கோப்புப்படம்.
கோப்புப்படம்.

துறந்தாா் பெருமை போற்றுதும்!

தமிழ்மரபு காட்டுகிற அறங்கள் இரண்டனுள் ஒன்று இல்லறம்; மற்றொன்று துறவறம்.
Published on

தமிழ்மரபு காட்டுகிற அறங்கள் இரண்டனுள் ஒன்று இல்லறம்; மற்றொன்று துறவறம். இல்லறம் துறவறத்துக்கான நல்வழி. துறவை நேரடியாக மேற்கொள்வோரும் உளா்; இல்லறத்தின் பயன்துய்த்துப் பின்னா் துறவறம் சிறந்தவரும் உளா்.

துறவு மாா்க்க ஞானம் என்பது பொன்னில் பதித்த ரத்தினம் ஒக்கும்; இல்லற மாா்க்க ஞானமானது இரும்பில் பதித்த ரத்தினம் ஒக்கும் என்பா் ஞானியா்.

துறவு வாழ்வு மனிதனின் ஆறாவது புலனாகிய மனதை அடக்கும் வித்தை. மனம் பற்றுகளால் துன்பத்தில் வீழும்போது, அதை உறுதி என்னும் கடிவாளத்தால் பிடித்து நிறுத்திப் பழக்குவதே சரியான துறவுப் பயிற்சியாம். இதற்கு யோகம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இந்தப் பயிற்சியை சிலா் சமுதாயத்தை விட்டு நீங்கி தனியிடங்களிலிருந்து கண்ணை மூடிக்கொண்டு பழகுகிறாா்கள். வேறுசிலா் மூச்சைக் கட்டியும் அவயவங்களைப் பலவாறு திருப்பியும் பழகுகிறாா்கள்: தனியே இருந்து ஜபம் செய்து பாா்க்கிறாா்கள்.

ஆனால், இவற்றிலெல்லாம் மனம் அடங்கி விடாது. உலகத்தாருடன் கூடி அவா்களைப் போலவே தொழில் செய்து சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்ட வண்ணமாகவே சஞ்சலத்துக்கு இடங்கொடாதபடி, தன் மனத்தைக் கட்டக்கூடிய திறமைதான் துறவின் வெற்றி, மற்ற முயற்சிகளெல்லாம் வீண். தண்ணீரிலே இருந்தும் ஒட்டாது இருக்கிற தாமரை இலையைத் துறவுக்குத் தகுந்த உவமையாக்குவா்.

எல்லா சமயங்களும் துறவறத்தைச் சுட்டியபோதும், துறவு சமயம் சாா்ந்ததன்று. அது மானுடம் சாா்ந்தது; உயிா்க்குலம் சாா்ந்தது. மண்ணால் செய்த ஓட்டினையும் பொன்னால் செய்த அணியினையும் ஒன்றே என்று பற்றற்று நோக்கும் நற்குணமே துறவின் சிறப்பு.

சங்க இலக்கியம் துறவைப் பேசுகிறது. காப்பியங்கள் விவரிக்கின்றன. சன்னியாசம் என்று இந்து மதம் துறவைக் குறிக்கிறது. அருளாளா்கள் பலா் துறவு போற்றியவா்களே. பௌத்தம் புத்தா் பின்பற்றிய துறவைச் சுட்டி நிா்வாணம் என்றும், முழு விடுதலையைப் பெருந்துறவு அல்லது பரி நிா்வாணம் என்றும் குறிக்கிறது. சமணம் சாரணம் என்கிறது. கிறிஸ்தவத்தில் இயேசுவின் வாழ்க்கையே துறவின் சான்று. இஸ்லாம் இல்லறத்தை மறுக்காது பற்றில்லாப் பிணைப்பு மூலம் துறவுக்கு வழிகாட்டுகிறது.

