்டும். சில நேரம் அது நிரந்தரமாக மறைக்கப்பட வேண்டிய ஒன்றாகக்கூட இருக்கலாம். ஆனால், எந்த ரகசியமும் ஒரு நாள் போட்டு உடைக்கப்பட்டு அதன் காலாவதி நாளை அல்லது இறுதி நாளை நெருங்கிவிடும்.
சில நேரம் நமது மன நிம்மதிக்காக கண்ணாடி முன் நின்று ஒரு முறை சொல்லிவிடலாம். சில நேரம் நமது டைரியில் எழுதி வைக்கலாம். அது யார் கண்ணிலும் பட்டுவிடக் கூடாது. எதுவும் தெரியாதது போலவே நடிப்பது என்பது ஒரு கலை. சிலருக்கு மட்டுமே அது கைவந்த ஒன்று. நம்மில் பலருக்கு நடுங்கும் கைகளும்சிமிட்டும் கண்களும் காட்டிக் கொடுத்து விடும். நேர்மையாக இருக்க அதிக துணிச்சல் வேண்டும். ரகசியமே இல்லாத திறந்த புத்தகமாக வாழ்ந்து மறைந்தவர் வெகு சிலரே. அந்தக் காலத்தில் எதிரி நாட்டின் மீது போர் தொடுக்கப் போவது மிகுந்த ரகசியமாக இருக்கும். ஐபிஎல் விளையாட்டில் எந்த வீரரை ஓர் அணி எவ்வளவுரூபாய்க்கு ஏலம் எடுக்கப் போகிறது என்பது அண்மையில் ஏற்பட்ட ரகசிய நிகழ்வு.
தெரிந்த ஒரு ரகசியத்தை எப்போது வெளியே சொல்லலாம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஒரு முக்கியத் தலைவர் இறந்து விட்டார் என்றால், அதை எப்போது எப்படிச் சொன்னால் பல்வேறு பொதுவெளி தொல்லை - தொந்தரவுகள் வராமல் சட்டம்-ஒழுங்கைக் காக்கலாம் என்று அரசும் அதிகாரிகளும் சிந்திப்பர்.
சொல்லக்கூடாத ஒரு ரகசியத்தை தவறிச் சொல்லிவிட்டு என்னாகுமோ என்ற மனநிலையில் தவிப்பவர்களை நாம் பார்த்திருப்போம். இப்போதெல்லாம் ஒரு படத் தில் யார் நடிக்கிறார்கள், என்ன வேடத்தில் நடிக்கிறார்கள், அதன் கதை என்ன, தலைப்பு என்ன என்பதை ரகசியமாக வைத்திருக்கும் நிலையைப் பார்க்கிறோம்.
ரகசியத்தை மறைக்கும் ஒருவரின் நடவடிக்கைகள் விநோதமாக இருப்பதைவைத்தே அவர் மீது சந்தேகம் வரக்கூடும். வேண்டாத விளக்கங்கள், தேவையற்ற புன்னகைகள், சமாளிப்புகள், வஞ்சக் கதைகள் எல்லாமே ஒருவரைக் காட்டிக் கொடுத்து விடும். சில பெண்கள் ரகசியங்களை மனதில் வைத்துப் பூட்டி சாவியை எறிந்து விடுவார்கள்.
நாயும் நரியும் முதலில் ஒன்றுபோலத் தெரிந்தாலும், அதன் குட்டு ஒரு நாள் வெளிப்படும். முழுப் பூசணியை சோற் றில் மறைக்க முடியாது என்பதுபோல், ஒரு நாள் ரகசியம் வெளியே வந்தே தீரும். சில சமயம் ரகசியம் அவருள் இருக்கும்; அவருடனேயே ரகசியம் புதைக்கப் படுவதும் உண்டு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.