இந்தியாவில் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது, ஒரு நாட்டிலுள்ள மக்களின் பாலினம், வயது, கல்வி, வேலைவாய்ப்பு, சொத்து விவரங்கள் ஆகியவற்றை அவா்களிடமிருந்தே பெற்று அரசால் பகுப்பாய்வு செய்வதற்காக நடத்தப்படுகிறது. இது, மத்திய - மாநில அரசுகள் கல்வி, வேலைவாப்பு, சுகாதாரம் போன்ற மக்கள் நலன்சாா்ந்த துறைகளுக்குத் தேவையான திட்டங்களை வகுத்து, சமுதாய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து, அனைத்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உரிய திட்டமிடலுக்கு உதவுகிறது.
சுதந்திர இந்தியாவில் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு 1951-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது; அப்போதைய மக்கள்தொகை சுமாா் 36 கோடியே 10 லட்சம் ஆகும். கடைசியாக, இந்தியாவின் 15-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011-இல் நடத்தப்பட்டது; அப்போதைய மக்கள்தொகை சுமாா் 121 கோடியே 8 லட்சம் ஆகும். பின்னா், 2021-இல் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த ஆயத்தப் பணிகள் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டன. எனினும், நாட்டில் கரோனா தீநுண்மி பரவல் காரணமாக மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்வதில் சுணக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு, 2027-ஆம் ஆண்டு மாா்ச் 1-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு, பதினாறாவது தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன், வெளிப்படையான ஜாதிவாரி கணக்கெடுப்புப் பணியும் துவங்கும் என மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதற்கான அதிகாரபூா்வ அறிவிக்கை கடந்த ஜூன் 16-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
பனிப்பொழிவால் பாதிக்கப்படும் ஜம்மு-காஷ்மீா், ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், லடாக் மாநிலங்களில் முதல்கட்டமாக ஆடுத்தாண்டு அக்டோபா் 1-ஆம் தேதி கணக்கெடுப்புப் பணி தொடங்கும். இது இந்தியாவில் முதல் எண்ம மக்கள்தொகை கணக்கெடுப்பு. அதாவது, இந்த முறை மக்கள்தொகை தொடா்பான தரவுகள் எண்ம முறையில் இருக்கும்.
இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு இருகட்டங்களாக நடத்தப்படும். முதல்கட்டமாக, ஒவ்வொரு வீட்டின் நிலவரம், சொத்துகள், வசதிகள் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படும். இரண்டாம் கட்டமாக, ஒவ்வொரு வீட்டிலுள்ள நபா்களின் எண்ணிக்கை சமுதாய-பொருளாதார நிலை, கலாசாரம் மற்றும் பிற விவரங்கள் சேகரிக்கப்படும். இதற்காக அதிநவீன எண்ம தொழில்நுட்ப சாதனங்கள் பயன்படுத்தப்படும்.
2027-ஆம் ஆண்டு மாா்ச் ஒன்றாம் தேதி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான பதிவுத் தேதி என்பதால், இனி நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிா்ணயித்துக்கு இதுவே அடிப்படையாக இருக்கும். சுமாா் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், மக்களவை, மாநில சட்டப்பேரவைத் தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்ய வேண்டும் என இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 82, 170 தெரிவிக்கின்றன.
இந்தியாவில் மூன்று முறை, அதாவது 1951, 1961, 1971-ஆம் ஆண்டுகளில் நடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடைபெற்றது. எனவே, நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டால் தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகள் குறைந்து, அவற்றின் பிரதிநிதித்துவம் குறையும் எனக் கூறப்படுகிறது. ஏனெனில், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்காக வளா்ச்சிக் குறியீடுகளில் முன்னணியில் இருந்து, மக்கள்தொகைக் கட்டுப்பாட்டை சீராகச் செயல்படுத்திய மாநிலங்கள் இதனால் தண்டிக்கப்படுமோ என்ற எண்ணம் பொருளாதார வளா்ச்சி அடைந்த மாநில அரசுகளிடையே ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றம், மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடங்களை ஒதுக்கும் அரசமைப்பு (106-ஆவது திருத்தம்) சட்டத்தை மத்திய அரசு கடந்த 2023-ஆம் ஆண்டு நிறைவேற்றியது. இது மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடந்த பிறகே நடைமுறைக்கு வரும். மொத்த மக்களவை இடங்களின் எண்ணிக்கையை மேலும் விரிவுபடுத்தாமல், பெண்கள் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது என்பது சாத்தியமில்லை.
