
உயிர், சொத்து இழப்புக்கு வழிவகுக்கும் மருத்துவமனை தீ விபத்துகள் பிராணவாயு உருளையில் ஏற்படும் கசிவு, மருத்துவப் பயன்பாட்டு வாயுக்கள் மற்றும் ரசாயனங்களை தவறாகக் கையாளுதல், தீ பாதுகாப்பு வசதிகள் இல்லாதிருத்தல், மின்னியற்றி (ஜெனரேட்டர்) உள்ளிட்ட மின் உபகரணங்கள் பழுது பாராமை, பழைய மின் கம்பிகள் கொண்ட மின் அமைப்பு, மின்சுற்றில் ஏற்படும் பழுது, அதீத மின் பயன்பாடு போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படலாம்.
இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 60 முதல் 100 மருத்துவமனைகளில் தீ விபத்துகள் நிகழ்வதாகவும் தமிழ்நாட்டில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 5 முதல் 10 மருத்துவமனைகள் தீ விபத்துகளால் பாதிக்கப்படுவதாகவும் தரவுகள் கூறுகின்றன.
மருத்துவ உபகரண சேதம், மருத்துவ சேவை முடக்கம், மருந்துகள் இழப்பு, சீரமைப்பு செலவுகள், நிவாரணம் மற்றும் சட்ட ரீதியான செலவுகள் என தீ விபத்து ஒரு மருத்துவமனைக்கு ரூ.1 கோடி முதல் ரூ.6 கோடி வரை பொருளாதாரப் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்தி பதிவு செய்யும் நோக்கத்துடன் மருத்துவ நிறுவனங்களுக்கான குறைந்தபட்ச வசதி மற்றும் சேவை தரநிலைகளை வகுத்து தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதேபோல், இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் மருத்துவ நிறுவனங்களுக்கான முறைப்படுத்துதல் சட்டத்தை இயற்றியுள்ளன.
இந்தியாவில் மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்குடன் மருத்துவமனைகளில் தரம் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பை மேம்படுத்த மருத்துவமனைகள் மற்றும் சுகாதார வழங்குநர்களுக்கான தேசிய அங்கீகார வாரியம் செயல்பட்டு வருகிறது. மருத்துவ நிறுவனங்களுக்கான முறைப்படுத்துதல் சட்டமும் தேசிய அங்கீகார வாரியமும் மருத்துவமனை தீ பாதுகாப்பு குறித்த விதிமுறைகளை ஏற்கெனவே வகுத்துள்ளன.
மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் சட்டத்தின் கீழ் பதிவு செய்யவும் சுகாதார வழங்குநர்களுக்கான தேசிய அங்கீகார வாரிய அங்கீகார சான்றிதழ் பெறவும் மருத்துவமனைகள் தீயணைப்புத் துறையினரிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும்.
கட்டட வரைபடம், தீயை அணைக்கும் உத்திகள் அதற்கான கருவிகள் பற்றிய தீ பாதுகாப்பு திட்ட அறிக்கை, கட்டட பொறியாளர் வழங்கும் கட்டட நிலைத்தன்மை குறித்த சான்றிதழ், மின்சார இணைப்புகள் குறித்த சான்றிதழ் ஆகியவற்றை ஆராய்ந்து கட்டடத்துக்குச் சென்று ஆய்வு செய்த பின்னரே தீயணைப்புத் துறையிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெற முடியும்.
நாடு முழுவதும் கட்டட கட்டுமான நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும் இந்திய தேசிய கட்டட விதிமுறை கட்டுமானம், பராமரிப்பு மற்றும் தீ பாதுகாப்பு குறித்த விரிவான வழிகாட்டுதல்களை உள்ளடக்கி உள்ளது.
1970}ஆம் ஆண்டு இந்திய திட்டக் குழுவால் வெளியிடப்பட்ட இந்திய தேசிய கட்டட விதிமுறைகள் 1983} ஆம் ஆண்டு திருத்தி அமைக்கப்பட்டது.
