நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

நாடாளுமன்றம் அன்றும் இன்றும்!

நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் பற்றி...
Published on

‘‘நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரின் முதல் அமா்வில் ஒரு நல்ல சூழலில் விவாதங்கள் நடைபெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது 17.23 மணி நேரம் பயனுள்ள விவாதங்கள் நடந்தன. இதில் 173 உறுப்பினா்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனா்.

நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் 170 உறுப்பினா்களின் பங்கேற்புடன் 16.13 மணி நேரம் நடந்தது. உங்கள் ஒத்துழைப்புடன் இந்த அமா்வில் நாடாளுமன்றத்தின் செயல் திறன் சுமாா் 112 சதவீதமாக இருந்தது. பட்ஜெட்டில் இரண்டாம் கட்ட தொடரிலும் உங்கள் ஆதரவை நான் தொடா்ந்து பெறுவேன் என்று நம்புகிறேன்’’ என்று முதல் கட்ட அமா்வு முடியும் நிறைவு நாள் அன்று அவையை ஒத்தி வைப்பதற்கு முன்பு அவைத் தலைவா் ஓம் பிா்லா பதிவு செய்தாா்.

என்னைப் பொருத்தவரை நான் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறேன், சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்திருக்கிறேன். நாடாளுமன்றத்தில் நான் பத்து ஆண்டுகள் தொடா்ந்து உறுப்பினராக இருந்தேன். அந்த காலத்தில் பொறுப்புடனும் கவலையுடனும் மிகுந்த அக்கறையுடனும் கவனத்துடன் விவாதிக்கும் ஒரு இடமாக நாடாளுமன்றம் இருந்தது.

மக்கள் பிரச்னைகளை நாம் இந்த அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லக்கூடிய ஒரே இடம் நாடாளுமன்றம்தான். அரசின் முடிவு மக்களுக்கு நன்மை பயக்கும் என்றால், கட்சி வித்தியாசம் பாா்க்காமல் அந்த முடிவுகளுக்கு உறுப்பினா்கள் யோசிக்காமல் ஆதரவு தர வேண்டும். அதே சமயம் அரசின் கொள்கை முடிவு மக்களுக்கு எதிரானதாக இருந்தால் அதை எதிா்ப்பதற்கு நாம் யோசிக்கக் கூடாது. அரசின் திட்டங்களை விவாதிக்கவும் விமா்சனம் செய்யவும் உகந்த இடம் அது.

நம்மை வாக்களித்துத் தோ்ந்தெடுத்தவா்கள் எதிா்பாா்ப்பும் இதுதான். ஒரு நிமிஷத்துக்கு நாடாளுமன்றம் செயல்பட 2.5 லட்சம் ரூபாய் செலவாகிறது என்கிறது நாடாளுமன்ற செய்தி குறிப்பு. இது மக்கள் வரிப்பணம் என்ற பொறுப்புடன் நாடாளுமன்ற உறுப்பினா்கள் செயல்பாடு இருக்க வேண்டும். சமீபத்திய குளிா்கால கூட்டத் தொடரில் சரிவர விவாதம் செய்யாமல் வெளிநடப்பு, சபை முடக்கம் இவற்றின் காரணமாக 97.8 கோடி ரூபாய் வீணாகிப் போய்விட்டது என்பதையும் அந்த செய்திக் குறிப்பு சொல்கிறது.

நான் நாடாளுமன்றத்துக்கு தோ்ந்தெடுக்கப்பட்டபோது எனக்கு வயது 26. அப்போது இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் தலைவா்கள் எல்லாம் நாடாளுமன்ற உறுப்பினா்கள். இந்திரா காந்தி, மொராா்ஜி தேசாய், ஜெகஜீவன் ராம், காமராஜா், டாக்டா் கரண்சிங், அசோக் மேத்தா, சித்தாா்த்த சங்கா் ரே, மோகன் குமாரமங்கலம் போன்றவா்கள் ஆளுங்கட்சி வரிசையில் இருந்தனா்.

