
நாடு முழுவதும் எதிர்பார்க்கப்படும் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்பும், அதுகுறித்த விவாதமும் சூடுபிடித்திருக்கும் நிலையில், தென் மாநிலங்களில் மக்கள்தொகையைப் பெருக்க முதல்வர்கள் விடுக்கும் வேண்டுகோளுக்கும், அறிவிக்கும் திட்டங்களுக்கும் பலன் கிடைக்குமா என்ற கேள்வி எழுகிறது.
அண்மையில் நாகப்பட்டினத்தில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், மணமக்கள் காலம் தாழ்த்தாமல் விரைவாக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்; அதிக மக்கள்தொகை இருந்தால்தான் அதிக எம்.பி.க்களைப் பெற முடியும் எனக் கூறி ஆசி வழங்கினார்.
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்த முறை ஆட்சிப் பொறுப்பேற்ற உடன் கடந்த 30 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த இரு குழந்தைகளுக்கு மேல் உள்ள பெற்றோர் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட முடியாது என்ற சட்டத்தைத் திருத்தினார். இனிமேல் இரு குழந்தைகளுக்கு மேல் உள்ள பெற்றோர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியும். அது மட்டுமல்ல, இரு குழந்தைகளுக்கு மேல் இருந்தால்தான் தேர்தலில் போட்டியிட முடியும் என சட்டத் திருத்தம் கொண்டுவரத் திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ள சந்திரபாபு நாயுடு, பெரிய குடும்பங்களுக்கு சலுகை விலையில் அரிசி வழங்க ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கெல்லாம் காரணம், வட மாநிலங்களை ஒப்பிடும்போது தென் மாநிலங்களில் குறைந்துள்ள மக்கள்தொகையும், அதனால் தொகுதி மறுசீரமைப்பின்போது மக்களவைத் தொகுதிகள் குறையும் என்ற அச்சமும்தான்.
அடுத்த ஆண்டு மேற்கொள்ளப்பட உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு, தமிழகத்தில் தற்போதுள்ள 39 தொகுதிகள் 31-ஆகவும், ஒருங்கிணைந்த ஆந்திரத்தில் 42 தொகுதிகள் 34 -ஆகவும், கர்நாடகத்தில் 28 தொகுதிகள் 26 -ஆகவும், கேரளத்தில் 20 தொகுதிகள் 12-ஆகவும் குறையும். அப்போது மக்களவையில் இந்த மாநிலங்களின் குரல் ஓங்கி ஒலிக்க முடியாது என்பது அரசியல் தலைவர்களின் அச்சம்.
கடைசியாக, கடந்த 2002-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது, அதற்கு முன்பு இருந்த தொகுதிகளின் எண்ணிக்கை அப்படியே தொடர்ந்தது; அதனால் பிரச்னை எழவில்லை.
தேசிய குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிய தென் மாநிலங்களில் மக்கள்தொகை குறைந்ததால் அதற்குப் பரிசு, இப்போது தொகுதிக் குறைப்பா என்று அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர். வட மாநிலங்களில் பஞ்சாப், ஹரியாணா, குஜராத் உள்ளிட்டவையும் தொகுதி இழப்புக்குள்ளாகின்றன என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
உலக நாடுகளில் முதன்முதலாக மக்கள்தொகை கட்டுப்பாட்டுக்கு தேசிய செயல் திட்டத்தை அறிவித்த நாடு இந்தியா. கடந்த 1952-இல் தேசிய குடும்பக் கட்டுப்பாடு திட்டம் அறிவிக்கப்பட்டபோது, நாட்டின் மக்கள் தொகை சுமார் 37.30 கோடி . அதே விகிதத்தில் மக்கள்தொகைப் பெருக்கம் இருந்தால் எதிர்காலத்தில் சமூக, பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்று கருதப்பட்டது. மேலும், சர்வதேச சுகாதார குறியீடுகளில் பின்தங்கி இருப்பதைக் கருத்தில் கொண்டும், பொருளாதார மேம்பாடு அடையவும் குடும்பக் கட்டுப்பாடு திட்டம் அமல்படுத்தப்பட்டது.
