கண்ணியக் காவலர் கக்கன்ஜி!

வெள்ளையர் ஆட்சியில் அடிமைப்பட்ட, ஜாதி ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த, இந்தியத் திருநாட்டில் தமிழ்நாட்டின் மதுரை மேலூரை ஒட்டிய சிற்றூர் தும்பைப்பட்டியைத் தனது பிறப்பால் தூய்மைப்பட்டி ஆக்கியவர் கக்கன்ஜி.
கண்ணியக் காவலர் கக்கன்ஜி!
Published on
Updated on
3 min read

வெள்ளையர் ஆட்சியில் அடிமைப்பட்ட, ஜாதி ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த, இந்தியத் திருநாட்டில் தமிழ்நாட்டின் மதுரை மேலூரை ஒட்டிய சிற்றூர் தும்பைப்பட்டியைத் தனது பிறப்பால் தூய்மைப்பட்டி ஆக்கியவர் கக்கன்ஜி.

1909-ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 18-ஆம் நாளில் சிதைந்த மண்சுவர், செல்லரித்த கூரை வீட்டில், பூசாரி கக்கனுக்கும் தாய் குப்பிக்கும் பிறந்த குழந்தை; படிப்பு கைவிட்டாலும், உழைப்பால் உயர்ந்து, விடுதலைப் போராட்டக் களத்துத் தளபதியாக, சிறைத் தண்டனையும் கசையடியும் பெற்று, மக்களவை உறுப்பினராக, தமிழக அரசின் மாண்புமிகு அமைச்சராகத் தொண்டாற்றிய அந்தத் தூயவர். கிறிஸ்தவப் பெண்ணை மணம் முடித்து ஐந்து மகன்களும் ஒரு மகளும் அவருக்கு வாரிசாக வாய்த்தனர்.

வாழ்வில் திருப்பம் - காங்கிரஸ் கட்சிப் பணிகளில் விருப்பம்; தம் வாழ்வின் முன்னோடியாக வரித்துக்கொண்ட தியாகி மதுரை வைத்தியநாத ஐயர் முன்னிலையில் கக்கன் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஆனார். காந்திய வழியில் பொதுத்தொண்டு புரிய விழைந்தார். 1939-ஆம் ஆண்டில் முனைப்பாகச் செயல்பட்டார்.

விடுதலைப் போராட்டம் தீவிரமானபோது "வந்தே மாதரம்' என்று அச்சிட்ட துண்டு அறிக்கைகளை மக்களிடையே வழங்கினார். இதை அறிந்த ஆங்கிலேய அதிகாரிகள் அவரைக் கைது செய்து 15 நாள்கள் சிறைத்தண்டனை விதித்தனர். விடுதலை ஆனதும் கக்கன் முன்னிலும் தீவிரமாகக் கட்சிப் பணியாற்றினார். புதிய இளைஞர்களைக் காங்கிரஸ் இயக்கத்தில் இணைத்தார். இதைக் கேள்விப்பட்ட அண்ணல் காந்தி, கக்கனைத் தனிநபர் சத்தியாகிரகப் போரின் தலைமைத் தளபதியாக நியமித்தார். இதை அறிந்த அரசு அவரைக் கைது செய்து கடுங்காவல் தண்டனை விதித்தது.

கசையடியும், சிறைக் கொடுமையும் அனுபவித்து வெளியே வந்த மறுநாளே, கக்கனுக்கு மதுரை மாவட்ட காங்கிரஸ் பொறுப்பைதலைமை வழங்கியது. வெள்ளையனே வெளியேறு என்ற போராட்டத்தால் நாடெங்கும் கலவரம் மூண்டது. காங்கிரஸ் இயக்கத்தை வெள்ளையர் ஆட்சி தடை செய்தது. ஆனால், தம் நண்பர்கள் பழனிசாமி, ராமசாமி ஆகியோருடன் கக்கன் தலைமறைவானார்.

அவர்கள் இரவு நேரத்தில் கட்சிப் பணிகளைத் தீவிரமாகச் செய்யத் தொடங்கினார். இரவில் மாணவர் விடுதியின் மொட்டை மாடியில் கக்கன்தூங்குவது வழக்கம் என்று அறிந்துகொண்ட போலீஸ் அவரைக் கைது செய்தது; அவரோடு எவரெல்லாம் தலைமறைவாய் உள்ளனர் என்பதை அறிய முயன்றது. கக்கன் தம் நண்பர்களைக் காட்டிக் கொடுக்காமல் ஐந்து நாள்கள் கசையடிக்கு உள்ளானார். ஐந்தாம் நாள் நினைவிழந்தார்.

