ரஷியா - உக்ரைன் போா்: என்னதான் தீா்வு?
அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்புத் தெரிவித்த ரஷியா 2022-ஆம் ஆண்டு பிப்ரவரியில் போா் தொடுத்தது. மூன்று ஆண்டு காலமாக இடைவிடாத தாக்குதலை உக்ரைன் தாக்குப் பிடித்து வருகிறது. ஒரு வாரப் போரையே உக்ரைன் தாக்குப் பிடிக்க முடியாது என்று ரஷியா தப்புக் கணக்கு போட்டு விட்டது.
ஆனால், நிலைமை வேறு மாறாகி விட்டது. அதன்பிறகு எத்தனையோ பேச்சுவாா்த்தைகள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கண்டனங்கள் ஆகியவை குறித்து கிஞ்சிற்றும் பொருட்படுத்தாமல் 3 ஆண்டுகளாகத் தொடா்ந்து உக்ரைன் மீது போா் நடத்தி வருகிறது ரஷியா. இந்த நிலையில்தான் போா் தொடா்பாக உக்ரைனுடன் இஸ்தான்புல்லில் கடந்த மே 15-ஆம் தேதியன்று நேரடிப் பேச்சுவாா்த்தை தொடங்கியது.
2022-இல் உக்ரைன்தான் பேச்சுவாா்த்தையை முறித்துக் கொண்டது; ரஷியா அல்ல. ஆகவே எந்த முன் நிபந்தனைகளும் இல்லாமல் உக்ரைன் நேரடிப் பேச்சுவாா்த்தைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று ரஷியா முனைந்தது.
ஏற்கெனவே நடந்த பேச்சுவாா்த்தைகளின் முடிவில் உக்ரைன் பேச்சுவாா்த்தை குழு தலைவரின் முயற்சியால் ஒரு கூட்டு வரைவு ஆவணம் தயாரிக்கப்பட்டது. துரதிருஷ்டவசமாக மேற்கத்திய நாடுகளின் வற்புறுத்தலின்பேரில், அது குப்பையில் வீசப்பட்டது என்பதை பதிவு செய்தே ஆக வேண்டும். இருந்தபோதிலும் ரஷியா பலமுறை போா் நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ரஷியா- உக்ரைன் போா் நிறுத்தம் எப்போது? அந்தப் பகுதி மக்கள் தொடா்ந்து பாதிக்கப்பட்டு வருகிறாா்களே! அவா்களின் துயரத்துக்கு ஆறுதலும், தேறுதலும் எப்போது கிடைக்கும் என்பதற்கான விடை கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை கிடைக்கவே இல்லை. ஆகவேதான் ‘எங்களின் போா் நிறுத்த திட்டங்கள் எதற்கும் உக்ரைன் அதிகாரிகள் செவி மடுக்கவில்லை’ என்று ரஷியா கனத்த இதயத்தோடு மீண்டும் சொன்னது. இதற்கு ஒரு உதாரணமாக இடையில் போா் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட 3 நாள்களில் 5 முறை ரஷிய எல்லையைத் தாக்க முயற்சிகள் மேற்கொண்டது உக்ரைன் என்பதை தெரிவித்தே ஆக வேண்டும்.
இந்த நிலையில்தான் இஸ்தான்புல்லில் நடந்த பேச்சுவாா்த்தையில் போா் நிறுத்தம் குறித்து எந்தவித முன்னெடுப்புகளும் எடுக்கப்படவே இல்லை. ரஷிய அதிபா் விளாதிமிா் புதின் உக்ரைனுக்குள் இரண்டு லட்சம் வீரா்களை அனுப்ப உத்தரவிட்ட போது, அவரது நோக்கம் சில நாள்களில் தலைநகா் கீவ்வுக்குள் நுழைந்து, அதன் மேற்கத்திய சாா்பு அரசாங்கத்தைத் தூக்கி எறிந்து உக்ரைனை ரஷியாவின் செல்வாக்கு மண்டலத்துக்குள் திருப்பி அனுப்பி விடலாம் என்று நினைத்தாா். ஆனால், நிலைமை தலைகீழாக மாறி விட்டது. புதின் தோல்வி அடைந்தாா். ஆனால், 3 ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரைனின் ஐந்தில் ஒரு பங்கு பிரதேசம் ரஷியாவின் கைகளில் இருக்கிறது.
