

நம் அனைவருக்கும் எண்ணற்ற அனுபவங்களை தந்த ஆண்டாக 2025 நிச்சயம் இருந்திருக்கும். ஒரு சிலருக்கு ஆகச் சிறந்த அனுபவங்களையும், சிலருக்கு மிகக் கடுமையான பாடங்களையும், இன்னும் சிலருக்கு வேகமாக கடந்து போன ஆண்டாகவும், பலருக்கு எந்த மாற்றமும் இன்றி வெகு சாதாரணமாக கழிந்த ஆண்டாகக் கூட இருந்திருக்கும். ஆனாலும், ஒரு புது ஆண்டு தொடங்க இருக்கிறது எனும்போது எல்லோருக்குள்ளும் புதுப்புது நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் ஏற்படத்தான் செய்கின்றன. நம் வாழ்வில் ஒவ்வொரு தொடக்கத்திற்கு முன்பும் சில தீர்மானங்களை கட்டமைக்க மனம் உறுதி ஏற்கும்.
ஒரு புதிய சுழற்சி வாழ்வில் தொடங்கப்பட்டால் நமக்குள்ளும் பல வைராக்கியங்கள் உருவாகும். அதைத் தீவிரமாக் கடைபிடித்துச் செயல்படுத்துவதில் இருக்கிறது அவரவர் வெற்றி. பொதுவாகவே புத்தாண்டுக்கு பலரும் பல சபதங்களை ஏற்பது வழக்கம். இருப்பினும், பலருக்கு அது இரண்டொரு மாதங்களிலேயே நீர்த்துப் போய்விடுவதும் உண்டு.
புத்தாண்டு பிறந்தாலே பெருவாரியானவர்களுக்கு நாள்குறிப்பை பார்த்ததும் பெரிய உற்சாகம் ஏற்படும். ஜனவரி, பிப்ரவரியில் அடை மழைபோல் பக்கங்கள் எல்லாம் நிரம்பியிருக்க, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மாதம் மும்மாரி பொழிந்ததுபோல் அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கும். பின்னர் ஜூன், ஜூலை, ஆகஸ்டில் சிறு தூறலாகிப் போய் செப்டம்பர், அக்டோபரில் வறட்சிக் காலமாகி நவம்பர், டிசம்பரில் "கிணற்றையே காணோம்' கதையாக நாள்குறிப்பையே எங்காவது தொலைத்திருப்போம். இது பலரது வாழ்விலும் நடந்திருக்கும் நகைச்சுவைதான்.
ஆனாலும், புத்தாண்டு என்றதும் எடுக்கப்பட்ட சபதங்கள் காலப்போக்கில் கரைந்து போனாலும் புதுப்புது முன்னெடுப்புகள் ஒவ்வொருவருக்கும் அவசியம்தான். அதுதான் நம் வாழ்வை சலிப்பிலிருந்து உற்சாகம் நோக்கி மடைமாற்றும். உடற்பயிற்சி செய்ய, மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள, தவறான பழக்கங்களை நிறுத்த, புத்தகங்கள் வாசிக்க, சுற்றுலா செல்ல, புது மொழி கற்க, புதுக் கலை பழக, நேர்மறையாக இருக்க, குடும்பத்துடன் நேரம் செலவிட, புதிய படிப்பில் சேர என ஒவ்வொருவரும் விதவிதமான சபதம் ஏற்றிருப்பார்கள். ஆனால், நாம் அனைவருமே கைக்கொள்ள வேண்டிய மனநிலை ஒன்று இருக்கிறது; அது பொறுப்புணர்வு.
அண்மையில் வெளிநாடுவாழ் இந்தியர் ஒருவரின் காணொலியைக் கண்டேன். இந்தியர்களை வெறுக்கும் மனநிலை ஏன் பிற நாட்டினரிடம் அதிகரிக்கிறது என்று சில காரணங்களை அடுக்கினார். பொது இடங்களில் குப்பை கொட்டுவதை வெகு இயல்பாக இந்தியர்கள் மேற்கொள்கின்றனர். சாப்பிட்டுவிட்டு, அந்த மிச்சம் மீதிகளை போகிற போக்கில் தூக்கி வீசுகிறார்கள். அதற்கென்று தூய்மைப் பணியாளர்கள் இருக்கிறார்கள் அல்லவா... அவர்கள் செய்யட்டுமே என்ற மோசமான மனநிலை. அதோடு வாயில் பாக்கு போட்டுக் கொண்டு ஏதேனும் இடம் தேடி துப்பாமல் ஆங்காங்கே கண்ணில் படும் சுவரில் எல்லாம் துப்புகிறார்கள். இதனால், அந்தச் சுவற்றை சிரத்தை எடுத்து வண்ணம் பூசி பார்வைக்கு அருமையாக மாற்றியவரின் உழைப்பு மீது துளியும் அனுதாபம் இல்லை.