இந்த நிலையிலேயே கக்கனைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றினர் போலீஸôர். அவர் தந்திக் கம்பிகளை அறுத்தார் என்றும், தபால் பெட்டிக்குத் தீ வைத்தார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டார். விசாரணை ஏதும் இல்லாமலேயே ஆங்கிலேய நீதிபதி கடுங்காவல் தண்டனை விதித்து, ஆந்திரம் - அலிப்பூர் சிறைக்கு அனுப்பினார். 18 மாதக் கடுங்காவல் தண்டனையை ஏற்றுக்கொண்ட கக்கன், 1944 ஜனவரி 15-ஆம் நாள் விடுதலை ஆனார்.

1941-42-இல் கக்கன் மேலூர் மாவட்டக் கழக உறுப்பினர் பதவிக்கு (டிஸ்ட்ரிக்ட் போர்டு மெம்பர்) போட்டியிட்டு எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரைத் தோற்கடித்தார். 1950-இல் இந்தியா குடியரசு நாடாயிற்று. அதை ஒட்டி 1952-இல் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. மதுரை மக்களவை உறுப்பினர் பதவிக்கு கக்கனை இயக்கம் தேர்ந்தெடுத்தது. அந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் ஆனார் கக்கன்.

பெருந்தலைவர் காமராசரை, முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்தது கட்சி. அவர் முதலமைச்சர் ஆனதும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பைத் துறந்தார் காமராசர். கட்சியின் செயற்குழு கக்கனையே தேர்ந்தெடுத்தது. இதை கக்கனின் தொண்டுக்கும், நேர்மைக்கும் கிடைத்த மரியாதை என்று நாடே கொண்டாடியது.

தலைவர் கக்கன் - கக்கன்ஜி ஆனார்; காமராசரின் அன்பில் தோய்ந்த கக்கனை,இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டைநடத்தப் பணித்தது கட்சி.

1955-இல் ஆவடியில் மூன்று நாள்கள் சிறப்பாகக் கக்கனால் நடத்தப்பட்ட மாநாட்டைக் கண்கூடாகக் கண்ட அன்றைய பிரதமர் நேரு, கக்கனை "கக்கன்ஜி' என்று அழைத்தார்; பொதுமக்களும் கட்சியினரும்அவரை "கக்கன்ஜி' என்றே அழைக்கத் தொடங்கினர்.

1957 பொதுத் தேர்தலில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெருந்தலைவர் காமராசர் இரண்டாம் முறையாக முதலமைச்சர் ஆனார். கக்கன்ஜியை அமைச்சராக்கிப் பொதுப்பணித் துறை, அரிசன நலத் துறை ஆகிய துறைகளை முதல்வர் காமராசர் வழங்கினார்.

கக்கன்ஜி அமைச்சர் ஆனவுடன் மேலூர், மதுரைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பயணியர் மாளிகையில் தங்கிய அமைச்சர் கக்கன்ஜி, மாவட்டக் கல்வி அதிகாரியை அழைத்தார். மதுரை மாவட்டத்தில் எத்தனை பள்ளிகள் உள்ளன? எத்தனை கிராமங்களில் பள்ளிகள் இல்லை?என்ற புள்ளி விவரங்களைக் கேட்டறிந்தார். பள்ளி இல்லாத ஒவ்வொரு கிராமத்திலும் ஓராசிரியர் பள்ளியைத் தொடங்க ஆணை வழங்கினார்.

கக்கன்ஜியின் அமைச்சர் பொறுப்பை-பணியைக் கண்ட காமராசர், 1962 பொதுத் தேர்தலில் கக்கன்ஜியைமேலூர் தனித்தொகுதிக்கு வேட்பாளராக்கி வெற்றிபெறச் செய்தார்.

காமராசர் மூன்றாம் முறை முதல்வரானபோது கக்கன்ஜியை அமைச்சராக்கினார். அவர் பொறுப்பில் வேளாண்மை, உணவு, சிறுபாசனம், கால்நடை நலம், தாழ்த்தப்பட்டோர் நலம் ஆகிய துறைகளை வழங்கினார்.

ஊர் நடுவே உள்ள நன்னீர்க் குளத்தில் தண்ணீர் எடுக்க தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி இல்லை. ஆனால், மேல்குடியினர் தம் மலஜலம் கழிப்பதற்குக் கழிவுகளைக் கழுவிக்கொள்ள அந்த ஊரின் ஒதுக்குப்புறத்திலுள்ள குளத்தைப் பயன்படுத்தினர். இந்தக் குளம் "பீக்குளம்' என்றழைக்கப்பட்டது. அங்கேதான் அரிசன மக்கள் குடிநீரை எடுத்து ஆண்டனர். இந்தக் கொடிய வழக்கத்தை எதிர்த்து கக்கன்ஜி போராடினார்.

