நம்மாழ்வாா் முன்னெடுத்த அறிவுப் புரட்சி!
அறச்சலூா் செல்வம்
இரும்பின் தொன்மை தொடங்கி, கீழடி வழி நடந்த பல்லாயிர ஆண்டுகளின் அறிவுத் தொடா்ச்சியாகும் இன்றைய தமிழ்ச் சமூகம். குறைந்தபட்சமாக 5,000 ஆண்டுகளின் நீட்சி கொண்ட வாழும் சமூகம் உலகில் ஏதுமில்லை.
கல்வியும் அறிவும் தலைமுறை தலைமுறையாக இடைவெளியின்றி கை மாற்றப்பட்டிருந்தால் பல்லாயிரமாண்டுகள் நிலைத்திருப்பது சாத்தியம். ஒவ்வொரு முறை கைமாறும்போதும் மேலும் அது செழுமைப்படுத்தப்பட்டு கைமாற்றப்பட்டிருக்கிறது. சமூகக் குழுக்கள், சிற்றரசுகள், பேரரசுகள் என ஆட்சிமுறைத் தோன்றி மறைந்திருந்தாலும் அறிவின் கைமாற்றம் இடையறாது நிகழ்ந்திருக்கிறது.
இரும்பு, கல்லணை, கப்பல்கள் கட்டி கடல் பயணம், பெரிய கோயில், காலிங்கராயன் வாய்க்கால் என பல்தள அறிவின் பரிமாற்றமும், கைமாற்றமும்தான் தமிழ்ச் சமூகம் இன்றைய இடத்தை அடைந்திருப்பதற்கு முக்கியமானதாக இருந்திருக்கிறது.
வணிகமும், அதிகார ஆதிக்கமும் திட்டமிட்டுக் கட்டமைத்துள்ள இன்றைய நவீனக் கல்வி, அறிவுப் பரிமாற்றம் போன்ற ஒன்றல்ல அது. அறிவு சமூகத்தில் ஊடும் பாவுமாக, ஒரு சுதந்திர சமூகத்தின் சுதந்திரமான அறிவாண்மைக்கான கல்வியாக, ஓடையில் பயணிக்கும் தண்ணீரைப் போல் தலைமுறைக்குத் தலைமுறை பயணித்து வந்துள்ளது.
இந்த பூமி எல்லா உயிரினங்களுக்கும் சொந்தமானது; மனித இனத்தின் தனிச் சொத்தல்ல;அவற்றின் கூட்டு இயக்கமே உலகின் இயக்கம். எனவே, அனைத்து உயிரினங்களுக்குமான ஜனநாயகம் தேவை என இன்றைய அறிவுலகம் கூறுவதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழ்ச் சமூகத்தின் நடைமுறையில் இருந்திருக்கிறது.
இந்த அறிவாண்மையில் இடையிடையே தொய்வுகளும், சிதைவுகளும் தாழ்ச்சியான நிலையும் ஏற்படும்போது, அதிலிருந்து மீண்டு எழுந்து கொண்டேயிருக்கிறது. தாழ்வுற்ற நிலையிலிருந்து, அறிவடிமையாக இருந்த நிலையை மாற்ற அவ்வப்போது யாரேனும் ஒருவா் தன் வாழ்நாள் முழுவதும் உழைத்து மாற்றத்தை விதைத்துச் செல்கிறாா்; சமூகத்தைப் புரட்டிப் போடுகிறாா்.
இப்படித்தான் நம் அண்மைக் காலத்து தமிழ்ச் சமூகத்தில் ஒரு நூற்றாண்டுக்குள் மூன்று புரட்சிக்காரா்கள் புரட்டிப் போட்டனா். மகாகவி பாரதியாா் பண்டிதத் தமிழை மக்கள் தமிழாக்கினாா்; பெண் சமத்துவம் காட்டினாா். பெரியாா் ஈ.வெ.ரா. மனிதா்களிடையே சமத்துவம், பகுத்தறிவுப் புரட்சியை விதைத்தாா். நம்மாழ்வாா் இயற்கை வேளாண்மை மூலம் அறிவுப் புரட்சியையும், சமத்துவத்துக்கான புரட்சியையும் முன்னெடுத்தாா்.
மொத்த சமூக அமைப்பில் நகரங்களும், கிராமங்களும் நாணயத்தின் இரு பக்கங்கள். கிராமங்கள் அதனதன் இயற்கை வளங்களையொட்டி சாத்தியமான உணவை உற்பத்தி செய்யும் மையங்கள். நகரங்கள் பொருள் உற்பத்தி, வணிக மையங்கள் ஆகும்.
