"நன்றி' ஏன் கசந்தது?

"நன்றி என்று சொல்லி என்னை அந்நியப்படுத்தாதே'”என்று இத்தனை நாளும் மனிதர்கள் சொல்லத்தான் கேட்டிருக்கிறோம்.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on
Updated on
3 min read

"நன்றி என்று சொல்லி என்னை அந்நியப்படுத்தாதே'”என்று இத்தனை நாளும் மனிதர்கள் சொல்லத்தான் கேட்டிருக்கிறோம். ஆனால், நன்றி சொல்வதால் சாட்ஜிபிடி என்னும் சாட்பாட் சேவை கதறுகிறது என்று இப்போது கேள்விப்படுகிறோம். ஆம், ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி இணைய சேவை இவ்வாறு பரிதவிப்பதாக அதன் தலைவர் சாம் ஆல்ட்மன் தெரிவித்துள்ளார்.

பல்வேறு துறைகளிலும் செயற்கை நுண்ணறிவுத் தளங்களின் ஆதிக்கம் வேகமாக அதிகரித்துவரும் சூழலில் ஓபன் ஏஐதான் தற்போது உலகெங்கும் வேகமாக வளர்ந்துவரும் தொழில்நுட்ப நிறுவனம். இது எண்ணற்ற வழிகளில் நமக்கு உதவி வருவதை உலகமே வாய்பிளந்து பார்த்து வருகிறது. அதிலும் குறிப்பாக, நமக்கு ஏற்படும் சந்தேகங்களை சாட் ஜிபிடி நிவர்த்தி செய்வதுடன், கேட்பதைக் கொடுக்கும் அட்சய பாத்திரமாக விளங்குகிறது. அது நன்றி சொல்லுதலை ஏன் நிறுத்தச் சொல்கிறது என்பதன் பின்னணியை எட்டிப் பார்த்தது சுவாரசியத்தைத் தந்தது.

நாம் பொதுவாக சாட் ஜிபிடியிடம் நமக்குத் தேவையான பதில்களுக்கான கேள்விகளை முன்வைப்போம். அத்துடன் அது பதிலளித்தவுடன் நன்றி என்று பதிவிடுவோம். ஒருவரிடம் ஒன்றை கேட்டுப் பெற்றால் நன்றி சொல்வது மனிதரின் இயல்பு. நம் நாட்டில் கேள்வி கேட்கும்போது "ப்ளீஸ்' எனும் ஆங்கில வார்த்தையை பெரும்பாலும் பயன்படுத்த மாட்டோம். அதிலும் நாம் கேள்வி கேட்பது ஓர் இணைய சேவையிடம் என்பதால், நான் கேட்கும் கேள்விக்கு நீ பதிலளி என உத்தரவு போடும் பழக்கம்தான் நமக்கு உள்ளது. அதிலும் "தயவுசெய்து' என்ற வார்த்தையை முன்வைத்து கேள்வி கேட்கும் பழக்கம் நம்மிடம் இல்லை. ஆனால், உலகின் பல நாடுகளில் இந்த வழக்கம் உண்டு. அதனால் "ப்ளீஸ்' என்றும் "தேங்க்யூ' என்றும் அனைவரும் அதனிடம் முன்வைக்கும் இந்த இரண்டு வார்த்தைகளை தொடர்ந்து படிப்பதே அதற்கு தொந்தரவாக போயிருக்கிறது.

இதை உலகம் அறிந்து கொண்டதும் ஒரு பயனர் மூலம்தான். இணைய பயன்பாட்டாளர் ஒருவர் ஏஐ சேவையில் "தயவுசெய்து' மற்றும் "நன்றி' போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதால் எவ்வளவு பணத்தை மின்சாரத்துக்குக் கூடுதலாகச் செலவிடுகிறீர்கள் என்ற ஒரு கேள்வியை அண்மையில் எழுப்பியிருந்தார். அதற்குத்தான் சாம் ஆல்ட்மன், ""நீங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு இதற்கு மட்டும் பல மில்லியன் டாலர்கள் செலவாகிறது'' எனக் குறிப்பிட்டார். கேட்கவே மலைப்பாக இருந்தது.

