நீதி தேவன் மயக்கம் தெளிய வேண்டும்!

பொதுவாக ஊழல் என்பது ஒரு தேசத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிடும்.
we want justice
Published on
Updated on
3 min read

பொதுவாக ஊழல் என்பது ஒரு தேசத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிடும். அதிலும் நீதித் துறையில் ஊழல் என்றால் கேட்க வேண்டுமா? நாட்டின் அனைத்து வளர்ச்சிகளையும் அழித்து விடும். தேசம் முன்னோக்கிச் செல்வதற்குப் பதிலாக பின்னோக்கிச் செல்லத் தொடங்கி விடும்.

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றங்களும், நீதிபதிகளும் மக்களின் நம்பிக்கைக்கு உரியதாகச் செயல்பட வேண்டும். எப்போதாவது, தவறு ஏற்படுமானால் வெள்ளைத் துணியில் கருப்பு மை பட்டதுபோல் எல்லோருக்கும் தெரிந்துவிடும்.

"நீதித் துறையில் ஊழல் மற்றும் தவறான செயல்பாடுகள் இடம்பெறுவது அதன் மீதான பொதுமக்களின் நம்பிக்கையில் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும். அத்துடன் ஒட்டுமொத்த நீதித் துறையின் நேர்மை மீதான நம்பிக்கையும் சிதைந்து விடும்' என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் உச்சநீதிமன்றத்தில் "நீதித் துறையின் சட்டபூர்வ தன்மை மற்றும் பொது நம்பிக்கையைப் பராமரித்தல்' என்ற தலைப்பில் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்ற அவர் இவ்வாறு பேசியுள்ளார். ஒவ்வொரு அமைப்பும் வலுவான நடைமுறையைக் கொண்டுள்ளபோதும் தொழில் முறையில் தவறான நடத்தை தொடர்பான பிரச்னைகளுக்கு உள்ளாகின்றன.

எப்போதாவது நீதித் துறைக்குள்ளும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதுபோன்ற நடத்தைகள் பொதுமக்களின் நம்பிக்கை மீது எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, இதற்கு எதிராக சரியான வெளிப்படையான நடவடிக்கைகள்மூலம் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க முடியும்.

அந்த வகையில், நீதித் துறையில் ஊழல், தவறான நடத்தைகள் தொடர்பான சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வரும் போதெல்லாம் உரிய உடனடி நடவடிக்கைகளை உச்சநீதிமன்றம் மேற்கொண்டு வருகிறது. மேலும், நீதிபதிகள் பணி ஓய்வு பெற்றவுடன் அரசில் நியமனங்களை மேற்கொள்வது அல்லது தேர்தலில் போட்டியிடுவதற்காகப் பணி விலகுவது போன்றவற்றால் பொதுமக்களின் நம்பிக்கையை இழக்க வாய்ப்புள்ளது.

அதன் காரணமாக, பணி ஓய்வுக்குப் பிறகு எந்தவித அரசுப் பணியையும் ஏற்க மாட்டோம் என்று உறுதி ஏற்க வேண்டும். நீதித் துறையின் நம்பகத்தன்மை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் முயற்சியாக இந்த உறுதிப்பாடு இருக்க வேண்டும்.

ஒவ்வொரு மக்களாட்சியிலும் நீதித் துறை அதன் சட்டபூர்வ தன்மை மற்றும் பொது நம்பிக்கை அடிப்படையில் நீதி வழங்குவதற்கான நிறுவனமாகச் செயல்பட வேண்டும். அத்துடன் உண்மையான ஆட்சி அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான நிறுவனமாகவும் அதன் செயல்பாடு அமைந்திடல் வேண்டும்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் விவாதிக்கப்படவுள்ள முக்கிய பிரச்னைகளில் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான பதவி நீக்கம் கோரும் தீர்மானமும் ஒன்றாகும். கடந்த மார்ச் மாதம் தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில் பணக்கட்டுகள் எரிந்த நிலையில் எடுக்கப்பட்ட விவகாரம் நாடெங்கும் பேச்சானது. உடனடியாக அவர் அலாகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, நீதித் துறை பணிகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்.

மூன்று நீதிபதிகள் அடங்கிய உள் விசாரணைக் குழு முதல்கட்ட விசாரணை நடத்தி அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில், அவரைப் பதவி நீக்கம் செய்யும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பரிந்துரை செய்துள்ளார்.

இதில் என்ன வேடிக்கையென்றால், உச்சநீதிமன்ற உள் விசாரணையை எதிர்த்தும், தலைமை நீதிபதி அனுப்பிய பரிந்துரையை எதிர்த்தும் நீதிபதி யஷ்வந்த் வர்மா உச்சநீதிமன்றத்திலேயே வழக்கு தொடர்ந்துள்ளார். தங்களுக்கு எதிரான வழக்கை தாங்களே விசாரிப்பது உச்சநீதிமன்றம் இதுவரை கண்டதில்லை.

இதற்கிடையே நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது தில்லி காவல் துறையும் அமலாக்கப் பிரிவும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து முறையாக குற்றவியல் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கேட்டும் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கையும் உச்சநீதிமன்றமே விசாரிக்கவுள்ளது.

