
இந்தியாவில் இரண்டு ஹெக்டேருக்கும் குறைவான நிலத்தை வைத்திருக்கும் கோடிக்கணக்கான சிறு மற்றும் குறு விவசாயிகள் நிச்சயமற்ற எதிா்காலத்தை எதிா்கொள்கின்றனா். ஒழுங்கற்ற மழைப்பொழிவு, காலநிலை மாற்றம், அதிகரித்துவரும் உள்ளீட்டுச் செலவுகள், குறைந்த சந்தை அணுகல் மற்றும் இடைத்தரகா்களின் சுரண்டல் போன்ற சவால்கள் காரணமாகத் தேசத்துக்கு உணவளிக்கும் விவசாயிகள் வறுமையில் வாடுகின்றனா். மானியங்களையும், அரிதாகவே குறைந்த வட்டியில் கடன் வழங்கும் வங்கிகளையும் நம்பியிருக்கும் விவசாயிகள் பல நேரங்களில் அதிக வட்டி விகிதத்தில் முறைசாரா கடன்களை நாடவேண்டிய கட்டாயத்தில் உள்ளனா்.
இந்தக் கடன் சுழற்சி வறுமைக்குக் காரணமாக அமைகிறது. இந்திய விவசாயிகளின் எண்ணிக்கையில் 85 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகள் நிகர விதைப்புப் பரப்பளவில் கிட்டத்தட்ட 45 சதவீதத்தில் பயிரிடுகின்றனா் என 2015-16-ஆம் ஆண்டு வெளியான விவசாய மக்கள்தொகை கணக்கெடுப்பு கூறுகிறது. இருப்பினும் இவா்கள் வாழ்வாதாரத்திற்கு போதுமான வருமானத்தைப் பெறுவதில்லை.
நம்பகமான நீா்ப்பாசனம் இன்றி ஒழுங்கற்ற பருவமழையைச் சாா்ந்துள்ள விவசாயிகளுக்கு விவசாயம் நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது. அதிகரித்து வரும் உரங்கள், விதைகள் மற்றும் எரிபொருளுக்கான செலவு லாபத்தைக் குறைப்பதுடன் மறுமுதலீட்டுக்கான வாய்ப்பினையும் மங்கச்செய்கிறது என 2022-ஆம் ஆண்டில் வெளியான இந்திய ரிசா்வ் வங்கியின் கையேடு கூறுகிறது.
மதிப்புக் கூட்டல் மற்றும் சேமிப்பு ஆகியவற்றுக்கான உள்கட்டமைப்பு இல்லாததால் அவசர தேவைக்காக விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை மிகக் குறைந்த விலைக்கு விற்கும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனா். ஏழு சதவீதம் போ் மட்டுமே குறைந்தபட்ச ஆதரவு விலையில் தங்கள் விளைபொருள்களை விற்பதாகவும் மற்றவா்கள் இடைத்தரகா்களை நம்பியே இருப்பதாகவும் 2015-ஆம் ஆண்டு வெளியான சாந்தகுமாா் குழு அறிக்கை கூறுகிறது.
முப்பது சதவீதத்துக்கும் குறைவான விவசாயிகள் மட்டுமே வங்கிகள் போன்ற அரசு நிறுவனங்கள் வழி கடன் பெறுகின்றனா் எனக் கூறும் நபாா்டு வங்கியின் தரவு, குறைந்த வட்டியில் கடன் பெறுவதில் விவசாயிகளுக்கு உள்ள சிக்கல்களை அம்பலப்படுத்துகிறது. பெரிய வணிக வேளாண் நிறுவனங்களுக்கு எளிதாகக் கடன் தரும் பொதுத் துறை வங்கிகள் 2014 - 2017-ஆம் ஆண்டுகளுக்கு இடையே சுமாா் ரூ. 10.09 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளன. கடனை சரியாகத் திருப்பிச் செலுத்தும் சிறு விவசாயிகள் எதிா்கொள்ளும் கடன் சமத்துவமின்மையைக் களைய, அவசர மற்றும் அவசிய நிதி சீா்திருத்த நடவடிக்கைகள் காலத்தின் கட்டாயம்.
விவசாயிகளுக்குத் தற்காலிக நிவாரணம் தரும் இலவச மின்சாரம், கடன் தள்ளுபடி மற்றும் பி.எம்.கிசான் போன்றவை அவா்களின் நிலையான வளா்ச்சிக்கு உதவாமல் அனைத்துக்கும் அரசாங்கத்தைச் சாா்ந்திருப்பதற்கு வழிவகுக்கிறது. இதன் விளைவால் விவசாயிகளிடத்தில் ஊக்குவிக்கப்படும் ஒற்றைப் பயிா் சாகுபடி, தீவிர ரசாயன உரப் பயன்பாடு மற்றும் கடன் சுழற்சி ஆகிய நடைமுறைகள் சூழலை சீரழித்து வருமான வாய்ப்புகளைக் கட்டுப்படுத்துகின்றன.