கக்கன்ஜி தலைமையில் அரிசன மக்கள் எல்லாம் ஒருநாள் நல்ல நீர்க்குளத்தில் தண்ணீர் எடுக்கத் திரண்டனர்; எதிர்த்து வந்த அம்பலத்தார்கள் வெட்டரிவாள், வேல் கம்பு ஆகிய ஆயுதங்களோடு வந்தனர்; காந்தியப் போராட்ட வீரரான கக்கன்ஜி, "என்னை வெட்டிப் போட்டுவிட்டு, இதோ என் பின்வந்த அரிசனங்களையும் வெட்டிப் போட்டுவிட்டால், இந்தப் போராட்டமே இருக்காது' என்று தடுத்தார்.

எதிர்த்தவர்கள் திகைத்தார்கள்; பஞ்சாயத்துக் கூட்டித் தாழ்த்தப்பட்டோர் ஒரு மூலையிலும், மற்றவர் மற்றொரு மூலையிலும் தண்ணீர் எடுத்துப் பயன்படுத்தலாம் என முடிவானது. இதனால், இன்றும் எல்லா இனத்தாரும் சரிசமமாக வாழும் நிலை உண்டாயிற்று.

காங்கிரஸ் கட்சியின் மேலிடம் தில்லியில் இருந்தது.மேலிடத்தின் கைப்பொம்மைகளாகவே மாநிலக் கட்சிகள் இருந்தன. காங்கிரஸ் கட்சி மேலிடம் ஹிந்தியை கட்டாயம் ஆக்கியது.

தமிழ்நாடு மொழி சார்ந்தது. அதனால் மொழிப் போராட்டம் வெடித்தது. கக்கன்ஜி பொதுத்தேர்தலில் தோல்வி அடைந்தார். மொழிப்போருக்கு முன்னால், காங்கிரஸ் தலைமைச் சிகரங்கள் சரிந்து தலைகுப்புற வீழ்ந்தன.

பதவி போனாலும் பண்பு மாறாதவர் கக்கன்ஜி: சாதாரண உடையிலேயே எப்போதும் இருந்தார் கக்கன்ஜி. மாநகரப் பேருந்தில் பொதுமக்களுடன் பயணம் செய்தார்.

அவர் முன்னாள் அமைச்சர் என்று அறிந்துகொண்ட பயணிகள், இருக்கை தர முயன்றாலும் அதை மறுத்து நின்றபடியே பயணித்தார். தம் எளிய வீட்டிலேயே தங்கினார். விடுதலைப் போராட்ட வீரர்களுக்கென்று கக்கன்ஜிக்கு வழங்கப்பட்ட நிலத்தை வினோபா பூமிதான இயக்கத்துக்குத் தந்துவிட்டார்.

1979-இல் உடல்நலக் குறைவு ஏற்பட்டவுடன் மதுரை அரசு மருத்துவமனையில் கக்கன்ஜி சிகிச்சை பெற்றார். அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். அந்த மருத்துவமனைக்கு சென்று கக்கன்ஜியை சந்தித்து, உடல்நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். "என்ன உதவி உங்களுக்கு வேண்டும்?' என்று முதல்வர் எம்ஜிஆர் கேட்டபோது, "உங்கள் அன்பு மட்டும் போதும்' என்றார் கக்கன்ஜி. ஆனாலும், அவருக்குத் தனி அறை வசதியும், தமிழ்நாடு அரசு சார்பில் குடியிருக்க வாடகை இல்லாத வீடும், ஓய்வூதியமும் வழங்கினார் முதல்வர் எம்.ஜி.ஆர்.

1981-இல் சென்னை அரசு மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக கக்கன்ஜி சிகிச்சை பெற்றார்.

ஆனால், ஓரிரு நாள்களிலேயே நினைவிழந்தார். முதுமை, தளர்ச்சி, சோர்வு காரணமாக நோயில் விழுந்த அவர், 1981-ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி மண்ணைவிட்டு விண்ணைத் தொட்டார். பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்விக் கண் திறந்த கக்கன்ஜி, கண்ணை மூடிக் காலமகள் மடியில் துயின்றார்!

இப்போது எதற்காகக் கக்கன்ஜி குறித்த இந்தக் கட்டுரை என்கிற கேள்வி எழலாம். தனி வாழ்வில் எளிமை, பொது வாழ்வில் தூய்மை, செயல்பாடுகளில் நேர்மை ஆகியவற்றைக் கடைப்பிடித்த, அரசியல் தலைவர்கள் பலர் இருந்தனர் என்பது இன்றைய அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல, இளைஞர் சமுதாயத்துக்கும் தெரிய வேண்டும். விடுதலைப் போராட்டத் தியாகியாக, தேசிய சிந்தனாவாதியாக, அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த ஒருவரைத் தமிழகம் மறந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்தக் கட்டுரை!

(இன்று கக்கன்ஜியின்

118-ஆவது பிறந்த நாள்)

கட்டுரையாளர்:

பொருளாளர், தமிழியக்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com