பிரச்னைக்குரிய இந்த நீதிபதி பதவியை விட்டு விலக வேண்டும் அல்லது விருப்ப ஓய்வில் செல்ல வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்ட பிறகும், அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுப்பதால், வேறு வழியில்லாமல் பதவி நீக்கம் செய்வதற்கான பரிந்துரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு தாக்கல் செய்திருப்பதால் உச்சநீதிமன்றமே இக்கட்டான சூழ்நிலைக்கு உள்ளாகியுள்ளது. நீதித் துறை வரலாற்றில் இப்படி ஒரு நிலை இதுவரை வந்ததில்லை என்பதால் இதுவே எங்கும் பேசுபொருளாக மாறியுள்ளது.

நீதிபதி பதவிநீக்கத் தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றுவது சாதாரண நிகழ்வாக நடக்கக் கூடியது அல்ல. சிறப்புப் பெரும்பான்மை எனப்படும் மொத்த உறுப்பினர்களின் பெரும்பான்மை மற்றும் தீர்மானத்தின் மீது பங்கெடுக்கும் உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவளித்தால் மட்டுமே தீர்மானம் நிறைவேறும்.

அதன்பிறகு, குடியரசுத் தலைவர் கையொப்பம் இடவேண்டும். நாடாளுமன்ற வரலாற்றில் இரண்டாம் முறையாக நீதிபதிக்கு எதிராக இத்தகைய தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுபோன்ற தீர்மானம் இதற்கு முன்பு ஒரு முறை கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி இராமசாமி உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த போது நடந்தது. அந்தத் தீர்மானம் பெரும்பான்மை ஆதரவு கிடைக்காததால் நிறைவேற்றப்படவில்லை.

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, நாடாளுமன்ற மழைக்காலத் கூட்டத்தொடரின் முதல் நாளே தீர்மானம் கொண்டு வந்தனர். அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 124, 217 மற்றும் 218-இன் கீழ் நீதிபதியை பதவி நீக்கக் கோரி 145 மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம் இட்ட மனு அவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற பாஜக உறுப்பினர்கள் ரவிசங்கர் பிரசாத், அனுராக் தாக்குர், நாடாளுமன்ற திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் இந்த மனுவில் கையொப்பம் இட்டுள்ளனர். இதேபோன்று, மாநிலங்களவையிலும் மனு அளிக்கப்பட்டது. அதில் 63 மேலவை உறுப்பினர்கள் கையொப்பம் இட்டுள்ளனர்.

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான மனுவில் மக்களவையில் 100 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 50 உறுப்பினர்களும் கையொப்பம் இடவேண்டும். நீதிபதிகள் (விசாரணை) சட்டத்தின்படி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒரே நாளில் ஒரு தீர்மானத்தின் அறிவிப்பு அளிக்கப்படும்போது, நீதிபதிக்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஆராய ஒரு குழுவை மக்களவை அவைத் தலைவர் மற்றும் மாநிலங்கள் அவைத் தலைவர் அமைப்பார்கள்.

இந்தத் தீர்மானம் இரு அவைகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படா விட்டால் எந்தக் குழுவும் அமைக்கப்படாது என்று அரசியல் சட்டம் கூறுகிறது. இந்தத் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஒருவர் மற்றும் ஒரு புகழ்பெற்ற சட்ட வல்லுநர் ஆகியோர் அடங்கிய குழு, நீதிபதி வர்மா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரித்து, மூன்று மாதங்களில் அறிக்கை வெளியிடுமாறு கேட்கப்படும்.

இந்த விசாரணை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அதைத் தொடர்ந்து இரு அவைகளிலும் விவாதம் நடத்தப்பட்டு நீதிபதி வர்மாவை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும்.

ஏற்கெனவே இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் குழு அமைத்தது. அதன் விசாரணை அறிக்கையிலும் நீதிபதி வர்மா மீது குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதாகக் கூறி அவரைப் பதவி விலக உச்சநீதிமன்றம் கூறியது. ஆனால், அவர் பதவி விலக மறுத்துவிட்டார். எனவே, அவரை பதவி நீக்கம் செய்ய குடியரசுத் தலைவருக்கு அப்போதைய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பரிந்துரை அனுப்பியது குறிப்பிடத்தக்கது. எனவே, நாடாளுமன்றத்தில் இந்தத் தீர்மானம் ஏற்கப்பட்டு விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளை நீதித் துறையும், நாடாளுமன்றமும் சந்திக்காமல் இருக்க வேண்டுமானால், நீதிபதிகள் நியமனத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். நீதித் துறை மேலும் தெளிவான கண்காணிப்பு வழிமுறைகளை உருவாக்க வேண்டும். மக்களின் கடைசி நம்பிக்கையையும் சிதைத்துவிடக் கூடாது. நீதி தேவன் மயக்கம் தெளிய வேண்டும்.

கட்டுரையாளர்:

எழுத்தாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com