

ஒரு விமான நிலையக் காத்திருப்பு அறையில் பிரமுகர் இருவர் சந்தித்துக் கொண்டனர்; பரஸ்பர நல விசாரிப்புக்குப் பின்னர், பயண நோக்கங்கள் குறித்துப் பேசினர். "நடைபெறும் திருமண நிகழ்வுக்குச் செல்லும் வேலையோடு நடந்து முடிந்த திருமண வீட்டுக்கும் செல்ல வேண்டியதிருக்கிறது' என்று சொன்னவரிடம் கேட்டவர் சொன்னார்;"எதற்கும் தெரிந்துகொண்டு செல்லுங்கள்'.
சற்றே குழப்பமாய்ப் பார்த்தார் சொன்னவர். கேட்டவர் விளக்கம் சொன்னார்; "முன்னே மாதிரி இப்போது இல்லை. அண்மையில் திருமணம் முடிந்த வீட்டுக்கு நல விசாரிப்புக்குச் சென்றிருந்தேன். அவர்கள் கேட்டார்கள் தெரிந்துகொண்டுதான் வந்தீர்களா என்று'. என்னவென்று விசாரித்தால், திருமணம் முடிந்த மூன்று நாள்களுக்குள்ளே மணமுறிவு வந்து மணமக்கள் பிரிந்துவிட்டார்கள். அது தெரிந்துதான் விசாரிக்க வந்திருக்கிறீர்களா?' என்று கேட்டிருக்கிறார்கள். அதுமாதிரி, திருமணமான மணமக்கள் இப்போது ஒன்றாக இருக்கிறார்களா, நன்றாக இருக்கிறார்களா? என்று தெரிந்துகொண்டு போனால் நல்லது.
விமானத்துக்கான அறிவிப்பு வந்ததும் அவர்கள் சென்று விட்டார்கள். அந்த உரையாடல் மேலும் பல நினைவலைகளை என்னுள் எழுப்பியது.
முன்பெல்லாம் எந்தவிதக் கருத்து முரண்கள் வந்தாலும் உறவுக்காக, பிள்ளைகளுக்காக, உலகத்தவர்க்காக, சரிசெய்து கொண்டு வாழும் நிலை இருந்தது.
"ஒன்றன் கூறாடை உடுப்பாரே ஆயினும் ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை' என்று கலித்தொகை அன்பில் விளைந்த அறம் மலிந்த வாழ்க்கை அனுபவத்தை அழகாகப் பாடியிருக்கிறது (பாலைக்கலி-18).
மரணம் கூடப் பிரிக்கக் கூடாது என்ற மன உறுதி கொண்டு வாழ்ந்த லட்சியத் தம்பதிகளையும் வரலாறு கண்டிருக்கிறது.
"பிறந்த வீட்டில், தேனும் பாலும் கலந்து உண்ட வசதிமிகு வாழ்க்கை இருந்தது உண்மைதான். ஆனால், தான் வாழப் புகுந்த வீட்டில், மானும் ஏனைய விலங்குகளும் கலக்கி உண்டு எஞ்சிய, இலை தழைவீழ்ந்து கலங்கிய நீர் அதைவிடவும் சுவை மலிந்தது' என்று தலைவி சொல்லும் அளவுக்கு அவர்மேல் கொண்ட அன்பின் பெருக்கத்தைக் கபிலரும் பாடியிருக்கிறார். (ஐங்குறுநூறு-203)
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு (குறள்-60)
என்கிறார் திருவள்ளுவர்.
நன்மக்களைப் பெறுதற்காக, ஆணும் பெண்ணும் கூடி வாழ்வது வாழ்வியல் அறமாகவும், குழந்தைகள் நலனுக்காக தன்னலம் துறப்பது பொதுமை நெறியாகவும் நம்மிடையே இருந்தன. இல்லறத்திலும் துறவறம் பேணுகிற நல்லறமும் நடைமுறையில் இருந்தது. வசதிக் குறைபாடுகள் மிகுந்திருந்த காலத்தில் அன்பின் குறைபாடு ஒருபோதும் இருந்ததில்லை. அன்பின் பெருக்கம், வசதிச் சுருக்கத்தையும் வாழ்க்கைத் துயர்களையும் பொசுக்கிவிடுவதாய் அமைந்தது. அன்பும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் அனைத்தையும் ஈடுகட்டிக் கொண்டிருந்தன. ஒருவர் அனைவருக்காகவும், அனைவரும் ஒருவருக்காகவும் கொண்டு-கொடுத்து உறவினைப் பேணி வளர்க்கும் தன்மை இருந்தது. தனிப்பட்ட நிலையில் ஏற்படும் விருப்பு-வெறுப்புகளை, கசப்பு-இனிப்புகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் காலங்கடத்த முடிந்தது; அந்தரங்கம் புனிதமாகக் கருதப்பட்டது.