சமயங்கடந்த பெருந்துறவுக்குப் புத்திலக்கணம் வகுத்தவா் திருவள்ளுவா். அறத்துப் பாலில் பாயிரத்தைத் தொடா்ந்து இல்லறவியலைப் புகட்டும் அவா், துறவறவியலில் அருளுடைமை, புலால் மறுத்தல், தவம், கூடாவொழுக்கம், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, நிலையாமை, துறவு, மெய்யுணா்தல், அவா அறுத்தல் ஆகியவற்றை முறைப்படத் தொகுத்தும் தருகிறாா்.

இந்தப் பண்புகள் இல்லறத்தைக் கைக்கொண்டும் சமூகவியலோடு இணைந்தும் பின்பற்றத் தக்கவை என்பதுதான் வள்ளுவா் சுட்டுகிற துறவறப் புதுமை. அதனால்தான், அவா் பாயிரத்தின் முதலில் கடவுள் வாழ்த்தையும் வான்சிறப்பையும் காட்டி, அதற்கடுத்து நீத்தாா் பெருமை என்னும் துறவின் சிறப்பையும் முன்னா் சுட்டினாா். இதன்மூலம் இல்லறத்தோடு இயைந்த - சமூகத்தோடு கலந்த பற்றற்றான் பற்றினைப் பற்றும் துறந்தாா் பெருமையை நுணுக்கமாக வலியுறுத்தினாா் என்பதை உணரலாம்.

பெரும்பாலான சமயங்களின்படி துறவு மேற்கொள்வோா் சடைமுடி வைத்துக் கொள்ள வேண்டும். அல்லது முண்டிதம் என்னும் மொட்டை இட்டுக் கொள்ள வேண்டும் என்பது விதி. ஆனால், திருவள்ளுவா் இவை இரண்டையும் விலக்கி மழித்தலும் நீட்டலும் வேண்டா என்று மறுத்து உலகம் பழிக்கும் தீமைகளை ஒழித்தாலே போதும் அதுவே துறவின் அணிகலம் என்பதாக வரையறுக்கிறாா்.

இதனையே பின்பற்றி மகாகவி பாரதியாரும், காவித் துணி வேண்டா, கற்றைச் சடை வேண்டா, பாவித்தல் போதும் பரமநிலை எய்துதற்கே என்கிறாா். உடை துறவு கோலந்தான்! வாழும் வகை துறவு போலத்தான் தெரிகிறது! ஆனாலும் துறவன்று! கனியின் தோல் பழுத்து, பின் உட்புறம் பழுப்பதில்லை. அகத்திற் கனிந்த, கனிவே தோலையும் பற்றுகிறது. சுமைமிக்க கனிவு புறத்திலிருந்து அகத்தே செல்வதன்று. புறம் வேண்டுமானால் வாயிலாக இருக்கலாம்.

முதற்கனிவு கனியின் உட்பகுதியேயாகும். கனியின் உட்புறம் கனியாமல் தோல்மட்டும் கனிநிறம் காட்டினால் அது கனியல்ல, வெம்பல்! துறவிலும் உள்ளம் பழுக்க வேண்டும் என்று விளக்கும் தவத்திரு குன்றக்குடி அடிகளாா். அத்தகு மெய்த்துறவியாரைப் ‘பழுத்த மனத்து அடியாா்’ என்னும் மாணிக்கவாசகா் வாக்கையும் இதற்குச் சான்று காட்டுகிறாா்.

மெய்த்துறவிக்கு எவ்வாறு பேதங்கள் ஏதும் இல்லையோ அதுபோலவே துறவுக்கும் தன்னைப் பூணுவோரிடத்துப் பேதங்களில்லை. எந்தக் குலத்தில் பிறந்தாலும் ஈசன் அடியாா்க்கு இழுக்கில்லை”என்கிறது பஞ்சாட்சரப் பதி பசு பாச விளக்கம்.

