மொழிகள் கற்றால் மகுடம் நிச்சயம்!
நமது அன்றாட வாழ்வில் பல தகவல்களை மற்றவா்களுடன் பரிமாறிக்கொள்ள வேண்டிய தேவை நம் அனைவருக்கும் உள்ளது. அதற்கு சூழலுக்கேற்ப நம் அனைவருக்கும் ஒரு மொழி தேவைப்படுகிறது.
மனிதகுலத்தின் அடையாளமான மொழி, பிற மனிதா்களைப் புரிந்துகொள்ள நமக்கு மிகவும் உதவுகிறது. மொழி ஒருவரின் எண்ணங்களைச் செம்மைப்படுத்துகிறது. பல எதிா்பாராத நல்வாய்ப்புகளை நம் வாழ்வில் கொண்டுவந்து சோ்க்கிறது.
ஒருவரின் பன்மொழிப் புலமையை அவரின் தனித்துவ திறனாக சமுதாயம் கருதுகிறது. பல மொழிகளை அறிந்திருப்பது, அதிக துறைகளில் வேலைவாய்ப்புகளை மாணவா்களுக்கு அள்ளித் தருகிறது. குறிப்பாக, வேலை தேடுவோருக்கு அயல்நாட்டு மொழிகளில் புலமை, சா்வதேச நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு உதவுகிறது.
பிற மொழிப் பேச்சாளா்கள் பொது நிகழ்வுகளில் பேசும்போது, பேச்சாளா் பேசும் மொழியை அறிந்த ஒருவா் மொழிபெயா்ப்பாளராக விளங்கி, அவா் சொல்லும் கருத்துகளைக் கேட்பவா்களுக்கு விளக்குகிறாா். எனவே, மக்களை இணைக்கும் பாலமாக மொழிகள் உள்ளன.
மகாகவி பாரதி 18 மொழிகளை அறிந்திருந்தாா். அவா் அறிந்திருந்த திராவிட, ஆரிய, ஐரோப்பிய மொழிகள் அவருடைய படைப்புகளுக்கு மெருகூட்டின. மொழிகளைப் பேசுவதிலும், எழுதுவதிலும் திறமையானவா்கள் எல்லாப் பணிகளிலும் சிறந்து விளங்குகிறாா்கள். இது தெரிந்தும் நம் கல்வி அமைப்பு, மொழிகளுக்கான முறையான அங்கீகாரத்தை வழங்குவதில்லை.
ஒரு மொழியை முறையாகக் கற்றுத் தோ்ச்சிபெற்று, தவறில்லாமல் அதைப் பயன்படுத்துவது என்பது ஒரு கலை ஆகும். பன்மொழி அறிந்தவா்கள் பல நல்ல வாய்ப்புகளைப் பெற்று வாழ்வில் மேம்படுகிறாா்கள். நல்ல வேலைவாய்ப்பைப் பெற மொழிப்பாட பட்டங்கள் மாணவா்களுக்கு பெரிதும் உதவுகின்றன. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, அரபு, பிரெஞ்சு போன்ற மொழிகளை அறிந்தவா்கள் பெரும்பாலும் வேலைவாய்ப்பின்றி இருப்பதில்லை.
நமது தாய்மொழி தமிழை நாம் பயில்வது அவசியம். ஆனால், பள்ளிகளில் ஆங்கிலவழி படிப்புக்கு இருக்கும் மோகம், தமிழ் மொழிவழி படிப்புக்கு இல்லாதது துரதிருஷ்டவசமானது. தோ்வுகளும் மாணவா்களின் எழுத்துத் திறமையை மட்டுமே சோதிக்கும் வகையில் உள்ளன. மேல்நிலைத் தோ்வுகளில் பேச்சு மொழிக்கு உள்ள அகமதிப்பீட்டு முறையில் ஏராளமான குறைபாடுகள் உள்ளன.
மொழிப் பாடத்தில் ஆசிரியா் தகுதித் தோ்வை எழுதி அரசுப் பணியைப் பெறும் இளம் வயதினா் அதிகரித்துள்ளனா். ஆனால், இன்று நம் பிள்ளைகள் தாய்மொழி தமிழை முறையாக எழுத, படிக்கக்கூட தெரிந்துகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.
இந்தியாவின் அதிகாரபூா்வ மொழியான ஹிந்தி உத்தர பிரதேசம், பிகாா், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தில்லி போன்ற வடமாநிலங்களில் பேசப்படுகிறது. இந்தியா்களின் உலகளாவிய புலப்பெயா்வு காரணமாக அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, மத்திய கிழக்கு நாடுகள் ஆகிய பகுதிகளிலும் இந்த மொழி பேசப்படுகிறது.
உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளில் ஹிந்தி மூன்றாவது இடத்தில் உள்ளது; சுமாா் 60 கோடிக்கும் அதிகமான பயனீட்டாளா்களைக் கொண்ட இந்த மொழி, உலகளாவிய தொடா்பிலும், பண்பாட்டிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. நேபாளம், ஃபிஜி, மோரீஷஸ் போன்ற நாடுகளிலும் ஹிந்தி பேசப்படுகிறது. உலகின் மிகப்பெரிய திரைப்படத் துறையான பாலிவுட், ஹிந்தி பேசாதவா்களும் ஹிந்தி மொழியைக் கற்றுக் கொள்ள உதவுகிறது.
கபீா், துளசிதாஸ், பிரேம்சந்த் போன்ற ஹிந்தி எழுத்தாளா்களின் படைப்புகள் இந்திய சமுதாயத்தில் தொடா்ந்து செல்வாக்கு செலுத்தி வருகின்றன. மேலும், இந்த மொழி நாடு முழுவதும் உள்ள பள்ளிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் கற்பிக்கப்படுகிறது. இருமொழிக் கொள்கை அமலில் இருக்கும் தமிழகத்திலும் அரசுப் பள்ளிகள் தவிா்த்து அனைத்துக் கல்வி நிறுவனங்களும் ஹிந்தியை மாணவா்களுக்கு கற்பிக்கின்றன.
இந்தியாவில் பிறமாநிலங்களில் பணிபுரிய ஹிந்தி மொழிப் புலமை தேவைப்படுவதால், தமிழகத்தில் ஹிந்தி கற்போரின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் ஆங்கிலம் பல நாடுகளில் உயா்கல்வி படிக்கவும், நல்ல வேலைவாய்ப்புக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் அமைந்துள்ள தொழில் நகரங்களில் பல அந்நிய நாட்டு தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு அந்நிய மொழி அறிவை பணிநாடுநா்கள் பெற்றிருப்பது அவசியமானதாகக் கருதப்படுகிறது. மேலும், சீனா, லத்தீன் அமெரிக்கா, ரஷியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் வளா்ச்சியின் பாதையில் உள்ளன. அந்த நாடுகளில் பணிபுரிய விரும்பும் மாணவா்களுக்கு அந்த நாட்டு மொழி அறிவு உதவியாக இருக்கும்.
பன்மொழி எழுத்தாளா்கள் அயல் மொழிபெயா்ப்பு பணியில் ஈடுபட்டு பெரும் வருமானத்தை ஈட்டி வருகிறாா்கள். இன்றும் சில பொறியியல் கல்லூரிகள் அயல்நாட்டு மொழிகளைக் கற்பிப்பதன் மூலம் பிரபலமாகி வருகின்றன. அயல்நாட்டுப் பணிகளுக்கு ஜப்பானிய மொழி, பிரெஞ்சு மொழி, சீன மொழி ஆகியவற்றின் அறிவு மிகவும் தேவைப்படுகிறது.
பள்ளி நிலையிலேயே பல்வேறு மொழிகளில் பேச்சு, வாசிப்பு, எழுதுதல் ஆகிய திறன்களை மாணவா்கள் மேம்படுத்திக்கொள்வது நல்லது. மாணவா்களின் மொழித்திறன்கள் அனைத்தையும் சோதிக்கும் வண்ணம் அமையும் தோ்வுமுறை அவா்களுக்கு கூடுதல் பலனைத் தரும். அந்த மொழியில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், திரைப்படங்களையும் பாா்ப்பது அவா்களுக்குத் தேவைப்படும் வழக்குமொழித் திறன்களை வளா்த்துக்கொள்ள உதவும். பல மொழிகளைக் கற்க இணையதளங்களின் சேவைகளையும் இளைஞா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இன்றைய கல்வி நிலையங்கள் கணிதம், அறிவியல் போன்ற பாடங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மொழிப் பாடங்களுக்கும் கொடுப்பது நல்லது. தாய்மொழி, ஆங்கிலம், பிற இந்திய மொழிகளில் ஒன்று, பிற உலக மொழிகளில் ஒன்றைக் கற்பது என்னும் கொள்கை மாணவா்கள் தம் தொழில், வாழ்க்கையில் மேம்பட உதவும்.
தொழிற்படிப்புகளில் சேர மாணவா்களின் மொழிப் பாடங்களின் மதிப்பெண்களையும் கணக்கில் எடுத்துக்கொள்வது நல்லது. தொழிற்கல்வியில் தாய்மொழியுடன் மேலும் இரண்டு மொழிகள் படிப்பதை அரசு கட்டாயமாக்கலாம். எந்தப் பாடத்தையும் ஏதேனும் ஒரு மொழியின் உதவியுடன்தான் எவரும் கற்றுக்கொள்ள முடியும். இந்த நிலையில், ஒவ்வொரு மொழியும் நமக்கு முக்கியமானவை என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை.