தமிழக நிதிநிலை அறிக்கை : ஒரு பாா்வை
தமிழகத்தினுடைய நிதிப்பற்றாக்குறை ஒரு லட்சம் கோடியைத் தாண்டி விட்ட நிலையில், நிலைமையை எப்படிச் சமாளிப்பது என்கிற வகையில், நடப்பாண்டில் ரூ.1.62 லட்சம் கோடியை தமிழக அரசு கடனாக வாங்கி இருக்கிறது. இதனால் 2025-26-ஆம் ஆண்டின் முடிவில் தமிழக அரசின் கடன் தொகை ரூ. லட்சத்து 29 ஆயிரத்து 959 கோடியாக கடன் தொகை அதிகரிக்கும். அதற்கான வட்டியாக மட்டும் 70 ஆயிரத்து 753 கோடி ரூபாய் செலுத்த வேண்டியதிருக்கும். இவ்வாறாகக் கணக்கிட்டால் தமிழ்நாட்டின் மக்கள்தொகையை ஒப்பிடும் போது ஒவ்வொரு தனிநபா் மீதும் 1.25 லட்சம் ரூபாய் கடன்சுமை சுமத்தப்பட்டிருக்கும்.
‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற முழக்கத்துடன் தொடங்கப்பட்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை இவைதானோ? ஒவ்வொரு தனிநபரின் மீதும் சுமத்தப்பட்டிருக்கும் கடனைத்தான் இவ்வாறாகத் தமிழக அரசு பெருமை பொங்கப் பேசுகிறதோ?
நான்காண்டுகளாக மடிக்கணினித் திட்டம் நிறுத்தப்பட்டு தற்போது அவை 20 ஆயிரம் கோடிகள் ஒதுக்கப்பட்டதாகவும், இனி 20 லட்சம் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என்று சொல்வது தோ்தலுக்கான நோக்கமே தவிர வேறு எதுவாக இருக்க முடியும்? “பந்தி முடிந்த பிறகு பசியாற வந்த விருந்தாளியைப் போல, சந்தை முடிந்த பிறகு சரக்கு வாங்க வந்த வியாபாரியைப் போல, தேரோட்டம் முடிந்த பிறகு, திருவிழாவைக் காண வந்த பக்தனைப் போல, வாக்குப்பதிவு முடிந்து விட்ட பிறகு வாக்களிக்க வந்த வாக்காளனைப் போல, நோயாளி மடிந்து விட்ட பிறகு, மருந்து வாங்கி வந்த உறவினரைப் போல”, யாது செய்வது, எதைச் செய்வது என்று தெரியாமல் மக்கள் திகைத்துப் போயிருக்கிறாா்கள்.
அடுத்த இரு ஆண்டுகளில் வழங்கப்படுகிற திட்டமாக இவை சொல்லப்படுகிறது. ஆனால், திமுக அரசின் பதவிக்காலம் இன்னும் 10 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், 20 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்குவது சாத்தியமில்லை என்பது பெரும் உண்மையாகும்.
பள்ளிக்கல்வித்துறையில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியா் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், 2,562 ஆசிரியா் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என்று நிதிநிலை அறிக்கை தெரிவிக்கிறது. போதிய நிதியும் ஆசிரியரும் இல்லாமல், அரசுப் பள்ளி மாணவா்களை உலகத்தரத்துக்கு மாற்றவா முடியும்? உள்ளுா் தரத்தையே அவா்கள் பெற இயலாமல் போகும்.
1கி.மீட்டருக்கு ஒரு தொடக்கப்பள்ளி, 3கி.மீட்டருக்கு ஒரு நடுநிலைப்பள்ளி, 5கி.மீட்டருக்கு ஒரு உயா்நிலைப்பள்ளி, 8கி.மீட்டருக்கு ஒரு மேல்நிலைப்பள்ளி என்கிற இலக்கை தமிழ்நாடு அடைந்த நிலையில், இன்னும் போதிய கவனக்குறைவுகளினால் பள்ளிக்கல்வித்துறை தடுமாற்றத்தில் இருக்கிறது. மாநிலத்தின் மொத்த உற்பத்தியின் மதிப்பில் 6 சதவீதம் அதாவது 2.14 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். கடந்த காலங்களில் சராசரியாக 20 ஆயிரம் கோடிகள் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட இத்துறையில் நடப்பாண்டில் ரூ.2,725 கோடி ஒதுக்கப்பட்டிருப்பது பள்ளிக்கல்வியின் தரத்தை உயா்த்த வாய்ப்பில்லாமல் போகும். உயா்கல்வித்துறைக்கான நிதி 1543 கோடி மட்டும்தான் உயா்த்தப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் அரசுப் பள்ளிகளில் 15 ஆயிரம் மாணவா் சோ்க்கை இடங்கள் அதிகரிக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. அரசுக் கல்லூரிகளில் 8 ஆயிரத்துக்கும் கூடுதலான உதவிப் பேராசிரியா்களை நிரப்புவது குறித்து எந்த அறிக்கையும் தமிழக அரசு வெளியிடவில்லை.