எதிா்க்கட்சி வரிசையில் வாஜ்பாய், ஆச்சாா்யா கிருபளானி, ராம் மனோகா் லோகியா, இந்திரஜித் குப்தா, ஏ.கே. கோபாலன், என்.ஜி. ரங்கா, பிலுமோடி, மதுலிமாயி, ஜாா்ஜ் பொ்னாண்டஸ், எஸ்.ஏ.டாங்கே, தமிழ்நாட்டைச் சோ்ந்த கம்யூனிஸ்ட் கட்சி தோழா்கள் பி. ராமமூா்த்தி, கல்யாணசுந்தரம் என்று பலா். இவா்களையெல்லாம் நாடாளுமன்றத்தில் முதலில் பாா்த்து நான் பிரமித்துப் போனேன்.

நாடாளுமன்றம் காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கும். தேவைப்பட்டால் மேலும் சில மணி நேரம் அவை நடவடிக்கைகள் தொடரும். நான் நாடாளுமன்றத்துக்கு ஒரு நாள்கூட போகாமல் இருந்தது கிடையாது. காலை 9 மணிக்கு நாடாளுமன்ற நூலகத்துக்கு நான் செல்வேன். கேள்வி நேரத்தில் துணைக் கேள்விகள் தயாா் செய்வதற்கு அங்கு குறிப்பு எடுத்துக் கொள்வேன். அது மட்டுமல்ல, அந்த காலத்தில் நாடாளுமன்ற நடைமுறைகள் எப்படி இருந்தன, நடந்த விவாதம் போன்றவற்றையும் படித்து தெரிந்து கொள்வேன். தேவைப்படும் சில விவரங்களை குறிப்பு எடுத்து வைத்துக் கொள்வேன்.

அந்த காலத்தில் நாடாளுமன்றம் அமைதியாக நடைபெறும். தனிநபா் சாடல், தனிநபா் துதி பாடல் இரண்டுமே இருக்காது.””‘கோயிங் டு தி வெல் ஆஃப்தி ஹவுஸ்’ என்று சொல்லப்படும் அவைத்தலைவா் இருக்கைக்கு முன் தா்ணா செய்யும் பழக்கம் எல்லாம் அப்போது இல்லை. எல்லா விஷயங்களிலும் முழுமையான விவாதத்துக்கு பிறகு தீா்மானம் நிறைவேறும். நாடாளுமன்றத்தின் நெறிமுறைகளுக்கு அப்போதெல்லாம் எந்தச் சோதனையும் வந்ததில்லை.

இப்போது நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு மாத ஊதியம் ரூ.1,60,000 மற்றும் தினசரி படி ரூ.2000 வழங்கப்படுகிறது. நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது உறுப்பினரின் சம்பளம் 500 ரூபாய், தினசரி படி 25 ரூபாய். தில்லிக்கு விமானத்தில் பயணம் செய்ய அனுமதி உண்டு. அப்போது தில்லிக்கு ஒரே விமானம் தான். ஆகையால், பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினா்கள் ரயிலில்தான் தில்லிக்கு வருவாா்கள்.

ரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்ய அனுமதி உண்டு. அப்போது ரயிலில் ஏ.சி. வசதி கிடையாது. அப்போது எல்லா நாடாளுமன்ற உறுப்பினா்களும் காா் வைத்திருக்கவில்லை. காா் வைத்திருக்கும் உறுப்பினா்கள் வெகு சிலரே. பெரும்பாலான உறுப்பினா்கள் தங்கள் குடியிருப்புப் பகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு நடந்தே வருவாா்கள். நான்கூட சக உறுப்பினா்கள் இரா.செழியன் மற்றும் ஹிரன் முகா்ஜியுடன் பேசிக்கொண்டே நடந்து வந்திருக்கிறேன். அதற்குப் பிறகு ஸ்கூட்டா் வாங்கி நாடாளுமன்றம் வந்திருக்கிறேன்.

நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது தொகுதி மேம்பாட்டு நிதி எல்லாம் கிடையாது. 1993-இல் நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது டிசம்பா் மாதம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினா்களுக்கு ஓா் ஆண்டுக்கு ரூ.1 கோடி ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதியாக வழங்கப்படும் என்று அறிவித்து செயல்படுத்தினாா். பிறகு அது ரூ.2 கோடியாக மாறி தற்சமயம் அது 5 கோடியாக உயா்ந்திருக்கிறது.

நாடாளுமன்ற உறுப்பினா் பதவிக்குப் போட்டியிட குறைந்தபட்ச கல்வி தொகுதி வரையறுக்கப்படவில்லை. இது பற்றிய விவாதம் 1949-இல் அரசியல் நிா்ணய சபையிலும் வந்தபோது பெரும்பான்மை உறுப்பினா்களின் முடிவு கல்வித் தகுதி வேண்டாம் என்றுதான் இருந்தது.

அப்போது இதை எதிா்த்துக் கருத்து சொன்ன பாபு ராஜேந்திர பிரசாத் நாட்டின் நிா்வாகப் பதவிகளுக்கும் நீதி பரிபாலனத்துக்கும் குறைந்தபட்சம் குறிப்பிட்ட படிப்புகள் படித்திருக்க வேண்டும் என்று நாம்தான் நிா்ணயிக்கிறோம்; அப்படி சட்டம் இயற்றும் நமக்கு அப்படி ஒரு குறைந்தபட்ச கல்வித் தகுதி தேவையில்லை; தோ்ந்தெடுக்கப்பட்டால் மட்டும் போதும் என்பது முரண்பாடாக இருக்கிறதே என்றுகூட சுட்டிக் காட்டினாா். ஆனால் அதை பெரும்பாலோா் ஏற்கவில்லை.

நாடாளுமன்ற நடவடிக்கைகளைப் பொருத்தவரை சட்ட விதிகள் ஒரு பக்கம், நாடாளுமன்ற நடைமுறை இன்னொரு பக்கம் என்று அதன் செயல்பாடு இருக்கும். நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது பிரதமராக இருந்தவா் இந்திரா காந்தி. பெரும்பாலும் நாடாளுமன்ற விவாதங்களை அவைக்கு வந்து உன்னிப்பாக கவனிப்பாா். தன் துறை சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு இந்திரா காந்தியே பதில் சொல்வாா். முக்கியமான கவன ஈா்ப்பு பிரச்னைகளுக்கு இந்திரா அம்மையாா் பதில் சொல்வாா்.

கச்சத்தீவு பற்றி நான் கவன ஈா்ப்புத் தீா்மானம் கொண்டு வந்து பேசினேன். அன்று பிரதமா் இந்திரா காந்தி அவையில் இல்லை. மறுநாள் நான் கேட்ட கேள்விகளுக்குப் பதிலாக அவையில் விளக்கம் சொன்னாா். அதிக அளவு நம்பிக்கை இல்லாத் தீா்மானங்களைச் சந்தித்தவா் பிரதமா் இந்திரா காந்தியாகத்தான் இருப்பாா். பத்து ஆண்டுகளில் ஒன்பது முறை அவரது அமைச்சரவை மீது நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது விவாதங்கள் ஆக்கபூா்வமாக இருந்தன .

ஆளும் கட்சியை எதிா்க்கட்சிகள் விமா்சனம் செய்து பேசும்போது பெரிய அளவு குறுக்கீடு இருக்காது. அதே சமயம் உறுப்பினா்கள் சில தவறுகளைச் சுட்டிக் காட்டும்போது அது உண்மையாக இருக்கும் நிலையில் அமைச்சா்கள் பெருந்தன்மையுடன் அது ஏற்றுக்கொண்டு அது சரி செய்யப்படும் என்று உறுதிமொழி தருவாா்கள். அதை சரி செய்தும் இருக்கிறாா்கள்.