அதனால், நல்லதும் பொல்லாததும் நிகழவே செய்தன. நல்லவை நிலைக்கவும், அல்லவை போக்கவும் முயற்சிகள் நடந்தன. வெளிச்சொல்ல முடியாத துயரங்களும் தொடர் இன்னல்களும் மலியத் தொடங்கிய பிறகு, இடையீடு இல்லாத உறவில் விரிசல்கள் எழுந்தன. அவை விரியவும் பலவிதக் காரணங்கள் உதவின.
"உடன்பாடு இல்லாதவர்களுடன் இணைந்து வாழ்தல் என்பது, பாம்பு உறையும் வீட்டினுள் வாழ்வது போன்றது' என்கிறார் திருவள்ளுவர் (குறள்-890). "ஒருவருக்கொருவர் பகைத்தும் சண்டையிட்டும் வாழ்வது பொருத்தமானதாகப் படவில்லை. வாழ்நாள் எல்லாம் வதைபடவேண்டாம்' என்கிற நிலையில், விடுதலை பெற்றுக்கொள்வது உசிதமாகப்பட்டது. முரண் முற்றிய நிலையில், நீதிமன்றங்களில் முறையிட்டு முறிவு செய்துகொள்ளும் நிலையும் அமைந்தது. திருமணம் எவ்வளவு புனிதமானதோ, அதைப் போலவே திருமண முறிவும் புனிதமாகக் கருதப்பட்டது.
ஜாதகங்கள் பார்த்து, பரிகாரங்கள் செய்து, ஒருவருக்கொருவர் பேசிவிட்டு நிச்சயம் செய்வதுகூட நிச்சயமற்றுப் போய்விடுகிறது. நிச்சயம் செய்த பிறகு ஆணும் பெண்ணும் பேசிக்கொள்ள வசதியாய்க் கைப்பேசி உதவுகிறது என்றாலும், அவர்கள் பதற்றப்படவும், கோபப்பட்டுக்கொள்ளவும், சண்டையிட்டுப் பிரிந்துகொள்ளவும் அந்தக் கைப்பேசி உரையாடலே காரணமாகிவிடுகிறது என்பது பலரது அனுபவம்.
திருமணப் பதிவு நிலையங்கள், பதிவு ஊடகங்கள் வாயிலாக அறிந்து நிச்சயிக்கப்படும் திருமணங்களிலும்கூட, பொய்யும் குற்றமும் மலிந்து வருகின்றன.
ஆடம்பரமான மண்டபங்களில், அளவுக்கு மீறிய அலங்கார அமைப்புகளுடன் ஏற்பாடு செய்யப்படும் திருமண வைபவத்தில் முதல் நாளே, திரைப்படப் படப்பிடிப்பு போல, மணப்பெண்ணையும் மணமகனையும் இயக்கிப் பதிவு செய்யும் படங்கள், திருமணத்துக்குப் பின்னரும் இப்போது தொடரப்படுகின்றனவாம். தேனிலவுக்குச் செல்லும் இடங்களில் கூட, இப்படியான காட்சிகள் பதிவு செய்யப்படுகின்றனவாம். என்ன செய்து யாது பயன்? புறத்தில் செய்யப்படும் ஒப்பனைகளும் அழகுகளும் அகத்தில் ஒன்றாது போய்விடுகின்ற அவலம் மிகுந்து வருகிறதே.
உறவுக்கும் பிரிவுக்கும் காரணம் ஏதும் சொல்லத் தெரியாமல் "பிடிக்கவில்லை' என்ற ஒற்றை வார்த்தையைத் தூக்கிப் போடுவது இளைய தலைமுறையினரின் போக்காக இருக்கிறது. விரும்பி இணைபவர்களின் நிலைப்பாடு எப்படியோ?
நிச்சயம் செய்த பிறகு, ஒருவருக்கொருவர் பழகிக் கொள்ளவும் பேசிக் கொள்ளவும் அனுமதிக்கிற பெற்றோர் பாடு பெரும்பாடு ஆகிவிடுகிறது. கைப்பேசி உரையாடல்களில், திருமணத்துக்கு முன்பாகவே இணைந்து பழகி வருவதில் எழுகிற முரண்கள், கோபங்கள், அத்தனை பெரியவர்களின் தீர்மானங்களையும் கலைத்துப் போட்டுவிடுகின்றன. ஊரைக்கூட்டி, உறவுகளைச் சேர்த்து பல லட்சக்கணக்கில் பணம் செலவழித்து நடத்திய திருமணம் இல்லங்களில் விரித்த பந்தல் பிரிக்குமுன்பே முறிந்துபோய் விடுகின்றன.
காரண காரியங்கள் இன்னதென அறிந்துகொள்ள முடியாத அளவுக்கு அவர்களுக்குள் முரண்கள் நேர்கின்றன. அளவுக்கு மீறிய காட்சி ஊடகப் பதிவுகளின் தாக்கங்கள் அவர்களை ஆட்கொண்டு விடுகின்றன.
