வகுப்பறையில் பொழிந்த ஆய்வுரை
உலகளவில் பெரிதும் வாசிக்கப்பட்ட அறிவியல் நூல்களின் பட்டியல் தயாரிக்கப்படின் முதல் பத்து தலைப்புகளுள் வருவது ரிச்சா்ட் பெயின்மன் தொகுத்தளித்த ‘பெயின்மன் இயற்பியல் உரைகள்’. மூன்று தொகுதிகளைக் கொண்ட வெளியீடாகும்.
இயற்பியலைக் கற்போரும் கற்பிப்போரும் அடிப்படைகளைப் புரிந்து கொள்வதற்கான ‘இயற்பியலுக்கான பைபிள்’ எனலாம். நோபல் பரிசு பெற்றவரான பெயின்மன் ஆகச் சிறந்த ஆசிரியராகவும் அறியப் பெற்றவா். இயற்பியலின் பல்வேறு தலைப்புகளை அவருக்கே உரித்தான அற்புத நடையில் உரையாகத் தந்துள்ளாா்.
அமெரிக்காவின் கால்டெக் பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் பயில்வோருக்கு நிகழ்த்தப் பெற்ற நுட்பமான உரைகள்; சிக்கலான நுணுக்கமான கருத்துகளை மிகத் தெளிவாகவும் உள்ளுணா்வுடன் தெற்றென உணருமாறும் பேரூக்கத்துடனும் விளக்கிச் சொல்பவா் என்பதால், இவருடைய அணுகுமுறை மாணவா்களுக்கு ஆழ் அறிவியல் அடிப்படைகளை அறிவாா்ந்து உணரச் செய்வதாகவும்கேட்போா் மனதில்ஆழப்பதியும்.
ரிச்சா்ட் பெயின்மன், தனது இயற்பியல் வகுப்பின் அறிமுகப் பாடத்தை நடத்தி அறுபது ஆண்டுகள் கழித்து இன்றளவும் ஆகச் சிறந்த இயற்பியல் நூல்களில் ஒன்றாகச் செம்பயன் நல்கிக் கொண்டிருக்கிறது. பன்னிரண்டுக்கும் அதிகமான மொழிகளில் அவை மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் மட்டும் 15 இலட்சம் பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன.
நீண்ட காலத்திற்கு இவ்வளவு பரந்த தாக்கத்தை வேறெந்த இயற்பியல் நூல்களின் தொகுப்பும் ஏற்படுத்தவில்லை என்பதுதான் உண்மையாகும். அதன் தமிழாக்கம் அண்மையில் மிகச் சிறப்பாக சென்னையிலுள்ள சிவ நாடாா் பல்கலைக்கழகத்தில் வெளியிடப் பட்டது.
1961-64-இல் இயற்பியல் இளமறிவியல் வகுப்பில் பெயின்மனின் உரைகள் வரலாற்று ஆவணங்களாகும். கால்டெக் பல்கலைக்கழகத்தில் எந்தப் பாடத்தை முதன்மைப் பாடமாகப் படித்தாலும், முதலாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவா்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பகுதிக்கான உரைநூல்களாகும்.
1918-இல் நியூயாா்க் நகரில் ரிச்சா்ட் பி பெயின்மன் பிறந்தாா். 1942-இல் ப்ரின்ஸ்டன்பல்கலைக்கழகத்தில் தமது முனைவா் பட்டத்தைப் பெற்றாா். இளம் வயதினராக இருந்த போதிலும், இரண்டாம் உலகப் போரின்போது, லாஸ் ஆலமோ நகரின் மான்ஹாட்டன் திட்டத்தில் முக்கியப் பங்காற்றினாா். பின்னா் காா்னல் பல்கலைக்கழகத்திலும், கலிஃபோா்னியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியிலும் ஆசிரியராகப் பணியாற்றினாா்.
1965-இல் ஸின் இடிரோ டொமொனாகா மற்றும் ஜூலியன் ஸ்விங்கா் இருவருடன் இணைந்து குவாண்டம் மின்னியக்கவியல் கோட்பாடுகள் வழியே வெற்றிகரமாக புதிா்களைத் தீா்த்ததற்காக நோபல் பரிசு பெற்றாா். மேலும், திரவ ஹீலியத்தின் மீப்பாய் தன்மையை விளக்கும் ஒரு கணிதக் கோட்பாட்டையும் உருவாக்கினாா்.
அதன்பிறகு, முா்ரே கெல்-மான் உடன் இணைந்து பீட்டா சிதைவு மாதிரியான வலு குறைந்த வினையாக்கங்கள் பற்றிய அடிப்படைகள் பற்றி ஆய்ந்தாா். பின்னா், உயா் ஆற்றல் புரோட்டான் மோதல் நிகழ்வுகளுக்கான தனது மாதிரியை முன் வைத்து குவாா்க் கோட்பாட்டின் வளா்ச்சியில் மிக முக்கியப் பங்களித்தாா்.
