அழிவுசக்தியாகும் ஆக்கசக்தி!

நாட்டில் தொலைபேசி இணைப்பு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை கடந்த மே மாதத்தில் 120.7 கோடியை எட்டியுள்ளது.
தொலைபேசி (கோப்புப்படம்)
தொலைபேசி (கோப்புப்படம்)
Published on
Updated on
2 min read

நாட்டில் தொலைபேசி இணைப்பு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை கடந்த மே மாதத்தில் 120.7 கோடியை எட்டியுள்ளது. இதில், தரைவழி இணைப்புகள் 3.86 கோடியாகவும், மொபைல் இணைப்புகள் 116. 84 கோடியாகவும் உள்ளன. அதேபோல, பிராட்பேண்ட் எனப்படும் அகலகற்றை இணைய சேவை வைத்துள்ளோரின் எண்ணிக்கை கடந்த மே மாதத்தில் 97.48 கோடியாக உள்ளது.

வளர்ந்த, வல்லரசு நாடுகளில் ஒன்றான சீனாவோடு ஒப்பிடுகையில், வளர்ந்துவரும் நாடான இந்தியா மக்கள்தொகையில் அதை விஞ்சிவிட்டதோடு, தொலைத்தொடர்பு பயனர்களின் எண்ணிக்கையிலும் அதை நெருங்கி வருகிறது. சுமார் 160 கோடி மொபைல் இணைப்புகள் உள்பட 180 கோடி தொலைபேசி இணைப்புகளுடன் சீனா முதலிடத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அதிக இணைப்புகள் கொண்ட நாடாக 2-ஆவது இடத்தில் இந்தியா உள்ளது.

1995-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி இந்திய தொலைத்தொடர்புத் துறை வரலாற்றில் மிக முக்கியமான நாள். சரியாக 30 ஆண்டுகளுக்கு முன்னால், நோக்கியா கைப்பேசியைப் பயன்படுத்தி அப்போதைய மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு, அன்றைய மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் சுக்ராமுக்கு முதல் அழைப்பாக கைப்பேசியில் பேசினார்.

மோடி-டெல்ஸ்ட்ரா நெட்வொர்க் என்ற நிறுவனம்தான் முதன்முதலில் கைப்பேசி தொடர்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சேவையை வழங்கியது. இந்தியாவின் பி.கே. மோடி மற்றும் ஆஸ்திரேலியாவின் டெல்ஸ்ட்ரா நிறுவனங்களின் கூட்டு அமைப்பாக இந்த மோடி டெல்ஸ்ட்ரா செயல்பட்டது. முதல் நெட்வொர்க் கொல்கத்தாவையும், புது தில்லியையும் இணைத்தது.

அந்த நேரத்தில், செல்லுலார் பேசியில் அழைப்பை ஏற்கவும், அழைக்கவும் நிமிஷத்துக்கு ரூ. 8.40-ஆகவும், பீக் ஹவர்ஸ் எனப்படும் உச்சநேரத்தில் நிமிஷத்துக்கு ரூ.16.80-ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

இந்த நிலையில், 1997-இல் மத்திய அரசு, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தை (டிராய்) அமைத்தது. அதைத் தொடர்ந்து, 1999-இல் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் பாஜக அரசு அமைந்த பிறகு, தேசிய தொலைத்தொடர்பு கொள்கை 1999 (என்டிபி) வகுக்கப்பட்டது. குடிமக்களுக்கு மலிவு மற்றும் பயனுள்ள தகவல் தொடர்புகள் கிடைக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்தக் கொள்கை உருவாக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், 2000 ஆவது ஆண்டில் தொலைத்தொடர்பு தகராறு தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. அதே ஆண்டு அக்டோபர் 1 அன்று அரசு தொலைத்தொடர்பு சேவைத் துறை பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் என்ற அரசு நிறுவனமாக மாற்றப்பட்டது.