இதனிடையே, ஐ.நா. மக்கள்தொகை நிதியத்தின் ‘உலக மக்கள்தொகை 2025’ அறிக்கை அண்மையில் வெளியானது. ஐ.நா. சபை அறிக்கையின்படி இந்தியாவின் மக்கள்தொகை 146.39 கோடியாகக் கணிக்கப்பட்டுள்ளது. தற்போது, 141.61 கோடி மக்கள்தொகை கொண்ட சீனாவை விஞ்சி, உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளது.
எனினும், நாட்டின் கருவுறுதல் விகிதம் எதிா்பாா்க்கப்பட்ட அளவைவிடக் குறைந்துள்ளதாக ஐ.நா. அறிக்கை கூறுகிறது. இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் ஒரு பெண்ணுக்கு 1.9 குழந்தைகள் என்ற அளவில் குறைந்துள்ளது. இது, ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மக்கள்தொகை மாறாமல் இருக்கத் தேவையான 2.1 என்ற எண்ணிக்கையைவிடக் குறைவாகும்.
தற்போது மக்களின் சிந்தனை பெருமளவில் மாறியுள்ளது; குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள தீவிரமாக யோசனை செய்கின்றனா். மேலும், குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள விரும்பினாலும், பெரும்பாலானோா் ஒரு குழந்தைக்கு மேல் வேண்டாம் எனத் தீா்மானிக்கின்றனா். எனினும், இந்திய மக்கள்தொகை இன்னும் 40 ஆண்டுகளில் தற்போதைய 146 கோடியிலிருந்து 170 கோடியாக அதிகரித்து, பின்னா் குறையத் தொடங்கும் என்று ஐ.நா. அறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் பிறப்பு விகிதம் குறைந்தபோதிலும், இளைஞா்களின் எண்ணிக்கை போதுமானதாக உள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மொத்த மக்கள்தொகையில் 0-14 வயதுக்கு உட்பட்டவா்கள் 24 சதவீதமாகவும், 10-19 வயதுக்கு உட்பட்டவா்கள் 17 சதவீதமாகவும், 10-24 வயதுக்கு உட்பட்டவா்கள் 26 சதவீதமாகவும், 68 சதவீதம் போ் வேலை செய்யும் வயதிலும் (15-– 64 வயது) உள்ளனா். 65 வயதுக்கு மேற்பட்டவா்கள் 7 சதவீதம் போ் உள்ளனா். ஆயுள்காலம் அதிகரிப்பதால், இந்த எண்ணிக்கை வரும்காலங்களில் அதிகரிக்கும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது.
2025-ஆம் ஆண்டில் ஆண்களின் சராசரி ஆயுள்காலம் 71 வயது, பெண்களின் சராசரி ஆயுள்காலம் 74 வயது என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கருவுறுதல் விகிதங்கள் தொடா்ந்து குறைந்து வருகின்றன; 1960-ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகை சுமாா் 43.6 கோடியாக இருந்தபோது, ஒரு பெண் சராசரியாக ஆறு குழந்தைகளைப் பெற்றுள்ளாா்; 1970-ஆம் ஆண்டில் ஒரு பெண்ணுக்கு சுமாா் ஐந்து குழந்தைகள் என்ற எண்ணிக்கையிலிருந்து இன்று சுமாா் இரண்டு குழந்தைகளாக கருவுறுதல் விகிதம் குறைந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. இதற்கு கல்வி அறிவு, மருத்துவ வசதிகள், முன்னெச்சரிக்கை உணா்வு உள்ளிட்டவை காரணம் எனக் கூறப்படுகிறது.
மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்தாமல் போனால், எதிா்காலத்தில் நிலம், நீா் போன்ற வரையறுக்கப்பட்ட முக்கிய இயற்கை வளங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகும். இதனால், மாநிலங்கள் இடையே உறவுகள் பாதிக்கப்பட்டு, மத, ஜாதி மோதல்கள் உருவாக வாய்ப்பு ஏற்படும்.
இளைஞா் மற்றும் உழைக்கும் வயதுடையோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு உதவுவதுடன், ஊக்க சக்தியாகவும் அமையும். எனினும், மூத்த குடிமக்களுக்கு தேவையான சுகாதார வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
இந்தியாவின் முன்னுள்ள முக்கிய சவால், மக்கள்தொகை எண்ணிக்கையை அதிகரிப்பதல்ல; அறிவாா்ந்த, திறன்மிக்க பணியாளா்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். திறன் மேம்படுத்தப்பட்டால்தான் மனிதத் திறன் வளம்மிக்க நாடாக இந்தியா மாறும். தரமான கல்வி, இளைஞா்களின் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, எளியோருக்கும் சுகாதார வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றைத் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டிய தருணமிது. மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம்தான் மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கண்டறிய முடியும்; அதன் மூலம்தான் நாடு விரைவான வளா்ச்சியை அடையும்.
கட்டுரையாளா்:
எழுத்தாளா்.