தற்போது நடைமுறையில் உள்ள இந்திய தேசிய கட்டட விதிமுறைகள் சர்வதேச நடைமுறைகளை பிரதிபலிக்கும் வகையில் 2016}ஆம் ஆண்டு இந்திய தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இந்த கட்டட நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து மருத்துவமனைகள் மற்றும் சுகாதார வழங்குநர்களுக்கான தேசிய அங்கீகார வாரிய தணிக்கையாளர்களால் ஆய்வு செய்வது நடைமுறையில் உள்ளது.
மருத்துவமனை தீ மற்றும் அதனால் ஏற்படும் அவசரகால பாதிப்புகளை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு பராமரிக்க வேண்டும் என்றும், ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளை எளிதில் வெளியேற்றும் வகையில் கட்டடம் கட்டமைக்கப்பட வேண்டும் என்றும் இந்திய தேசிய கட்டட விதிமுறைகள் கூறுகின்றன.
தீ பற்றுதலைக் கண்டறியும் தானியங்கி, எச்சரிக்கை மணி (அலாரம்) மற்றும் தீயை அணைக்கும் தானியங்கி நீர் தெளிப்பான் (ஸ்பிரிங்லர்) கொண்ட அமைப்பு, தீ பாதிப்பு பகுதியில் இருந்து மனிதர்களை தனிமைப்படுத்துவதற்கான தீ தடுப்பு திட்டமிடல் பயிற்சி, தீ விபத்து ஏற்படும் போது உண்டாகும் வெப்பம் மற்றும் புகை தாக்காத ஒப்பீட்டு பாதுகாப்பு பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய மருத்துவமனை வடிவமைப்பு அவசியம் என்கிறது இந்திய தேசிய கட்டட விதிமுறைகள்.
தரையுடன் ஒருங்கிணைக்கப்பட்ட தீ தடுப்புச் சுவர், தீ தடுப்பு கதவுகள், புகை மற்றும் தீங்கு விளைவிக்கும் வாயுக்களை திறம்பட வெளியேற்றும் காற்றழுத்த அமைப்பு கொண்ட முகவாயில், தாழ்வாரம் மற்றும் படிக்கட்டு பகுதிகள், அழுத்த சுழல் தண்டு (பிரஷரைஸ்ட் சாப்ட்) நிலைக்குத்து திறப்பு அமைப்பு, ஒதுக்கிட (புகலிடப்) பகுதி, இயல்பான காற்றோட்ட அமைப்பு, தீ அணைப்பான்கள், தானியங்கி நீர் தெளிப்பான், தீ எச்சரிக்கை அழைப்புப் புள்ளி (கால் பாயிண்ட்), முதலுதவி மற்றும் தீ அணைக்கும் உபகரணங்கள் கொண்டு ஒப்பிட்டு பாதுகாப்பு பகுதி வடிவமைக்கப்பட வேண்டும்.
நமது நாட்டில் தீ விபத்தை தவிர்ப்பதற்கும் தீ தொடர்பான அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் அதிலிருந்து மனித உயிர்களைக் காப்பதற்கும் முறையான விதிமுறைகள் இருந்தாலும் தொடர் கண்காணிப்பு இல்லாத காரணத்தால் அங்கொன்றும் இங்கொன்றுமாக தீ விபத்துகள் நிகழ்கின்றன. லஞ்சம் பெறப்பட்டு முறையான ஆய்வின்றி வழங்கப்படும் தடையில்லா சான்றிதழ்களாலும், சரியாக தணிக்கை செய்யப்படாமல் வழங்கப்படும் தர அங்கீகாரத்தாலும் தீ விபத்துகள் நிகழலாம்.
அதேசமயம் தடையில்லா சான்றிதழுக்கான ஆய்வு நடக்கும் நாள் அல்லது அங்கீகாரத்துக்கான தணிக்கை நாள் மட்டுமே ஏற்பாடு செய்யப்படும் போலியான தீ பாதுகாப்பு அமைப்புகளாலும் தவறுகள் நிகழலாம்.
தீ தடுப்பு கட்டுமானம், தீ கண்டறிதல் மற்றும் தீ தடுப்பு அமைப்புகள், மருத்துவமனை ஊழியர்களுக்கான தீ தடுப்பு பயிற்சிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீ விபத்துகளைத் தடுக்கும். தீ விபத்துகளால் மனித உயிர்களை நாம் இழக்க நேரிடாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.