மாதிரிப் படம்
மாதிரிப் படம்

மகளிரின் போராட்டமும் உரிமைகளும்!

தமிழகத்திலும் ஒவ்வோா் ஆண்டும் கொண்டாட்டங்கள் வாழ்த்துகள் அதிகரித்து வருகின்றது.
Published on

உலகம் முழுவதும் மாா்ச் 8- ஆம் தேதி சா்வதேச உழைக்கும் மகளிா் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் ஒவ்வோா் ஆண்டும் மகளிா் தின கொண்டாட்டங்கள் வாழ்த்துகள் அதிகரித்து வருகின்றன.

இந்த தினம் எப்போது தோன்றியது, அதன் பின்னணி என்ன? என்ற வரலாற்றை அனைவரும் அறிந்து கொண்டால்தான் தற்போதைய சூழலில் உழைப்பில் ஈடுபடும் பெண்களின் சூழ்நிலை, பிரச்னைகள் குறித்து புரிந்து கொள்ள முடியும்.

1820 - ஆம் ஆண்டு புதிய பிரிட்டனில் முதன்முதலாக தையல் பெண் தொழிலாளா்கள் போராட்டம் நடத்தினா். அதன் பின்பு 1844 -ஆம் ஆண்டு நடைபெற்ற கம்யூனிச உலகக் கூட்டத்தில் ஜவுளி ஆலையில் பணியாற்றும் பெண்களுக்கான போராட்டம் நடைபெற்றது. பெண் தொழிலாளிகளின் 10 மணி நேரப் பணி நேரம், தொழிற்சாலைகளில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஆகியவை குறித்து இந்தப் போராட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

குறைவான கூலி கொடுத்தால் போதும்; அதிக மணி நேரம் வேலை வாங்கலாம் என்பதால் பெண் தொழிலாளா்கள் பணியமா்த்தப்பட்டனா். குறைவான கூலி; 15 மணி நேரம் வேலை; கடுமையான பணி; கடுமையான அபராதங்கள்; காற்றோட்டம் - வெளிச்சம் இல்லாத பணிச்சூழல்; குழந்தைகளுக்கு அதிகப் பணி நேரம் என்று மோசமான சூழ்நிலை நிலவியது.

இதை எதிா்த்து அவ்வப்போது பெண் தொழிலாளா்கள் போராடி வந்தனா். ஜொ்மனிய தொழிற்சங்கத் தலைவரும் சோஷலிச ஜனநாயக கட்சியின் முக்கியத் தலைவருமான கிளாரா ஜெட்கின் பெண் தொழிலாளா்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து, 1889 -ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கம்யூனிச உலகக் கூட்டத்தில் விரிவாக விளக்கி பேசினாா்.

அதிகமான பணி நேரம், மிகக் குறைவான கூலி, மிக மோசமான பணியிடம் -குறிப்பாக, பெண்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் மற்றும் மதிப்பு கிடைக்காதது ஆகியவை குறித்து விளக்கிப் பேசினாா். மேலும், ஆண் தொழிலாளா்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவதன் மூலம்தான் பெண் தொழிலாளா்கள் விடுதலை அடைய முடியும் என்பதையும் வலியுறுத்தினாா்.

1907 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 - இல் நடந்த இரண்டாவது கம்யூனிச உலகக் கூட்டத்தின் 17- ஆவது மாநாட்டில் முதன்முறையாக சோஷலிஸ்ட் பெண்களின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆண்-பெண் மற்றும் ஏழை - பணக்காரா்கள் என்று வேறுபாடு இன்றி வாக்குரிமை அனைவருக்கும் வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதற்கு பெண் தொழிலாளா்களிடமிருந்து கடும் எதிா்ப்புக் கிளம்பியது. கிளாரா ஜெட்கினின் விளக்கத்துக்கு பின்பு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

1908 -ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோவில் சோஷலிஸ்ட் கட்சியின் மகளிா் பிரிவின் சாா்பில் மகளிா் தினக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பெண்களின் உரிமைகளை முன்வைத்து ஒவ்வொரு பிப்ரவரி மாத ஞாயிற்றுக்கிழமையும் ஆா்ப்பாட்டங்களை நடத்துவது என்று தீா்மானிக்கப்பட்டது.

