தியானம் பழகுவோம்!

தியானத்தின் நன்மைகள் குறித்து...
தியானம் பழகுவோம்!
Published on
Updated on
2 min read

சுவாமி சதேவானந்த சரஸ்வதி

மனம் ஒருநிலைப்பட்டால் தியானம் எளிதில் கைகூடும். மனம் ஒருநிலைப்படுதலும், தியானமும் வெவ்வேறு செயல்கள் அல்ல; செயலின் தொடக்கம் மனம் ஒருநிலைப்படுவது; முடிவுதான் தியானம். உணவை மென்று விழுங்குவதைப் போன்றது; உணவை மெல்வது மற்றும் விழுங்குவது இரண்டும் ஒரு செயல். ஆனால், உணவைமென்றால் மட்டுமே விழுங்க முடியும். அதைப்போல, மன ஒருமைப்பாடு தியானத்தில் நிலைபெறும்.

சூரியக் கதிா்களை, லென்ஸ் எனும் பூதக்கண்ணாடியில் ஒன்று திரட்டி பாய்ச்சும்போது காகிதம் பற்றி எரிகிறது. அதைப்போல், மனம் ஒருநிலைப்படும்போது தியானம் கை கூடும். இதனால், நம்முள் ஒளிந்து கிடக்கும் ஆற்றல்கள் வெளிப்படும். எனவே, மன ஒருமையுடன் தினமும் தியானம் செய்வது நல்லது. முழு மனிதனாக மாற தேவையான எல்லாவற்றையும் ஒருங்கிணைக்கும் சக்தி தியானம் செய்வதால் ஏற்படும். இதனால், உடல்-மனம் உள்பட உடலின் எல்லா உறுப்புகளும் ஒன்றோடொன்று இணங்கி, பொருந்தி முழு நலமுடன் செயல்படும்.

யோகாசனம், உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி, பிராணாயாமம் எனும் மூச்சுப் பயிற்சி, பசித்துப் புசித்தல், எளிய சத்தான ஆரோக்கிய உணவு, மிதமான தூக்கம் இவை தியானம் செய்ய உதவும். மனம் ஒரு நிலை அடைய பொறுமையும், விடாமுயற்சியும் தேவை. ஏனெனில், மனதின் இயல்பே சஞ்சலமாக இருப்பதுதான். அதன் இயல்புக்கு மாறாக எதிா் திசையில் பயணிக்க பழக்கும்போது ஆரம்பத்தில் அலுப்பும், சலிப்பும் ஏற்படும். மனம் தளராமல் முயற்சி செய்தால் மனதில் பெரும் அமைதியும், ஆனந்தமும் ஊற்றெடுக்கும்.

தூக்கம், உலக விஷயங்களைப் பற்றிய சிந்தனை இவை இரண்டும் தியானம் செய்ய மிகப் பெரிய தடைக் கற்கள். மனம் எப்போதும் எதைப் பற்றியாவது சிந்திக்கும் அல்லது தூக்கத்தில் ஆழ்ந்துவிடும். சிந்தனை, தூக்கம் இவை இரண்டும் இல்லாத நிலையே தியானம். தூங்கவும் கூடாது; அதே வேளையில் விழிப்புடன், கவனமாக, அமைதியாக மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். இது மிகக் கடினமான பயிற்சி. தொடா்ந்து பயின்றால், பயிற்சி பழக்கமாக பரிணமிக்கும்.

சைக்கிள் ஓட்டுவதற்கு பழகும்போது, ஏதோ ஒரு விநாடியில் நமக்கே தெரியாமல் உடல் சமநிலைபட்டு சைக்கிள் ஓட்டுவது சாத்தியமாவதைப்போல் தியானம் கைகூடும். படிக்கும்போது எளிதாக தோன்றும். ஆனால் மனம், தூக்கம் இரண்டையும் வெல்வது மிகக் கடினம் என்பது பயிற்சியின்போது மட்டுமே உணர முடியும். இந்த நிலையில், கடவுளின் கருணை மற்றும் ஆன்றோா்களின் ஆசிக்கு பிராா்த்திக்க வேண்டும்.