பொது இடங்களில் குடும்பக் கட்டுப்பாடு சின்னமான சிவப்பு முக்கோணங்கள் தோன்றின. "சிறிய குடும்பம் சீரான வாழ்வு', "இரண்டு பெற்றால் இன்ப மயம்-அதிகம் பெற்றால் அல்லல் மயம்', "நாம் இருவர்-நமக்கு இருவர்', அதன் பிறகு "நாம் இருவர்-நமக்கு ஒருவர்' என்ற வசீகரிக்கும் வாசகங்கள் பொது இடங்களில் பளிச்சிட்டன.
மக்களும் ஒத்துழைப்பு அளித்து குடும்பக் கட்டுப்பாட்டில் ஆர்வம் காட்டினர். அதனால் மக்கள்தொகை கட்டுப்படுத்தப்பட்டது. அதன் பாதிப்பு இப்போது எதிரொலிக்கத் தொடங்கியுள்ளதால், மீண்டும் மக்கள் தொகையைப் பெருக்க தலைவர்கள் வேண்டுகோள் விடுக்கவும், சலுகைகளை அளிக்கவும் முன்வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று குடும்பத்தைப் பெருக்கினால் அதனால் ஏற்படும் பாதிப்புகளை எப்படிச் சமாளிப்பது? விலைவாசி உயர்வு, வேலை இல்லாத் திண்டாட்டம், பொருளாதார நெருக்கடி, சுற்றுச்சூழல் சீர்கேடு, வாழ்விடப் பிரச்னை எனப் பல்வேறு சிக்கலான சூழ்நிலையை இன்றைய பெற்றோர் சந்தித்து வருகின்றனர். கணவன்-மனைவி இரண்டு பேரும் வேலைக்குச் சென்றால்தான் பொருளாதாரத் தேவையை எதிர்கொள்ள முடியும் என்ற நிலை. இதில் அதிகமான குழந்தைகளைப் பெற்றால் அவர்களைப் பராமரிப்பது, குழந்தை வளர்ப்புக்கான மருத்துவச் செலவு, அதனால் பெற்றோருக்கு ஏற்படும் மன அழுத்தம், உணவு, உடை, விருப்பப் பொருள்கள், போட்டி நிறைந்த சூழ்நிலையில் அதிகரித்து வரும் கல்விச் செலவு எனப் பல்முனை தாக்குதலுக்கு பெற்றோர் உள்ளாக நேரிடலாம்.
மக்கள்தொகைப் பெருக்கத்தால் கடந்த காலங்களில் பெற்றோர் மட்டுமின்றி நாடும், சமுதாயமும் எதிர்கொண்ட சிக்கல்கள் மீண்டும் தோன்றும்போது அதைச் சமாளிக்க அரசுகளிடம் உள்ள திட்டங்கள் என்ன என்ற கேள்வியும் எழுகிறது.
எனவே, கடந்த சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேலாக குடும்பத்தைக் கட்டுக்குள் வைத்துப் பழகிவிட்ட மக்களிடம் திடீரென குடும்பத்தைப் பெருக்குங்கள் எனத் தலைவர்கள் கூறுவதை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகம்தான். சீனாவில் ஒரேயடியாக மக்கள்தொகைப் பெருக்கம் ஸ்தம்பித்து விட்டது. குழந்தைகள் பெற விரும்பாத புதிய இளைய தலைமுறையினர் அதிகரித்து வருகின்றனர். அரசு எவ்வளவோ சலுகைகளை வழங்க முற்பட்டிருக்கிறது. ஆனால், யாரும் குழந்தை பெற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. மக்கள்தொகைப் பெருக்கத்தைவிட மக்கள்தொகை அணுக்கம் மிகவும் ஆபத்தானது. இந்தியாவிலும் அந்த நிலைமை ஏற்பட்டுவிடக் கூடாது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.