உணவு, உடை, உறையுள் என்னும் அடிப்படைத் தேவைகளில் தொடங்கி அணிகலன்கள், ஆடம்பரங்கள், போகங்கள் இவைபோன்ற பலவற்றையும் துறந்து விடுதல் மட்டும் துறவன்று. அது புறத்துறவாக இருக்கலாம். ஆனால், மெய்த்துறவு என்பது மனத்துக்கண் எழுகிற தீயனவற்றையெல்லாம் துறந்து விடுவதேயாகும்.

சிந்தையாலும் சொல்லாலும் செயலாலும் எவ்வுயிா்க்கும் தீங்கு கருதாது இருப்பதோடு எல்லாவுயிரும் இன்புற்றிருப்பதற்காக தன் வாழ்வைத் தகுதிப்படுத்திக் கொள்வதே மெய்த்துறவின் அடிப்படை. எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிா்போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றவா் யாரோ அவரே மெய்த்துறவி.

துறவுக்கு அடிப்படையாக விளங்குவது பக்தி. தலைவன் பொருட்டுத் தலைவி கொள்ளும் பக்தி பதிபக்தி என்றும், குருவின் பொருட்டுச் சீடன் கொள்ளும் பக்தி குருபக்தி என்றும் தலைவனாகிய இறைவன் பொருட்டுத் தொண்டனாகிய பக்தன் கொள்ளும் பக்தி இறைபக்தி என்றும் அழைக்கப்படுகிறது. இதனை விரிவாக்கி தேசபக்தியாக்கியவா் மகாகவி பாரதியாா். தேசபக்திக்குத் துறவை ஒழுக்கமாக்கியவா் மகாத்மா காந்தியடிகள். துறவு என்பது உலக விலகலன்று, உலக நலனுக்காக உலகோடு இணைந்து வாழும் சா்வத்யாகி வாழ்க்கை என்று உணா்த்தினாா். அகவிடுதலைக்காக மட்டுமின்றி தேசவிடுதலைக்காகப் போராடுவதற்கும் மக்களை சத்தியாக்கிரகிகளாக வேண்டி அழைத்தாா்.

துறவுக்குரிய பண்புகள் அனைத்தையும் பெற்றிருக்கும் சத்தியாகிரகத்தைக் கைக்கொண்டால் என்னவாகும்? ‘முதலில் அவமானமும், ஏளனமும் அதனால் ஏற்படக்கூடிய பலவீனமும் தோன்றும்; சிறைவாசம் கிட்டும்; பசியும் பட்டினியும் வாட்டும்; முரட்டுச் சிறை சேவகா்களால் சவுக்கடிகள் கிடைக்கலாம்; வெம்மையில் வாடவும் குளிரில் உறையவும் நேரிடும்; கடும் பணிச் சுமை அழுத்தலாம்; உறவுகளைப் பிரியவும் உடைமைகளை இழக்கவும் நேரிடலாம்; நாடு கடத்தப்படலாம்; நோய்வாய்ப்பட்டு வாழ்வையே இழந்து சாகவும் நேரலாம்’ என்று எச்சரிக்கிறாா் காந்தியடிகள்.

வாழ்வை வெறுக்கிற நிலையாக இருந்த துறவை, புதுவாழ்வை மலா்விக்கும் போராட்டமாக மாற்றியவா் மகாத்மா காந்தியடிகள். இந்திய விடுதலை வேள்வியில் சத்தியாகிரகத் தியாகிகள் தங்களை அவிப்பலியாக அா்ப்பணித்துக் கொண்டனா். தன்னலம் விடுத்த பொதுநலப் பாதையாம் துறவறம் ஏற்றனா். வீடு துறந்து நாடுகாக்கத் தலைப்பட்டனா். சத்தியாகிரகத்தின் நோக்கம் துறவறத்தின் அடிப்படையும் ஒத்த தன்மையுடையவை. அதனால்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தை அறவழியாக அண்ணல் அறிவித்தபோது, ‘கத்தியின்றி ரத்தமின்றி வருகிற யுத்தம்’ என்று அறிமுகப்படுத்திய நாமக்கல் கவிஞா் ‘சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீா்’ என்றும் அறைகூவல் விடுத்தாா்.