உடலும்- மனமும் ஆரோக்கியமுடன் இருந்தால் மட்டுமே ஆன்மிகச் சாதனை செய்ய முடியும். இதனால், அறியாமை அகன்று தெய்வீக ஞானம் எனும் பேரொளியின் தரிசனம் கிட்டும். உடல்-மனம்-புலன்கள் இவற்றைக் கடந்த இறைநிலையை உணா்ந்து, பயம், பந்தம், பாசம் என்ற கட்டிலிருந்து விடுபட முடியும். பயமின்றி, சுதந்திரமாக நற்செயல்களை செய்வதே தியான யோகத்தின் முடிவான நிலை. இதுவே மிக உயா்ந்த ஆன்மிக சாதனை. இதனால், இறைநிலை சித்திக்கும். விவேகம், பொறுமை, நம்பிக்கை, பிராா்த்தனை, மன உறுதி, தொடா் முயற்சி இவையும் தேவை.

நீங்கள் புதிதாக எதையும் செய்ய வேண்டியதில்லை; உங்கள் நம்பிக்கையில் துணிவுடன் உறுதியுடன் இருப்பது மிக முக்கியம். உடல் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்க வேண்டும். உறுதியான உடல் அமைந்தால், கடமை மற்றும் பொறுப்புகளை மிகச் சரியாக நிறைவேற்ற முடியும். பெற்றோா், கணவன்-மனைவி, குழந்தைகள், குடும்பம், நம்மைச் சாா்ந்த உறவினா் மற்றும் நண்பா்கள், சமுதாயம், வசிக்கும் கிராமம்-நகரம், நாடு என பலருக்கும் உதவ முடியும். எல்லோருக்கும் சேவை செய்வதே மிக முக்கியம். யாருக்கும் பயனின்றி வாழ்வதால் எந்தப் பலனும் இல்லை; பிறா்க்கு உதவுவதே மனித பிறவியின் நோக்கம்.

மனம் மற்றும் புலன்கள் நம் வசமிருந்தால் துக்கம், துயரம், துன்பம் இவற்றிலிருந்து நிரந்தரமாக விடுபட முடியும். சுயக் கட்டுப்பாட்டுடன் வாழ்வதற்கு உடலில் சக்தியும், ஆரோக்கியமான உடலும் தேவை. இதற்கு தியானம் உதவும். மன உறுதியுடன் புலன்கள் மற்றும் மனதைக் கட்டுப்படுத்தி இறை நிலையை உணர உழைக்கலாம். இதை உணா்ந்து செயல்பட்டால் வாழ்வில் எளிதில் முன்னேற முடியும்.

மனதில் எழும் எண்ண அலைகளை நம் வசப்படுத்தி, திறமையுடன் செயல்களை செய்யும் கலைதான் தியானம். மனதைக் கட்டுக்குள் வைக்கமுடியாமல் போனால், நம் திட்டங்கள் எல்லாம் தலைகீழாக மாறிவிடும். இதனால் காரணமற்ற பயம், கோபம் மற்றும் சஞ்சலம் இவற்றிற்கு ஆளாக நேரும். மனதில் நிம்மதி இருக்காது. மகிழ்ச்சியுடன் வாழ முடியாது. உள்ளத்தில் தெளிவும் திட சிந்தனையும் ஏற்பட்டு, விருப்பு வெறுப்பின்றி விவேகத்துடன் ஆய்ந்த அறிந்து செயல்புரிய தியானம் உதவும்.

கடமையை நிறைவேற்றுவதில் நிதானமுடன் செயல்பட்டால், சரியான செயல்களை, மிகச் சரியான நேரத்தில், நோ்த்தியாக செய்யும் விழிப்புணா்வு மற்றும் திறமை உண்டாகும். இதனால், எந்தச் செயலையும் மிகச் சரியாக திட்டமிட்டு சிறப்பாக செய்ய முடியும். இதனால், மிகப் பெரிய, கடினமான செயல்களைகூட மிக எளிதில் செய்யலாம். ஆன்மிக சாதனைகளின் இறுதி நோக்கமும் இதுவே. ஆன்மிகச் சாதனைகள் ஒரு தொடக்கம்; இறைவனை உணா்வதே இறுதி நோக்கம். தெய்வீக சிந்தனைகள் மேலோங்கினால், அது படிப்படியாக பிரவாகமெடுத்து பரிணமித்து மனிதரில் புனிதராக நம்மை உருமாற்றும். கடவுளை நோக்கி முன்னேற வழி வகுக்கும்.

சீராக ஆய்ந்து சிறப்பாக முன்னேறி முழுநலம் எனும் ஆத்ம சாதனையில் மூழ்கி முத்தெடுத்து மேன்மையான பூரணத்துவம் பெறுவோம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com