புதியதோர் நகரம் செய்வோம்!

கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on
Updated on
3 min read

குடிபெயர்தல் தொன்றுதொட்டு நடந்து வரும் நிகழ்வு. பல காரணங்களுக்காக மக்கள் இடம்விட்டு இடம் போகிறார்கள். முன்பெல்லாம் பஞ்சம் பிழைக்க கிராமங்களிலிருந்து பட்டணம் வருவார்கள். இப்போது பெருகி வரும் பொருளாதாரப் பயன்களைப் பெறவும் வசதிகளை அடையவும் மக்கள் நகரங்களுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு அடைக்கலம் அளிக்க நகரங்களும் விரிவடைகின்றன. நகரமயமாக்கல் குறியீட்டில் 58 சதவிகிதமாக தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது.

இந்தியா பல்வேறு துறைகளில் ஆதிக்கத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. கணினி தொழில்நுட்பம், மருத்துவம், மருந்து உற்பத்தி, பாதுகாப்பு, விண்வெளி, ஆட்டோமொபைல் உற்பத்தி போன்ற பல தொழில்களிலும் துறைகளிலும் அற்புதமான வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்த எழுச்சிமிக்க முன்னேற்றத்தின் விளைவாக சுற்றுலாத் துறை சீராக வளர்ந்துள்ளது.

உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான பார்வையாளர்கள் நமது அழகிய நிலப்பரப்புகளையும், காடுகளையும் பாரம்பரியம் மிக்க புராண தலங்களையும் காண வருகிறார்கள். மேலும், நவீன இந்தியாவை ஆராய முயல்கிறார்கள். இருப்பினும், அனைத்து உற்சாகமான எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும், பிம்பமும் பொது இடங்களில் காலடி எடுத்து வைத்த அடுத்த நிமிடமே சிதைந்துவிடும்.

இலங்கை போன்ற ஏழை அண்டை நாடுகளுடனும், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள வியத்நாம், தாய்லாந்து மற்றும் கம்போடியா போன்ற பிற நாடுகளுடனும் ஒப்பிடும்போதுகூட, நமது நாட்டின் பொது உள்கட்டமைப்பின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பு உரிய வேகத்தை எட்டவில்லை. இதற்கு நமது மக்களில் பெரும்பகுதியினரிடையே அக்கறையின்மை மற்றும் குடிமை உணர்வு இல்லாதது ஒரு காரணம்; நன்கு வரையப்பட்ட கொள்கைகளை அமல்படுத்துவதில் அரசாங்கத்தின் அணுகுமுறை மெத்தனமாக உள்ளது இன்னொரு காரணம்.

பொது இடங்களைப் பொருத்தவரை மிகவும் மோசமான பிரச்னைகளில் ஒன்று, அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்களின் ஊடுருவல். நிர்வாகத்துக்கு இது ஒரு சவாலாக உருவெடுத்துள்ளது. நடைபாதைகள், கடற்கரைகள், பூங்காக்கள் மற்றும் சில நேரங்களில் சாலைகளிலும் கடைகள் அமைக்கப்படுகின்றன. இதனால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது.

எந்தவொரு உள்கட்டமைப்பும் இல்லாத இத்தகைய அங்கீகரிக்கப்படாத கடைகள் அதிக அளவு கழிவுகள் மற்றும் குப்பைகளை உருவாக்குகின்றன. இது ஒட்டுமொத்த சுகாதாரமற்ற நிலைமைகளுக்கு வழிவகுக்கிறது. பெரும்பாலும், பழமையான பொது இடங்கள் இழக்கப்படுகின்றன.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகம் உள்ள மாநிலங்களில் உத்தர பிரதேசத்துக்கு அடுத்து, தமிழ்நாடு இரண்டாம் இடம் வகிக்கிறது. சென்னை மாநகரத்தில் உள்ள கவின்மிகு கோயில்களைத் தரிசிப்பதற்காக வருகிறார்கள். மயிலையில் கயிலை என்ற வகையில் கபாலீச்சரம் பிரசித்தம். ஆனால், அங்கிருக்கக் கூடிய நெரிசலால் கோயிலுக்குச் சென்று வருவதே ஒரு சவால்.

மாட வீதிகளின் சிறப்பை "மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலை'” என்று ஞானசம்பந்தர் தேவார பாடலில் அழகாக விவரிக்கிறார். இப்போது மடநல்லார் மாமயிலை மாட வீதிகள் ஆக்கிரமிப்பில் சிக்கித் தவிக்கின்றன. எவ்வளவு முறை அகற்றினாலும் மீண்டும் அதே இடத்தில் இன்னும் அதிகமாக ஆக்கிரமிப்பு. சாலை ஒருபுறம் மட்டும் கடைகளை ஒருமுகப்படுத்தி மக்கள் நடமாட்டத்துக்கு வசதி செய்யலாம்.