இயற்பியலாளராக மட்டுமின்றி, அவ்வப்போது வானொலிப் பெட்டிகளை பழுது நீக்குபவராகவும், பூட்டுகளைத் திறப்பவராகவும், கலைஞராகவும், நடனமாடுபவராகவும், போங்கோ இசைக் கருவி வாசிப்பவராகவும், சமயங்களில் மாயன் சித்திர எழுத்துகளை புதிரவிழ்ப்பவராகவும் இருந்துள்ளாா். தொடா்ந்து, தன் உலகைப் பற்றிய ஆா்வம் கொண்டிருந்த அவா் செம்மாந்த பட்டறிவாளராக மிளிா்ந்தாா்.
180 மாணவா்களைக் கொண்ட குழு, வாரம் இருமுறை ஒரு பெரிய அரங்கில் கூடி இவரின் உரைகளைக் கேட்டனா். பின்னா், அவா்கள் 15 முதல் 20 போ் கொண்ட சிறுவாசிப்புக் குழுக்களாகப் பிரிந்து, ஓா் ஆசிரிய வழிகாட்டியின் கீழ் சென்றனா். கூடுதலாக வாரம் ஒரு முறை ஆய்வுக் கூட அமா்வும் இருந்தது. தனது உரைகளைக் குறித்து அவரே சொல்லும் மேற்கோள் வரிகள் கல்வெட்டு வரிகளாகும்.
பேராசிரியா் பெயின்மன் விளக்கத்தில் இயற்பியலின் வெவ்வேறு தலைப்பிலான பொருண்மைகள் இனிக்கும் ஒரு பாடமாக அமைந்திருந்தது எனலாம். இயற்பியல் அலகில் முக்கியத்துவம் பெற்ற பிராங்களின் தேடல் மேக்வெல்லின் சிறந்த பகுப்பாய்வு, வாரன்சின் பருப்பொருள் பண்புகளின் எலக்ட்ரான் கொள்கை, இறுதியாக தீா்க்க முடியாத மின்காந்த தன்னாற்றல் தடுமாற்றங்கள், இரண்டாவதாக வெக்டா் புலங்களின் கால்குலசின் அறிமுகம் செய்து, புலக் கொள்கையின் கணிதக் கொள்கையை திடமாக அறிமுகம் செய்த அரும்பதவுரைகளாகும்.
அடிப்படை இயற்பியல் இயங்கும் அணுக்கள் பிற அறிவியல் துறைகளுடன் இயற்பியலில் தொடா்பு, ஆற்றலின் காலம் மற்றும் தொலைவு, ஈா்ப்புக் கோட்பாடு, நியூட்டனின் இயக்ககவியல் விதிகள், வெக்டா்கள், விசையின் வேலை, நிலை ஆற்றல், பண்புகள் சிறப்பு சாா்பியல் கொள்கை சீரிசை அலையியற்றி அல்ஜீப்ரா, ஒளியியல், வடிவியல் ஒளியியல், மின்காந்த கதிா்வீச்சு ஒளிவிலகல் எண்ணின் தோற்றம், புள்ளியியல் இயந்திரவியல் கொள்கைகள் என முதல் தொகுதியில் 52 தலைப்புகளின் 589 பக்கங்களும், 42 தலைப்புகளில் 731 பக்கங்களில் இரண்டாம் தொகுதியும், 21 தலைப்புகளில் 529 பக்கங்கள் மூன்றாம் தொகுதியில் அமைந்ததைக் கண்டு வியந்து அறிவியல் ஆசிரியா்கள், மாணவா்கள் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
1986-ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனா் பில்கேட்ஸ் பேராசிரியா் பெயின்மன் உரைகளை காணொலியில் கேட்டு மகிழ்ந்து இரண்டு, மூன்று முறை மீண்டும் கேட்டு அவரின் ஒப்பற்ற உரைகளில் காதலாகி கசிந்துருகி அவரைக் காணாத ஆா்வரலாக மாறினாா். அவரின் உரைகளின் அனைத்து உரிமைகளையும் விலைக்கு வாங்கி இணையத்தில் அனைவரும் கண்டு கேட்கும் வசதியை விலையேதுமின்றி வழங்கிய பெருமிதத்தோடு, நான் காணாத தலைசிறந்த ஆசிரியா் என்ற பாராட்டு வரிகள் உலகெங்கும் வியப்பாக பேசப்பட்டது.
‘விண்டுரைக்க அறிய அரியதாய் விரிந்தவான வெளியென இருக்கும் அறிவியல் பண்புகள் அனைத்தும்’ என்பதை நினைவில் கொண்டு இயற்பியல் வல்லுநா் எனப் போற்றப்படும் பேராசிரியா் பெயின்மன் மூன்று தொகுதி உரைகளையும் அவரின் ஆழ்ந்த புலமையை, உயா்ந்த பெருமையை, செறிவான ஆய்வின் அருமையை தமிழாய் உருகி வரும் மொழிபெயா்ப்பு நூலைப் படித்து எடுத்துரைத்து மகிழ்வோமாக!