ஒரு மனிதன்... ஓர் இயக்கம்...
பாலகங்காதர திலகர், விபின் சந்திரபால், லாலா லஜபதி ராய் ஆகிய மூவரும் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தொடக்க கால மும்மூர்த்திகள் என வரலாற்றாளர்களால் வரையறுக்கப்பட்டனர். அதேபோன்று, தமிழ் மண்ணில் வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, மகாகவி சுப்பிரமணிய பாரதி ஆகியோர் திலகர் சகாப்தத்தின் மும்மூர்த்திகள் என அழைக்கப்பட்டனர்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் முன்னணிப் பாத்திரம் வகித்த முக்கியத் தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தனித்தன்மை வாய்ந்தவர்களாக விளங்கினர்.
இன்று வீரமுரசு சுப்பிரமணிய சிவா மறைந்த நூற்றாண்டு நிறைவு நாள்.
அன்றைய ஒன்றுபட்ட மதுரை மாவட்டம், வத்தலகுண்டில் 1884-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 4-ஆம் தேதி பிறந்து, தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் தான் அமைத்திருந்த பாரதாஸ்ரமத்தில் 1925-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23-ஆம் தேதி மறைந்தார் சிவா. அப்போது, அவருக்கு வயது 41.
1900-ஆம் ஆண்டு கோவையில் பள்ளிப் படிப்பை மேற்கொண்டார். அப்போது, அவருக்கு பதினாறு வயது. திருமணமாகி ஓராண்டு ஆகிவிட்டது. மெட்ரிகுலேஷன் படிப்பில் தேர்ச்சி பெறவில்லை.
1902-இல் இருந்து சில காலம் திருவனந்தபுரத்தில் இருந்தார். இவர் ஒரு சராசரி இளைஞராக விளங்கவில்லை. எந்நேரமும் இவரைச் சுற்றி பத்து இளைஞர்கள் இருந்து கொண்டே இருப்பர்.
1906-இல் சிவா ஆர்ய சமாஜ தொண்டர் தாகூர்கான் சந்திரவர்மா என்பவரின் சொற்பொழிவைக் கேட்கும் வாய்ப்பைப் பெற்றார். அவரிடம் இயல்பாகவே அமையப் பெற்ற அரசியல் உணர்வை தாகூர்கான் உரை தூண்டிவிட்டது.
வங்கப் பிரிவினை, ஆங்கிலேயர் சூழ்ச்சி, சுதேசி இயக்க வளர்ச்சி, காங்கிரஸின் சுயராஜ்ய தீர்மானம், நாவலர் விபின் சந்திர பாலரின் கனல் தெறிக்கும் உரைகள், லாலா லஜபதி ராய்-அஜீத் சிங் நாடு கடத்தல் ஆகிய அரசியல் நிகழ்வுகள் சிவாவின் சிந்தனையில் பெரும் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தின.
ஆன்மிகமும் அரசியலும் இரண்டறக் கலந்த தீவிரச் செயல்பாட்டில் நாட்டமும், ஈடுபாடும்மிக்க வித்தியாசமான இளைஞராக வளர்ந்தார் சிவா.
"தர்ம பரிபாலன சமாஜம்' என்ற இளைஞர் அமைப்பை திருவனந்தபுரத்தில் நிறுவினார். இளைஞர்கள் பலரை இவ்வமைப்பில் இணைத்து அவர்களுக்கு நாட்டுப் பற்றை ஏற்படுத்தும் சிறப்புப் பயிற்சிகள் அளித்தார்.
திருவனந்தபுர வீதிகளில் சிவா தெருக்கூட்டங்களை ஏற்பாடு செய்து அவற்றில் அவரே ஆவேசம் மிக்க உரைகளை நிகழ்த்தினார். சிவாவின் உரைகளை மக்கள் உற்று கவனிக்கத் தொடங்கியவுடன் ஆங்கிலேய அரசு சிவாவின் நடவடிக்கைகளை கவனிக்கத் தொடங்கியது. ஆங்கிலேயரைப் பகைத்துக் கொள்ள விரும்பாத திருவனந்தபுரசமஸ்தான அதிபதிகள் சிவாவை சமஸ்தான எல்லையில் இருக்கத் தடை விதித்தனர்; வெளியேறக் கட்டளை பிறப்பித்தனர்.
அதை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த சிவா நடந்தே ஊர் ஊராக தன்னந்தனியாக யாத்திரை மேற்கொண்டு ஆங்காங்கு ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான அனல் கக்கும் உரைகளை நிகழ்த்தியவாறு சென்றார். செல்கிற இடங்களிலெல்லாம் இவருக்கு சீடர்கள் வாய்த்தனர்.
சீடர்களை ஒன்றிணைத்து அவர்களுக்கு தனிப் பயிற்சியளித்து அவர்களும் இவரைப் போலவே அர்ப்பணிப்புடன் ஆங்கிலேய அக்கிரம ஆட்சிக்கு எதிராக கூர்முனை ஈட்டி போன்று கொதித்தெழச் செய்வதில் தேர்ச்சி பெற்றிருந்தார் சிவா.
சிவாவின் இத்தகைய தொடர் நடவடிக்கை தரமும் தகுதியும், வீரமும் விவேகமும்மிக்க பல இளைஞர்களை விடுதலைப் போராட்டக் களத்தில் இறக்கியது.
சுந்தர பாரதி, சிதம்பர பாரதி, சாரங்கபாணி பாரதி, சீனிவாச வரதன், நெல்லை எஸ்.என்.சோமயாஜுலு, கல்கி சதாசிவம், தியாகராஜ சிவம், ரங்கராஜ ராவ், சுப்பிரமணிய சர்மா, ராகவ பாரதி, ராமகிருஷ்ண சர்மா, சுப்பராயலு, முகமது அலி, கோவிந்தன் சேர்வை, ராமசுப்பிரமணியம், அய்யாவு அய்யங்கார், பாபுராவ், திருமயம் கிருஷ்ணமூர்த்தி, சாம்பசிவம் உள்ளிட்ட பலர் பிற்காலத்தில் முத்திரை பதித்த விடுதலை வீரர்கள்.
ஒரு தனி மனிதன் நாட்டுப்பற்றால், சமூக உணர்வால், தொடர் முயற்சியால் ஓர் இயக்கமாக உருவெடுக்க முடியும் என்பதற்கு உதாரணமாக விளங்கியவர் சிவா.
ஊர்ஊராக விடுதலை வேள்வியை மூட்டிக் கொண்டு வந்த சிவா, 3-2-1908 அன்று தூத்துக்குடி வந்தார். வஉசியை சந்தித்தார். அவரது நட்பும், தோழமையும் சிவாவின் முழு ஆற்றலையும் ஆவேசத்தையும் ஓர் ஒழுங்கமைதியோடு வெளிப்படுத்துவதற்கு அடிப்படையாக அமைந்தது; அமைப்பு ரீதியாக வாய்ப்பு கிடைத்தது.
வஉசியும் கனன்று தெறிக்கும் சொற்பொழிவாளர். இருவரின் உரைகள் ஒன்றுக்கு ஒன்று விஞ்சி நிற்கும் தன்மை மிக்கவை. இரண்டும் இணைந்தால் என்ன நடக்குமோ அதுவே நிகழ்ந்தது. பல்லாயிரம் மக்கள் தெருமுனைகளில் இருவரின் உரைகளைக் கேட்க திரளத் தொடங்கினர். பேச்சே இருவருக்கும் பேராயுதமாயிற்று.
அக்காலத்து அரசியல் ஆய்வாளர் ஒருவர் இருவரின் உரை பற்றி பின்வருமாறு பதிவு செய்துள்ளார்; வஉசி பேசிய போது சுழன்றடிக்கிற பெரு நெருப்பாய் உணர்ந்தனர் மக்கள். பின்னர், சிவா உரை நிகழ்த்திய போது சுழற்றியடிக்கிற சூறைக் காற்றாய் கேட்போர் உணர்ந்தனர். இருவரின் உரைகளையும் கேட்டுத் திரும்பிய மக்களின் மனதில் தேச பக்தப் பெரு நெருப்பும் அந்நிய எதிர்ப்பு அனல் காற்றும் ஒன்றாய்க் கலந்தன.
ஒருமுறை வஉசி பேசியபோது, "வெள்ளையர் விரட்டப்பட வேண்டும். இன்றே விரட்டப்பட வேண்டும், இக்கணமே அவர்கள் ஓட ஓட விரட்டப்பட நாம் உறுதியேற்க வேண்டும். மூட்டை முடிச்சுகளுடன் அவர்கள் ஓட்டமெடுக்க வேண்டும்' என்று தன்னை மறந்து ஆவேசமாகப் பேசினாராம். அடுத்து பேசுவதற்காக அங்கு அமர்ந்திருந்த சிவா உணர்ச்சியுடன் எழுந்து நின்று "பிள்ளைவாள்... மூட்டை முடிச்சு நம்முடையது... அவர்கள் வெறுங்கையோடு விரட்டப்பட வேண்டும்" என்றாராம்.
தூத்துக்குடியில் 1908 பிப்ரவரி 11,16,19-ஆம் தேதிகளில் கடற்கரையில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களுக்கு சிவா தலைமை வகித்தார். வஉசி உரையாற்றினார். 19-ஆம் தேதி சிவா பேசிய உரையின் தலைப்பு "அந்நிய ஆட்சியில் ஏற்படும் அபாயங்கள்' என்பதாகும். பிப்ரவரி 23-ஆம் தேதி சிவா நிகழ்த்திய அரசியல் பேருரை பற்றி ஆங்கிலேய உளவுத் துறையினரின் விரிவான ரகசிய அறிக்கை இன்றளவும் ஆவணமாக உள்ளது.
தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர்களுக்கு ஆங்கிலேய நிர்வாகம் இழைத்த கொடுமைகளுக்கு எதிராக கொதித்தெழுந்த வஉசியுடன் கரம்கோத்து தொழிலாளர் உரிமைகளுக்கு உரத்த குரல் கொடுத்தார் சிவா.
சிவாவின் உரையில் 1905-இல் நடைபெற்ற முதலாம் ரஷிய புரட்சி பற்றி நுட்பமான செய்திகளைச் சொல்லி இந்திய மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தினார்.
அரசுக்கு எதிரான உரை, ராஜ துவேஷ சொற்பொழிவுகள் என்று காரணம் காட்டியே வஉசியும் சிவாவும் பத்மநாப ஐயங்காரும் கைது செய்யப்பட்டனர்.
வஉசிக்கு அரச நிந்தனைக்காகஇருபது ஆண்டுகளும் சிவாவுக்கு உதவியதற்காக இருபது ஆண்டுகளும் என இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிவாவுக்கு பத்து ஆண்டுகள் தீவாந்திரத் தண்டனை (ஒருவரை நாடு கடத்தி தொலைவான இடத்தில் சிறை வைப்பது) வழங்கப்பட்டது.
இப்படியாக சிவா சிறைவிதிப்படி கழிந்த நாள்கள் போக, முதல்முறை ஆறு ஆண்டுகள் சிறைவாசமிருந்தார். இரண்டாம் முறை 1921-இல் இரண்டரை ஆண்டுகள் சிறையிலிருந்தார். மூன்றாம் முறை 1922-இல் ஓராண்டு சிறையிலடைக்கப்பட்டிருந்தார். மொத்தம் வாழ்ந்த 41 ஆண்டுகால வாழ்க்கையில் பொது வாழ்வில் சிவா மூழ்கிக் கிடந்த ஆண்டுகள் 19. அந்த 19 ஆண்டுகளில் ஒன்பதரை ஆண்டுகள் சிறையில் இருந்தார் சிவா. மீதமுள்ள நாள்களில் ஓயாத அரசியல் பயணம், சொற்பொழிவுகள், பத்திரிகை பணிகள்.
"ஒரு மனிதன் ஓர் இயக்கம்' என்பதற்கான பொருத்தமான உதாரணம் தியாகி சிவா.
அரசியல் இயக்கம், ஆன்மிக இயக்கம், தொழிலாளர் இயக்கம், தமிழ் இயக்கம், சமூக இயக்கம் என இயங்கிக் கொண்டே இருந்தார் தியாகி சிவா. 23 நூல்களை எழுதியுள்ளார் தியாகி சிவா. அவற்றுள் மூன்று நூல்கள் சிறையில் எழுதப்பட்டவை. ஐந்து நூல்களைத் தவிர மீதமுள்ளவை ஆன்மிக நூல்கள். "எனது சிறைவாசம்' என்ற நூல் அக்கால அரசியல் சிறைவாசத்தின் சீரிய ஆவணம்.
பிற்காலத்தில் ஒரு தொழிற்சங்கத் தலைவராக பரிணமித்த தியாகி சிவா பொதுவுடைமை இயக்கப் பிதாமகன் ம.சிங்காரவேலர் இந்தியாவின் முதல் மே தினத்தை சென்னை திருவல்லிக்கேணியில் நடத்தியபோது, சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தி இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் தொடக்க வரலாற்றிலும் பங்களிப்பு செலுத்தியவரானார்.
"வந்தே மாதரம்' என்று முழங்கிய போதெல்லாம் "அல்லாஹு அக்பர்'
என்றும் முழங்கி மதங்களைத் தாண்டிய தேசபக்திக்கு வித்தூன்றியவர் தியாகி சிவா. ஞானபாநு, பிரபஞ்சமித்திரன், இந்திய தேசாந்திரி எனும் இதழ்களின் ஆசிரியராக விளங்கி இதழியல் துறையில் ஆழத்தடம் பதித்தவர் தியாகி சிவா.
"எனது மதம் பாரதீயம்' என்றும், "என்னுடைய மதத்தின் தேவதை பாரத மாதா' என்றும், "தீண்டாமை வெறுக்கத்தக்க ஒரு பாவமாகவும், இந்திய ஜன சமூகத்துக்கே ஒரு களங்கமாகவும் உள்ளது' என்றும் பிரகடனப்படுத்தியவர் தியாகி சிவா.
சிறைக் கொடுமையின் விளைவாக, சிறையில் செய்த வேலைகளால் ஏற்பட்ட ஒவ்வாமையின் காரணத்தால் கொடூர நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும், கலங்காமல் தேசப் பணி செய்து வந்த தியாகி சிவா மறைந்து இன்றோடு நூறாண்டு நிறைவு பெற்று விட்டது. தியாகி சிவாவின் வரலாறு சிந்தனைக்குரியது.
(இன்று தியாகி சுப்பிரமணிய சிவா
மறைவு நூற்றாண்டு நிறைவு)
கட்டுரையாளர்:
தலைவர், மக்கள் சிந்தனைப் பேரவை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.