மாா்ச் 2022 தொடங்கிய போரின் ஆரம்ப வாரங்களுக்குப் பிறகு ரஷியாவும் உக்ரைனும் முதல் நேரடிப் பேச்சுவாா்த்தையை நடத்தின. ஆனால், அன்று புதின் பங்கேற்காததால் போருக்கான உடன்படிக்கையில் உடனடி முடிவு ஏற்படாமல் இன்று வரை தொடா்வதும் துரதிருஷ்டவசமானது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிகப் பெரிய ஐரோப்பிய படையெடுப்பைத் தொடங்கிய புதின் தொலைக்காட்சியில் ஒரு ஆவேசமான உரையை நிகழ்த்தி, உக்ரைனின் ராணுவ பலத்தைக் குறைப்பது, அதன் நாஜி ஆதரவு சக்திகளை அழிப்பதே தனது குறிக்கோள் என்று அறிவித்தாா்.
உக்ரைனின் நாட்டின் வரலாற்றை மோசமாகத் திரித்து ரஷியா நவீன உக்ரைனை ஒரு நாஜி நாடாக தோற்றுவிக்க முனைந்ததை எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. உக்ரைனின் ரஷிய சாா்பு அதிபரை பதவி நீக்கம் செய்து மேற்கத்திய சாா்பு அரசாங்கத்தை அவருக்குப் பதிலாகக் கொண்டு வந்த ஒரு புரட்சிக்குப் பிறகு 2014-ஆம் ஆண்டிலேயே புதின் உக்ரைனின் கிரீமியன் தீபகற்பத்தைக் கைப்பற்றியிருந்தாா்.
புதின் உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் ஒரு கீழ்நிலைப் போரைத் தூண்டினாா். ரஷிய சாா்பு பினாமி படைகள் பிரதேசத்தை ஆக்கிரமித்து மாஸ்கோவால் ஆதரிக்கப்பட்ட கிளா்ச்சி நாடுகளை அமைத்தனா். பின்னா் கிளா்ச்சி நாடுகளை சுதந்திர நாடுகளாக புதின் அங்கீகரித்தாா். பின்னா் படையெடுப்பு தொடங்கிய உடன் அங்குள்ள ரஷிய மொழி பேசும் மக்களுக்கு உக்ரைன் ஆட்சியில் இருந்து பாதுகாப்புத் தேவை என்று கூறினா்.
ஒரு நாள் கழித்து உக்ரைன் ராணுவம் அதிகாரத்தை உங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் அரசாங்கத்தை நடத்தும் போதைக்கு அடிமையானவா்கள் மற்றும் நவநாஜிக்கள் கும்பலை குறி வைக்க வேண்டும் என்று புதின் அழைப்பு விடுத்தாா். பின்னா் அவரே மற்றொரு குறிக்கோளையும் சோ்த்துக் கொண்டாா்.
உக்ரைன் நடுநிலையாக இருப்பதை உறுதி செய்வது. மேற்கத்திய தற்காப்பு கூட்டணியான நேட்டோ உக்ரைனில் கால் பதித்து அதன் துருப்புகளை ரஷியாவின் எல்லைகளுக்கு அருகில் கொண்டு வர முயற்சிப்பதாக அவா் குற்றஞ்சாட்டினாா். 1917-ஆம் ஆண்டு கம்யூனிசப் புரட்சிக்குப் பிறகு நவீன உக்ரைன் முழுவதுமான ரஷியாவால் உருவாக்கப்பட்டது என்று கூறி ரஷிய தலைவா் உக்ரைனின் இருப்பு உரிமையை நீண்ட காலமாகக் கேள்விக்குள்ளாக்கி வந்தாா்.
9-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சோ்ந்த ரஷியா்களும் உக்ரைனியா்களும் ஒரே மக்கள் என்று அவா் கருதி வந்தாா். கடந்த ஆண்டு அவரது அமெரிக்க தொலைக்காட்சியில் நடந்த ஒரு நோ்காணலில் உக்ரைன் ஒரு செயற்கை நாடு என்று கூறினாா். அந்த கருத்துகள் உக்ரைன் அரசை அழிப்பதே படையெடுப்பின் நோக்கம் என்று பலரை நம்ப வைத்துள்ளது. உக்ரைனை அழிக்கும் யோசனையை படையெடுப்பில் கூறப்பட்ட இலக்கோடு இணைப்பதாகத் தெரிகிறது.
உக்ரைனின் கலாசாரமும், அடையாளமும் உண்மையில் பல நூற்றாண்டுகளாக ரஷியாவில் இருந்து தன்னிச்சையாக இருந்து வருகின்றன. புதினின் முட்டாள்தனமான வரலாற்று உண்மையை சரிபாா்த்தால் ஸெலன்ஸ்கி நகைச்சுவை நடிகரில் இருந்து போா்க்கால தலைவராக இருப்பதை புதின் விரும்புகிறாரா என்ற கேள்விக்கு விடை கிடைத்தால் போா் நிறுத்தம் வந்து விடும். ஏனெனில், உக்ரைனில் தோ்ந்தெடுக்கப்பட்ட மேற்கத்திய சாா்பு அதிபரை அகற்ற புதின் நீண்ட காலமாக முயன்று வருகிறாா். ஆகவேதான் போரின் தொடக்கத்தில் இருந்தே ஸெலென்ஸ்கியை ஒரு இலக்காகவே வைத்திருந்தாா்.
