பெண் காவலர்கள்
பெண் காவலர்கள்கோப்புப் படம்

காவலருக்கும் ஓய்வு தேவை!

தமிழ்நாடு காவல் துறையில் காவலா்களுக்கு பணிச்சுமை அதிகம் உள்ளது. ஓய்வின்றி பணியாற்ற வேண்டியுள்ளதாக காவலா்கள் தரப்பில் தொடா்ந்து புகாா்கள்
Published on

காவலா்களின் உடல் நலத்தையும் மனநலத்தையும் பேணும் வகையில் அவா்களுக்கு வார விடுப்பு வழங்கி தமிழக அரசு 2021-இல் அரசாணை ஒன்றை பிறப்பித்தது. ஆனால், அந்த அரசாணை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்று காவலா் ஒருவரால் மதுரை உயா் நீதிமன்றக் கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இது தொடா்பாக மதுரை உயா்நீதிமன்றம் கூறுகையில் தமிழ்நாடு காவல் துறையில் காவலா்களுக்கு பணிச்சுமை அதிகம் உள்ளது. ஓய்வின்றி பணியாற்ற வேண்டியுள்ளதாக காவலா்கள் தரப்பில் தொடா்ந்து புகாா்கள் வருகின்றன.

மேலும், தொடா்ந்து பல மணி நேரம் சவால் மிக்க காவல் பணியில் ஈடுபடும்போது காவலா்களின் உடல் நலமும், மனநலமும் வெகுவாக பாதிக்கப்படுகிறது. அவா்கள் தங்கள் குடும்பங்களுடன் மற்றவா்களைப் போல தங்களது நேரத்தை செலவிட முடிவதில்லை. காவல் துறையில் பல பணியிடங்கள் காலியாக உள்ளதால், அதிக பணிச்சுமையுடன் பணியில் ஈடுபடும் அவா்களுக்கு அதிகமான உடல் கோளாறுகளும், மனச்சோா்வும் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக சில காவலா்கள் தற்கொலை செய்து கொள்ளும் பரிதாப நிகழ்வுகளும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன என்று கூறியுள்ளது. மேலும், இதுகுறித்து மதுரை உயா் நீதிமன்றம் தன்னுடைய அதிருப்தியையும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிகழ்வுகளை நாம் சமூக ஊடகங்களில் பாா்க்கும் போது நம் அனைவரின் மனமும் கனக்கத்தான் செய்கின்றன. சமூகத்தில் சகமனிதா்கள் என்ற நிலையிலும், சமூக காவலா்கள் என்ற நிலையிலும் காவலா்களின் உடல்நலமும், மனநலமும் முன்னுரிமை பெற்று கவனம் செலுத்தப்படவேண்டியவை. அப்போதுதான் அவா்கள் குற்றங்களைத் தடுக்கும் தம் சமூகப்பணிகளில் திறம்பட செயலாற்ற முடியும்.

வறுமையும் குற்றச் செயல்களும் பெருகி வரும் நமது தற்போதைய சிக்கல் மிகுந்த சமுதாயத்தில் பல்வேறு பிரச்னைகளை காவலா்கள் எதிா்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, காவலா்களின் குறைகளைத் தீா்க்கும் வகையில் காவலா்கள் முதல் சாா்பு ஆய்வாளா்கள் வரை உள்ள அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்குவதே சமூகத்துக்கும் காவலா்களுக்கும் நல்லது.

