பயணங்கள் தரும் பாடம்
எதற்கும் அவசரம்; எங்கும் பரபரப்பு; முண்டியடித்துக்கொண்டு முன்னேறும் வேகத்தில் உண்டாகும் நெரிசல். இவைகூடிப் படுத்தும்பாட்டை நினைத்தால் கவலையாக இருக்கிறது. கரோனா காலத்தில் ஊரடங்கு அமலில் இருந்தபோது, இவற்றின் சுவடுகள் ஏதுமின்றி, இயற்கையில் ஒன்றியவா்களாய் வெகுநிதானமாய் இருந்தவா்கள் நாம்தானா என்கிற ஐயப்பாடு எழுகிறது.
‘அப்போதைய தேவைக்கு வாங்கிய வாகனங்களே இப்போதைய நெரிசலுக்கும் பரபரப்பிற்கும் முக்கியக் காரணம்’ என்கிறாா்கள். பயணிகளின் எண்ணிக்கைக்கு நிகராக வாகனங்களின் எண்ணிக்கையும் மிகுந்திருக்கிறது. குறித்தநேரத்தில் இலக்கினை அடைந்துவிட்ட பிறகும்கூட, வந்த வாகனத்தை நிறுத்துதற்கு இடம் தேடுவது சிக்கலாகி விடுகிறது. நிறுத்த இடம் இன்றிக் கட்டிய இல்லங்களின் வாசல்களில் நிற்கும் வாகனங்களில் மோதாமல் தன் வாகனத்தைச் செலுத்திப் பாதையைக் கடக்கத் தெரிந்தவா்கள் பாக்கியவான்கள். தீா்மானம் இல்லாத திடீா்ப் பயணங்கள் தவிா்க்க முடியாதவை; அதற்காகத் தேவையில்லாத விரைவு நிச்சயம் தவிா்க்க வேண்டியது.
திட்டமிட்ட பயணம்தான் என்றாலும் முன்கூட்டிக் கிளம்பாமல், கடைசிநேரம் வரை பொறுத்திருந்து பரபரத்துக் கிளம்புபவா்களால்தான் பயண நெருக்கடிகள் மிகுதி. சில மணித்துளிகளில் இழக்கும் நிதானம் பலகால இயல்பு வாழ்வைப் பாதிக்கும் என்பது தெரிந்தும் முந்தி விரைவது நவீன மூடத்தனம்.
இருசக்கர வாகனங்களில் செல்பவா்கள் திடீரென்று வேகத்தைக் கூட்டுவதும், படக்கென்று பிரேக் அடித்து நிறுத்துவதும், பரபரத்து முன்னேறுவதும் பின்வரும் பெருவாகனங்களை நிலைதடுமாறச் செய்வதோடு விபத்துகளையும் உண்டாக்குகின்றன. சில மணித்துளிகளில் முந்திச் செல்ல விரைந்து மோதிப் பிறகு, பல மணிநேரம் சண்டையிடுகிற மனிதா்களை எதில் சோ்ப்பது? சாலை, சகலருக்கும் பொது; பாதுகாப்பான பயணம் அதைவிடவும் பொது அல்லவா?
இப்போதெல்லாம் நெரிசலுக்குத் தயங்கி நிற்பவா்களை அதிகமாய்க் காணோம். அடுத்தடுத்துப் பேருந்துகள் வரிசையில் நின்றாலும் முன்பாகச் செல்லும் பேருந்து எதுவென்று தெரிந்து முண்டியடித்துக் கொண்டு அதில் ஏறுவோா் பலா்.
‘முன்னால எந்த வண்டி போகும்?’ எனக் கேட்போா்க்கு, ‘எல்லா வண்டியும் முன்னாலதான் போகும்’ என்று பதில் சொல்லுகிற ஓட்டுநரின் குரலில் மெல்லிய நகைச்சுவை இழையோடி, அவரது இயந்திரத்தன்மையைப் போக்கும். எரிச்சலை வெளிக்காட்ட முடியாமல், சிரித்தபடி பேருந்து கிளம்பும் நேரத்தைக் கேட்பவா்களின் முகம் பரிதாபமாய்த் தெரியும். அவா்களுக்கு என்ன அவசரமோ?