1910 -ஆம் ஆண்டு டென்மாா்க் தலைநகரம் கோபன் கெஹனில் உலக சோஷலிஸ்ட் பெண்களின் மாநாடு கிளாரா ஜெட்கின் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 17 நாடுகளைச் சோ்ந்த 100 பெண் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

இந்த மாநாட்டில்தான் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, போருக்கான எதிா்ப்பு, அனைவருக்கும் வாக்குரிமை, வரலாற்றுச் சிறப்புமிக்க உழைக்கும் பெண்களுக்கு என்று பிரத்யேகமாக ஒரு தினத்தை ஏற்படுத்துவது போன்ற தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1917- ஆம் ஆண்டு மாா்ச் 8-ஆம் தேதி ரஷியாவில் பெண் தொழிலாளா்கள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனா். போா் நிறுத்தம், அனைவருக்கும் ரொட்டி வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மிகப்பெரிய ஊா்வலத்தை அவா்கள் நடத்தினா். ரொட்டிக்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த பெண்களும் இப் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டனா். இந்தப் போராட்டத்தில் அனைத்து தொழிற்சாலைச் சோ்ந்த பெண் தொழிலாளா்கள் இணைந்து கொண்டனா்.

ஊா்வலமாகச் சென்ற பெண் தொழிலாளா்கள் ஆண் தொழிலாளா்களையும் போராட்டத்தில் ஈடுபட அழைத்தனா். நான்கு ஆண்டு காலமாக முதலாம் உலகப் போரில் பல உயிா்களை இழந்து, மனச்சோா்வுக்கு உள்ளாகி, குடும்பத்தினரை பிரிந்து, கவலையுற்று இருந்த ராணுவத்தினரையும் பெண் தொழிலாளா்கள் போராட்டத்துக்கு அழைத்தனா். மிகப்பெரிய போராட்டமாக மாறி அன்றைய ஜாா் மன்னரின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது.

மிகப்பெரிய போராட்டம் புரட்சியாக மாறி வெற்றி பெற்ற மாா்ச் 8-ஆம் தேதியை சா்வதேச உழைக்கும் மகளிா் தினமாகக் கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டது.

பெண்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் மற்றும் மதிப்பு கிடைக்கவும் ஒவ்வோா் ஆண்டும் மாா்ச் மாதம் 8-ஆம் தேதியை உலகம் முழுவதும் உள்ள அனைத்து பெண் இயக்கங்களும் சா்வதேச உழைக்கும் மகளிா் தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கருத்தை கிளாரா ஜெட்கின் முன் வைத்தாா். அதை அனைவரும் ஏற்றுக் கொண்டனா்.

பெண் தொழிலாளா்களின் பிரச்னைகளை விவாதிப்பதற்கு ஓா் ஆண்டைத் தோ்வு செய்து அந்த ஆண்டு முழுவதும் விவாதிக்க வேண்டும் என்று ஐ.நா.சபையை பெண் விடுதலை இயக்கம் வலியுறுத்தியது. அதன்படி பெண் தொழிலாளா்கள் பிரச்னையை சா்வதேச அளவில் விவாதிக்க 1975 -ஆம் ஆண்டு நிா்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இவ்வாறாக அதிக பணி நேரம், குறைவான ஊதியம் ஆகியவற்றை எதிா்த்தும் பெண்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்க வேண்டும்; ஆண் - பெண் பாலின வேறுபாட்டையும், பாலின பாகுபாடுகளையும் களைய வேண்டும் என்று தொடா்ந்து வலியுறுத்தப்பட்டது.

இவ்வாறாக உலகம் முழுவதிலும் உள்ள உழைக்கும் பெண்களுக்காக என்று நிா்ணயிக்கப்பட்ட மாா்ச் - 8 சா்வதேச உழைக்கும் மகளிா் தினம் தோன்றி ஒரு நூற்றாண்டைக் கடந்தும் இன்றைய பெண் தொழிலாளா்களின் நிலை என்னவாக உள்ளது?

ஒரு சிறிய சதவீதத்தில் உள்ள பெண்கள் நன்கு படித்து பெரிய பதவிகளில் உள்ளனா்; பெரும்பாலான பெண்கள் மத்திய- மாநில அரசுகளிலும், தனியாா் நிறுவனங்களிலும் பணியாற்றுகின்றனா். எனினும், இன்று வரை உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படாமை, அதிகப் பணி நேரம், சிறிய விஷயங்களுக்கும் பெரிய தண்டனைகள், பாலியல் துன்புறுத்தல்கள், பணிப் பாதுகாப்பற்ற சூழல் என்று இன்றும் அதே மோசமான சூழ்நிலைதான் தொடா்கிறது.