பொது கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு, அதை தனக்குப்பின் பயன்படுத்த வரும் மற்றொரு பயனாளருக்கு சுத்தமாக விட்டுச் செல்லும் நற்செயல் இல்லை. யார் எப்படிப் போனால் என்ன? தன் செüகரியம்தான் முக்கியம் எனும் தன்னலம் தாங்கிய குணநலனுடனே எப்போதும் வலம் வருகிறார்கள். மேலும், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கோ சுற்றுலாத் தலங்களுக்கோ செல்லும்போது பிறர் உழைப்பின் மீதான குறைந்தபட்ச மரியாதையுடன் நடந்து கொள்வதில்லை. தனக்குப் பின்வரும் தலைமுறையும் இவற்றையெல்லாம் காண வேண்டும் என்ற எந்த பொறுப்புணர்வுமின்றி செயல்படுகின்றனர். இதுபோன்ற காரணங்களால்தான் இந்தியர்கள் பின்னடைவுகளைச் சந்திக்கிறார்கள் என்று நீண்டது அந்தக் காணொலி.
காணொலியைப் பார்த்த மாத்திரத்தில் பெருமூச்சுதான் வந்தது. தகவல் தொழில்நுட்ப வசதிகள் பெருகிப் போய் முன்னேற்றப் பாதையில் நாடு சென்று கொண்டிருந்தாலும் தனி மனிதனுக்கு பொறுப்புணர்வு இல்லை என்றால் முற்றிலும் கோணல் ஆகிவிடும். சாலை என்பது அனைவருக்கும் பொது. ஆனால், தனக்கு வீட்டில் வண்டி நிறுத்த இடமில்லை என்று சொல்லி சாலையின் இரண்டு அடியை வீட்டு வராண்டாவுடன் இணைத்துக் கட்டும் பொறுப்பற்ற தன்மை சிலருக்கு எங்கிருந்து வருகிறது? கேட்டால் இது அரசு இடம் உங்களுக்கு என்ன வந்தது என விட்டேத்தியான பதில் வருகிறது. தெருவில் வசிக்கும் எல்லோரும் இப்படிக் கிளம்பி விட்டால் என்ன ஆகும்?
சாலையின் இரண்டு அடிகளை அவரவர் தம் வீடுகளுடன் சேர்த்து கட்டிக் கொண்டால் சாலையில் நடக்கக்கூட இடம் இருக்காது. இது ஒருபுறம் என்றால், சாலைகளில் மாதக்கணக்கில் நிறுத்தியிருக்கும் வாகனங்களால் ஏற்படும் தொந்தரவு சொல்லி மாளாது. இன்று பெருவாரியான நடுத்தர மக்கள் கார் வைத்திருக்கிறார்கள். ஆனால், அதை நிறுத்த அவர்களிடம் இடவசதி இருக்கிறதா? எல்லா சாலைகளுமா பரந்து விரிந்திருக்கின்றன? ஒரு தெருவில் 50 வீடு இருந்தால் குறைந்தது 25 வீடுகளில் கார்கள் இருக்கின்றன. அதில் சரி பாதி நபர்களுக்கு அந்த வாகனத்தை நிறுத்த முறையாக எந்த இடவசதியும் இல்லை. முட்டுச் சந்துகளிலும், மொட்டை நிலங்களிலும், மைதானத்திலும் நிறுத்தியதுபோக, எஞ்சியவை எல்லாம் சாலைகளில் தேங்கிக் கிடக்கின்றன. நாள் கணக்கில் அவை நகர்வது கூட இல்லை. இதனால், பிள்ளைகள் சாலையில் விளையாட முடிவதில்லை. நிறுத்தப்பட்டிருக்கும் வாகனத்தால் முன்பின் வரும் வாகனங்கள் சரிவரத் தெரிவதில்லை. இதனால், தேவையற்ற விபத்துகள் நேரிடுகின்றன. அது மட்டுமா? அனைவருக்கும் பொதுவான சாலையை உபயோகிப்பதில் பல அசெüகர்யங்கள் ஏற்படுகின்றன. தொடரும் இந்தப் பொறுப்பற்ற நிலை மிக ஆபத்தானது.
