
சமுதாயத்திலும் அரசியலிலும் உள்ள அவலங்களையும் அலங்கோலங்களையும் பார்த்துப் பார்த்து ஒருவித சலிப்பில் நம்பிக்கை இழந்தவர்களாக பெரும்பான்மை மக்கள் பேசுவதைத்தான் கேட்டு வருகிறோம். அதே நேரத்தில் மறுபக்கத்தில் நமக்கு நம்பிக்கை தரக்கூடிய வகையில் களத்தில் நின்று புறக்கணிக்கப்பட்ட மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண, எண்ணிலடங்கா இளைஞர்கள் செயல்படுவதை நம்மால் காணமுடிகிறது. நம்பிக்கை தரக்கூடிய நற்செயல்பாடுகள் நடக்கக்கூடிய இடங்கள் அனைத்தும் புறக்கணிப்புக்குள்ளான இடங்கள். எனவே, நாம் அங்கு சென்று பார்த்தால்தான் அந்த இளைஞர்களின் செயல்பாடுகளில் உள்ள பொறுப்பையும், தியாகத்தையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் எப்படி நாட்டு விடுதலைக்கு தியாகம் செய்து போராடினார்களோ அதேபோல் இவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் யாருடைய பார்வையும் படாமல், அங்கீகாரத்துக்கு காத்திருக்காமல் அரசால் நிராகரிக்கப்பட்டவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள், அரசாங்கத்தால் தொடமுடியாத மக்களைத் தொட்டு அவர்களுடைய பிரச்னை என்னுடையது என்று பொறுப்பேற்று செயல்படும் இளைஞர்களை பார்க்கும்போது, நமக்கு நம்பிக்கை பிறக்கிறது. அவர்களுடன் உரையாடும்போதுதான் அவர்கள் இன்று செயல்படுவது "புதிய கனவில்', "புதிய நம்பிக்கையில்' என்பது தெரிகிறது.
இவர்கள் அனைவரும் எதிர்காலத்துக்கான ஒரு மாபெரும் கனவில் செயல்படுவதை நம்மால் காணமுடியும். பொதுவாக, எந்த மனிதர்கள் தேங்குவார்கள் என்றால் மனித சுழற்சியின் வேகம் அறியாமல், மாற்றத்தின் வேகம் அறியாமல் மாற்றத்துடன் பயணிக்க மறுத்து தொடங்கிய இடத்தில் நின்று, வாழும் சூழலில் நிகழ்கின்ற எதிர்மறைச் செயல்களைப் பார்த்துப் பார்த்து நம்பிக்கை இழப்பவர்கள்தான். சாதனை மனிதர்கள் தேங்க மாட்டார்கள், திணற மாட்டார்கள், சமூக சுழற்சியின் திசையும் வேகமும் அறிந்து, தன் இலக்கை குறிக்கோளை காலநிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டு தனக்கென உயர் சிந்தனைச் சூழலை உருவாக்கி செயலில் கரைவோர் அஞ்சாமல் கூச்சமற்று சவால்களைச் சமாளித்து அடுத்த காலத்துக்குச் சென்றுவிடுவர்.
இது ஒரு கோட்பாடு; இதை இவர்களிடம் காணமுடிகிறது. பொதுவான விதி அடிப்படையில் சமுதாயம் விடுதலை அடைந்ததற்குக் காரணம், ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவாக இணைந்து அடுத்த எதிர்காலம் பற்றி யோசித்துச் செயல்பட்டதால்தான்; அடிமை வாழ்வுக்கு எது எதிர்காலம் என்றால் விடுதலை பெறுவதுதான்; முடியாட்சியில் வாழ்ந்த மக்களுக்கு எது எதிர்காலம் என்றால் மக்களாட்சிதான்.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் எது கனவாக இருந்தது? விடுதலை அடைவதுதான். அந்தக் கனவுதான் பலரைத் தியாகத்திற்குத் தூண்டியது. நாடு விடுதலை அடைந்தவுடன் அடுத்த எதிர்காலம் என்பது, நாட்டை உருவாக்குவது நாட்டைக் கட்டமைப்பது. அடுத்த எதிர்காலம் வறுமையையும் அறியாமையையும் போக்குவது, வளர்ச்சிக்கான கட்டமைப்புக்களை உருவாக்குவது ; அடுத்து எது கனவாக உருவானது? மக்களின் மேம்பாடு ; அதை நோக்கி நாட்டின் செயல்பாடுகளை அரசு நகர்த்தியது. அடுத்த நிலை வரும்போது நாட்டின் கெüரவம், வல்லரசாக மாறுவது, பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிட்ட இடத்தைப் பிடிப்பது; இப்படி தேசம் நகர்கின்றபோது அதைப் புரிந்துகொண்டு அதில் பயணிப்பவர்கள் நன்மைகளைப் பெற்று விடுகின்றனர்.
இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தியவர்கள் இந்தியாவில் 40% மக்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால், 60% மக்கள் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்த இயலவில்லை அல்லது இந்த வாய்ப்புகளைப் பற்றிப் பிடிக்கத் தெரியவில்லை. இதற்குக் காரணம், அவர்களை இந்த அரசு தன்னம்பிக்கை இழந்து பயனாளியாக இருக்கப் பழக்கப்படுத்திவிட்டது. இந்தச் சூழலை வைத்து ஒரு அரசியலைக் கட்டமைக்க முடிந்ததே தவிர பிரச்னைகளைத் தீர்க்க இயலவில்லை. இன்று இந்த இடத்தில் நாம் சந்திக்கின்ற பிரச்னைகளை மனதில் ஏற்றி நம்மை சாதாரண சிந்தனைச் சூழலில் சிக்கவைத்து விட்டதன் விளைவுதான் திக்கித் திகைத்து என்ன செய்வது என்று அறியாது பலர் சோர்ந்து நிற்கின்றனர்.
களத்தில் மக்களுடன் நின்று செயல்படும் மனிதர்களை இந்தச் சூழல் தாக்கவில்லை. காரணம், அவர்கள் இன்றுள்ள பிரச்னைகள் அனை த்தும் தற்காலிகமானவை, அவை கடந்து போய்விடும் என்பதை அறிந்து அதைக் கண்டுகொள்ளாமல் எதிர்காலம் பற்றிச் சிந்திக்கும்போது இவர்களுக்குப் புது உத்வேகமும், தெளிவும், சக்தியும் பிறந்து அவர்களை இயக்குகிறது. இவர்களிடம் அச்சமில்லை, கூச்சமில்லை, எளிய வாழ்வைக் கட்டமைத்துக் கொண்டு செயல்படுகின்றனர்.
இன்றைய அரசியல் சமுதாயப் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணத் துடிப்பவர்கள் இளைஞர்களிடம் நம்பிக்கை ஒளியைப் பெற முடியும். காரணம், இன்று வளர்ந்துள்ள அறிவியலையும், தொழில்நுட்பத்தையும், பொருளாதாரத்தையும் எதிர்காலத்தைக் கட்டமைப் பதில் பயன்படுத்த இவர்கள் திட்டமிடுகிறார்கள்.
சந்திக்கும் சவால்களைக் கண்டு அஞ்சாமல் அவற்றை மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண எப்படிப் பயன்படுத்த முடியும் என சிந்தித்து அதற்குத் தகுந்தவாறு செயல்பாடுகளைத் தகவமைத்துக் கொள்கின்றனர். இதில் மிக முக்கியமானது, இப்படிச் செயல்படும் இளைஞர்கள் நம்புவது மக்களைத்தான். மக்களுடன் பணி செய்யும்போது மக்களை பொறுப்பேற்க வைத்து அவர்களுடன் செயல்படுவதுதான் மனிதத்துவத்தை உருவாக்கும் செயல்பாடாக நாம் பார்க்கிறோம்.
இவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. ஒன்று, இன்றைய பிரச்னைகளைப் பற்றி விவாதிக்காமல் புதிய எதிர்காலத்துக்காக திட்டமிட்டுச் செயல்படுவதுதான் இவர்களின் தனித்தன்மை. இயற்கையைப் பாழ்படுத்தாது மனிதகுல அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும், ஆழ்ந்த நம்பிக்கையை மனிதர்கள் மீது வைத்து சிறிய சிறிய செயல்களைத் தொடர்ந்து மக்களுடன் இணைந்து செயல்பட்டு மலைக்க வைக்கும் மாபெரும் மாற்றங்களை ஓசையின்றி செய்து வருகின்றனர். இன்றைய ஆடம்பர, அறமற்ற, சுயநல வாழ்க்கையைப் புறக்கணித்து, மக்கள் பிரச்னைகளுக்கு நேர்மறையாகச் செயல்பட்டு தீர்வு கண்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்று வருகின்றனர்.
அடுத்து அவர்கள் செய்யும் செயல்பாடுகளில் புதுமைகளைப் புகுத்திக் கொண்டே செயல்படுவது என்பது மக்களை ஈர்க்கும் ஒரு சிறப்புச் செயல்பாடு. காந்தி எப்படி அகிம்சை வழியில் விடுதலையைப் பெற புதுமை புகுத்தினாரோ, உப்பு சத்தியாகிரகம் செய்து உலகை ஈர்த்தாரோ, அதேபோல் மக்களுடன் இணைந்து சமுதாயச் செயல்பாடுகளில் புதுமைகளைக் கொண்டுவந்துள்ளனர். இதன் மூலம் சாதாரண மக்களிடம் இருக்கும் அறிவு, ஆற்றல், சக்தி, ஞானம் அனைத்தையும் வெளிக்கொண்டு வருகின்றனர்.