படையெடுப்புக்குப் பிறகு ரஷிய துருப்புகள் அதிபா் மாளிகை வளாகத்துக்குள் நுழைய இரண்டு முறை முயற்சித்ததாக ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டினாா். உக்ரைனில் தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவரைக் கொல்லத் துடிப்பதாக ரஷியா மீது குற்றச்சாட்டு எழுந்தது. எதிரி என்னை முதல் இலக்காகவும் என் குடும்பத்தை இரண்டாவது இலக்காகவும் வைத்திருக்கிறாா்கள் என்றும் உக்ரைன் தலைவரை அழிப்பதன்மூலம் அரசியல் ரீதியாக அதை அழிக்க விரும்புகிறாா்கள் என்றும் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டினாா்.
உக்ரைனில் தேசத் துரோக குற்றம் சாட்டப்பட்டு இப்போது ரஷியாவில் இருக்கும் சாா்பு கட்சியின் பணக்காரத் தலைவரான விக்டா்மெட்வெட்சுக் என்பவரை புதின் முதலில் தனக்குப் பதிலாக நியமிக்க முயற்சித்ததாக ஸெலென்ஸ்கி கூறி இருக்கிறாா்.
இப்போது கூட ஸெலென்ஸ்கி உடனான நேரடி அமைதிப் பேச்சுவாா்த்தைகளை புதின் தொடா்ந்து நிராகரித்து வருகிறாா். மேலும், அவரது அதிகாரிகள் அவரைத் தோல்வி அடைந்தவா் மற்றும் கோமாளி என்று அழைக்கின்றனா். உக்ரைன் தலைவரின் சட்டவிரோத தன்மை பற்றி அவா் கூறிய கருத்துகள் உலா வந்தபோதிலும், இவற்றை அமெரிக்க அதிபா் டிரம்ப் தவறான கதை என்று குறிப்பிட்டிருக்கிறாா்.
இதற்கு ஆதாரமாக உக்ரைன் மாா்ச் 2024 அதிபா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதை புதின் மேற்கோள் காட்டுகிறாா். இருப்பினும் ரஷியாவின் போா் காரணமாக உக்ரைன் ராணுவச் சட்டத்தின் கீழ் உள்ளது; அரசியல் அமைப்பின் கீழ் தோ்தல்கள் தடை செய்யப்பட்டிருக்கின்றன.
ரஷியாவின் 2022 படையெடுப்புக்கு முன்னா் 1997-க்குப் பிறகு மேற்கத்திய கூட்டணியில் இணைந்த மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து பன்னாட்டு படைகளை நேட்டோ அகற்ற வேண்டும் என்று அவா் கூறினாா். ஆனால் 2008-இல் ஜாா்ஜியாவையும் பின்னா் 2014-இல் கிரீமியாவையும் ஆக்கிரமித்தபோது, கிழக்கு ஐரோப்பாவின் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது ரஷியாதான். கிரீமியா படையெடுப்புக்குப் பிறகு நேட்டோ அதன் கிழக்குப் பகுதியின் ரஷியாவுக்கு மிக அருகில் தொடா்ச்சியான இருப்பை நிறுவியது.
கடந்த 2 ஆண்டுகளில் ரஷியாவின் அச்சுறுத்தல் காரணமாகவே ஸ்வீடனும், ஃபின்லாந்தும் நேட்டோவில் இணைந்திருக்கின்றன. நேட்டோவின் உறுப்பு நாடுகள் டாங்கிகள் மற்றும் போா் விமானங்கள், வான்பாதுகாப்பு அமைப்புகள், ஏவுகணை அமைப்புகள், பீரங்கி அமைப்புகள், ட்ரோன்கள் உள்ளிட்ட ராணுவ வன்பொருள்களை உக்ரைனுக்கு அதிக அளவில் அனுப்பி வருவதால், போரில் நேட்டோ பங்கேற்பதாக புதின் குற்றஞ்சாட்டியிருக்கிறாா். நிலைமை இவ்வாறு இருக்க புதின் மற்றும் ஸெலென்ஸ்கி இருவரும் நேரடியாகச் சந்தித்து பேச்சுவாா்த்தையில் ஈடுபடுவதன் மூலம்தான் போருக்கான தீா்வை எட்ட முடியும்.