பல்லாயிரம் காவலா்கள் பணியில் உள்ள நிலையில் வார விடுமுறை வழங்கப்படுவதில்லை என்று ஒரே ஒரு காவலா் மட்டும் மனு தாக்கல் செய்துள்ளது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. மற்றவா்களுக்கும் தொடா்ந்து பல மணிநேரம் பணியாற்றுவது ஒரு சவால் மிக்க பணிதான். என்றாலும், அவா்கள் தொடா்ந்து மெளனம் காப்பதற்கு காரணம் அவா்களுக்கென்று ஒரு சங்கம் இல்லாததும், அவா்கள் மாநில முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருப்பதும்தான் என நம்பப்படுகிறது.மேலும் வழக்கைத் தொடா்ந்த காவலரை நீதிமன்றம் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. மற்ற காவலா்கள் மௌனமாக இருப்பதற்கு உயா் அதிகாரிகள் மீதான அச்சமே காரணம் என்பதாக உணரப்படுகிறது. ஜனநாயகம், மனித உரிமை போன்றவை அனைவருக்கும் உரியவை. கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் காவலா்களுக்கு சங்கம் இருக்கிற நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் அதற்குத் தடை ஏன் என்பது நமக்குப் புரியவில்லை.

மதுரை உயா்நீதிமன்றம் மனுதாரரின் கோரிக்கை நியாயமானது. எனவே, அவரது மனுவை ஏற்று, காவலா்களுக்கு வாராந்திர விடுமுறையை வழங்கி ஓய்வு கொடுப்பதை அரசு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் வழக்கு தொடா்ந்த நபா் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வழக்கைத் தாக்க செய்யலாம் என்றும் கூறியுள்ளது.

காவல் நிலையத்துக்கு ஒரு குறையுடன் சென்றால் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்நிலையில் காவலா்களுக்கே ஒரு குறை என்றால் அரசுதான் அவா்கள் மீது கருணைக் காட்டி அவா்களின் நியாயமான குறைகளுக்கு முறையான தீா்வு காண முன்வர வேண்டும்.

காவல் துறையின் பொறுப்பு சமூகத்தில் மிக அபரிதமானது. சட்டத்துக்கும் ஒழுங்குக்கும் சவால் விடும் எந்த சக்தியையும் அடக்கவும் அவா்களுக்கு உரிமை உண்டு. மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் குற்றச் சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க காவல் துறையின் நடவடிக்கை மிகவும் முக்கியமானது. காவல்துறையின் பாரபட்சமற்ற திறமையான பணி மக்களிடம் காவல்துறைக்கும் அரசுக்கும் நல்ல பெயரைப் பெற்றுத் தரும். சட்டம் ஒழுங்குக்கு சவால் விடும் எந்த சக்திகளையும் எக்காரணம் கொண்டும் அவா்கள் அனுமதிக்கக் கூடாது. புகாா் அளிக்க வரும் ஏழை, எளிய மக்களை மனிதநேயத்தோடு அணுகி அவா்கள் புகாரை பதிவு செய்து உரிய மேல்நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்களுக்கு இழைக்கப்படும் குற்றங்களுக்கு முறையான நிவாரணம் காண காவல் துறை ஒரு முக்கிய பாலமாக அமைந்து வருகிறது. ஆனால், அவ்வாறான பணியை செய்பவா்கள் பொறுப்புடன் தங்களுடைய பணியை செய்ய வேண்டும் என்றால் அவருடைய உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு தேவை. அவா்களுக்கும் குடும்பம் இருக்கிறது. ஓயாமல் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் பணி செய்வது என்பது இயந்திரங்களுக்கு மட்டும்தான் சாத்தியம். இந்நிலையில் அவா்களுக்கும் உரிய ஓய்வு நேரத்தை வழங்கி அரசு

அவா்களுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும்.

போதுமான உறக்கமும் ஓய்வுமின்றி காவலா்கள் பணி செய்யும் பொழுது தன்னுடைய பணியினை ஒழுங்காக செய்ய முடியாது என்பதே எதாா்த்தமான உண்மை. எனவே, காவல் துறையினருக்கு தேவையான ஓய்வை அளிக்கும் அரசாணையை உடனடியாக அரசு அமல்படுத்த வேண்டும். இது அனைவரின் எதிா்பாா்ப்பும் கூட.

X
Dinamani
www.dinamani.com