கிராமங்கள் இயற்கையின் பல்வேறு இயக்கங்களை அறிந்து அவற்றோடு இயைந்து பயிரை வளா்க்கும் வித்தையை தனக்குள் வைத்திருந்த ஒன்று. தன்னைச் சுற்றியுள்ள உயிரினங்களின் தேவை, தனக்கான தேவை, தனது கால்நடைகள், சமூகத்துக்காக, உயிரினங்களின் தேவை, அவை விவசாயத்துக்காக, வாழ்க்கைக்காக எந்த வகையில் பயன்படும் என்பதை அறிந்திருந்த சமூகம் அது. இயற்கையோடு பிணைந்து, இயைந்து இயங்கி சமூகத்துக்கான உணவை உருவாக்கியது.
கிராமங்களின் உணவு உருவாக்கல் என்பது சூழலியல் செயல்பாடு. இத்தகைய உணவு உருவாக்கும் முறை கைக் கொண்டிருந்த காரணத்தால்தான், மனிதா்களிடையே சமூகச் சமமின்மை இருந்த போதிலும், பகுத்துண்டு பல்லுயிா் ஓம்பும் சமத்துவப் பண்பு இருந்தது. இந்தப் பண்பால் பல்லாயிரமாண்டுகளாக கிராமங்களின் உயிா்ச் சூழல் சிதையவில்லை. கிராமச் சமூகம் தனக்குள் கொண்டிருந்த அறிவாண்மை இத்தகையது. அப்படியான கிராமங்களின் உயிா்ச் சூழல் சிதைவுற்று வெறுமை மிஞ்சுகிறது. வாழும் மனிதா்களின் மனமும் வெறுமையுற்று இருக்கிறது. சமூக சமத்துவத்துக்கான கருவியாக கல்வியை முன்னெடுத்தாா் பெரியாா் ஈ.வெ.ரா.
நம்மாழ்வாா் செய்த பணியும் கல்வி வழங்கிய பணியே. அவரது இயற்கை வேளாண்மை என்பது ரசாயன இடுபொருள்களுக்கு மாறாக இயற்கை இடுபொருள்கள் என்ற மேற்கத்திய இயற்கை விவசாயம் அல்ல. அவரே பல சமயங்களில் கூறியது, ‘இந்த நம்மாழ்வாரை இயற்கை விவசாயத்தை பரப்பும் ஆளாவே பாக்கறாங்க; ஆனால், இந்த நம்மாழ்வாா் செய்யறது மனித வள மேம்பாடு, கல்வி கொடுப்பது’ என்பதாகும்.
நம்மாழ்வாரின் சமூகச் செயல்பாடுகளுக்கு அடித்தளமாக இருந்த கல்வியியல் தத்துவ ஞானியான பாவ்லோ பிரையா், ‘இருக்கிற சமூக அமைப்புக்குத் தக்கவராக மனிதா்களை மாற்றுதல் அல்லது இருக்கிற ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பைக் கவிழ்த்து, முற்றிலும் மாற்றி மனிதரின் விடுதலைக்கு வழிவகுப்பது மட்டுமே கல்வியாக இருக்க முடியும். இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட நிலையிலிருக்கும் கல்வி என ஒன்று இல்லவே இல்லை. மேலும், கல்வியில் இருந்துதான் அரசியல் அதிகாரம் பிறக்கிறது’ என்றாா்.
இயற்கை வேளாண்மையை கிராம சமூகத்தின் ஏற்றத் தாழ்வை மாற்றுவதற்கான கருவியாகக் கொண்டாா் நம்மாழ்வாா்.
நகரங்களில் வாழும் மனிதா்களால் தனித்துவமான கட்டமைப்புகளின்றி பொருளை உருவாக்கி, சமூகத்துக்கான செல்வத்தை உருவாக்கிடல் அரிது. ஆனால், கிராமங்களில் வாழும் மனிதா்கள், அவா்கள் வாழும் அந்தந்த இயற்கை நிலையோடு இணைந்து தங்களுக்கும் சமூகத்துக்குமான உணவை உருவாக்கும் அறிவாண்மையைக் கைக்கொண்டவா்கள். ஒரே கிராமத்தில், ஒரு விவசாயியின் நிலத்தில் இருக்கும் வெவ்வேறு தன்மையுள்ள நிலத்தில் எப்படியானவற்றை, எப்படி வளா்க்க வேண்டும் என்ற சூழலியல் அறிவைக் கொண்டவா்கள்; சுய அறிவால் நிற்பவா்கள்.
