நல்லன எல்லாம் தரும் கல்வி!

education
அரசுப் பள்ளி மாணவ- மாணவிகள்.கோப்புப்படம்.
Published on
Updated on
3 min read

ஆர். நட்ராஜ்

நம் நாட்டில் பெற்றோர்கள் தமது பிள்ளைகள் எதிர்காலத்தில் எத்தகைய மேற்படிப்பு தொடர வேண்டும்,தொழில் கல்வியா, கலைக் கல்வியா என்பதை தேர்ந்தெடுப்பதில் முழுமையாக ஈடுபடுகின்றனர். அது மாணவரிடம் மட்டுமாக விடப்படவில்லை! இந்த ஈடுபாடு ஒரு விதத்தில் நல்லது என்றாலும், மாணவன் என்ன விரும்புகிறான்; அவனது திறன் எதில் இருக்கிறது என்பது ஆராயப்படுவதில்லை.

பள்ளித் தேர்வு முடிவுகள் வரும்போது, அடுத்து என்ன செய்வது என்பது குடும்பத்துக்கு எப்போதும் ஒரு சவாலாக இருக்கும். அதைத் தொடர்ந்து, அடுத்து என்ன என்பதைத் தேர்ந்தெடுப்பது கடினமான பணியாகும். அந்தத் தேதிக்கு எந்தப் படிப்பு வரவேற்கப்படுகிறதோ அதில் எல்லோரும் குவிகிறார்கள். விருப்பம் இருக்கிறதோ இல்லையோ; உயர் கல்வி திணிக்கப்படுகிறது!

இளைஞர்கள் ஒரு தொழிலைத் தேர்ந்தெடுப்பதில் என்னென்ன பணிகளை விரும்புகிறார்கள் என்பது குறித்து ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமானோர் அரசுப் பணியைத் தேர்ந்தெடுக்க விரும்பினர். சுமார் 20 சதவீதம் பேர் தனியார் துறையிலும், 20 சதவீதத்துக்கும் குறைவானோர் தொழில்முனைவோராகவும் விரும்பினர்! அதிகாரம் மற்றும் வேலை பாதுகாப்பு காரணமாக அரசுப் பணி இன்னும் சமூகத்தில் அந்த மரியாதையைப் பெற்றுள்ளது. அதிகாரமும், பணமும் ஈர்க்கின்றன; ஆனால், சேவையும் தியாகமும் மறக்கப்படுகின்றன.

இந்தியா போன்ற வளரும் நாட்டில், கல்வியில் சிறந்து விளங்குதல் ஒன்றுதான் வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றத்துக்கான உறுதிமொழிக்கு ஒரு சக்தி வாய்ந்த உந்துதலாகவும், கருவியாகவும் உள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியின் தரம், அவர்கள் எங்கு படிக்கிறார்கள், என்ன படிக்கிறார்கள் என்பது குறித்து அடிக்கடி கவலைப்பட வேண்டும். கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது ஆன்றோர் வாக்கு.

தரமான கல்வி ஒரு நல்ல வாழ்க்கைக்கான கடவுச் சீட்டு என்பது உண்மை. அதிக ஊதியம் தரும் தொழில் என்ற வாக்குறுதியுடன் கணினி அறிவியல், தரவு அறிவியல், வணிகவியல் போன்ற தற்போது பிரபலமான படிப்புத் துறைகளுக்கு இதுகுறிப்பாக உண்மை.

சமூகப் பொருளாதார ஏணியில் மேலே செல்ல விரும்பும் லட்சக்கணக்கான இந்தியர்கள் இருக்கிறார்கள். இதைக் கருத்தில் கொண்டு, வெற்றிகரமான இளைஞர்களை உருவாக்குவோம்; அதிக மதிப்பெண்கள் பெற உறுதி செய்வோம் என்று பல்வேறு பள்ளிகளின் செயல் திறன் மற்றும் பயிற்சித் திட்டங்கள் குறித்த விளம்பரங்களை அனைத்து செய்தித்தாள்களிலும் தினமும் பார்க்கிறோம்.

பொதுவாக, இத்தகைய விருப்பங்களும் கல்வி முறைகளும் விமர்சிக்கத்தக்கவை அல்ல என்றாலும், கல்வி இப்போது மெதுவாக நன்கு அறிந்த மற்றும் கல்வியறிவு பெற்ற மக்களை உருவாக்குவதற்கான அதன் நோக்கத்திலிருந்து விலகி வணிக ரீதியான தன்மையை மட்டுமே கொண்ட ஒரு நிலைக்கு நகர்கிறது என்பது தெரிகிறது. இந்தப் போக்கை நிறுத்த வேண்டும்; ஏனெனில் நீண்ட காலத்துக்கு இது நன்மையை விட அதிக தீங்கு விளைவிக்கும்.