நடைமுறை அறியாது மேற்கொள்ளும் அவசர முடிவுகள் குடும்ப நெறிகளையே குலைத்துவிடுகின்றன.
"திருமணத்துக்குப் பிறகு மகப்பேறு தேவையில்லை என்ற கருத்தாக்கமும், பெற்றோர் உடன் இருக்கக் கூடாது என்ற கட்டுப்பாடும் பிரிவினைக்கு அடித்தளம் இடுகின்றன' என்கிறார்கள். "கண்டதே காட்சி கொண்டதே கோலம்' என்ற நிலையில் இயங்குகிற பிள்ளைகள்-பெரியவர்கள் ஆகிவிட்டபடியால், அவர்களுக்கும் பெரியவர்கள் சொல்கிற எதுவும் செவியேறுவதில்லை. வயதளவில் முதிர்ந்த பலருள்ளும் மனதளவில் முதிர்ச்சி இல்லாதவர்கள் இருக்கிறார்கள் என்றும் பாலியல் தொடர்பான புரிதல் இன்னும் பலருக்குத் தெளிவாகவில்லை என்றும் உளவியல் மருத்துவர்களால் சொல்லப்படுகிறது.
பெற்றோரின் நிர்ப்பந்தத்தை மீற முடியாமல் மனமின்றி ஒப்புக் கொள்ளுதல், மிரட்டல்களுக்குப் பயந்து இசைதல், பதவி-பணிகளால் ஏற்படும் தன்முனைப்பு, தாழ்வுமனப்பான்மை, விருப்பு வெறுப்பு, சக தோழமைகளின் விமர்சனங்கள், ஒப்பிட்டுப் பார்ப்பதில்-சொல்வதில் ஏற்படுகிற உரசல்கள், மெல்லிய சீண்டல்கள், பரஸ்பர குற்றச்சாட்டுகள், சின்னச்சின்ன ஊடல்கள் என அனைத்தும் கூடி, ஒட்டுமொத்தப் பிரிவுக்கு வழிவகுத்து விடுகின்றன.
இப்போது எந்த நேரத்தில் என்ன நடக்குமோ? தெரியவில்லை. யாருக்கும் எதற்கும் உத்தரவாதமில்லாத நிலை. வாழ்க்கையே நிலையாமைத் தன்மை உடையதுதான். என்றாலும், ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் இல்லறநெறியும் இவ்வாறு ஆகி வருவது கவலை அளிக்கிறது. ஆண்-பெண் எண்ணிக்கையும் சம விகிதத்தில் இல்லாத நிலையில், எதிர்காலத்தில் மக்கட்பேறு என்னவாகும்? முறிவின் தேவையை, நியாயத்தைச் சொல்லிக் காட்டும் பலரும் பிரிவின் துயரத்தைச் சொல்லாததும் பெருங்குறை.
இப்போது, எதிர்ப்படும் எவரிடத்திலும் குடும்பம், குழந்தைகள் குறித்து விசாரிக்காமல் இருப்பதே நல்லது என்கிற முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறது சூழல். எப்படியும் வாழலாம் என்ற நிலை வந்துவிட்டபிறகு, அடிப்படை அறங்கள் தகர்ந்துபோகத்தான் செய்யும். என்றாலும் இப்படியே போவது நல்லதுதானா எனும் கேள்வி எழத்தான் செய்கிறது.
வாழ்ந்து பெற்ற அனுபவங்களின் கசப்புகள், துயரங்கள் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டாம் என்கிற நிலையில் பிரிந்து செல்வது மனித நியாயம்தான். வாழப் போகும் முன்பு, அதாவது, திருமண பந்தத்துக்கு உட்படும் முன்பு ஒரு முறைக்கு இரு முறை ஏன் பல முறைகூட நிதானித்துச் சிந்தித்து முடிவெடுத்துக் கொள்வது சரியாக இருக்கும் என்று ஏன் தொடர்புடையவர்களுக்குத் தோன்றவில்லை என்பதே புரியவில்லை.
இளமையும், வசதியும், நட்பும் உறவுகளும் ஒரு காலகட்டம் வரைக்கும்தான் துணையாகும். என்றும் துணையாகும் இல்லறத் துணையுடன் இணைந்து பயணிக்கப் பொறுமையும் நிதானமும் மிகமிகத் தேவை என்பதை முதுமையும் தனிமையும் பின்னர் உணர்த்தும். அதனால் ஆவது யாது?
இணைந்த பெற்றோரால்தான் இப்பிறவி கிட்டியது என்பதைப் பிறந்த மக்கள் நன்றியோடு உணரத் தவறுகிறார்கள். விளைவு என்னவாகும் என்று சொல்லத் தெரியாமல், கைபிசைந்து நிற்கும் மூத்தவர்களின் அக்கறையை உதாசீனம் செய்து காலம் விரைகிறது. இது நல்லதா, கெட்டதா? இல்லறத்தின் எதிர்காலம் என்னவாகும் என்று செயற்கை நுண்ணறிவைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். அது மட்டும் போதுமா?
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.