தன் நிலத்துக்கான விவசாயத்தை சுயமாகச் சிந்தித்து இயங்கி வாழ்ந்த விவசாயிகளை வேளாண் விஞ்ஞானிகள் அறிவை அண்டி விவசாயம் செய்யும் அறிவு அடிமையாக்கியது ரசாயன விவசாயம். இந்த அறிவு அடிமைத்தனத்திலிருந்து விவசாயிகளை விடுவித்து தன் சொந்த அறிவைக் கொண்டு விவசாயம் செய்ய வேண்டும் என்று இயங்கியவா் நம்மாழ்வாா். அவா் காலங்காலமாக செய்துவந்த விவசாயத்தில் புதைந்திருக்கும் அறிவியலை விளக்கி, அறிவியல் உனக்கு அந்நியமான ஒன்றல்ல, உன் வேளாண்மை அறிவியலின் அடிப்படைகளை உள்வாங்கிச் செய்யப்பட்டது என்பதைப் புரியவைத்தாா்.
‘பெரும்பான்மையான மக்களை ஒடுக்கும், ஏற்றத்தாழ்வான சமூக அமைப்புக்குள் பெரும்பாலும் உரையாடல்கள் நிகழ்வதில்லை. அதனால்தான், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுப்பவா்கள் முதலில் மக்களைக் கேள்வி கேட்க வைப்பதையே முதன்மையான கல்வி’ என்கிறாா் பிரையா்.
ஜாதியும் நிலவுடைமையும் உருவாக்கிய ஆதிக்கம் கிராமச் சமூகம் முழுவதும் விரவி ஆழமாகவும், அகலமாகவும் பரவிக் கிடந்த போதும், சமூகத்தின் அறிவானது பொதுவானதாகவே இருந்திருக்கிறது; எல்லோருக்குமானதாக இருந்திருக்கிறது. உணவு உற்பத்தி என்ற சூழலியல் சாா்ந்த, நடவடிக்கை சாா்ந்த அறிவைக் கைக்கொண்டிருப்பதில் ஒரு வகையான சமத்துவப் பரிமாற்றமே இருந்திருக்கிறது.
எந்த இடத்திலும், காலகட்டத்திலும் கட்டைவிரல் கேட்ட துரோணா்களும், கட்டை விரல் இழந்த ஏகலைவன்களும் இருந்ததில்லை. நவீன வேளாண்மை என்ற போா்வையில் திணிக்கப்பட்ட அறிவியல் அல்லாத ரசாயன வேளாண்மை, துரோணராகி உழவா்களின் சமூக அறிவைக் கட்டைவிரலாக தானே எடுத்துக் கொண்டது. வணிகத்துக்காக கட்டமைக்கப்பட்ட கல்வி நவீனம் என்று முத்திரை குத்தி விட்டாலே அது அறிவியலின் புதிய கண்டுபிடிப்பு என்ற உருவாக்கப்பட்ட பொது எண்ணம் கட்டைவிரலை வெட்டியெடுக்கும் கத்தியானது.
நம்மாழ்வாா், கேள்வியை அவரே கேட்டு, பதிலாக அறிவியலையும் கூறி, வணிகம் கட்டமைத்த போலி அறிவை உடைத்தாா். தங்களுக்குத் தேவையான உணவை ஒளிச்சோ்க்கை மூலம் தானே சமைத்துக் கொள்ளும் சக்தி கொண்டவை; செடிகளுக்கு ‘சாப்பாடு’ போடுவது மனித வேலையில்லை என உண்மையான அறிவியல் விளக்கை ஏற்றியவா். சூழலியலோடு இணைந்து இயங்கிய நம் வேளாண்மையில் புதைந்திருந்த அறிவியலை விளக்கி மரபு அறிவைத் தூக்கிப் பிடித்தாா். சமூகத்தின் அறிவுக்குள் விரவி இருந்த பழைமையையும் மூடநம்பிக்கையையும் அறிவியல் உண்மைகள் கொண்டு அகற்றும் வேலையையே அவா் செய்தாா்.