வடக்கு மாட வீதியில் ஒருபக்கம், நீதிமன்ற ஆணையில், கடைகள் ஆண்டுக்கணக்காக இயங்குகின்றன. ஒருவழிச்சாலை என்பது பெயரளவில்தான். ஆனால், வாகனங்கள் இருபக்கமும் முட்டி மோதிச் செல்கின்றன; கேட்பாரில்லை.

மதுரை மாட வீதிகளை ஒழுங்குபடுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்றி விசாலமான தெரு, பக்தர்களை வரவேற்கிறது. மயிலையில் பல ஆண்டுகளாக இருக்கும் இந்த பிரச்னைக்கு எப்போது விடிவு காலம் வருமோ?

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிய மனுவில் உயர் நீதிமன்றம் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. பொது இடங்கள் மக்கள் பயன்பாட்டுக்காக பாதுகாக்கப்பட வேண்டும்; எந்தக் காரணம் கொண்டும் ஆக்கிரமிப்புகளை அனுமதிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளது.

1970 - களில் போடப்பட்ட கிழக்கு கடற்கரை சாலை மகாபலிபுரத்துக்கு இன்னுமோர் இணைப்புச் சாலையாக சுற்றுலாப் பயணிகளுக்கு உதவியது. அந்த சாலையில் பயணிப்பதே இனிய அனுபவம். வங்கக் கடலின்இயற்கை எழிலை ரசித்துக் கொண்டே செல்லலாம். ஆனால், இப்போது கடற்கரை ஓரமாக உள்ள பல குடியிருப்புகள், சாலையிலிருந்து கடலைப் பார்க்க முடியாமல் மறைத்துவிட்டன. சாலை ஆக்கிரமிப்புகளால் அதன் அகலமும் குறைந்துவிட்டது.

1990-களில் கடற்கரை சாலையைச் செப்பனிடும் பணியை என்பிசிசி என்ற மத்திய அரசு நிறுவனம் மேற்கொண்டபோதுதான் எந்த அளவுக்கு ஆக்கிரமிப்புகள் காலப்போக்கில் வருவாய் ஆவணத்தில் ஒழுங்குபடுத்தப்பட்டு அவரவர்க்கு சொந்தமாகி விட்டது தெரியவந்தது. இப்போது கடற்கரை சாலை விரிவாக்கப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இருமருங்கிலும் நில ஆர்ஜிதம் செய்து, இழப்பீடு கொடுக்கப்பட்டு அதிவேகமாக விரிவாக்கப் பணிகள் நடைபெறுகின்றன. ஆனால், அதற்குள் சிறுசிறு கடைகள், கையேந்தி பவன்கள் முளைத்துவிட்டன. அது தவிர, மனம்போனபோக்கில் வாகனங்கள் நிறுத்தம். இதை இப்படியே விட்டால், கோடிக்கணக்கான மூலதனத்தில் நிறைவேற்றப்படும் விரிவாக்கம் பொய்த்துவிடும்.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாண கடற்கரையை உலகிலேயே மிக அழகான கடற்கரை என்பார்கள். அதற்கு அடுத்தது மெரீனா கடற்கரை எனலாம். மெரீனா அண்ணா சதுக்கத்திலிருந்து லைட் ஹவுஸ் வரை பரந்து விரிந்து கடற்கரை அழகாக இருக்கும். இப்போது எவ்வளவு கடைகள்!

கடற்கரையை அழகுபடுத்துதல் திட்டத்தில் சாந்தோம் லிங்க் சாலை கடற்கரையை ஒட்டி போடப்பட்டது. இப்போது மீன் அங்காடிகள் அங்கு முளைத்துவிட்டன. கட்டிமுடிக்கப்பட்டுள்ள நவீன மீன் அங்காடியை முழுமையான பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. ஆனால், பொருளாதாரத்தின் பயன்கள் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களையும் சமமாகச் சென்றடையவில்லை. தங்கள் குடும்பங்களுக்கு வருமானத்தை வழங்குவதே வணிகர்களின் ஒரே நோக்கம். அவர்கள் வன்முறை குற்றங்களைச் செய்யவில்லை. மாறாக, நேர்மையான வாழ்க்கையின் மூலம் தங்கள் தற்போதைய நிலையை அவர்கள் மேம்படுத்த முயல்கின்றனர்.

அவர்கள் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும், குறிப்பாக அமைப்புசாரா தொழிலாளர் பிரிவுக்கும் குறைந்த விலை சேவைகள் மற்றும் உணவை வழங்குகிறார்கள். விற்பனையாளர்களில் பெரும்பகுதியினர் பெண்களாக உள்ளனர். பொதுக்கொள்கைகளை வகுப்பதிலும், அவற்றை நமது சக குடிமக்கள் மீது கொடுமையாக இல்லாமல் இரக்கத்துடன் செயல்படுத்துவது முக்கியம். இது சம்பந்தமாக, தமிழ்நாடு அரசு ஒரு விரிவான பொதுக்கொள்கையை உருவாக்கியுள்ளது.

தமிழ்நாடு நகர்ப்புற தெருவோர வியாபாரிகளுக்கான கொள்கை, பொது சுகாதாரம்,போக்குவரத்து ஓட்டம் மற்றும் நகர்ப்புற ஒழுங்கை உறுதி செய்வதன்மூலம் தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை ஈட்டுவதற்கு ஆதரவான சூழலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

விற்பனையாளர்கள் செயல்படக்கூடிய பொருத்தமான இடங்களை அடையாளம் காண்பது, பொது இடங்களில் நெரிசல் இல்லாமல் போக்குவரத்து தடையற்ற ஓட்டத்தை வழங்கும் வகையில் சந்தைகள் செயல்படுவதை உறுதிசெய்வது, சட்டம் மற்றும் இடஞ்சார்ந்த கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் விற்பனையாளர்களுக்கு "ஹாக்கிங்' மண்டலங்களை உருவாக்குவது, இணக்கமான அமலாக்கம், திறன் மேம்பாடு ஆகிய உயரிய நோக்கங்களைக் கொண்டுள்ளது.

தெரு வியாபாரம், தெரு வியாபாரிகள் வாழ்வாதாரப் பாதுகாப்புச் சட்டம் 2014 மூலம் சட்ட அங்கீகாரம் பெற்றுள்ளது. மேற்படி சட்டப் பிரிவு 22(1) -இன்படி தெரு வியாபாரத்தை ஒழுங்குபடுத்த நகர தெரு வியாபாரக் குழுக்கள் அமைக்கலாம். சென்னையில் 561 சாலைகள், 35,730 தெருக்கள், 70 வியாபார தளங்கள் உள்ளன. அவற்றில் 253 இடங்கள் விற்பனைக்கு உரிய இடங்களாகவும் , 149 பகுதிகள் தடை செய்யப்பட்ட இடங்களாகவும் வரையறுக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள இடங்களை ஆராய்வதற்கு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் தெரு வியாபார குழுக்கள் உடனடியாக அமைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.

சீனா, வியத்நாம், சிங்கப்பூர் போன்ற ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட நகரங்கள் இந்த நகர்ப்புறப் பிரச்னையைத் திறம்பட மற்றும் இரக்கமுள்ள முறையில் தீர்த்துள்ளன. பொது இடங்களைப் பாதுகாப்பதற்கும் விற்பனையாளர்களுக்கு லாபகரமான வேலைவாய்ப்பை உறுதிசெய்வதற்கும் இந்திய நகரங்களும் நல்ல கட்டமைப்புக் கொள்கைகளை உருவாக்கி செயல்படுத்த வேண்டிய நேரம் இது.

இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில், சுய ஒழுங்குமுறைக்கான ஊக்கம் மிக முக்கியமானது மற்றும் விற்பனையாளர்களுக்கு பொருத்தமான சலுகைகள் வழங்கப்பட வேண்டும். மேலும், சிறார் விற்பனையாளர்களை அகற்றுவதற்கும் அவர்களுக்கு மறுவாழ்வு மற்றும் கல்வியை வழங்குவதற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

2000 -ஆம் ஆண்டில் மும்பை மாநகராட்சியில் துணை ஆணையராகப் பணிபுரிந்த கோவிந்த் ராகோ கைர்னார், ஆக்கிரமிப்புகளைத் தகர்த்தெறியும் தனிமனிதப் படையாக, அரசியல் தலையீடுகள், நில தாதாக்களுக்கு வளைந்து கொடுக்காமல் செயல்பட்டார். இன்றும் அவர் நடுத்தர இந்தியனின் கனவுலக நாயகனாகப் போற்றப்படுகிறார். புதிய நகரம் பொலிவுற்றுத் தோன்ற பல கோவிந்த் ராகோ கைர்னார்களின் அதிரடி நடவடிக்கைகள் ஒன்றே தீர்வு.

கட்டுரையாளர்:

முன்னாள் காவல் துறைத் தலைவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com