மார்ச் 2000-த்துக்குப் பிறகு கொள்கைகளை வகுப்பதிலும், தனியார் நிறுவனங்களுக்கு உரிமங்களை வழங்குவதிலும் மத்திய அரசு தாராளமயத்தைக் கடைப்பிடித்தது. செல்லுலார் சேவை வழங்குநர்களுக்கான உரிம கட்டணங்கள் பலமடங்கு குறைக்கப்பட்டதாலும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதிக்கப்பட்ட பங்குகளை 74 சதவீதமாக அதிகரித்ததாலும் கைப்பேசி அழைப்புக்கான சேவை கட்டணங்கள் குறைக்கப்பட்டன; குறிப்பாக, அழைப்பை ஏற்பதற்கான கட்டணம் நீக்கப்பட்டது.

இதனால், இந்தியாவில் ஒவ்வொரு பொதுவான நடுத்தர குடும்பமும் ஒரு கைப்பேசியை வாங்கமுடிந்தது. 1999-இல் 12 லட்சமாக இருந்த கைப்பேசி இணைப்புகளின் எண்ணிக்கை 2002-இல் ஒரு கோடியாகவும், 2003 நவம்பரில் 2 கோடியாகவும், 2008 இல் 37.5 கோடியாகவும், 2012 இல் 93 கோடியாகவும், 2018-இல் 100 கோடியாகவும் மிகவேகமாக உயர்ந்தது. இதுவே, தற்போது 117 கோடி இணைப்புகளுடன் உலகின் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாக பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது.

தற்போது குறைந்த விலையில் அறிதிறன்பேசிகள் கிடைப்பதால், நகரங்கள் முதல் கிராமங்கள் வரை அனைத்துவிதமான விற்பனையிலும் எண்ம பரிவர்த்தனைகளே நடைபெறுகின்றன. அதேபோல, கல்வி, தொழில், வர்த்தகம், பொழுதுபோக்கு என அனைத்துத் துறைகளின் முன்னேற்றத்திலும் அறிதிறன்பேசிகளும், அகலகற்றை இணைய இணைப்புகளும் கோலோச்சுகின்றன. இதனால், இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இந்தியாவில் கடந்த 2017-இல் அறிதிறன்பேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 30 கோடியாக இருந்த நிலையில், 2020-இல் 44 கோடியாகவும், 2023-இல் 68.7 கோடியாகவும், தற்போதைய நிலையில் 70 கோடியைத் தாண்டியும் உள்ளது; இது இந்திய மக்கள்தொகையில் 50 சதவீதமாகும்.

கடந்த 2020-இல் இந்தியர்கள் 65,500 கோடி மணி நேரத்தை செயலியில் செலவழித்துள்ளனர். இது 2021-இல் 70 ஆயிரம் கோடி மணி நேரமாகவும், 2022-இல் 74,800 கோடி மணி நேரமாகவும், 2023-இல் 1,19,300 கோடி மணி நேரமாகவும் உள்ளது. இதில், நிச்சயமாக சரிபாதிக்கும் மேல் பொழுதுபோக்குக்கான நேரமாகவே இருந்திருக்கும் என நம்பலாம்.

இணைப்பு பெற்ற அல்லது அகலகற்றை இணைப்பு பெற்ற எத்தனை பேர் அதை தொழில்சார்ந்து, வர்த்தகம்சார்ந்து பயனுள்ளதாக பயன்படுத்தி முன்னேறி உள்ளனர் என்பதற்கான எந்தப் புள்ளிவிவரமும் இல்லை. வளர்ச்சியும், வீக்கமும் ஒன்றுபோலத்தான் தெரியும். ஆனால், இரண்டும் ஒன்றல்ல என்பதை அனைவரும் அறிவோம். அதுபோல, தொலைத்தொடர்பு இணைப்புகளின் எண்ணிக்கை உயர்வு எத்தகையது என்பதை அறிவது அவசியம்.

தொழில் வளர்ச்சி, பொருளாதார உயர்வு ஒருபக்கம் வளர்ச்சியாகவும், காலவிரயம், மனஅழுத்தம், இளைஞர்களின் வளர்ச்சி தடைபடுதல், இணையவழி விளையாட்டு என்கிற பெயரில் சூதாட்டம், செயலிவழிக் கடன்கள் உள்ளிட்டவை வீக்கமாகவும் இருந்துவரும் நிலையில், வீக்கம் பெருத்து, புரையோடிப்போகாமல் பார்த்துக்கொள்வது எதிர்கால இந்தியாவுக்கு நல்லது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com