இந்தச் செயல்பாடுகளையெல்லாம் நிறுவனங்களை உருவாக்கிக் கொண்டு செயல்படாமல், மக்களை ஒருங்கிணைத்துச் செயல்பாட்டில் நிலைத்து சமுதாயமாக செயல்பட்டுக் கொண்டிருப்பது எது மாதிரியும் இல்லாத புதுமாதிரி. இவர்களின் செயல்பாடுகள் அனைத்துக்கும் ஒரு பின்புலத்தை உருவாக்கி வைத்துக் கொண்டுள்ளனர்.
இன்றைய இந்தியா விவேகானந்தர், அரவிந்தர், மகாத்மா காந்தி, குமரப்பா, வினோபா பாவே, ஜெயப்பிரகாஷ் நாராயண் போன்றோர் கண்ட இந்தியத்துவ மரபினைக் கொண்ட இந்தியாவும் அல்ல; பண்டித நேரு, படேல், அம்பேத்கர் உருவாக்க எண்ணிய மேற்கத்திய முறை மக்களாட்சி உருவாக்கும் சமத்துவ, சமநீதி, சம வாய்ப்பு, தனிமனித உரிமைகள் கொண்ட இந்தியாவும் அல்ல; இன்று நாம் பார்ப்பது சுயநலம் பேணும் சுரண்டல் வாழ்வை மையப்படுத்திய சுகபோக வாழ்க்கை வாழ ஆசை காட்டும் ஒரு அலங்கோல இந்தியா.
இந்த இளைஞர்கள் நம் முன்னோர் கண்ட கனவு இந்தியாவை உருவாக்க, ஒரு லட்சிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற இலக்கோடு செயல்பட்டு வருவதை நம்மால் உணர முடிகிறது. இவர்கள் இந்திய கலாசாரத்தின் மூலத்தைத் தேடுகிறார்கள். அது நீர் நிலைகளை புனரமைப்பதிலும் சரி, கல்வியைச் சரிசெய்வதிலும் சரி, கிராமங்களை புனரமைப்பதிலும் சரி, இயற்கை வளத்தைப் பாதுகாப்பதிலும் சரி விவசாயத்தை மீட்டெடுப்பதிலும் சரி, அனைத்திலும் இந்தியத்துவத்தை தேடுகின்றனர். அவற்றைக் கொண்டுவந்து செயல்பாட்டை வடிவமைத்துச் செயல்படுகின்றனர்.
இந்தப் பணிகளையெல்லாம் ஆய்வுக்கு உட்படுத்தி தெளிவு பெற்ற பிறகே செயலில் இறங்குகின்றனர்.
இவர்கள் அரசாங்கத்தையோ, நிதியையோ, பெரிய கட்டமைப்பையோ பின்புலத்தில் வைத்துச் செயல்படவில்லை. மாறாக, தங்களின் ஆன்மபலத்தில் தங்கள் செயல்பாடுகளைக் கட்டமைத்துக் கொண்டு செயல்படுகின்றனர். இதேபோன்று " நான் சுதந்திரப் போராட்டக் காலத்தில் பிறக்கவில்லையே ' என்று ஏங்குவோருக்கு, "வாருங்கள் செயல்படுவோம்' என மக்களைச் செயல்பாட்டுக்கு இணைக்கும் எண்ணற்றவர்களைக் களத்தில் இறக்குகிறார்கள்.
இதைச் சாத்தியப்படுத்தியதற்குக் காரணம், இவர்களின் வெற்றிப் பயணத்தையும் உயர்ந்த லட்சியத்தையும் மற்றவர்களை ஈர்க்கும் வகையில் தகவல் தெரிவிக்கும் பாங்கு . இவை ஒரு மக்கள் தயாரிப்புப் பணி. இந்தப் பணிகள் மூலம் புதிய பாரதத்தை உருவாக்க நற்சமுதாயத்தைக் கட்டமைக்கும் பணியைத்தான் செய்கின்றனர். நமது அடுத்த எதிர்காலம் என்ற கனவை ஓர் உணர்வாக உருவாக்கிச் செயல்படுகின்றனர் புதிய லட்சிய உலகுக்கான இளைஞர்கள். புதிய கனவில் செயல்படும் இவர்கள்தான் நமக்கு நம்பிக்கை அளிக்கிறார்கள்.
கட்டுரையாளர்:
பேராசிரியர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.