
அதிகாரம் தனி மனிதனை வலிமையுள்ளவனாக மாற்றுகிறது. மக்களாட்சியில் ஒவ்வொரு தனி மனிதனும் உள்ளாட்சி நிர்வாகம், சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகிய இடங்களில் தன் நலனுக்கான குரல் ஒலிக்க வேண்டும் என்று விரும்புகிறான். அதற்காக தேர்தலில் தன் நலன் காப்பவர் என்று நம்புவருக்கு வாக்களித்து அனுப்புகிறான். இவர்களுக்குக் கொடுக்கப்படும் அதிகாரம் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே. எனினும் இவர்களின் அதிகாரம் வலிமைமிக்கது.
மக்களால்தான் இவர்களுக்கு இந்த அதிகாரம், பதவி, பெருமை, பல்வேறு சலுகைகள், ஓய்வூதியம் போன்றவை கிடைக்கின்றன. தேர்தல் நேரங்களில் மட்டும் பொதுமக்களின் வீடு தேடி வரும் அவர்களை, அவர்கள் அதிகாரத்துக்கு வந்த பிறகு சந்திப்பது என்பது சாமானிய மக்களுக்கு சாத்தியப்படுவதில்லை.
மக்களுடைய பிரதிநிதியாக உள்ளாட்சி வார்டு உறுப்பினர் பதவி முதல் அமைச்சர் பதவி வரை பல்வேறு பொறுப்புகளை வகிக்கும் இவர்களை தங்களுடைய நலனுக்காகப் பாடுபடுவார்கள் என மக்கள் திடமாக நம்புகிறார்கள். அவர்களைக் கொண்டுதான் மாநில அரசும், மைய அரசும் அமைகின்றன. அவர்களால் மட்டுமே பொது மக்களின் வாழ்வில் நலத்தைக் கொண்டு வர முடியும்.
அதே போல், அரசு அதிகாரிகள் மத்திய, மாநில தேர்வாணையங்கள் நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று பதவிகளுக்கு வருகிறார்கள். எனவே, அவர்கள் பொது வாழ்வில் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் பாரபட்சமின்றியும் நடந்து கொள்வார்கள் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
பொதுமக்கள் நலன் சார்ந்த பணிகளுடன் தன் அலுவலகப் பணியாளர்கள் தவறு செய்யும்போது, அவர்களுக்குத் துணை போகாமல் அவர்களைத் திருத்தி செயல்பட வைப்பதும் இவர்களுடைய கடமையாகும்.
அதிகாரிகளைப் பொருத்தவரை ஓர் அலுவலகத்தில் தொடர்ந்து மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை மட்டுமே பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள். அந்த கால வரையறைக்குள் அந்தப் பகுதியில் வாழும் மக்களுக்கு அரசின் நல திட்டங்களை அவர்களால் செயல்படுத்த முடியும்.
கிராம நிர்வாக அலுவலர்கள் முதல் மாவட்ட ஆட்சியர் வரை இவ்வாறு பதவியின் மூலமாக அதிகாரத்தைப் பெறுகிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் தம்முடைய நேரத்தை மக்கள் நலனுக்காகத் திட்டமிட்டு செயல்படுத்தும்போது கண்டிப்பாக சமுதாயத்தில் விரும்பத்தக்க மாற்றங்களைக் கொண்டு வரமுடியும்.
அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் கட்சி வேறுபாடுகளாலும் தனிப்பட்ட கொள்கைகளிலும் முரண்பட வாய்ப்புகள் உண்டு. எனினும், பொதுவெளியை அதற்கு பழி தீர்த்துக் கொள்ள பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. அவர்களுடைய மக்கள் நலன் சார்ந்த பணிகளில் சுணக்கம் எங்கேயோ ஒரு நிலையில் இருப்பதால்தான் சமூகத்தில் தற்போதெல்லாம் குற்றங்கள் பெருகி வருகின்றன. வறுமையும், படிப்பறிவின்மையும் தொடர்கதைகளாகி வருகின்றன. குறிப்பாக, ஆசிரியர்கள், மருத்துவர்கள், காவல் துறை அதிகாரிகள், நீதித் துறைப் பணியாளர்கள், போக்குவரத்து ஊழியர்கள், உணவு பகிர்மான துறை ஊழியர்கள் போன்றவர்களின் பணி, விளிம்பு நிலை மக்களுக்கு மிகவும் பயனளிப்பவை. எனவே அவர்கள் தம் பணிகளில் நேர்மையாக இருப்பதுடன்,தேவையற்ற கால தாமதத்தையும் தவிர்க்க வேண்டும்.
பல அரசு அதிகாரிகள் அரசியல் அதிகாரிகளைத் திருப்திப்படுத்தவே தன்னுடைய அதிகாரத்தை பல நேரங்களில் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
இங்கு மக்கள் பணியில் அவர்களின் நேர்மை கேள்விக்குறியாகி பேசு பொருளாகிறது. ஊடகங்கள் மூலம் பல்வேறு அதிகாரிகளைப் பற்றிய ஊழல் புகார்களும் மற்ற வகையான புகார்களும் நமக்கு தெரியவரும்போது நமக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது.
பொதுவாழ்வில் நேர்மை என்பது அதிகாரிகளுக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் மிகவும் அவசியம். இவர்கள் கையூட்டுக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அரசு அதிகாரிகள் பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து மாத வருமானத்தை பெறுபவர்கள். இந்த நிலையில் பொது
மக்களுடைய நலம் மட்டுமே அவர்களுடைய முதன்மைப் பொறுப்பாக இருக்க வேண்டும். விரைவாக கோப்புகளை முடித்து அதன் பலன்கள் விரைவாக மக்களைச் சென்று சேர தேவையான முயற்சிகளை அவர்கள் எடுக்க வேண்டும்.
நமது நாட்டு மக்களவை உறுப்பினர்களில் 2009 } ஆம் ஆண்டு 58 சதவீதமாக இருந்த கோட்டீஸ்வரர்கள், 2019} இல் 88 சதவீதமாகவும், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 93 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது வரவேற்கத்தக்கது.
மேலும் அவர்களின் மாத ஊதியம் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1.24 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதலாக, தற்போதைய மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்திர ஓய்வூதியமும் ரூ. 25,000 }இலிருந்து ரூ.31,000 என்று உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான பொருளாதார ஏற்றத்தை சாமானிய மக்களும் பெற்றால் மகிழ்ச்சியடைவார்கள்.
அதிகாரம் என்பது பதவிவழியாகவோ, மக்களாட்சி பிரதிநிதி என்கிற முறையிலோ எப்படி இருந்தாலும், அது மக்கள் நலனுக்காக மட்டுமே முறையாகப் பயன்பட வேண்டும். பதவியிலிருப்பவர்களின் ஒவ்வொரு கையொப்பத்துக்கும் அதிகாரம் உண்டு. அரசு அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் மக்கள் நல திட்டங்கள் அவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் சென்றடைய சுணக்கமில்லாமல் பணியாற்ற வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.