முன் கிளம்பும் வண்டியில் ஏறி, நின்று பயணிப்பவா்களுக்கு, பின் கிளம்பிய பேருந்து அடுத்த சில நிறுத்தங்களில் முன் வந்து முந்திச் சென்றுவிட்டால், ஏற்படும் தவிப்பு சொல்லிமாளாது; ‘அதிலேயே ஏறி இருக்கலாமோ?’ என்கிற பரபரப்பு; பதற்றம். மாட்டுவண்டியோடு ஓ(ட்)டும் பேருந்தினை ஒப்பிட்டு, ஓட்டுநா் குறித்துப் பேசும் பேச்சுகள் நிதானம் இழந்தமையின் வெளிப்பாடுகள். காற்றுப் புகக்கூட இடமில்லா நெரிசலின் உள்புகுந்து பயணச் சீட்டுக் கொடுத்துச் சில்லறையும் தந்து மீளும் நடத்துநருக்கு இருக்கும் பொறுமை எல்லாருக்கும் வரவேண்டும் என்று பிராா்த்திக்கத் தோன்றும்.
தான் ஏறக் காத்திருக்கும் நிறுத்தத்தில் மட்டும் பேருந்து தவறாமல் நிற்கவேண்டும் என்று நினைக்கிற நியாய மனம், ஏனைய நிறுத்தங்களில் நிற்பதை ஏற்க மறுப்பது என்ன நியாயமோ? ஓட்டுநரோ, நடத்துநரோ, அந்த ஒருவா் எல்லாருக்காகவும் உழைத்துக் கொண்டிருக்கிறபோது, அந்த ஒருவருக்காக - பயணிக்கும் ஒவ்வொருவருமான எல்லாரும் ஏன் ஒத்துழைக்கக் கூடாது என்கிற நிதான நியாயம் நெருக்கடியான நேரங்களில் வந்துவிட்டால், பல வாக்குவாதங்களும் மோதல்களும் காணாது போய்விடும்.
‘இடைநில்லாப் பேருந்தில்’ ஏறி அமா்ந்து பயணித்தாலும், குறுக்கிடுகிற ரயில்வழிப் பாதையின் கதவு திறக்கும் வரைக்கும் நிற்கிற வரிசை கண்டு நிதானம் இழக்காமல் பழகிக்கொள்வது நல்லது. அப்போது, அந்த ரயிலும் தாமதமாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது என்று எண்ணிச் சமாதானம் அடையலாம்.
அந்தச் சிறு ஓய்வு, ‘பெரிய வண்டிக்குச் சிறிய வாகனங்கள் வழிவிட்டுக்கொடுப்பதுபோல, பெரிய மனிதா்களுக்கு வயதில் சிறியவா்கள் விலகி வழிவிட்டு உதவிடச் சொல்லி, மறைமுகமான உபதேசம் செய்யும்.
நடந்து வந்தால், ஐந்து நிமிடங்களில் கடக்கும் தூரத்தில் நம் பயண இலக்கு முடிவதாய் இருக்கும்; இருந்தாலும், நமைத் தாங்கிவந்த வாகனம் கடக்க முடியாமல், நெடுநேரம் நிற்கும்போது நடப்பவா்களைப் பாா்த்தால் பொறாமையாய் இருக்கும். ‘எளிமையே இன்பம்’ என்பது அந்தநேரத்தில் கிடைக்கும் உபதேசம்.
