தேடுவோம் நல்ல தலைவர்களை...!

நம் நாட்டிலும் இவரைவிட எளிமையான தலைவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
காமராசர் (கோப்புப்படம்)
காமராசர் (கோப்புப்படம்)படம்: எக்ஸ்
Published on
Updated on
2 min read

உதயம் ராம்

பதினான்கு ஆண்டுகள் பதவியிலிருந்த நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, தன் பதவியை அடுத்த பிரதமரிடம் ஒப்படைத்துவிட்டு சிரித்த முகத்துடன் சைக்கிளில் செல்வது போன்ற காட்சி சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டது. நம் நாட்டில் இப்படியெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்க்க முடியுமா? கனவிலாவது நடக்குமா? என்றும் கூடவே ஆதங்கத்துடன் கேட்டிருந்தார்கள்.

நம் நாட்டிலும் இவரைவிட எளிமையான தலைவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

உள்துறை, ரயில்வே துறை , பிரதமர் எனப் பதவி வகித்த லால் பகதூர் சாஸ்திரி தன் பதவிக் காலத்தில் அலாகாபாதில் வாடகை வீட்டில் இருந்தார் என்பதும் , 'ஹோம்லெஸ் ஹோம் மினிஸ்டர்' என்று அழைக்கப்பட்டார் என்பதும் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் ?

இரண்டு முறை இடைக்கால பிரதமராக இருந்த குல்சாரிலால் நந்தா, தன் கடைசிக் காலகட்டத்தில் அடையாளம் தெரியப்படாமல் வாழ்ந்து மறைந்ததை எப்படி மறக்க முடியும்?

முதல்வராக இருந்த காமராசர் இறந்த போது, அவரது உடைமை சில நூறு ரூபாய்களும், இரண்டு ஜோடி ஆடைகளும்தான் என்பதை எவரால் மறுக்க முடியும்? அவரது அமைச்சரவையில் காவல் துறை அமைச்சராக இருந்த கக்கன், சட்டப்பேரவைக்கு மக்களோடு மக்களாக பேருந்தில் பயணம் செய்ததும், அரசு மருத்துவமனையில் பொதுமக்களோடு பொது மனிதராக அனுமதிக்கப்பட்டதையும் நினைத்தாலே வியப்பு மேலிடுகிறது.

திரிபுராவில் 20 ஆண்டுகள் முதல்வராக இருந்த மாணிக் சர்க்கார், பதவியை விட்டு விலகியவுடன் ஒரே ஒரு ஜோல்னா பையுடன் வெளியேறியதும், கார், பங்களா, தன் குடும்பத்தின் நான்கு தலைமுறையினருக்கு சொத்து சேர்க்காததும் கனவல்ல நிஜம்தான்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து கொண்டுவந்த சொத்து என்ன தெரியுமா ? பெட்டி நிறைய புத்தகங்கள் மட்டுமே.

நம் நாட்டிலும் நாம் வாழ்ந்த காலத்திலேயே பதவி, பணம், வீடு, புகழ் இவற்றை சேர்த்துக் கொள்ளாத எளிமையான தன்னலமற்ற தொண்டுள்ளம் படைத்த தலைவர்களும் வாழ்ந்திருக்கிறார்கள்.

இப்போது ஏன் அப்படிப்பட்ட தலைவர்கள் உருவாகவில்லை? உருவாக்கப்படவில்லை? என்று கேட்பவர்கள் பின்வரும் விவரங்களைப் படியுங்கள்.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் மக்கள்தொகை குறைவு. மக்களில் 90 சதவீதம் வரை படித்தவர்கள். மந்தை மனப்பான்மை இல்லாதவர்கள் என்கிற எதார்த்தத்தை நாம் முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும்.

அங்கு பதவி என்பது அலுவலக வேலை மாதிரி. தங்கள் பதவிக்காலம் முடிந்ததும் அரசியலுக்கு டாடா காட்டி விட்டு சொந்த வாழ்க்கைக்கு எளிதாக திரும்பும் வழக்கம் உடையவர்கள்.

ஒபாமா சாதாரண குடிமகனாக கடைகளுக்கு வந்து வரிசையில் நிற்கிறார். இங்கு இன்று அரசியல்வாதிகளுக்கு கடைசி வரை எக்கச்சக்க சலுகைகள், மரியாதைகள்.

