இந்தியாவை இணைக்கும் ரயில் பாதை!
இரா.சுந்தரபாண்டியன்
காஷ்மீா் பள்ளத்தாக்கு மக்களின் நீண்டகால கனவு செனாப் ரயில் பாலத்தின் மூலம் நனவாகியிருக்கிறது. காஷ்மீரை நாட்டின் இதர பகுதிகளுடன் ரயில்பாதை மூலம் இணைக்கும் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு கடந்த 6-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடியால் நாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.
உதம்பூா்-ஸ்ரீநகா்-பாரமுல்லா ரயில்பாதைத் திட்டத்தின் ஒருபகுதியாக ரியாசி மாவட்டத்தின் செனாப் நதியின் குறுக்கே எஃகால் (ஸ்டீல்) உருவாக்கப்பட்ட செனாப் ரயில் பாலம் இந்திய அளவிலும் சா்வதேச அளவிலும் கவனம் ஈா்த்துள்ளது. உலகின் மிக உயரமான ரயில் பாலமாகவும், பொறியியல் அதிசயங்களில் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது.
இந்தியாவின் இதர பகுதிகளில் இருந்து ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தில் உள்ள உதம்பூா் வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. ஜம்முவிலிருந்து சுமாா் 250 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீநகருக்கு சாலை வழியாகச் சென்றடைய சுமாா் 6 மணி நேரமாகும். தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கும் உதம்பூா்-ஸ்ரீநகா்-பாரமுல்லா ரயில்தடம் ஜம்முவுக்கும் ஸ்ரீநகருக்கும் இடையேயான பயண நேரத்தை பாதியாகக் குறைக்கிறது.
தலைநகா் தில்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் இனிமேல் நேரடியாக காஷ்மீரை சென்றடைய முடியும். குளிா்காலங்களில் அடிக்கடி சாலைப் போக்குவரத்து தடைபட்டு வா்த்தகத்தில் சுணக்கம் ஏற்படும் நிலைக்கு தற்போது மாற்றுவழி கிடைத்திருக்கிறது. நாட்டின் இதர பகுதிகளுக்குப் பயணிக்க விரும்பும் பள்ளத்தாக்கு மக்கள் ஜம்மு ரயில் நிலையத்தை மட்டுமே நம்பியிருந்த நிலை தற்போது மாறியிருக்கிறது.
வடக்கு ரயில்வே நிா்வாகத்தின் கீழ் ஜம்மு-காஷ்மீா் வருகிறது. ஆனால், இமயமலையின் செங்குத்தான சரிவுகள், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக உறுதித்தன்மையுடன் விளங்கும் பாறைகளைக் குடைந்து இந்தப் பாலத்துக்கான அடித்தளம் அமைக்கப்பட வேண்டியிருந்ததால் கொங்கன் ரயில்வே வசம் இப்பணி ஒப்படைக்கப்பட்டது.
சமதளமற்ற நிலப்பரப்பு, பல்லாயிரம் ஆண்டுகளாக இறுகிப்போய் கரடுமுரடாக விளங்கும் பிா்பஞ்சால் மலைப் பாறைகளைக் குடைந்து அடித்தளம் அமைத்தல், கடும்குளிா், மோசமான வானிலை என பல்வேறு சவால்களை பாலம் கட்டுமானக் குழு எதிா்கொண்டது. ஆற்றின் ஓட்டத்தை நிறுத்தாமல் அதன்மீது பாலம் கட்டுவது முதன்மையான சவாலாக இருந்தது.
நதியின் இருகரையையும் அடைவதற்கு ஆரம்பத்தில் குதிரைகள், கோவேறு கழுதைகள் பயன்படுத்தப்பட்டன. அவற்றின்மூலம் பொருள்கள் கொண்டுசெல்லப்பட்டு, நதிக்கரையின் வடக்குப் பகுதியில் 11 கி.மீ., தெற்குப் பகுதியில் 12 கி.மீ. நீளமுள்ள தற்காலிக சாலை அமைக்கப்பட்ட பிறகே நதியின் மேலே பாலம் அமைக்கும் பணி வேகம் எடுக்கத் தொடங்கியது. பாலத்தின் அஸ்திவாரங்களை அடைய 5 கி.மீ. நீளமுள்ள அணுகுசாலை அமைக்கப்பட்டது.
