கவலையில் வீழ்த்தும் கடன் செயலிகள்

கவலையில் சிக்கவைக்கும் கடன் செயலிகளைப் பற்றி...
கடன் வலையில்...
கடன் வலையில்...(படம் | ENS)
Published on
Updated on
2 min read

நமது தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவு செய்து கொள்வதற்கு நமக்கு அன்றாடம் பணம் தேவைப்படுகிறது. இந்தப் பணம் நாம் செய்யும் பணி, தொழில் ஆகியவற்றின் மூலமே நமக்குக் கிடைக்கிறது. குழந்தைகளின் திருமணம், கல்வி, வீடு கட்டுதல், புதிய தொழில் தொடங்குதல், மருத்துவச் சிகிச்சை போன்றவற்றுக்கு நமக்கு நிதி அதிகமாகத் தேவைப்படுகிறது. அவ்வாறான நேரங்களில் தேவைப்படும் நிதியைக் கடனாக வாங்குவது நமக்கு வாடிக்கையாகிவிட்டது.

ஆனால், சில நேரங்களில் அவற்றைக் குறித்த நேரத்தில் நம்மால் திரும்பச் செலுத்த முடிவதில்லை. இவ்வாறான கடன் தொல்லையால் நாடு முழுவதும் பல தனிநபர்களும், குடும்பங்களும் தற்கொலையில் ஈடுபடுவதை அன்றாடம் ஊடகங்களின் மூலம் நாம் அறிகிறோம்.

பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர், மகளிர் சுய உதவிக் குழுக்கள், நடைபாதை வியாபாரிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் போன்றோர் கடன் வழங்கும் நிறுவனங்களால் பொதுவாக ஈர்க்கப்பட்டு, தமது தேவைக்காக அவர்களிடமிருந்து கடனைப் பெறுகின்றனர்.

அண்மையில் மாநிலத்தில் அமலுக்கு வந்துள்ள தமிழ்நாடு அரசின் "கடன் வழங்கும் நிறுவனங்கள் நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (2025)' கடன் வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது. கடன் பெறுபவர்களிடமிருந்து கொடுத்தக் கடனை வசூல் செய்யும்போது நிதி நிறுவனங்கள் நெருக்கடி கொடுத்தால் ஐந்தாண்டு வரை அவர்களுக்குச் சிறைத் தண்டனை வழங்கப்படுவதற்கான வாய்ப்பையும் இந்த புதிய சட்டம் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கடன் வழங்குவோர், அடகுக் கடைகள் போன்றவை அதிக வட்டி பெறுவதை ஒழுங்குபடுத்தி, தமிழ்நாடு அடகுக் கடைக்காரர்கள் சட்டம் (1943), தமிழ்நாடு பணக்கடன் வழங்குவோர் சட்டம் (1957), தமிழ்நாடு கந்துவட்டி தடைச் சட்டம் (2003) ஆகியவற்றையும் மாநில அரசு ஏற்கெனவே அமல்படுத்தியுள்ளது.

கடனை திரும்பச் செலுத்த முடியாத நிலையில், கடன் வழங்கும் நிறுவனங்களின் வசூல் முறைகளால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களைப் பாதுகாப்பதற்கு இந்த மாதிரியான சட்டங்கள் உதவும். இந்த புதிய சட்டம் ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்டுள்ள நிதி நிறுவனங்கள் அனைத்துக்கும் பொருந்தும். கடன் பெற்ற நபரிடம் மேற்கொள்ளப்படும் கடன் வசூலிப்பு நடவடிக்கையால் மன உளைச்சலுக்கு ஆளாகி, கடன் பெற்றவர் தற்கொலை செய்துகொண்டதாக நிரூபிக்கப்பட்டால் சட்டம் 108-இன் பேரில் அது குற்றமாகக் கருதப்படும்.

பொதுவாக கடன் செயலிகளே மக்களுக்கு எளிதாகக் கடனை வழங்கி பின்னாளில் அவர்களை அதிக சிரமத்துக்குள்ளாக்குவதாகக் கூறப்படுகிறது. இவை எதுவும் நிதி நிறுவனங்களாகச் செயல்படுவதில்லை. கடன் செயலி ஒரு மென்பொருள்; உலகில் யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்துகொண்டு அதன் மூலம் உடனடியாகக் கடனைப் பெற முடியும்.

கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோர் போன்றவற்றில் இதுபோன்ற கடன் செயலிகள்அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஒருவருக்குக் கடன் கொடுக்கும்போது ஆவணங்களைச் சரிபார்த்து நிதி நிறுவனங்கள்கடன் கொடுக்கின்றன. ஆனால், கடன் செயலிகள் இந்த விதிகள் எதையும் பின்பற்றுவதில்லை. அவற்றை யார் நடத்துகிறார்கள் என்பதும் கடன் பெறுபவருக்குத் தெரியவாய்ப்பில்லை.

இணையவழி ரம்மியை தமிழ்நாடு அரசு முறைப்படுத்தியதைப் போலவே, கடன் செயலிகளுக்கும் ஓர் ஒழுங்குமுறையைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் அரசு இறங்கலாம். பதிவு செய்யப்படாமல் இயங்கும் கடன் செயலிகளை முடக்கலாம். அதன் சார்பில் கைப்பேசியில் கடுமையாகப் பேசி கடனை வசூலிக்க முயற்சிப்பவர்கள் மீது இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுக்கலாம்.

கடன் செயலி சார்பில் நேரில் சென்று பணத்தை வசூலிக்க முயலும் நபர்களை காவல் துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுக்கலாம். அவ்வாறு பதிவு செய்யாமல் கடன் கொடுக்கும் கடன் செயலிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.

இந்த புதிய சட்டம் சாமானிய மக்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும். எனினும், கடன் கொடுத்தவர்கள்அதைத் திரும்ப வசூலிப்பதில் கெடுபிடி காட்டாமல் இருக்க முடியாது. ஆனால், அதன் மூலம் தற்கொலைகள் நடப்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

பொதுவாக, மக்கள் குழந்தைகளின் கல்வி, வியாபாரம் போன்றவற்றுக்கு அதிக அளவில் கடன் பெறுவதாகக் கூறப்படுகிறது. ஒருவருக்குக் கடன் கொடுக்கும்போது அவருக்கு கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் உள்ளதா என்பதை கடனை வழங்கும் நிதி நிறுவனங்கள் கவனித்தாலே பல பிரச்னைகள் காணாமல் போய்விடும். கடன் பெறுபவரும் தனக்கு அதை, அவர்கள் விதிக்கும் வட்டியுடன் குறிப்பிட்ட காலத்தில் திருப்பிச் செலுத்தும் திறன் உள்ளதா என உறுதிப்படுத்திக் கொண்டே கடனைப் பெறுவது நல்லது.

வாழ்க்கையை நாம் பொருளாதாரத்தில் தற்சார்பு உடையதாகவும் மிகவும் எளிமையானதாகவும் மாற்றிக் கொள்ள வேண்டும். பகட்டான வாழ்வு பதற்றத்தையே கொண்டு வரும். சுலபத் தவணைகளில் பொருள்கள் தரப்படுவதாலேயே அதற்கு நாம் இரையாகிறோம். கடன் வாங்கும் போது, அது நமக்குத் தேவைதானா? அது இல்லாமல் நம்மால் வாழ முடியுமா? என்று சிந்தித்துப் பார்த்து வாங்க வேண்டும்; அதைத் திருப்பித் தரும் திறன் இருந்தால் மட்டுமே நாம் கடனில் அவற்றைப் பெறலாம்.

குறைந்தபட்ச தேவைகளை நமது வாழ்வியல் முறையாக மாற்றிக் கொள்ள வேண்டும். வரும் வருமானத்தில் ஒரு பகுதியை சேமித்து வைத்துவிட்டு பிறகு இருக்கும் பணத்தில் சிக்கனமாக வாழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

கூடுமானவரை அரசின் நலத் திட்டங்களைப் பயன்படுத்திக் கொண்டாலே கணிசமான அளவு பணத்தை நம்மால் ஒவ்வொரு மாதமும் சேமிக்க முடியும். எளிதில் கிடைப்பதாலேயே அதிக வட்டிக்குத் தேவையின்றி பணத்தைக் கடன் வாங்குவது, உறவினர்களிடம் பணம் வாங்குவது, நமது பொருளாதார வல்லமையை மீறி பணத்தைக் கடனாக வாங்குவது போன்றவை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். மனித வாழ்க்கையில் பல நேரங்களில் நமது நிம்மதியைக் கெடுப்பது நமது கடனே ஆகும்.

இனியாவது நம்மைக் கவலையில் வீழ்த்தும் கடன் அட்டைகள், கடன் செயலிகள்ஆகியவற்றின் பயன்பாட்டிலிருந்து விலகி வாழ்வோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com