வெளிநாடுகளில் உள்ள தலைவர்கள் (டிரம்ப் தவிர) வெற்றி, தோல்வி இரண்டையும் ஒரே நிலையில் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவர்கள். நாம் தோற்றாலும் நாடும், மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனை உள்ளவர்கள்.

வாரிசு அரசியல் அங்கு அறவே கிடையாது. ஒரே மதம் என்பதால், பெரிய அளவில் மத வேறுபாடுகள், ஜாதி பிரிவினைகள் கிடையாது. மதத்தை , ஜாதியை முன்நிறுத்தி வாக்கு சேகரிக்கும் வழக்கம் கிடையாது. அதே சமயம் இனப் பாகுபாடு உண்டு. ஆனால், அது பொதுமக்களைப் பாதிக்காது.

தவறு செய்தால் தப்பித்துக் கொள்ளும் ஓட்டை - உடைசல் சட்டங்கள் மேலை நாடுகளில் கிடையாது. எந்த வழக்கும் வாய்தா, முன்ஜாமீன், பின் ஜாமீன் என்று சீரியல் மாதிரி இழுக்கும் நீதிமுறை கிடையாது.

தெருவுக்கு 4 கட்சிகள், ஜாதிக்கு 100 கட்சிகள் என ஒவ்வொரு கட்சியிலும் பல பிரிவுகள் என்கிற அலங்கோல நிலை அங்கே இல்லை.

மக்களும் அரசியல்வாதிகளை பெரிதாக எண்ணிப் போற்றுவதில்லை. தெய்வமாக நினைத்து கோயில் கட்டுவதில்லை. 'நீ எங்களைக் காப்பாற்றும் கடவுள் அல்ல; எங்களைப் பாதுகாக்கும் பணியை செய்யும் ஓர் அதிகாரி' அவ்வளவுதான் என்ற மனநிலையில் இருப்பவர்கள். பெரும்பாலும், எல்லோருமே தன்னிறைவு பெற்றவர்கள் என்பதால், அரசின் இலவசங்கள், சலுகைகளுக்காக ஏங்குவது, அரசியல் கட்சித் தலைவர்களிடம் மண்டியிடுவது போன்ற இழிநிலை அங்கே கிடையாது.

அங்குள்ள மக்கள் எந்தத் தலைவன் தவறு செய்தாலும் கட்சி, இன வேறுபாடின்றி மொத்தமாக வீதிக்கு வந்து போராடும் போராட்ட குணம் உடையவர்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக அங்குள்ளவர்கள் தான் எப்படியிருந்தாலும், தங்களிடம் என்ன குற்றங்கள், குறைகள் இருந்தாலும் தன் தலைவன் நல்லவராக இருக்க வேண்டும்; குற்றங்கள் செய்யாதவராக இருக்க வேண்டும் என்பதில் உறுதியான கொள்கை உள்ளவர்கள்.

எந்த தேசத்தில் ஆட்சி செய்வோர் குற்றவாளிகளாகவும், மக்கள் நிரபராதிகளாவும் இருக்கிறார்களோ அந்த தேசத்தில் நல்ல தலைவர்கள் உருவாக வாய்ப்பே இல்லை.

பழைமையும் பெருமையும், ஜனநாயகத்துக்கு முன்னுதாரணமாக விளங்கும் நம் பாரத நாடு இந்தப் பட்டியலில் இடம்பெற்று விடுமோ என்ற அச்சம் இப்போது அதிகரித்து வருகிறது. இந்த அச்சத்தை நீக்கி, இந்தியாவிலும் நல்ல தலைவர்களைத் தேட வேண்டிய பொறுப்பு நம் அரசமைப்புக்கும், நமக்கும் உள்ளது.

மக்கள் மாறினால் மட்டுமே மக்களாட்சி மலரும். காரணம், மக்களில் இருந்துதானே தலைவர்கள் உருவாகிறார்கள்; உருவாக்கப்படுகிறார்கள். எனவே, முதலில் நாம் மாறுவோம்! பின்பு நம் நாட்டை மாற்றுவோம்! நல்ல தலைவர்களைக் காண்போம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com