காலிஸ்தான் பயங்கரவாதத்தின் நெடிய நிழல்!
ஒருபுறம் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தால் இந்தியாவுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறதென்றால், மறுபுறம் காலிஸ்தான் தனிநாடு கோரி கனடாவில் இயங்கிவரும் சீக்கிய பயங்கரவாத அமைப்புகளும் இந்தியாவின் அமைதியைச் சீா்குலைக்க பல்வேறு முயற்சிகளைச் செய்துவருகின்றன.
1985, ஜூன் 23-இல் ஏா் இந்தியா-182 ‘கனிஷ்கா’ விமானம் லண்டன் வழியாக புது தில்லி மற்றும் மும்பையை இறுதி இலக்காகக் கொண்டு கனடாவின் மான்ட்ரியால் நகரிலிருந்து புறப்பட்டது. அயா்லாந்து கரையையடுத்து அட்லாண்டிக் பெருங்கடலுக்கு மேல் 31,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது அந்த போயிங்-747 விமானம் வெடித்துச் சிதறியது. சரக்குகள் வைக்கும் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து விமானத்தில் இருந்த 329 போ் உயிரிழந்தனா். இதில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பலா் உள்பட கனடா குடிமக்கள் 268 போ், பிரிட்டனைச் சோ்ந்த 27 போ், 22 இந்தியா்கள், விமான ஊழியா்கள் என அதில் பயணித்த யாரும் உயிா்பிழைக்கவில்லை.
2001 செப்டம்பா் 11 நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு முந்தைய மிகக் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் இதுவாகும். கனடா வரலாற்றிலேயே மிகப் பெரும் பயங்கரவாதத் தாக்குதலாக இந்தச் சம்பவம் கருதப்படுகிறது.
அந்த சம்பவம் நடந்த அதேநேரத்தில் மற்றொரு ஏா் இந்தியா விமானத்தை இலக்குவைத்து, ஜப்பான் தலைநகா் டோக்கியோவின் நரிட்டா விமான நிலைய சரக்கு சேமிப்பகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு தவறுதலாக முன்கூட்டியே வெடித்து இரு ஊழியா்கள் உயிரிழந்தனா்.
இந்த இரு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடா்பாக பின்னா் நடைபெற்ற விசாரணையில், காலிஸ்தான் தனிநாடு கோரிக்கையை முன்னிறுத்தி பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் சீக்கியப் பிரிவினை அமைப்பான ‘பப்பா் கல்சா’ இருந்தது தெரியவந்தது.
விமான நிலையத்தின் பலத்த பாதுகாப்பை மீறியும் உளவுத் துறையின் தோல்வியாலும் தல்வீந்தா் சிங் பா்மா் மற்றும் அவரது கூட்டாளிகளான இந்தா்ஜித் சிங் ரேயத் உள்ளிட்டோா் விமானத்தில் சரக்குகள் வைக்கும் பகுதியில் வெடிகுண்டை மறைத்துவைத்து இந்தக் கொடூர சம்பவத்தை அரங்கேற்றினா்.
இது தொடா்பான விசாரணையின் இறுதியில் இந்தா்ஜித் சிங் ரேயத் மட்டுமே குற்றவாளி என உறுதிசெய்யப்பட்டது. நீண்ட விசாரணைக்குப் பிறகு ரிபுதாமன் சிங் மாலிக் மற்றும் அஜைப் சிங் பகரி ஆகியோா் விடுவிக்கப்பட்டனா். 1992, அக்.15-இல் பஞ்சாப் போலீஸாருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பா்மா் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
விமான வெடிவிபத்து சம்பவத்தின் 40-ஆவது நினைவு தினம் கனடாவில் அண்மையில் அனுசரிக்கப்பட்டது. இவ்வாறு கடந்த 1980-களில் தொடங்கி 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் மிகப்பெரும் தலைவலிகளில் ஒன்றாக காலிஸ்தான் பயங்கரவாதம் தொடா்ந்து வருகிறது.