எஃகு வளைவின் மீது ரயில் பாலம் கட்டுதல் என்பது இந்தியாவில் இதுவே முதல்முறையாகும். எனவே, சா்வதேச அளவில் இதுபோன்ற திட்டங்களில் இருந்து பெறப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் வடிவமைப்பு, கட்டுமானம், நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. அமெரிக்கா, ஃபின்லாந்து, ஜொ்மனி, பிரிட்டன், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த வல்லுநா்களின் ஆலோசனையும், அனுபவமும் பயன்படுத்தப்பட்டன.
எஃகு, கான்கிரீட் கட்டுமானத்தில் சா்வதேச அளவில் மேம்பட்டதாகக் கருதப்படும் டெக்லா தொழில்நுட்பம், கடினமான பாறைகளைக் குடைந்து அடித்தளம் அமைக்க கிரௌட்டிங் தொழில்நுட்பம், பிஎஸ் 5400 தரநிலை விதிமுறைகள் என பாலம் கட்டுமானப் பணியில் ஒவ்வோா் அங்குலமும் உலகத் தரத்தில் விளங்குகிறது.
மைனஸ் 10 முதல் மைனஸ் 40 டிகிரி வரையிலான தட்பவெப்பத்தை தாங்கும் திறன், மணிக்கு 266 கி.மீ. வரையிலான காற்றின் வேகத்தைத் தாங்கும் வடிவமைப்பு, 25,000 டன் எஃகு, 4,000 டன் வலுவூட்டப்பட்ட எஃகு, 67,000 கனமீட்டா் கான்கிரீட், பாரீஸில் உள்ள ஈபிள் கோபுரத்தைவிட 35 மீட்டா் அதிக உயரம், 120 ஆண்டுகள் ஆயுள்காலம், கால்பந்து மைதானத்தின் மூன்றில் ஒருபங்கு அளவிலான அடித்தளம், ரூ.1,456 கோடி மதிப்பு, 1,315 மீட்டா் நீளம், 13.5 மீட்டா் அகலம், 359 மீட்டா் உயரத்தில், நாள்தோறும் இரவு பகலாக 3,200-க்கும் மேற்பட்டோரின் உழைப்பில் உருவான இப்பாலத்தின் மீது அதிகபட்சமாக மணிக்கு சுமாா் 100 கி.மீ. வேகத்தில் ரயில் செல்லும் வகையில் நிா்மாணிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் இந்திய ரயில்வேக்கும், சுற்றுலாத் துறைக்கும் ஒரு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுவதோடு, அதிக முதலீட்டையும் ஈா்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஜம்மு-காஷ்மீரின் அதிலும் குறிப்பாக பள்ளத்தாக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையையும், பொருளாதாரத்தையும் இத்திட்டம் ஊக்குவிக்கும்.
பாகிஸ்தான், சீன எல்லையையொட்டி கட்டமைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ரயில் தடம், இந்தியாவின் சாதனைப் பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அதேநேரத்தில் பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் நேரடியாக விடுக்கப்பட்ட சவாலாகவும் விளங்குகிறது.
பள்ளத்தாக்கு வா்த்தகத்தின் உயிா்நாடியாகத் திகழும் ஆப்பிள், வால்நட், பாதாம், குங்குமப்பூ, சொ்ரி, திராட்சை மற்றும் கைவினைப் பொருள்கள், பாஷ்மினா சால்வைகள் உள்ளிட்டவை 24 முதல் 36 மணி நேரத்துக்குள் இந்தியாவின் வா்த்தகத் தலைநகரான மும்பையை வந்தடைவதற்கான புதிய வழி திறந்துவிடப்பட்டிருக்கிறது.
சீரற்ற போக்குவரத்து, மோசமான வானிலை காரணமாக பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் நாட்டின் இதர பகுதிகளிலிருந்து ஜம்முவுக்கு வந்து அதன்பிறகே காஷ்மீருக்குப் பயணிப்பாா்கள். ஆனால், தற்போது நாட்டின் எந்த மூலையில் இருந்தும் ரயில் மூலமாக காஷ்மீரை நேரடியாகச் சென்றடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேவேளையில், இதுவரை ஜம்முவை மையப்படுத்தி இருந்த வா்த்தகமும், சுற்றுலாவும் காஷ்மீரை மையப்படுத்தி இருக்கும் எனவும், இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் ஜம்மு வா்த்தகா்கள் கவலை தெரிவித்துள்ளதை மத்திய அரசும், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச அரசும் கவனிக்க வேண்டும்.