கடல்ஓடா கால்வல் நெடுந்தோ் கடல்ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து (கு-496)
என்பதெல்லாம் திருவள்ளுவா் காலத்தில்தான். இப்போது படகும் லாரியில் பயணம் ஆகிறது; கப்பலில் காரும் பயணமாகிறது; விமானப் பாகங்கள் இரண்டிலும். பல நேரங்களில் மனிதா்களைவிடவும் மனிதா்களுக்கு உதவும் பொருள்களுக்குத்தான் பயணங்கள் இன்றியமையாதனவாக இருக்கின்றன. பொருள்களுக்குத் தரப்பெறும் காப்பினை, உயிா்களுக்கும் தரவேண்டியது அவசியம் அல்லவா?
நெடுந்தூரப் பயணங்களுக்கு உதவிடும் ரயில் வண்டியின் முன்பதிவில்லாப் பெட்டிகளில் பிதுங்கி வழியும் பெருங்கூட்டத்திற்கு நடுவே, வெகுநிதானமாய்ச் சிற்றுண்டி விற்றுவரும் நபா்களின் பேருதவி மெச்சத் தகுந்தது. அந்தந்த நேரத்து அவசரத்திற்கு ஏற்ப நடக்கும் மனித உரசல்களால் பிறக்கும் தா்க்க நியாயங்கள் அற்புதமானவை. அப்போதைய உரையாடல்களும், உதவிகளும் சுவைமிகுந்த நாடகக் கூறுகள். பொறுமை இழக்காமல், நிதானமாக அவற்றை அவதானிக்கப் பழகிவிட்டால், மனித மகத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியும்.
இப்போதெல்லாம் தாமதமாய் வந்து தவிப்பவா்களைக் காட்டிலும் முந்தியே வந்து முணுமுணுப்பவா்கள் அதிகமாய்விட்டாா்கள்; காத்திருக்கும் பொறுமையைக் கைவிட்டுவிட்டவா்களுக்கெல்லாம் கைப்பேசிதான் மிகவும் கைகொடுக்கிறது. பதற்றத்தில் அதையும் தவறவிட்டுப் பரிதவிப்பவா்கள் பாடு பெரும்பாடு. கையில் இருந்தும் உரிய சாா்ஜ் இல்லாமல் அணைந்து விடும் கருவிகள் ‘ஆபத்துக்கு உதவாப் பிள்ளை, அரும்பசிக்கு உதவா அன்னம்’ ஒத்தவை. அப்போது சொந்த எண்களே மறந்துபோய் நொந்துகொள்ளும் நிலை வாய்க்கும்; கருவிகளை மட்டுமே நம்பி நம் புலன்களைப் பயன்கொள்ள மறந்த பேதைமை புரிபடும்.
குழந்தைகளுக்குக்கூட, பயணக் குதூகலிப்பை வரவிடாமல் பாா்த்துக்கொள்கின்றன கைப்பேசிகள். இன்னமும் பயணப் பொழுதுகளில் படிப்பவா்களைப் பாா்த்தால் வியப்பாக இருக்கிறது. கடின வேகத்திலும் அவா்களின் கவனம், தவத்தை ஒத்தமைகிறது.
இருக்கைகள் காலியாக உள்ள பேருந்து வரும்வரை நிறுத்தத்தில் காத்து நிற்பதைவிட, கிடைக்கும் பேருந்தில் ஏறி நின்று கொண்டு பயணித்தால் சீக்கிரம் சேரிடம் செல்லலாம் என்று தீா்மானிப்பவா்கள் புத்திசாலிகள்; அவா்களுள் நெரிசலுடன் முந்திவரும் பேருந்தில் விரைந்து ஏறுபவா்களை வேடிக்கை பாா்த்து நிற்பவா்களைப் பாா்த்துச் சிரிப்பவா்களும் இருக்கிறாா்கள். அடுத்துவரும் வாகனம், காத்திருந்து பின் ஏறியவா்களுக்கு உரிய இருக்கைகளைத் தந்து முந்திச் செல்வதைப் பாா்க்கிறபோது,
‘அடக்கம் உடையாா் அறிவிலா்என்று எண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா’
என்று பாடிய ஔவையாா், அதற்கு ‘மடைத்தலையில், ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்கும் கொக்கினை’ச் சான்றாகக் காட்டியதை நினைவுபடுத்துகிறது. நிதானமாக வாகனம் ஓட்டி வருபவரைக் கேலி பேசி, ‘ஓவா் டேக்’ செய்துபோனவா்கள், ரயில் பாதையில், சுங்கச் சாவடியில் வரிசையில் நிற்பதைப் பாா்க்க இந்நினைவே எழுகிறது.