ஒரு நல்ல பள்ளிக் கல்வி முறையின் அடிப்படை நோக்கம், குறிப்பிட்ட பாடங்களில் நல்ல மதிப்பெண்களை மட்டுமே உறுதி செய்வதல்ல. மாறாக, முக்கியமாக சுதந்திரமாக சிந்திக்கும் திறன் கற்பிக்கப்பட வேண்டும். இது வெற்றிக்கு மிக முக்கியமானது.

நாளுக்கு நாள், நாம் எதிர்கொள்ளும் பிரச்னைகள் மாறும்; அதுவே புதுமையான சூழல்களில் உருவெடுக்கும். அது நமது பாடப்புத்தகங்களில் உள்ள வடிவத்தின்படி இருக்காது. ஆனால், ஒரு சிக்கலை எவ்வாறு அணுகுவது மற்றும் தீர்ப்பது என்று நமக்குக் கற்பிக்கப்பட்டிருந்தால், வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்வதில் அத்தகைய கல்வி முறைதான் உகந்தது.

நமது தற்போதைய கல்வி முறையில் பெரும்பாலானவை கருத்துகளை மனப்பாடம் செய்வது அல்லது குறிப்பிட்ட பாடங்களில் மதிப்பெண்களைப் பெறுவதற்குத் தேவையானவற்றை மட்டும் படிப்பது ஆகியவற்றை பிரதானமாகக் கொள்கின்றன. துரதிருஷ்டவசமாக, அத்தகைய அணுகுமுறை ஒரு படைப்பாற்றல் மிக்க சுய சிந்தனை, பிரச்னை தீர்க்கும் ஆற்றல் மிக்க மாணவரை உருவாக்க இயலாது.

ஒரு குழந்தையின் வளர்ச்சியின் மற்ற அனைத்து அம்சங்களையும் விட, குறுகிய பாடங்களில் மதிப்பெண்களை மட்டுமே நாம் மதிக்கிறோம். புற்றீசல் போல் பெருகி வரும் தனிப் பயிற்சி மையங்களே இதற்கு சாட்சி . அங்கு மாணவர்கள் பள்ளியில் சில மணிநேரங்களுக்கு முன்பு கற்றுக்கொண்டதை மீண்டும் கற்றுக்கொள்கிறார்கள்! இத்தகைய பயிற்சி வகுப்புகள் விபரீதமான விளைவுகளுக்கு வழிவகுக்கும். அங்கு ஓர் ஆசிரியர் பள்ளி வகுப்பறையில் பாடத்தைக் கற்பிப்பதில் தரமற்ற முயற்சியை மேற்கொள்ளலாம். ஆனால், அவரது சொந்த தனிப் பயிற்சி மையத்தில் கூடுதல் மைல் தொலைவு செல்லலாம்!

மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வை எதிர்ப்பவர்கள், அதிகக் கட்டணம் வசூல் செய்யும் பயிற்சி மையங்களில் வசதி படைத்த மாணவர்கள் பயனடைகிறார்கள். ஏழை மாணவர்கள் வஞ்சிக்கப் படுகிறார்கள் என்ற வாதத்தை முன்வைக்கிறார்கள். ஆனால், மருத்துவப் படிப்புக்கு பள்ளி இறுதி மதிப்பெண்களை அடிப்படையாக இருந்த காலகட்டத்தில் அதிக மதிப்பெண்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் பள்ளிகள் நாமக்கல், ஈரோடு திருச்சி, சேலம் போன்ற மாவட்டங்களில் இயங்கின. அதிகக் கட்டணம், இரண்டு ஆண்டு விடைத்தாள் எப்படி, எங்கு திருத்தப்படும் என்ற நெளிவு, சுளிவு தெரிந்த ஆசிரியர்கள் மூலம் கடும் பயிற்சி என்று, இந்தப் பள்ளிகள் ஆதிக்கம் செலுத்தின. அப்போதும் வசதி படைத்தவர்கள்தான் பயனடைந்தனர்.

நீட் தேர்வு மூலம் புரிதலையும், புத்தி கூர்மை அடிப்படையில் மாணவர்களைத் தெரிவு செய்யும் முறையும் அறிவார்ந்த மாணவர்களுக்கு வரப்பிரசாதம். பணம் பறிப்பதையே குறிக்கோளாக கொண்டு கல்விக் கூடங்களை இயக்கும் கல்வித் தந்தைகளாக பவனி வரும் அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது நீட் தேர்வு. சுயநலத்துக்காக புதிதாக முளைத்த அரசியல் கட்சிகள் உள்பட எல்லா கட்சிகளும் எதிர்க்கும் நிலையில், படிக்கும் மாணவர்கள் அனைவரின் வரவேற்பை நீட் தேர்வு பெற்றுள்ளது என்பது நிதர்சன உண்மை.

அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான அவசரத்தில் கல்வியின் பல முக்கியமான அம்சங்கள் கவனிக்கப்படாமல் போகின்றன. முதலாவதாக, நமது நாட்டுக்கு ஒரு நல்ல குடிமகனாக எப்படி இருப்பது, சுற்றுச்சூழலைப் பராமரிப்பது, வனவிலங்குகளை மரியாதையுடனும் பச்சாதாபத்துடனும் நடத்துவது போன்றவற்றை பயிற்றுவிக்கும் ஒழுக்க அறிவியல் வகுப்புகளில் மாணவர்கள் பெரும்பாலும் கலந்துகொள்வதில்லை; ஆசிரியர்களுக்கும் ஈடுபாடில்லை.

பள்ளிக்கு வெளியே கள வருகைகள் அல்லது சமூகம் மற்றும் சுற்றுச்சூழலுடன் மாணவர்களின் தீவிர தொடர்புகளை உள்ளடக்கிய திட்டங்கள் மூலம் இதுபோன்ற பாடங்களை எடுத்துக் கொண்டால், நம் குழந்தைகளில் கல்வியின் பல்நோக்கு தரம் பன்மடங்கு உயரும். இயற்கைப் பேரிடர்களில் மக்கள் சேவை, போக்குவரத்து பாதுகாப்பு, விலங்குகள் நல வாரியம் மூலம் பராமரிக்கப்படும் நாய்கள், பூனைகள் மீது கருணை, அத்தகைய அமைப்புகளில் தன்னார்வத் தொண்டு செய்ய மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இரண்டாவதாக, பாடம் சார்ந்த கல்விக்கான அவசரத்தில், திறன் கல்வி தொலைந்து போகிறது. அனைத்து வகையான கல்வியும், வேலைகளும் முக்கியமானவை மற்றும் மரியாதைக்குரியவை என்பதை வலியுறுத்த வேண்டும். இதுசம்பந்தமாக, பள்ளிகள் மதிப்புமிக்க கடினமான திறன்களின் அடிப்படைகளை கற்பிக்கவில்லை. அதாவது எலக்ட்ரிக்கல், டிங்கரிங், பிளம்பிங், ஓவியம் வரைதல், பொருளாதாரம் மற்றும் வணிகத்தை செயல் முறையாக கற்றல் போன்றவை. இத்தகைய செயல்திறன்களைக் கற்பிப்பது இந்த வகையான வேலைகளுக்கான அவசியத்தை உணர்த்துவது மட்டுமல்லாமல், மாணவர்கள் பல்வேறு தொழில் பாதைகளைப் பின்பற்றும் வாய்ப்பையும் அதிகரிக்கிறது.

பொருளாதார வாய்ப்புகளும் மகத்தானவை; உதாரணமாக, இந்தியா எதிர்கொள்ளும் குப்பை பிரச்னையை தீர்க்கக்கூடிய நபர், ஒரே இரவில் கோடீஸ்வரராகவும் வாய்ப்புள்ளது!.

மாணவர்கள் நலம் சார்ந்த பல்வேறு கல்வித் திட்டங்களை அமல்படுத்துவது அரசின் பங்கு. மேலும், கல்விக்கான எல்லையை விரிவுபடுத்துவது பள்ளிகளின் பங்கு. குறிப்பாக, மதிப்பெண்களுக்கான அழுத்தம் கடுமையாக இல்லாத இடைநிலை வகுப்புகளில் இத்தகைய விரிவாக்கத்தை மேற்மொள்ளலாம்.

இந்திய அளவில் நடத்தப்படும் பல போட்டித் தேர்வுகளில் நமது மாணவர்கள் சாதிக்க வேண்டும் என்று எதிர்பார்கிறோம். கல்வித் தரம் உயர்ந்தால்தான் அது சாத்தியமாகும். தரம் தாழ்ந்த கல்வி மூலம் போட்டித் தேர்வில் வெல்வது கடினம். மாணவர்களுக்கு போதிய சுய உந்துதல் வளர்க்கப்பட வேண்டும். தமிழ்நாட்டை தாண்டி தேசிய அளவிலான சிந்தனை உணர்வு வளர வேண்டும்.

அறிவார்ந்தவர்கள் தமிழக இளைஞர்கள்; ஆனால், அவர்களை நல்ல வகையில் வழிநடத்த வேண்டும். மாணவர்களின் திறமைகளையும், ஆளுமையையும் வளர்ப்பதுதான் கல்வித் திட்டத்தின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும். உண்மையான தீர்வுக்கு நாம் கல்வியை எவ்வாறு பார்க்கிறோம்; அதிலிருந்து நாம் என்ன சாதிக்க விரும்புகிறோம் என்பதில் சமூக

விழிப்புணர்வு தேவை.

கட்டுரையாளர்:

முன்னாள் காவல் துறை தலைவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com