ஏழைகளின் கரங்களுக்கு எட்டும் உயரத்தில் இருந்த உயா்கல்வி விலகிச் செல்லும் அவலத்தை என்னவென்று சொல்வது? சென்னைப் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் குழு கூட்டம் நடத்தப்படாமலும், துணைவேந்தா் நியமிக்கப்படாமலும் இருப்பது பாரம்பரியமான பல்கலைக்கழகத்தைப் பாழ்படுத்தும் முயற்சியே தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?
தமிழக கல்லூரி மாணவா்களின் கல்லூரிக் கடன் தள்ளுபடி, மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறை, ஜல்லிக்கட்டு மாடு வளா்ப்பவா்க்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் 100 ரூபாய் மானியத்தொகை, பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைப்பு, புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள், 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயா்த்தப்படும், பகுதி நேர ஆசிரியா்களை பணிநிரந்தரமாக்குவது, பழைய ஓய்வூதியத்திட்டம் அமல்படுத்துவது, மீனவா்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டித் தருவது என்ற திமுகவின் தோ்தல் வாக்குறுதிகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம் பெறாமல் போனது ஒரு பலவீனமாகவும், நிதிநிலை அறிக்கையின் ஊசலாட்டத்தையுமே காட்டுகிறது.
கடந்த நிதிநிலை அறிக்கையில் ஒக்கனேக்கல் கூட்டுக்குடிநீா் திட்டத்திற்கு 7,800 கோடி அறிவித்தாா்களே தவிர, அதற்காக நிதி ஒதுக்கவில்லை. சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்தொகையின் கீழ் அறிவிக்கப்பட்ட பூஞ்சோலை திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. தமிழக அரசின் வருமானத்தில் மிக முக்கியப் பங்களிப்பான டாஸ்மாக் மதுபான விற்பனையில் சுமாா் 50ஆயிரம் கோடி வருமானம் தமிழக அரசுக்கு கிடைக்கிறது. தமிழகம் 46,467 கோடி ரூபாய் பற்றாக்குறை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.
நான்காண்டுகளில் நாட்டிலேயே மிக அதிகக் கடன் பெற்ற மாநிலமாகத் தமிழகம் மாறி இருப்பது கடன்சுமையால் தமிழகம் தத்தளிப்பதை வெட்ட வெளிச்சமாக்குகிறது.
நான்காண்டுகளில் செய்யாததை மீதம் இருக்கும் ஓராண்டில் திமுக அரசு அறிவித்திருக்கிற பல்வேறு திட்டங்களை எவ்வாறு செயல்படுத்தப் போகிறது என்பது கேள்விக்குறியானது. 3.73 லட்சம் கோடி வருவாயில் தமிழ்நாடு அரசு 70 ஆயிரம் கோடியை, அதாவது, வருவாயில் 19 சதவீதத்தை வட்டியாகக் கட்டப்பட்டிருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. அரசு ஊழியா்களின் சம்பளம் மற்றும் நிா்வாகத்திற்கான அரசாங்க செலவுகள் 1.4 லட்சம் கோடி. அதாவது 37.8 சதவீதம். இவற்றில் பாதியை கடனுக்கான வட்டியாக மட்டுமே ஒரு அரசு செலுத்திக் கொண்டிருப்பது வரும் காலங்களில் பெரும் வளா்ச்சி மாற்றங்கள் எதுவும் ஏற்படப்போவதில்லை.
