
இந்தியா சுதந்திரம் அடைந்ததும் பாதுகாப்புத் துறையை வளர்த்தெடுக்கும் பொருட்டு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட், பாரத் எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட், மசகான் டாக்ஸ் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களை நிறுவியது. இந்த நிறுவனங்கள் அடிப்படை பாதுகாப்பு உபகரணங்களைத் தயாரித்தனவே தவிர, முக்கியமான தளவாடங்களுக்கு இறக்குமதியை நம்பியிருந்தன.
இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதிகள் 1959-லேயே தொடங்கிவிட்டன என்றாலும், சுமார் அரை நூற்றாண்டுகளாக சிறிய அளவில்தான் இருந்தன. சித்தாந்தம், அகிம்சை, அணி சேராமை, நடுநிலைமை காரணமாக பாதுகாப்பு ஏற்றுமதியில் இந்தியா அப்போது போதிய கவனம் செலுத்தவில்லை. ஆனால், இப்போது நிலைமை மாறியுள்ளது.
"ஆத்மநிர்பர் பாரத்' திட்ட முன்னெடுப்பின் காரணமாக 2024-25 நிதியாண்டில் மட்டும் இந்தியா ரூ.23,622 கோடிக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதில் பொதுத் துறை பாதுகாப்பு நிறுவனங்களின் பங்களிப்பு ரூ.8,389 கோடி என்றால், தனியாரின் பங்களிப்பு ரூ.15,233 கோடி. இது முந்தைய நிதியாண்டை விட 34 மடங்கு அதிகம். 2029-ஆம் ஆண்டுக்குள் பாதுகாப்பு ஏற்றுமதியை ரூ.50,000 கோடியாக உயர்த்த இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
2015-ஆம் ஆண்டு வரை உலகின் இரண்டாவது பெரிய ஆயுத இறக்குமதியாளராக இருந்த இந்தியா, தற்போது ஆயுத ஏற்றுமதியில் ஈடுபடும் முதல் 25 நாடுகளில் ஒன்றாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் ஆயுதத் தளவாட உற்பத்தியில் சுமார் 50% அமெரிக்காவுக்கும், 35% ரஷியாவுக்கும் ஏற்றுமதியாகிறது. இந்தியாவைச் சேர்ந்த சுமார் 100 நிறுவனங்கள் உயர் வருமானம் உள்ள 85 நாடுகளுக்கு ராணுவ உபகரணங்களை ஏற்றுமதி செய்கின்றன.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதத் தளவாடங்களின் விலை, நம்பகத்தன்மை, பராமரிப்பு ஆகியவற்றின் காரணமாக சர்வதேச ஆயுதச் சந்தையில் இந்தியா தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்து வருகிறது. அண்மையில் இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பை பிலிப்பின்ஸ் இறக்குமதி செய்தது பெரிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
ஏற்றுமதியில் மட்டுமல்ல; உள்நாட்டு ராணுவத் தளவாட உற்பத்தியிலும் இந்தியா முன்னேறி வருகிறது. 2023-24-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி ரூ.1.27 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெறும் ரஷியா - உக்ரைன் போர் பல ஐரோப்பிய நாடுகளின் ராணுவக் குறைபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. கடந்த ஜூன் 25-இல் ஹேக்கில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டில், 2035-ஆம் ஆண்டுக்குள் உறுப்பு நாடுகள் தங்களது பாதுகாப்புச் செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளன.
ஐரோப்பிய ஒன்றியம் பாதுகாப்பு இறக்குமதிக்கு அமெரிக்காவை நம்பியிருப்பதைக் குறைத்து ஐரோப்பாவுக்குள் அதிக மூதலீடு செய்ய ஐரோப்பிய மத்திய வங்கியின் முன்னாள் தலைவர் டிராகி பரிந்துரைத்துள்ளார். ஆனால், ஐரோப்பாவில் தற்போது கடுமையான பணியாளர் பற்றாக்குறை நிலவுவதால், பாதுகாப்பு உற்பத்தித் திறன் குறைவாகக் காணப்படுகிறது.
இந்தக் குறைபாட்டைக் களைந்து உற்பத்தித் திறனை மேம்படுத்த ஐரோப்பாவுக்கு பல ஆண்டுகள் தேவைப்படும். இந்த இடைக்காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு செலவு குறைந்த, நம்பகமான, வெளிப்புற ஆயுத ஏற்றுமதி கூட்டாளியாக இந்தியா உருவெடுக்க வாய்ப்புள்ளது.
இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட பாகிஸ்தான், துருக்கியுடன் அஜர்பைஜான் நெருங்கிய ராஜீய உறவுகளைக் கொண்டுள்ளது. அஜர்பைஜானுடனான ஆர்மீனியாவின் மோதலின்போது "எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற அடிப்படையில் ஆர்மீனியாவுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியா ஆயுதங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. சர்வதேச அரங்கில் ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் ஆர்மீனியாவின் குரல் இந்தியாவுக்கு ஆதரவாக இருந்துவருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆயுத ஏற்றுமதியில் ஈடுபடும் அதே நேரத்தில், இந்தியா சில தர்மசங்கடங்களையும் எதிர்கொள்கிறது. இந்தியாவுடன் நீண்டகாலமாக நட்பு பாராட்டி வரும் நாடுகளுடனான ராஜீய உறவில் விரிசல் ஏற்படாதவாறு கவனமாக செயல்பட வேண்டிய சூழல் முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது ஏற்பட்டுள்ளது.
பாலஸ்தீனம் - இஸ்ரேல் பிரச்னையில், பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகள் என்ற நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது. அதேநேரத்தில் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்கிறது.
காஸô போரின்போது இந்தியா ஏற்றுமதி செய்த ராக்கெட்டுகளை இஸ்ரேல் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒருபுறம் ஈரானுடன் நெருங்கிய வர்த்தக உறவு பேணும் இந்தியா, மறுபுறம் இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதி செய்வது ஈரானுடனான ராஜீய உறவில் உரசலை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.
அதபோல, உக்ரைனுக்கு இந்தியா நேரடியாக ஆயுதங்களை வழங்கவில்லை என்றாலும், ஐரோப்பிய வாடிக்கையாளர்களான சில நேட்டோ நாடுகள் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை உக்ரைன் ரஷியாவுக்கு எதிராகப் பயன்படுத்தியுள்ளது. இது இந்தியாவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜதந்திர செல்வாக்கை அதிகரிக்கவும், பிராந்திய கூட்டாண்மையை வலுப்படுத்தவும்; தவிர்க்க முடியாத உலகளாவிய சக்தியாக நிலைநிறுத்திக் கொள்ளவும் ஆயுத ஏற்றுமதியில் இந்தியா முனைப்புக் காட்டுகிறது. "நல்லவன்' என்ற நிலையிலிருந்து "வல்லவன்' என்ற நிலைக்கு இந்தியா அடியெடுத்து வைத்துள்ளது.
போர் உத்திகள் சார்ந்த தொழில்நுட்பம் - மேம்பட்ட ராணுவத் தளவாடங்களில் தன்னிறவு அடைவதும், ஏற்றுமதி செய்வதும் உலகின் நான்காவது பெரிய பொருளாதார சக்தியான இந்தியாவுக்கு தவிர்க்க முடியாதது மட்டுமல்ல, காலத்தின் கட்டாயமும்கூட.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.