நீச்சல் பயிற்சி உயிர் காக்கும்!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறார்கள் நீர்நிலைகளில் உயிரிழப்பது அதிகரித்துள்ளது.
நீச்சல் பயிற்சி.
நீச்சல் பயிற்சி.கோப்புப்படம்
Published on
Updated on
2 min read

திருவள்ளூர் வீரராகவர் கோயில் குளம், விழுப்புரம் மாவட்டம், மலட்டாறு ஆகியவற்றில் தலா 3 சிறார்களும், ஒகேனக்கல் காவிரி ஆறு, புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் குளம், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் குளம் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறார்கள் நீர்நிலைகளில் உயிரிழப்பது அதிகரித்துள்ளது.

இவர்களில் சிலர் நீச்சல் தெரியாமலும், தவறி விழுந்தும் மூழ்கியவர்கள். மேலும், சிலர் மூழ்கியவர்களைக் காப்பாற்ற முயன்றவர்கள். சென்னை ஆவடி அருகே கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் விழுந்த சிறுவனைக் காப்பாற்ற முயன்ற தாயும், தங்கையும் உயிரிழந்தனர். இதில் சிறுவன் மீட்கப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவனும் அவரைக் காப்பாற்ற முயன்ற அவரது தாத்தாவும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவங்கள் அனைத்தும் கடந்த மே மாதத்தில் மட்டும் நிகழ்ந்தவை.

இதுபோன்று ஆறு, குளம், ஏரிகளில் மூழ்கிய சிறார்கள் முதல் பெரியவர்கள் வரையில் உயிரிழப்பது அன்றாடம் நிகழ்கிறது. குறிப்பாக, பள்ளி விடுமுறை சமயங்களில் சிறார்கள் அதிக அளவில் நீர் நிலைகளில் உயிரிழப்பது நடக்கிறது. நீரில் மூழ்கிய ஒரு நபரைக் காப்பாற்றும் முயற்சியின்போது இருவர், மூவர் என இறக்கின்றனர். கண்ணெதிரே தண்ணீரில் மூழ்கும் தங்களது சொந்தங்களை மீட்கும் ஆவலில் அவர்களும் மூழ்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது.

இதுபோன்ற நிகழ்வுகளின்போது, போலீஸôர் வழக்குப் பதிவு செய்வதும், அரசு நிவாரண உதவி அளிப்பதும் வழக்கமாக நிகழ்கின்றன. அதே சமயம், இந்த நிகழ்வுகளைத் தடுக்கும் வழிமுறை குறித்தோ, விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தோ அதிகம் சிந்திப்பதில்லை.

சாலை விபத்துகளில் காயமடைந்தவரை எளிதில் மீட்டு சிகிச்சைக்கு அனுப்ப முடியும். ஆனால், நீரில் மூழ்கியவரை மீட்பது சிக்கலானது. நீரின் அபாயம் தெரியாமலோ, நீச்சல் தெரியாமலோ அதில் இறங்குபவரும், நீரில் மூழ்கும் ஒருவரை போதிய பயிற்சி இல்லாமல் காப்பாற்ற முயற்சிப்பவரும் உயிரிழக்கும் வாய்ப்புகள் அதிகம்.

பொதுவாக ஒருவர் நீரில் மூழகிய 3 முதல் 5 நிமிஷங்களில் இறப்பு ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, நீரில் மூழ்கியவரை விரைந்து மீட்பதோடு, உயிர் காக்கும் முதலுதவி அளிக்க வேண்டியது அவசியம்.

தடுப்பு வேலி அமைக்கப்படாத நீர் நிலைகளில் தவறி விழுவது, நீரில் மூழ்கிய ஒருவருக்கு உரிய உயிர்காக்கும் முதலுதவி அளிக்காமல் மருத்துவமனைக்கு கொண்டு செல்வது, நீரில் மூழ்கியவர்களை மீட்கும் திறன் பயிற்சி பெற்றவர்கள் அருகில் இல்லாதிருப்பது போன்றவற்றாலும் மரணங்கள் நிகழ்கின்றன.

உலக அளவில் ஆண்டுக்கு 3 லட்சம் பேர் (ஒரு மணி நேரத்துக்கு 30 பேர்) நீரில் மூழ்கி உயிரிழப்பதாக (2021 ஆண்டு நிலவரம்) உலக சுகாதார நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது. இதில் 90 சதவீதம் குறைந்த பொருளாதாரம் கொண்ட மேற்கு பசிபிக், தென்கிழக்கு ஆசிய நாடுகளில்தான் நிகழ்கின்றன. உயிரிழந்தவர்களில் 24 சதவீதம் பேர் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள்; 19 சதவீதம் பேர் 5 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்கள்.

தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின்படி, இந்தியாவில் ஓராண்டில் நிகழ்ந்த மொத்த விபத்து உயிரிழப்புகளில் 9.1 சதவீதம் (38,503 பேர்) தண்ணீரில் நிகழ்ந்தவை. இதில் மத்திய பிரதேசம் (5,427 பேர்), மகாராஷ்டிரம் (4,728), உத்தரபிரதேசம் (3,007), கர்நாடகம் (2,827), தமிழ்நாடு (2,616) முன்னிலையில் உள்ளன.

இந்த வகை உயிரிழப்புகளைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஜூலை 25-ஆம் தேதியை நீரில் மூழ்குதல் தடுப்பு தினமாக (வேல்டு டிரௌனிங் பிரிவன்ஷன் டே) ஐ.நா. சபை அறிவித்தது. இந்தப் பிரச்னைக்கு 2023-இல் உலக சுகாதார பொதுச் சபையில் வழிமுறைகள் வகுக்கப்பட்டன.

ஒன்று முதல் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் நீர் நிலைகளுக்குள் செல்வதைத் தடுக்க பகல் நேர பாதுகாப்பு மையங்கள் (டே கேர் சென்ட்டர்) அமைப்பது, பள்ளிப் பருவம் முடிவதற்குள் மாணவர்கள் அனைவருக்கும் அடிப்படை நீச்சல், உயிர் காக்கும் திறன் பயிற்சிகள் அளிப்பது, நீர்நிலைகளைச் சுற்றி வேலி அமைப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட 10 அம்சங்கள் இதில் அடங்கும்.

பொருளாதார பலமிக்க நாடுகள் மேற்கண்ட அம்சங்களை நிறைவேற்றி வெற்றி கண்டன. பெரும்பாலான நாடுகள் இவற்றைச் செயல்படுத்துவதில் பின்தங்கியுள்ளன. இந்தியாவில் ராஷ்ட்ரீய லைப் சேவிங் சொசைட்டி (ஆர்.எல்.எஸ்.எஸ்.) என்ற அமைப்பு நீச்சல்,

உயிர் காக்கும் திறன் பயிற்சிகளை அளித்து வருகிறது. இருப்பினும் இது பற்றி போதிய விழிப்புணர்வு இல்லை. எனவே, உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ள முக்கிய பாதுகாப்பு அம்சங்களை செயல்படுத்துவதில் பின் தங்கியே இருக்கிறோம்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சிறார்களுக்கு கோடை கால நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது. நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் வீதம் 12 நாள்கள் அளிக்கப்படும் இந்தப் பயிற்சிக்கு கட்டணமாக ரூ.1,200 செலுத்த வேண்டும். இந்தப் பணம் செலுத்த இயலாத சிறார்கள் நீச்சல் பயிற்சி பெற முடியாமல் போகிறது.

பள்ளிச் சிறுவர்களுக்கு நீச்சல், உயிர் காக்கும் திறன் பயிற்சிகளை அளிப்பது, 1-4 வயது குழந்தைகளுக்கு பகல் நேர பாதுகாப்பு மையங்களை நிறுவுவது ஆகிய இரு அம்சங்கள் செயல்படுத்தப்பட்ட நாடுகளில் பெருமளவு உயிரிழப்பு குறைந்தது உலக சுகாதார நிறுவன ஆய்வில் தெரியவந்துள்ளது.

2050 -ஆம் ஆண்டில் உலக அளவில் நீரில் மூழ்கி உயிரிழப்போர் எண்ணிக்கை 7.74 லட்சம் ஆகவும், உடல் செயலிழப்புக்கு உள்ளாகிறவர்கள் 9.93 லட்சம் பேராகவும் இருக்கக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பாதுகாப்பு அம்சங்களைச் செயல்படுத்தினால், இதில் 2.38 லட்சம் பேர் உயிரிழப்பதையும், 5.49 லட்சம் பேர் உடல் செயலிழப்பதையும் தடுத்து, 435 பில்லியன் டாலர் பொருளாதார இழப்பைத் தடுக்கலாம் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com