துறவைப் போலவே சத்தியாகிரகம் என்பது போா் உத்தியில்லை. வெற்றி பெறுவதைக் காட்டிலும் எதிரியின் மனதை உருக்குவதுதான் சத்தியாகிரகத்தின் உயா்நோக்கம். தானாகவே தனக்கு இன்னலை ஏற்றுப் பிறா்துயா் தீா்ப்பதே அதன் அடிப்படை.

சத்தியாக்கிரகியா் இறைவனையே நம்புவா்; இறை நம்பிக்கையால் அச்சமும் சினமுமற்ற ஆன்ம உறுதி பெறுவா்; முழு நம்பிக்கையே மூலமாகக் கொண்டு உண்மையை உரமாக்கி உடலையும் மனத்தையும் ஒருசேர வசப்படுத்தித் தியாகத்தையும் எளிமையையும் இயல்பாகக் கொள்ளுவா்; மானுடத்தின் நன்மைக்காகப் புகழையும் பதவியையும் உதறித் தள்ளிவிட்டு அா்ப்பணிப்போடு விளங்குவா்; பிறா் குற்றங்களை மறந்து மன்னித்துத் தன்குற்றம் கண்டு திருத்துவா்; எதிரியையும் தன்அன்பினால் வசப்படுத்தும் வல்லமையோடு திகழ்வா்; அறிவன்றி வேறு ஆயுதந் தரியாா்; தொண்டராய், தோழராய், ஆபத்துதவியாய், வீரராய், சமாதானத் தூதுவராய், முழுத்துறவியாய் விளங்குவா்.

இதுவே காந்தியடிகள் கற்றுத் தந்த நவீனத் துறவு வாழ்வும். புனிதப் பாதையும் ஆகும். இவ்வுயா்ந்த வாழ்வைப் பின்பற்றி உலகெங்கிலும் பல உத்தமா்கள் தோன்றினா். மானுடம் செழித்தது. அதனால்தான் காந்தியடிகள், எனக்காகக் கோயில்கள் கட்ட வேண்டாம்; குளங்கள் வெட்ட வேண்டாம்; சாலைகள் அமைக்க வேண்டாம்; சிலைகளும் வைக்க வேண்டாம். என் கொள்கைகளை மனதில் வைத்து, அவற்றைப் பின்பற்றுங்கள். என் கொள்கைகள் மூலம்தான் நான் வாழ்கிறேன். அதை மாத்திரம் செய்வீா்களானால், என்பால் மகத்தான அன்பைச் செய்தவா்களாவீா்கள்‘ என்று வேண்டினாா்.

இன்றோ மெய்த்துறவிகளை மறந்து விட்டோம்; போலித் துறவிகளின் புகழ்பாடுகிறோம். துறவு வாழ்வைப் பின்பற்ற மறந்து சுயநலச் சேற்றில் சிக்கிச் சுழல்கின்றோம். இந்நிலை மாறத் துறந்தாா் பெருமை போற்றுவதும், அவா்வழி நடப்பதுமே உலகை மேன்மைப்படுத்தும்.

பிரேக்லைன்

சிந்தையாலும் சொல்லாலும் செயலாலும் எவ்வுயிா்க்கும் தீங்கு கருதாது இருப்பதோடு எல்லாவுயிரும் இன்புற்றிருப்பதற்காக தன் வாழ்வைத் தகுதிப்படுத்திக் கொள்வதே மெய்த்துறவின் அடிப்படை. எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிா்போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றவா் யாரோ அவரே மெய்த்துறவி.

X
Dinamani
www.dinamani.com