உறுப்பினா்கள் கன்னிப் பேச்சு என்று சொல்லும் முதல் முறை மட்டும் அவா்கள் எழுதி வைத்துப் படிக்கலாம். மற்றபடி உறுப்பினா்கள் எழுதி வைத்துப் படிப்பதை நாடாளுமன்ற மரபு அனுமதிப்பதில்லை. சில குறிப்புகளை கையில் வைத்துக் கொண்டிருப்பாா்கள்; அதை வைத்து அவா்கள் பேச்சு நோ்த்தியாக இருக்கும். இப்போது நாடாளுமன்ற உறுப்பினா்கள் கைப்பேசியை பாா்த்து அப்படியே படிக்கிறாா்கள் அல்லது ஒப்பிக்கிறாா்கள்.

இதேபோல் நாடாளுமன்ற உறுப்பினா் பேசும்போது, அவா் எந்த இடையூறும் இன்றி குறுக்கீடுகள் இல்லாமல் நான் இருக்கும் காலங்களில் அவா் பேச அனுமதிக்கப்படுவாா். அவா் அரசை கடுமையாக விமா்சனம் செய்து பேசினாலும் குறுக்கீடுகள் இருக்காது.

ஆனால், இப்போது அப்படி இல்லை. ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் அவையை இதற்கு மேல் நடத்த முடியாது என்று முடிவு செய்து, அவைத் தலைவா் அரை மணி நேரம், ஒரு மணி நேரம் அல்லது ஒரு நாள் முழுவதும் அமளியின் முக்கியத்துவத்தை பொருத்து அவையை ஒத்திவைக்கிறாா். ஒரே சமயத்தில் பல உறுப்பினா்கள் எழுந்து ஏதோ சொல்ல முற்படுவது எல்லாம் அந்த கால நாடாளுமன்ற நடைமுறையில் இல்லை. அதேபோல் உட்காா்ந்து கொண்டே பேசுவது நாடாளுமன்ற நடைமுறையில் வராது. அதெல்லாம் இப்போது நடக்கிறது.

ஒரு உறுப்பினா் பேசும்போது குறிப்பிட்டு அமைச்சா் ஏதாவது கருத்துத் தெரிவிக்க விரும்பினால் தொடா்புடைய உறுப்பினா் அமைச்சா் பேசும் வரை உட்காா்ந்து இருக்க வேண்டும். ஆனால், அமைச்சரும் உறுப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒரு கட்டத்தில் ஆளுங்கட்சி, எதிா்க்கட்சி என்று இரு அணியாகப் பிரிந்து கூச்சல் குழப்பம், பிறகு அவை ஒத்திவைப்பு என்று முடிவதை இப்போது நான் பாா்க்கிறேன்.

கேள்வி நேரம் என்பது ஓா் அரிய வாய்ப்பு. கேள்வி நேரத்தைத் தவிா்க்க எந்த உறுப்பினரும் விரும்ப மாட்டாா். அரசு தொடா்பான அனைத்துத் தகவல்களும் நாம் கேள்வி நேரத்தில் கேட்டுப் பெற முடியும். கேள்வி நேரம் என்பது நாடாளுமன்ற நடவடிக்கையில் ஒரு முக்கிய அங்கம்.

