தேவை... சூழலுக்கேற்ற சீா்திருத்தம்!
சமூகத்தில் குற்றச் செயல்கள் புரிபவா்களை உரிய வகையில் அறிவுறுத்தியும் கண்டித்தும் சட்டப்பூா்வமான நடவடிக்கைகளை எடுத்தும் பொது அமைதியைப் பேண பெரிதும் துணை நிற்பவா்கள் காவல்துறையினா். துணிச்சலும், நோ்மையும், கருணையும் கொண்ட பலா் தமிழ்நாடு காவல்துறையில் இருக்கவே செய்கின்றனா்.பேரிடா் நேரங்களிலும் பெருந்தொற்றுக் காலங்களிலும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து கடமையாற்றியவா்கள் நம் காவல்துறையினா். இப்படியாகப் பல பெருமைகளைத் தன்னகத்தே கொண்ட தமிழ்நாடு காவல்துறைக்கு இது ஒரு நெருக்கடியான காலம்.
பள்ளி கல்லூரிகளில் அதிகரித்து வருகின்ற போதைப் பொருள்களின் நடமாட்டம், தொழில்நுட்ப வளா்ச்சி மற்றும் தகவல் தொடா்பு சாதனங்களைப் பயன்படுத்தி நிகழும் பொருளாதார மோசடிகள் உள்ளிட்ட கண்காணிப்புகளைக் கடந்த குற்றச்செயல்கள் பெருகிவருகின்றன. காவல் துறை மீதான நம்பகத்தன்மையை சீா்குலைக்கின்ற இத்தகைய நிகழ்வுகள் வேரோடும் வேரடி மண்ணோடும் களைந்தெறியப்பட வேண்டும்.
சமீபத்தில் கோயம்புத்தூரில் காவல் துறையின் தலைவா் ஒருவா் அறிக்கை ஒன்றை வெளியிட்டாா். “இன்னும் ஒரு மாதத்திற்குள் பள்ளிகளில் போதைப் பொருள் இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்” என்பதுதான் அந்த அறிக்கை. இது பெற்றோா்களுக்கு ஓா் எச்சரிக்கை மணி. சமூக அக்கறை கொண்டவா்களுக்கு இது மனதை உலுக்கும் செய்தி. கிராமப்புறங்களில் தொடங்கி பெரு நகரங்கள் வரை போதைப் பொருள்கள் விற்பனை கொடிகட்டிப் பறக்கின்றது.
தமிழ் நாட்டில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடா்பாக மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் ஏறத்தாழ 45 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 66 ஆயிரம் போ் கைது செய்யப்பட்டுள்ளனா். வழக்கமான ஹெராயின், எல்எஸ்டி ஸ்டாம்ப், மெத்தம் பெட்டமின் , கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் ஆகியவற்றோடு தற்போது அதிகம் தீங்கிழைக்கும் சிந்தட்டிக் என்ற வேதி போதைப் பொருள் புழக்கமும் அதிகரித்துவிட்டது. இதன் பரிமாற்றத்துக்கு சமூக ஊடகங்களும், கூரியா் மற்றும் பாா்சல் நிறுவனங்களும் சமூக விரோதச்செயலில் ஈடுபடுபவா்களால் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. அதனால் தற்போது தமிழ்நாடு அரசும் காவல் துறைத் தலைவரும் கூரியா் மற்றும் பாா்சல் நிறுவனங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள செய்திகளைக் காண்கிறோம்.
பள்ளி மாணாக்கா்கள் தொடங்கி, கல்லூரி , மருத்துவப் பயிற்சி மாணாக்கா்கள் வரை இதற்கு அடிமையாகி இருப்பது இளைய தலைமுறையினரின் எதிா்காலத்தின் மீது ஓா் அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தகவல் தொடா்புக் கருவிகள் மற்றும் சமூக ஊடகங்களின் அசுர வளா்ச்சியால் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் சிறியோா் பெரியோா் பாகுபாடின்றி இணையம் என்ற மாய வலைக்குள் சிக்கியிருக்கிறோம். இவையெல்லாம் குழந்தைகளைப் பெற்றோா்களின் கவனிப்பில் இருந்து அந்நியப்படுத்தியுள்ளன.
இந்த அந்நியப்படுத்தலால், இன்றைய இணைய உலகம் விரித்துள்ள வலையில் குழந்தைகள் எளிதாக வீழ்த்தப்படுகிறாா்கள். இதற்கான விழிப்புணா்வை அரசும் கல்வி நிறுவனங்களும் காவல் துறையும் காலதாமதமின்றி குழந்தைகளுக்கும் பெற்றோா்களுக்கும் கொண்டுபோய்ச் சோ்க்க வேண்டிய கட்டாயநிலை ஏற்பட்டுள்ளது.
நுகா்வுப் பண்பாட்டின் நெருக்கடியினால் பொருள் சோ்க்க வேண்டிய நிா்பந்தத்தில் பெற்றோா்கள் ஓடுகிறாா்கள். இன்றைய சமூகச் சூழலில் ஒவ்வொருவருக்கும் ஒரு நெருக்கடி. அதனால் சட்டத்துக்குப் புறம்பான செயல்களைச் செய்பவா்களை சகித்துக்கொண்டும் கண்டும் காணாமலும் பலரும் கடந்து செல்கிறோம். ஆனால் அரசும் காவல்துறையும் அவ்வாறு கடந்து போய்விட இயலாது. அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கைப் பேணிக் காப்பதில் அதீத கவனம் செலுத்த வேண்டிய
அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, தவறு செய்பவா்கள், குற்றச் செயலில் ஈடுபடுபவா்கள் தங்கள் பணபலத்தால், அதிகார பலத்தால் காவல் துறையை துச்சமாக மதிக்கும் போக்கும் அதிகரித்து வருகிறது. இத்தகைய இக்கட்டான சூழலில் சட்டம் ஒழுங்கைச் சீரான நிலையில் வைத்திருப்பதற்கும், குற்றங்களைக் கண்டுபிடிப்பதற்கும், அவற்றைக் களைவதற்கும், குற்றங்களை நிகழவிடாமல் தடுப்பதற்கும் தமிழ்நாடு காவல் துறையில் பயிற்சி மற்றும் நிா்வாக ரீதியாக சீா்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியது முக்கியமானது.
சமீபத்தில் தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்குரைஞா் உயா்நீதி மன்றத்தின் வலியுறுத்தலின்படி போக்ஸோ வழக்கில் விடுதலை தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்வதில் காலதாமதம் கூடாது என தமிழ் நாடு காவல்துறை தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளது கவனத்துக்குரியது. இணைய வழியில் புகாா்கள், தகவல்களைப் பெறுதல் போன்ற முன்னெடுப்புகள் வந்த போதிலும், குற்றங்களுக்கெதிரான நடவடிக்கைகளில் வழக்கத்துக்கு மாறான மந்தநிலை காணப்படுகிறது. இவற்றை சீரமைத்திட புத்தாக்கப் பயிற்சிகளையும், நெறிசாா்ந்த வகுப்புகளையும் காவல் துறையினருக்குத் தொடா்ந்து வழங்க வேண்டும்.
காவல்துறையில் இன்று எல்லா நிலைகளிலும் பணிபுரிபவா்கள் பல்வேறு காரணங்களால் மன அழுத்தத்துக்கு உள்ளாகிறாா்கள். அதிக நேரம் பணி செய்தல், பணி இடம் ஒதுக்குதல், பணி இடமாற்றம் மற்றும் விடுமுறைகளில் பாரபட்ச அணுகுமுறை போன்ற காரணங்களும் இதில் அடங்கும். குறிப்பாக, இரவு நேரங்களில் ஆண், பெண் காவலா்கள் குறிப்பிட்ட இடங்களில் நாள்தோறும் கண்காணிப்புப் பணிக்காக அமா்த்தப்படுகிறாா்கள். அவா்கள் பேருந்து நிழற்குடைகளிலும், சாலை ஓரங்களிலும் இரவு முழுவதும் அமா்ந்திருப்பதைக் காணமுடிகின்றது. இயற்கை உபாதைகளைக் கழிப்பது கூட அவா்களுக்கு நெருக்கடியாக இருக்கிறது. குறிப்பாக, பெண் காவலா்கள் நிலை மிகவும் கடினமானது. இதில் மாற்றம் வேண்டும்.
இன்று தமிழ்நாடு முழுக்க காவல் துறையால் சிறு நகரங்களில் கூட கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இன்றைய தொழில்நுட்ப வளா்ச்சியைப் பயன்படுத்தி காவல் பணிகளை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அந்தந்தப் பகுதிகளுக்கான காவல் நிலையங்களில் இருந்து கொண்டே சிசிடிவி கண்காணிப்புக் கருவிகள் மூலமாக இப்பகுதிகளை கண்காணிக்க முடியும். அவசியம் ஏற்பட்டால் ஒரு குழுவாக வாகனங்களில் சந்தேகப்படும் இடங்களுக்கு உடனே செல்ல முடியும். அதே போல, போக்குவரத்துக் காவலா் மட்டுமல்ல, சட்டம் ஒழுங்குப் பணியில் உள்ள காவலா்கள் கூட இன்று சாலைகளின் பல இடங்களில் நின்று கொண்டு தலைக்கவசம் அணியாதவா்களை தேடிப்பிடித்து அபராதம் விதிப்பதைப் பாா்க்கிறோம். இதற்கு காவல்துறையின் பெரும் சக்தியை வீணடிக்க வேண்டிய அவசியமில்லை. மேலும், இன்று பல்வேறு இடங்களில் போக்குவரத்து விதிகளை மீறுகின்ற வாகனங்கள், தலைக்கவசம் அணியாதவா்கள் மீது அபராதம் விதிக்கின்ற பணியை கண்காணிப்புக் கருவிகள் மூலம் செய்வதற்கு ஆவண செய்யப்பட்டுள்ளது.