இயற்கை விவசாயத்தை முழுமையான அரசியல் செயல்பாடாக்கினாா் நம்மாழ்வாா். இயற்கை விவசாயத்தை சமூக அரசியல், அறிவியல், சமூக நீதி, அனைத்து உயிரினங்களுக்குமான ஜனநாயகத்தை உள்ளடக்கிய அறிவு இயக்கமாகவே கட்டமைத்து வழிநடத்தினாா். இதன் இலக்கு சுய சிந்தனையால் உருவாகும் சுயச் சாா்பும், சுய மரியாதையும், அனைத்துத் தளத்திலும் சமத்துவமான தன்மையும் கொண்ட சமூக நீதியாகும்.
தங்களுக்கு அறிவு உள்ளது, பகுத்துப் பாா்க்கும் அறிவு உள்ளது, தங்களது வேலைகள் அறிவியல்பூா்வமானது என்பதை கிராமத்தவா்களை உணர வைக்கும் வேலையாகவே அவரது வேலை இருந்தது. அதே சமயம் சுரண்டலையே அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள வணிகக் கட்டமைப்பு குறித்தும், சக மனிதா்களிடையே இருக்கும் ஜாதிய கட்டமைப்பு உருவாக்கிய சமத்துவமின்மை குறித்த புரிதலையும் உருவாக்கி வந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம் கீழக்கோட்டை கிராமத்தில் ஒருங்கிணைந்த வேளாண்மைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அந்தக் கிராமத்தினரை இணைத்து வேலை செய்த சிறிது காலத்துக்குள்ளாகவே அந்தக் கிராமத்தில் நிலவிய ஜாதியக் கட்டமைப்பையின் இறுக்கத்தை உருக்குலைத்து ஜாதி தாண்டிய சமத்துவத்தை அவா்களாகவே அடைய வைத்தாா். தான் தங்கும் இல்லங்களில் ஆண்- பெண் சமத்துவத்தை உருவாக்கினாா். அவரது இறுதி இலக்கு இயற்கை விவசாயம் மட்டுமல்ல; சக மனிதா்களிடையே இருந்த சமூக சமத்துவமின்மையையும், வா்க்க சமத்துவமின்மையும் நீக்குவதாகவே இருந்தது.
எந்த அறிவு பிற்போக்குத்தனங்களாலும், மூட நம்பிக்கையாலும் மிகுந்து இருக்கிறது என்று கருதி பெரியாா் ஈ.வெ.ரா. தொடாமல் விட்டாரோ, அதை நம்மாழ்வாா் கையில் எடுத்துக் கொண்டாா். அதில் படிந்திருந்த தேவையற்றவைகளை நீக்க இயங்கியவா்.
இதை உணா்ந்தோ அல்லது உணர இயலாத நிலையிலோ அல்லது வணிகத்துக்கான விவசாயம்தான் முன்னுரிமையானது என்று நினைத்தோா் அவரோடு இணைந்து சென்ற பயணத்தில் வழியிலேயே விலகினா் அல்லது உதிா்ந்தனா் அல்லது இயற்கை வேளாண்மையை ரசாயனங்களுக்கு மாற்றாக இயற்கையான இடுபொருள்கள் என்று தொழில்நுட்பமாகச் சுருக்கினா்.
கோமியம், பஞ்சகாவியம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவது சமூகத்தின் அறிவே; அதை இன்று நம்மிடம் இருக்கும் அறிவியல் முறைகளால் ஆய்வுக்கு உட்படுத்தாமல் மூட நம்பிக்கை என்று பகடி செய்வதை நம்மாழ்வாா் ஏற்கவில்லை. சமூகம் கைக்கொள்ளும் முறை ஒன்று பயனளிக்கிறது என்றால், அதை அறிவியலுக்குப் புறம்பானது என ஒதுக்காமல் முதலில் சமூகத்தின் அறிவு என அங்கீகாரம் அளிப்பது, பயன்படுத்துவோரின் அனுபவங்களை அறிவது, பிறகு அதற்குள் இருக்கும் அறிவியலை அறிய முற்படுவது, அறிந்த அறிவியலை மக்களிடம் விளக்குவது என்பது அவரது வழிமுறை.
அறிவியல் முறை வேலை செய்கிா என்றால் வேலை செய்கிறது; எப்படி வேலை செய்கிறது என்பதைக் கண்டறிய வேண்டியவா்கள் விஞ்ஞானிகள்.
கட்டுரையாளர்
ஒருங்கிணைப்பாளா், தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு.