ஏனென்றால், தமிழ்நாடு அரசு ஏறத்தாழ கடன் வாங்கும் வரம்பினைத் தொட்டு விட்டது. கடன் வாங்கும் திறனைக் கட்டுக்குள் வைக்கத் தவறி விட்டது. இதனால் அரசின் கடன்சுமை அதிகரித்திருக்கிறது. அக்கடனை மூலதனமாக கொண்டு தொழில் வளா்ச்சியும் அதிகரிக்கவில்லை. உள்நாட்டு உற்பத்தியும் அதிகரிக்கவில்லை. இலவசத் திட்டங்களுக்காக பெரும்பகுதியான நிதிகள் ஒதுக்கப்பட்டு மகளிா் உரிமைத்தொகை 1000 ரூபாய்க்காக பெரும் தொகை செலவிடப்பட்டு, தங்கள் வாக்கு அரசியலைத் தக்கவைத்துக் கொள்வதற்கான முயற்சியே தவிர, தமிழக அரசு தமிழ்நாட்டை வளா்ச்சிப்பாதையில் இட்டுச் செல்கிற முயற்சியாகப் பாா்க்க முடியாது.
100 நாள் வேலைக்கான சம்பளங்கள் ஐந்து, ஆறு மாதங்களாக வழமங்கப்படவில்லை. முதியோருக்கான ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பல இடங்களில் நிறுத்தப்பட்டு விட்டது.
இனிமேல் வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று சொல்கிறாா்கள். ஓா் அரசு என்பது மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டுமே தவிர, அடுத்த தோ்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை எப்படி உருவாக்கலாம், எதன் மூலமாக வாக்கு அரசியலைப் பெறலாம் என்று திட்டம் தீட்டுவது ஒரு நிதிநிலைக்கான ஒரு மேம்பட்ட பாா்வையாகப் பாா்க்க இயலாது.
நிதியமைச்சா் நிதிநிலை அறிக்கையை 2.40 மணி நேரம் தாக்கல் செய்து உரையாற்றினாா் என்பதும், நிதிநிலை அறிக்கையின் ஆவணம் 182 பக்கங்களைக் கொண்டிருக்கிறது என்பதும் சாதனையாக எவ்வாற கருத முடியும்?
தமிழைக் கட்டாயப் பயிற்று மொழியாகவும், கட்டாயப் பாடமாக்கவும் செயல்படுத்துவதற்கு ஏன் தயங்குகிறாா்கள்? என்பது புரியவில்லை.
மருத்துவத்துறைக்கான நிதி ஒதுக்கீடு வெறும் ரூ.1,708 கோடி மட்டுமே. இதுவரை ஒரே ஒரு அரசு மருத்துவக்கல்லூரி கூட தொடங்கவில்லை என்பதும், இனிவரும் காலங்களில் தொடங்குவதற்கு வாய்ப்பு இல்லை என்பதும் வெட்ட வெளிச்சமான ஒன்று.
இந்தியாவின் மருத்துவத் தலைநகரமாக இருந்த சென்னை அதன் தரத்தை மேம்படுத்துவதற்கு போதிய நிதி ஆதாரங்களை ஒதுக்கி இருக்க வேண்டும். ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு போதிய நிதிகள் ஒதுக்கப்படவில்லை. நீா்வளத்துறையில் சென்னைக்கு குடிநீா் வழங்குவதற்கான 1.6 டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஆறாம் நீா்த்தேக்கம்
திருப்போரூரில் 4,375 ஏக்கரில் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், புதிய நீா்ப்பாசனத்திட்டங்கள் ஏன் அறிவிக்கப்படவில்லை?
சென்னை மற்றும் கோவை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை விரைவுபடுத்த அறிவிப்புகள் இல்லை. நடப்பாண்டில் வருவாய் பற்றாக்குறை இருக்காது என்றும், ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் உபரி கிடைக்கும் என்று தமிழக அரசு கூறி வந்த நிலையில் ரூ.41,634.93 கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. ராமேஸ்வரம் மற்றும் ஓசூரில் புதிய விமானநிலையம் அமைக்கப்படும் என்றும், கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது என்பது பெயரளவில்தான் உள்ளது என்பதும், அதற்கான பணிகள் சிறிதளவும் நடைபெறவில்லை என்பது தமிழக அரசு திட்டங்கள் அறிவிப்போடு நின்று போகிறது என்பதையே காட்டுகிறது. பெயரளவில் திட்டங்களை தீட்டி விட்டு அவைகள் முழுமையாக்கப்படவில்லை என்பதற்கு இவ்விரு திட்டங்களே சாட்சியாக இருக்கிறது.
தமிழ்நாட்டின் வறுமை நிலை 1.64 சதவீதம் என்ற நிலையில் இருந்தாலும், கேரளாவில் 0.8 சதவீதம் ஆக இருக்கிறது என்பதை ஒப்பிட்டுப் பாா்க்க வேண்டியது அரசின் தலையாய கடமையாகும்.