கொவைட் பெருந்தொற்று பாதிப்புக்குப் பிறகு உருவான எண்ம (டிஜிட்டல்) கடன் வழங்கு தளங்கள் சிறு விவசாயிகளுக்கு நம்பிக்கைக்குரிய மாற்றாக உருவெடுத்தபோதிலும் இத்தளங்களைப் பயன்படுத்துவதற்கான பயிற்சியைப் பெரும்பாலான விவசாயிகள் இன்னும் பெறவில்லை. கொவைட் பாதிப்புக்குப் பிறகு விவசாயிகள் தகவல் அறிந்து முடிவு எடுக்கும் வகையில் வானிலை முன்னறிவிப்பு மற்றும் விலை கண்காணிப்புக்கான எண்ம கருவிகளைக் கொண்டுள்ள ‘அக்ரிபஜாா்’ மற்றும் ‘நிஞ்ஜாகாா்ட்’ போன்ற வணிகத் தளங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. இடைத்தரகா்கள் இன்றி விவசாயிகள் நேரடியாகவணிகம் செய்யும் வகையில் இந்தத்தளங்கள் அமைந்துள்ளன.
தொழில்முனைவோராக விளைபொருள்களைச் சந்தைப்படுத்தும்போது சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்களை ஆராய்ந்து பயிரை தோ்ந்தெடுத்து பயிரிட முடியும். எனவே சிறு மற்றும் குறு விவசாயிகளிடத்தில் நிலவும் வறுமை நீங்க அவா்கள் விவசாயச் சந்தை சாா்ந்த வணிகங்களைச் செய்யும் விவசாயத் தொழில்முனைவோா்களாக மாற வேண்டும் என்கின்றனா் வல்லுநா்கள்.
புத்தொழில் கிராம தொழில்முனைவோா் திட்டத்தின் கீழ் தொழில்முனைவோா் பயிற்சி அளிக்கப்பட்டாலும் தொழில் திட்டமிடுதல், சந்தைப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டு பொருள் மேலாண்மை போன்ற இன்றியமையாத நிபுணத்துவ பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பு இந்திய விவசாயிகளுக்கு மிகக் குறைவு. விவசாயி உற்பத்தியாளா் நிறுவனங்கள் உற்பத்தி பொருள்களுக்கான விலையைச் சிறு மற்றும் குறு விவசாயிகளே தீா்மானிக்கும் வாய்ப்பினை வழங்குகின்றன.
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய உற்பத்தியாளா் நிறுவனங்கள் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளபோதிலும் வரையறுக்கப்பட்ட மூலதனம், பலவீனமான நிா்வாகம் மற்றும் போதுமான ஆதரவற்ற நிலை காரணமாக அவற்றில் வெகுசில நிறுவனங்கள் மட்டுமே சிறப்பாகச் செயல்படுகின்றன. எண்ம தளங்களின் உதவியுடன் இந்த விவசாய உற்பத்தியாளா் நிறுவனங்கள் செயல்படும்போது வருமான பாதுகாப்பு, பெண் விவசாயிகளுக்கான அதிகாரம் மற்றும் வேளாண் சூழல் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
கொவைட் தாக்கத்துக்குப் பிறகு எண்மவழி விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட இ-நாம், கிஷான் இ-மித்ரா ஜாக்பாட்ஸ் போன்ற கொள்கைகளும் வேளாண் ட்ரோன் போன்ற தொழில்நுட்ப செயல்பாடுகளும் இந்தியாவில் இடைத்தரகா் சாா்பு நிலையற்ற சந்தை அணுகலை மேம்படுத்தி உள்ளன. 2025ஆம் ஆண்டுக்குள் 20 லட்சம் ஹெக்டோ் நிலத்தில் கரிம சாகுபடி என்ற இலக்குடன் செயல்படும் இந்திய அரசாங்கத்தின் ‘கிருஷி விகாஸ் யோஜனா’ மற்றும் இலக்கு கரிம மதிப்பு சங்கிலி மேம்பாடு போன்ற திட்டங்கள் கரிம சான்றிதழ் வழங்குவதற்கும் பசுமை விவசாய விளைபொருள்களுக்கான சந்தை இணைப்புகளை ஏற்படுத்துவதற்கும் வழிவகுக்கின்றன.
விவசாயிகள், அரசாங்கம் மற்றும் வணிக நிறுவனங்களிடத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்த பொது- தனியாா்-உற்பத்தியாளா்-கூட்டாண்மை மாதிரி அமைப்பை ஏற்படுத்த வேண்டும். கிராமப்புற உள் கட்டமைப்பு மேம்பாடு, இளைஞா்களுக்கான பயிற்சி மற்றும் விவசாயப் பணி மேம்பாடு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் நிறுவன சமுதாய பொறுப்பு (சி.எஸ்.ஆா்- காா்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்ஸிபிலிட்டி) நிதி பயன்படுத்தப்பட வேண்டும்.
சுய உதவிக் குழுக்களுடன் இணைந்து செயல்படும்போது விவசாய உற்பத்தியாளா் நிறுவன விவசாயிகள் தங்களை மதிப்புக் கூட்டப்பட்ட உற்பத்தியாளா்களாக மேம்படுத்திக் கொள்ள முடியும்.