எவ்வளவோ கல்வி அறிவு பெற்றும்கூட பேருந்துகளில் பயணிக்கும்போது அருகில் யார் வருகிறார்கள், போகிறார்கள் என காணாது யார் மீதும் அக்கறையின்றி 'புளிச் புளிச்' சென ஜன்னல் வழியே துப்புவது எத்தனை மோசமான செயல்? தனக்கு நேர்ந்தால் அநீதி என்பதும் பிறருக்கு நேர்ந்தால் எனக்கும் அதற்கும் தொடர்பில்லை என ஒதுங்கிக் கொள்வதும் என ஒவ்வாத பழக்கங்களில் பலர் ஊறிப் போய் கிடக்கிறார்கள்.
எங்கள் பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் தினமும் காலையில் வீடு வீடாக வந்து குப்பைகளை எடுத்துச் செல்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பே மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக இரு கூடைகளில் பிரித்துத் தர வேண்டும் என வீடுதோறும் சொல்லிச் சென்றார்கள். மூன்று ஆண்டுகள் கடந்தும் இன்னும் சில வீடுகளில் குப்பைகளை மொத்தமாக அப்படியே தான் கொடுக்கிறார்கள். தூய்மைப் பணியாளர்கள் குப்பைக் கூடையில் கைவிட்டு பிரித்து எடுத்து போட்டுச் செல்கிறார்கள். உணவகங்களில் துணிக் கடைகளில்கூட ஊழியர்களை அதிகமான அலைக்கழிப்புக்கு உள்ளாக்கும் போக்கை காண முடிகிறது. ஊதியம் வாங்குகிறார்கள் இல்லையா...அவர்களே செய்யட்டும்' என்ற அலட்சிய எண்ணம்.
விழிப்புணர்வுடன் அமைதியாக பயணிக்க வேண்டிய சாலைகளில், போட்டி மனப்பான்மையை வளர்த்தபடி பறக்கிறார்கள். துளியும் விட்டுக் கொடுக்காமல் துரத்திச் சென்று விபத்தையோ அசம்பாவிதத்தையோ சந்திக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் பொறுப்புணர்வு பற்றாக்குறைதான். பொறுப்புணர்வு இருந்தால்தான் நன்றி உணர்வு வெளிப்படும். முதலுக்கே மோசமாக இருந்தால் இரண்டாவது எங்ஙனம் சாத்தியம்?
சங்க காலத்தில் மன்னர்களிடையே போர் தொடங்குவதற்கு முன்னர் போரைப் பற்றி அறிவித்து, கொல்லக்கூடாத உயிரினங்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தி போரிலும் அறம் பேணினார்கள் என அறிகிறோம். அப்படிப்பட்ட சிறப்பான மாண்பைப் பெற்றவர்கள் நாம். தமிழ்த் தாத்தா என்று சொல்லப்படும் உ.வே.சா.வின் அதீத பொறுப்புணர்வினால்தான் இன்று நமக்கு பல புத்தகங்கள் கிடைத்திருக்கின்றன.
ஒரு சமயம் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையைக் காண அரண்மனைக்குச் சென்ற புலவர் மோசிகீரனார் களைப்பு மிகுதியால் முரசுக் கட்டிலில் கண்ணயர்ந்துவிட பொறுப்புணர்வு மிக்க இரும்பொறை, குற்றமான அச்செயலை செய்த புலவருக்கு தண்டனை வழங்காமல் கவரி வீசினானாம். இச்செயலைக் கண்ட புலவர் நன்றியுணர்வுடன் மன்னனை வியந்து பாமாலை பொழிந்தாராம்.
இத்தனை சிறப்பான பாரம்பரியங்களைக் கொண்ட நாம், இன்று சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட பொறுப்புணர்வு பேணாது ஒருவருடன் ஒருவர் வெட்டி மடிகிறோம்.
இந்த புத்தாண்டில் நாம் முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டியது பொறுப்புணர்வும் நன்றியுணர்வும்தான் என்பது மேலான கருத்தாக முன்வைக்கப்படுகிறது. "அனைத்துக்கும் நான் பொறுப்பு' என்ற மேன்மையான எண்ணத்துடன் வாழும்போது நம் வாழ்வு அர்த்தமுள்ள வாழ்வாக மலரும். தனிமனித ஒழுக்கம் மற்றும் சமுதாயப் பொறுப்புணர்வு இரண்டும் சேர்ந்த நிலையிலேயே மனிதன் சிறப்படைகிறான்.
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.