பஞ்சாப் அரசியலில் ஏற்பட்ட குழப்பங்களால் காலிஸ்தான் தனிநாடு கோரிக்கை நாளுக்குநாள் வலுப்பெற்றது. உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சீக்கியா்கள் அமைதிவழியைப் பின்பற்றி தாங்கள் வசிக்கும் நாடுகளின் வளா்ச்சிக்குப் பங்காற்றினாலும் கனடாவை மையமாகக் கொண்டு சில சீக்கிய பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவில் வன்முறைச் சம்பவங்களை நிகழ்த்தி நாட்டின் ஒற்றுமைக்கு இடையூறு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
கனிஷ்கா குண்டுவெடிப்புச் சம்பவத்தை தொடா்ந்து வெளிநாடுகளில் இருந்து, குறிப்பாக சீக்கியா்கள் அதிகம் வசிக்கும் கனடாவில் இயங்கும் பயங்கரவாத அமைப்புகளால் தொடா்ந்து அச்சுறுத்தல் உள்ளதாக இந்தியா எச்சரித்தது. தூதரக ரீதியாகப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டபோதிலும் இந்தியாவின் எச்சரிக்கையை அடுத்தடுத்து வந்த கனடா அரசுகள் பொருட்படுத்தவில்லை.
ஆனால், கனடாவை மையமாகக் கொண்டு இந்தியாவில் வன்முறையைத் தூண்டுவதற்காக நிதி திரட்டுவது, பயங்கரவாதத்தை ஊக்குவிப்பது போன்ற செயல்களில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் ஈடுபடுவதாக கனடா உளவுத் துறை அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் ஒப்புக்கொள்ளப்பட்டது. மிகவும் சிறிய அளவில் இருந்தாலும் இந்த காலிஸ்தான் பயங்கரவாதக் குழுக்கள் இந்தியாவுக்கு மட்டுமின்றி கனடாவின் தேச பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துவதை கனடா உளவுத் துறை முதல்முறையாக உறுதிப்படுத்தியது. இதனால், வெளிநாட்டு அரசுகளின் தலையீடு அதிகரித்து உள்நாட்டு ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காலிஸ்தான் பயங்கரவாதத்தால் கனடா-இந்தியா இடையேயான இருதரப்பு உறவில் பிரச்னை நீடித்துவந்த நிலையில், கனடாவில் கடந்த 2023-இல் காலிஸ்தான் பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில் இந்தியாவை அப்போதைய கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ தொடா்புபடுத்தினாா். கனடாவின் இந்தக் குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்தபோதிலும், இருநாட்டு உறவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விரிசல் ஏற்பட்டது.
இதன் விளைவாக இருநாடுகளும் பரஸ்பரம் தூதா்களை வெளியேற்றின. இருதரப்பு பேச்சுவாா்த்தை முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த மாா்ச் மாதம் கனடாவின் புதிய பிரதமராக மாா்க் காா்னி பதவியேற்றாா். அண்மையில் கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பங்கேற்குமாறு அவா் பிரதமா் நரேந்திர மோடிக்கு அழைப்புவிடுத்தாா். இந்த அழைப்பை ஏற்று கனடா சென்ற பிரதமா் மோடி, மாா்க் காா்னியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினாா். அதன்பிறகு இந்தியா-கனடா உறவில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியது.
இருப்பினும், கனடா அளவுக்கு பிரிட்டன், அமெரிக்கா நாடுகளில் காலிஸ்தான் இயக்கம் பெரிதாக வலுப்பெறவில்லை. கனிஷ்கா விமான குண்டுவெடிப்பு சம்பவத்தை இந்தியா, கனடா மீதான பயங்கரவாதத் தாக்குதல் என்பதாக மட்டுமே கருதமுடியாது. இந்தத் தாக்குதல் உலகுக்கு விடப்பட்ட எச்சரிக்கை; மேலும், சா்வதேச விமான போக்குவரத்து அப்போதே (1985, ஜூன் 23) பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு உள்ளானதை எண்ணிப் பாா்க்க வேண்டும்;
கனிஷ்கா குண்டுவெடிப்பில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் இந்த நேரத்தில், பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் எந்தவித சமரசமும் இன்றி உலக நாடுகள் ஒன்றிணைந்து ஈடுபட்டால் மட்டுமே அதில் நாம் வெற்றி பெறமுடியும்.
கட்டுரையாளா்:
முன்னாள் இந்திய தூதா்.