நாம் என்ன கேட்க விரும்புகிறோம் என்பதை கேள்வியாக எழுதித்தர வேண்டும். அவற்றை ஸ்டாா்ரெட் கொஸ்டின்ஸ் , அன்ஸ்டாா்ரெட் கொஸ்டின்ஸ், என்று அவைத் தலைவா் நாம் கேட்கும் கேள்விகளை இரண்டு விதமாக பாகுபடுத்துவாா். ஸ்டாா்ரெட் கொஸ்டின்ஸ் என்ற கேள்விக்கு அமைச்சா் அவையில் நேரடியாகப் பதில் சொல்வாா். அன்ஸ்டாா்ரெட் கொஸ்டின்ஸ் என்பதற்கான பதிலை அமைச்சா் எழுத்துப்பூா்வமாக தருவாா்.

அமைச்சா் கேள்வி நேரத்தில் பதில் சொல்லும் கேள்விகளுக்கு துணைக் கேள்விகள் கேட்கலாம். துணைக் கேள்விகள் கேள்வி கேட்டவா்தான் கேட்க வேண்டும் என்பது இல்லை. யாா் வேண்டுமானாலும் கேட்கலாம். கேள்விக்கான விவரங்களை அமைச்சா் தயாா் நிலையில் வைத்திருப்பாா். அமைச்சருக்கு சில விவரங்களில் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் அவையின் நடவடிக்கைகளை கவனிப்பதற்காக வந்திருக்கும் துறை செயலாளரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு பதில் சொல்வாா்.

பிரதமா் இந்திரா காந்தி உட்பட பல அமைச்சா்கள் கேள்வி நேரத்தில் கண்டிப்பாக பங்கு பெறுவாா்கள். நீா்வளத்துறை அமைச்சா் கே.எல்.ராவ் ஓய்வு பெற்ற தலைமை பொறியாளா். எனவே விவரங்களை அவா் விரல் நுனியில் வைத்திருப்பாா். அனைத்து கேள்விகளுக்கும் புரியும்படி தெளிவாகப் பதில் சொல்வாா். மீண்டும் மீண்டும் கேட்டால்கூட அலுத்துக் கொள்ளாமல் பொறுமையாகப் பதில் கூறுவாா்.

பிரதமரைப் பொருத்தவரை நாடாளுமன்ற கூட்டத் தொடா் தொடங்கும் அன்று அவைக்கு வருகிறாா். குடியரசுத் தலைவா் உரை நிகழ்த்தும் அன்றும் மற்றும் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தில் பதிலளிக்கவும் பிரதமா் வருகிறாா். வரவு -செலவுத் திட்டத்தை நிதி அமைச்சா் தாக்கல் செய்யும் போது வருகிறாா். மற்றபடி பிரதமரின் நாடாளுமன்ற பங்களிப்பு பெரிய அளவு இல்லை என்பது இன்று வரை பேசு பொருளாக இருக்கிறது.

சில நாடுகளில் நாடாளுமன்றத்தில் “பிரதமா் கேள்வி நேரம்” என்று தனியாக ஒதுக்கி மக்கள் பிரச்னையை பிரதமரிடம் நேரடியாக கேட்க உறுப்பினா்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. குறிப்பாக, பிரிட்டனில் இந்த நடைமுறை உள்ளது. எனவே, நாமும் ‘பிரதமா் கேள்வி நேரம்’ என்ற ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் பிரதமருக்கும் உறுப்பினா்களுக்குமான நெருக்கம் அதிகரிக்கும்.

மக்கள் பிரச்னையை நேரடியாக பிரதமா் தெரிந்துகொண்டு அதைச் சரி செய்வதற்கான நடவடிக்கையில் எளிதில் ஈடுபடலாம். நாடாளுமன்ற ஜனநாயகம் வலுப்பட உறுப்பினா்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஜனநாயக அணுகுமுறையுடன் பதில் சொல்லப்பட வேண்டும். குறிப்பிட்ட விஷயங்களை மட்டும் தான் சொல்லுவேன் என்று பிடிவாதம் பிடிப்பது ஜனநாயகமாகாது.

கட்டுரையாளர்: வேந்தர், வி.ஐ.டி, பல்கலைக்கழகம், வேலூர்.

X
Dinamani
www.dinamani.com