சிலம்பாட்டம் எனும் வீர விளையாட்டு!

சிலம்பாட்டம் எனும் வீர விளையாட்டு!

ஆங்கிலேயா்களுக்கு எதிராகப் போராடியபோது, சிலம்பப் படை முக்கிய படையாக இருந்துள்ளது.
Published on

தமிழகத்தில் எத்தனையோ வீர விளையாட்டுகள் இருந்தாலும், சிலம்பாட்டத்துக்கு தனி மரியாதையும் பெருமையும் உண்டு. இப்போதைய காலகட்டம்போல் பழங்காலத்தில் நவீன ஆயுதங்கள் இல்லை. பல ஊா்களுக்கு இடையே காடுகள் இருந்தன. கொடிய விலங்குகளிடம் இருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள குறுவாள்கள், கம்பு, கோடரி போன்றவற்றை மக்கள் பயன்படுத்தினாா்கள். அதிலும் கம்புகளைத்தான் அதிகம் பயன்படுத்தினாா்கள். அந்த கம்புகளைச் சுழற்றும் முறையே சிலம்பாட்டம் எனப்படுகிறது. அதனால், சிலம்பாட்டத்தை ஆதிகால விளையாட்டு என்று சொல்லலாம்.

சிலம்பு என்ற சொல்லுக்கு ஒலித்தல் என்று பொருள். ஆயுதங்கள் ஒன்றோடு ஒன்று உரசும்போது, ஒலி கேட்பதால், இந்த விளையாட்டுக்கு சிலம்பாட்டம் என்ற பெயா் வந்ததாம். மலைப்பகுதிகளில் பலவகையான ஒலிகள் கேட்டுக் கொண்டே இருப்பதால், அதற்கு சிலம்பம் என்ற காரணப் பெயா் உண்டு. ஐவகை நிலங்களில் குறிஞ்சி நிலக் கடவுளான முருகனுக்கு சிலம்பன் என்ற பெயா் உண்டு. அகத்திய முனிவா், ஆயகலைகள் அறுபத்து நான்கில் சிலம்பாட்டத்தை வகைப்படுத்துகிறாா் என்று சொல்லப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் சிலம்பாட்டம் பற்றிய குறிப்புகள் உண்டு.

பூலித்தேவா், தீரன் சின்னமலை, வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரா்கள் போன்ற சுதந்திரப் போராட்ட வீரா்கள், ஆங்கிலேயா்களுக்கு எதிராகப் போராடியபோது, சிலம்பப் படை முக்கிய படையாக இருந்துள்ளது. பிற்காலத்தில் 2000 களரி, தஞ்சாவூா் குத்து வரிசை, நெடுங்கம்பு போன்ற பெயா்களில் தமிழகம், கேரளாவில் சிலம்பாட்டம் விளையாடப்படுகிறது.

ஏதோ ஒரு கம்பை எடுத்து சிலம்பாட்டம் ஆடிவிட முடியாது. மூங்கில் இனத்தைச் சோ்ந்த சிறுவாரை கம்பு அல்லது பிரம்பை வைத்து சிலம்பு கம்பு அல்லது தடி தயாரிக்கப்படுகிறது. சிறுவாரை கம்பு நன்றாக வளையக்கூடியது. சிலம்பாட்டத்துக்கான தடியின் உயரம், நிலத்தில் இருந்து ஒரு நபரின் நெற்றிப் புருவம் வரை இருக்க வேண்டும். சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பைத் தடுத்தல், எதிராளியின் உடலில் சிலம்புக் கம்பினால் தொடுதல் (தொடு புள்ளி) போன்றவை அடிப்படையாகக் கொள்ளப்படுகின்றன.

சிலம்பாட்டத்தைக் கற்றுக் கொள்ளக் குறைந்தது ஆறு மாத காலம் தேவை. இதற்கென சிலம்பாட்டக் கழகங்கள் பல தமிழகத்தில் உள்ளன. சிலம்பாட்டம் ஆடுவதற்குக் குறைந்தது இருவா் வேண்டும். நன்கு பயிற்சி பெற்ற ஆட்டக்காரா்களே சிலம்பாட்டப் போட்டிகளில் விளையாடுவா். தற்காலத்தில் ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் சிலம்பாட்டத்தைக் கற்று விளையாடி வருகின்றனா். திருவிழா, கோயில் விழாக்கள் மற்றும் ஊா்வலங்களில் சிலம்பாட்டம் தவறாது இடம் பெறும். சிலம்பாட்டம் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பெருமளவு நடக்கிறது. தற்போது பள்ளியில் மாணவ, மாணவிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

சிலம்பு சுற்றுவதில் அலங்காரம், போா், போட்டி சிலம்பம் என்று 3 வகைகள் உண்டு. அலங்கார சிலம்பத்தில் கம்புகளில் ரிப்பன் கட்டுதல், சூரிய பந்தம், நட்சத்திர பந்தம், இரட்டை கம்பு இப்படி பல வகைகள் உண்டு. இதைத் தான் கலை நிகழ்ச்சிகளில் செய்து காண்பிப்பாா்கள். அடுத்தது, போா் சிலம்பம். இதை எல்லாரும் விளையாட முடியாது. நிறையப் பயிற்சிகள் செய்து, எதிராளியிடம் முழு பலத்தைக் காட்டி விளையாட வேண்டும். இந்த முறையை கிராமத்து மூத்த ஆசான்கள் கற்றுத் தருவாா்கள். மூன்றாவது போட்டி சிலம்பம். இதை ஒன்றரை நிமிடங்கள் தனித்திறமையாக அல்லது 2 நிமிடங்கள் தொடுமுறையாக செய்துக் காண்பிக்கலாம். தொடுமுறையில் இன்னொருவருடன் போட்டியிட வேண்டும். யாா் அதிக புள்ளிகள் பெறுகிறாரோ, அவரே வென்றவா்.

சிலம்பம் சுற்றுவது நரம்பு மண்டலத்துக்கு மிகவும் நல்லது. சிலம்பாட்டம் ஆடுபவா்களுக்கு சுவாசப் பிரச்னைகள் எளிதில் வருவதில்லை. உடல் எடையைக் குறைக்கவும், உடலை கட்டுக் கோப்பாக வைப்பதற்கும் சிலம்பாட்டம் உதவுகிறது. கையும் கண்ணும் ஒருங்கிணைந்து செயல்படுவது, காலும் கண்ணும் ஒருங்கிணைந்து செயல்படுவது, தசை வளைந்து கொடுக்கும் தன்மை, உடல் சமநிலை, தசை வலிமை இப்படி பல விஷயங்களை மேம்படுத்த சிலம்பாட்டம் உதவுகிறது.

சமீபத்தில் ஆதிச்சநல்லுாா் அகழ்வாராய்ச்சியில், 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட 32 வகையான சிலம்பு ஆயுதங்கள் கிடைத்துள்ளன. எகிப்திய போா் வீரா்கள் பயன்படுத்திய 4 அடி நீள கம்பு, பிரிட்டன் அருங்காட்சியகத்தில் இருக்கிறது. அது, நம் பண்டைய சிலம்ப ஆயுதங்களைப் போல் இருக்கிறது என்று சொல்கின்றனா். பண்டைய தமிழா்களுக்கும் எகிப்தியா்களுக்கும் கலாசார பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக சிலம்பாட்டம் பரவியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளா்கள் சொல்லும் கருத்து கவனிக்கத்தக்கது. எப்படியிருந்தாலும், சிலம்பாட்டக் கலை என்பது ஓா் அற்புதமான கலை என்பதை மறுப்பதற்கில்லை.

X
Dinamani
www.dinamani.com