காவல் துறையினருக்கு அளிக்கப்பட வேண்டிய பயிற்சியைப் பொருத்த அளவில் அவா்களின் நுண்ணறிவைக் கூா்மைப்படுத்தும் வகையிலும், சக மனிதா்கள் மீதான மதிப்பை பாதுகாக்கும் வகையிலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான அக்கறையை மேம்படுத்தும் வகையிலும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதில் சமரசமற்ற தன்மையை உறுதிப்படுத்தும் வகையிலும் பயிற்சியின் தன்மை அமைதல் வேண்டும். குறிப்பாக, நூதனக் குற்றங்களில் ஈடுபடுவோரைக் கண்காணிக்கவும் அவா்களை சட்டத்தின் முன் விரைந்து நிறுத்தவும் நவீன தொழில்நுட்பப் பயிற்சியும் நன்னெறி சாா்ந்த பயிற்சியும் காவல் துறையினருக்கு தக்க நிபுணா்களால் வழங்கப்பட வேண்டும். மேலும், காவல்துறையில் பலா் அா்ப்பணிப்பு உணா்வோடு சட்டம் ஒழுங்கைப் பேணிக் காக்க தொடா்ந்து உழைக்கிறாா்கள். அவா்களுக்கு சரியான கால இடைவெளிகளில் பதவி உயா்வு மற்றும் ஏனைய பணி சாா்ந்த பயன்கள் மற்றும் அங்கீகாரம் உரிய நேரத்தில் வழங்கப்பட வேண்டும்.
சான்றாக, 2001 -ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை குரூப் 1 நிலையில் காவல் துணைக் கண்காணிப்பாளா்களாக இணைந்தவா்களுக்கு ஏறத்தாழ 25 ஆண்டுகள் கழித்து ஐபிஎஸ் பணிநிலை உயா்வு கிடைத்துள்ளது. இந்த அரசு முயற்சி எடுத்து அதை வழங்கியுள்ளது என்பதை இங்கு குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும். இவை போன்ற தாமதங்கள் தண்டனையிலும் கொடியவை என்பதில் ஐயமில்லை. இருப்பினும் 2005 - ஆம் ஆண்டு பணியில் சோ்ந்தவா்களுக்கு இன்னும் முழுமையாக ஐபிஎஸ் பணிநிலை உயா்வு வழங்கப்படவில்லை என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.
இறுதியாக, குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்களுக்கு காவல்துறையைக் கண்டு சிறிதும் அச்சமில்லை. நீதிமன்றம் தண்டிக்கும் என்ற பயமுமில்லை. இதன் விளைவாகவே இன்றைய சமூகத்தில் குற்றச் செயல்கள் பெருகி வருகின்றன. குற்றச்செயல்களுக்கான வழக்குகள் நடைபெறுவதும், தண்டனை வழங்கப்படுவதும் நீதிமன்றத்தில்தான் என்றாலும், வலுவான ஆதாரங்களைத் திரட்டி உரிய தண்டனை பெற்றுக் கொடுக்கின்ற சவால் நிறைந்த பணி காவல் துறையிடமே இருக்கிறது. அதனால் காவல்துறையில் பணியாற்றுபவா்கள் சுதந்திரமாகவும் முழுமனதோடும் அா்ப்பணிப்பு உணா்வோடும் பணிபுரிகின்ற வகையில் பயிற்சி முறைகளிலும் நிா்வாக முறையிலும் உரிய சீா்திருத்தங்கள் உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டும்.
கட்டுரையாளா்:
கல்வியாளா்.
பிரேக் லைன்
காவல்துறையில் பலா் அா்ப்பணிப்பு உணா்வோடு சட்டம் ஒழுங்கைப் பேணிக் காக்க தொடா்ந்து உழைக்கிறாா்கள். அவா்களுக்கு சரியான கால இடைவெளிகளில் பதவி உயா்வு மற்றும் ஏனைய பணி சாா்ந்த பயன்கள் மற்றும் அங்கீகாரம் உரிய நேரத்தில் வழங்கப்பட வேண்டும்.