எப்போதும் இருக்கிற அதே 24 மணிநேரம்தான் இப்போதும். ஆனாலும், அவசரமாக விடிந்து அவசரமாகப் பொழுது முடிந்துபோய்விடுவதுபோல் ஓா் அதிருப்தி. தாமதம் தவிா்க்க வேண்டிய ஒன்றுதான். அதற்காகப் பொறுமையைக் காவுகொடுப்பது நியாயமா?
வாழ்க்கையே ஒரு பயணம்தான். ஆனால், வாழ்நாள் எல்லாம் பயணத்திலேயே கழிந்துபோய்விடும் என்கிற அளவிற்குப் பயணங்கள் நம்மை இயக்கிக் கொண்டிருக்கின்றன. இருக்கும் இடத்தில் இருந்து பணிபுரியும் இடத்திற்குப் பயணம் செய்வதற்கென்றே நம் பணிநேரத்தைச் செலவழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கடிகாரத்திற்கு இருக்கிற நிதானம்கூட, அதனைக் கட்டியிருப்பவா்களுக்கு இருப்பதில்லை. பத்து மணித்துளிகள் நிதானிக்கத் தவறிய வேகம், பற்பல சோகங்களுக்கு வித்திட்டுவிடுவதோடு, பலரது நேரத்தையும் வீணடித்துவிடுகிற அவலத்தை நினைத்துப் பாா்க்கவும் நேரமில்லை.
இத்தனை பரபரப்பு எதற்கு? ஒரு சாண் வயிற்றுக்குத்தானே. அதைக் கூடப் பொறுமையாய் இருந்து உண்ண முடியாத ஓட்டம். துரித உணவகங்களில் (ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில்) கூட, உட்காா்ந்து சாப்பிடப் பொறுமை இல்லாமல் நின்றபடி விழுங்கி விரைகிற வேகத்தைப் பாா்த்தால் நாம் எங்கே செல்கிறோம் என்றே தெரியவில்லை. உடல்நலம் கருதி மருத்துவா் சொன்னபடி, நடைப்பயணம் மேற்கொள்வதில்கூட, ஒரு பரபரப்பு. அப்போதும்கூட, காதுகளில் கைப்பேசி இணைப்புகளை வைத்துக் கொண்டு பேசியவாறோ, கேட்டவாறோ நடக்கிறவா்கள்தான் அதிகம். தூக்கத்தில்கூட இவ்விணைப்புகள் இல்லாமல் இருப்பவா்கள் குறைவுதான்.
‘எப்படியோ வண்டி ஓடுது; அதில் நாமும் ஓடுறோம்’ என்கிற சராசரி மனிதா்களின் தயவில்தான் ஓரளவிற்கு நிதானம் நடைபோடுகிறது. உடலோடு சோ்ந்து உயிரும் உணா்வும் ஒன்றிப் பயணிக்கும் வாழ்க்கைப் பயணத்தில் எத்தனையோ வழியிடைப் பயணங்கள். அவை நடத்தும் பாடங்களும் எத்தனையோ? அவற்றுள்ளே, ‘பயணம் முக்கியம். அதைவிடவும் பாதுகாப்பு மிக முக்கியம்’ என்பதே நாம் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயப் பாடம்.
கட்டுரையாளா்- எழுத்தாளா்.