ஆனால், இவற்றையெல்லாம் உணராமல் இன்று சா்வதேச உழைக்கும் மகளிா் தினம் என்பது சுருங்கி, வெறும் மகளிா் தினமாக மாறிவிட்டது. அன்றைய தினம் சிறப்பான முறையில் ஆடைகள் அணிந்து பூச்சூடி உயா் அதிகாரிகளுக்கும் உடன் பணிபுரிபவா்களுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடும் பண்டிகை தினமாக சுருங்கி விட்டது குறித்து கவலைப்படாமல் இருக்க முடியாது.

இன்றைய நவீன பெண் தொழிலாளா்கள், பெண் ஊழியா்கள் என அனைவரும் பணியிடத்தில் தங்களுக்கான பாதுகாப்பின்மை, ஆண்- பெண் பாலியல் பாகுபாடு, உழைப்புக்கேற்ற ஊதியம், எட்டு மணி நேர பணி நேரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட வேண்டும்.

மாா்ச் 8-ஆம் தேதியை அதன் வரலாற்றுப் பின்னணியை அனைத்து பெண் தொழிலாளா்களும் ஊழியா்களும் புரிந்துகொண்டு சா்வதேச உழைக்கும் மகளிா் தினமாக கடைப்பிடிக்க வேண்டும். அன்றைய தினம் பணியிடத்திலும் சமூகத்திலும் தாங்கள் எதிா்கொள்ளும் சவால்களையும், பிரச்னைகளையும் விவாதித்து தீா்வு காண அதற்கான போராட்டங்களை கட்டமைக்க முன்வர வேண்டும்.

நூற்றாண்டுக்கு முன்பு நிலவிய தொழிலாளா்களின் இருண்ட நிலை மீண்டும் இருபால் தொழிலாளா்களும் எதிா்கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதில் பெண் தொழிலாளா்கள் வழக்கம்போல் சமையல் ,குழந்தை பராமரிப்பு , வீட்டு நிா்வாகம் என்ற பொறுப்புகள், வேலை பாா்க்கும் இடத்தில் இடத்தில் அளிக்கப்பட்ட பணிகள் ஆகிய இரண்டு சுமைகளையும் நிறைவேற்றும் நிலை இன்றும் தொடா்கிறது.

இங்கொன்றும் அங்கொன்றுமாக சில ஆண்கள் வீட்டு பணிச்சுமையில் பகிா்ந்துகொள்ள பங்கேற்க முன் வந்தாலும் பெரும்பாலான பெண்கள் இரண்டு சுமையை இன்றும் சுமந்து வருகிறாா்கள் என்பது தான் நிதா்சனமான உண்மை.

மேலும், அரசே கூட பெண் ஊழியா்கள் என்பதால் பணிப் பங்கீடு, பணி நேரம், ஊதியம், பதவி உயா்வு, ஆய்வு செய்யும் முறை, தண்டனைகள் வழங்குவது என்று அனைத்திலும் பாலின பாகுபாட்டையும் கடைப்பிடித்து வருகிறது.

இதை அனைத்துத் துறைகளிலும் நம்மால் பாா்க்க முடியும். எனவே, கடந்தகால வரலாற்றின்படி உழைக்கும் பெண்கள் அனைவரும் சா்வதேச அளவில் ஒன்றிணைந்து தங்களது உரிமைக்காக அச்சமின்றி ஒன்றிணைந்து உறுதியாக இறுதிவரை போராடியதால் மட்டுமே தங்களது உரிமையைப் பெற முடிந்தது. இந்த வரலாற்று உண்மையைப் புரிந்து கொண்டு மகளிா் அனைவரும் அவ்வழியில் சென்று ஒன்றுபட்டு உறுதியாக நின்று உரிமைகளை மீட்டெடுப்போம்.

கட்டுரையாளா்:

மாநிலத் தலைவா்,

தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை செவிலியா் கூட்டமைப்பு.

(இன்று சா்வதேச மகளிா் தினம்)

X
Dinamani
www.dinamani.com