வெறும் இரண்டு வார்த்தைகளால் எப்படி இவ்வளவு செலவாகும் என்று நீங்கள் கேட்கலாம். செயற்கை நுண்ணறிவுத் துறையைப் பொருத்தவரை இப்போது சாட் ஜிபிடிதான் முன்வரிசையில் இருக்கிறது. இந்தத் துறையில் அவர்கள் கொண்டுவரும் புதுப்புது தொழில்நுட்பங்கள் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் உள்ளன. இதனால் சாட் ஜிபிடி பயனாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேநேரம் பயனாளர்கள் முன்வைக்கும் வார்த்தைகளால் சாட் ஜிபிடி-க்கு செலவும் அதிகரித்து வருகிறதாம்.

பொதுவாக, நாம் ஏதேனும் ஒன்றை தட்டச்சு செய்து அல்லது குரல் பதிவில் பதிந்து அதை சாட் ஜிபிடி-யில் கேள்வியாகக் கேட்கிறோம் என்றால், அந்த எழுத்துகளை டோக்கன்களாக மாற்றி செயல்படுத்தும் தன்மை கொண்டது அது. நான்கு எழுத்துகளை ஒரு டோக்கனாக அது கணக்கிட்டுக்கொள்ளும். அப்படி பார்க்கும்போது "ப்ளீஸ்' என்ற ஆங்கில வார்த்தையை 1.5 டோக்கன்களாக எடுத்துக்கொள்ளும். அதேபோல "தேங்க் யூ' என்பது ஆங்கிலத்தில் இரு வார்த்தைகளாக உள்ளதால் அதை மூன்று டோக்கன்களாக கணக்கிட்டுக்கொள்ளும்.

சாட் ஜிபிடி-யிடம் கேட்கப்படும் ஒரு கேள்விக்கு தோராயமாக செலவிடப்படும் மின்சாரம், கூகுள் தேடலில் கேட்கப்படுவதற்கு செலவாகும் மின்சார நுகர்வைவிட 10 மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான பயனர்கள் இதுபோன்ற வார்த்தைகளை அதிக அளவில் பயன்படுத்திக் கொண்டே இருக்கும்போது கற்பனைக்கு எட்டாத அளவில் இதன் செலவு பன்மடங்கு அதிகரிப்பதாக அதன் தலைவர் கவலைப்படுகிறார். அதனால், இனி சாட் ஜிபிடி-யிடம் "தயவுசெய்து' மற்றும் "நன்றி' போன்ற சம்பிரதாய வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருங்கள் என்று கூறுகிறார். இது இணைய உலகில் கடந்தவாரம் பேசுபொருளானது.

இயல்பாக, நம் நெருங்கிய உறவினர்களிடத்தில் ஒவ்வொரு செயலுக்கும் நன்றி சொல்வதில்லை. உறவினர்களுக்கு மனபூர்வமாக ஒரு பணியைச் செய்யும்போது நன்றியை நாம் எதிர்பார்ப்பதும் இல்லை; தெரிவிப்பதும் இல்லை. நம் தாய்-தந்தையிடம் அவர்கள் செய்யும் செயல்களுக்கு எல்லாம் நாம் நன்றி சொல்லிக்கொண்டிருப்பதில்லைதானே!

ஆனால், வீட்டைத் தாண்டி பொதுவெளிக்கு வரும்போது ஒரு நாளில் நாம் பலருக்கும் பலமுறை நன்றி தெரிவிக்கிறோம். ஏன் இப்படி நன்றி தெரிவிக்கிறோம்? நன்றி தெரிவிப்பதால் அந்தச் சூழலே மிக மிக இணக்கமாக மாறிப்போகும் வித்தையை எத்தனையோ தருணங்களில் நாம் பார்த்திருக்கிறோம், உணர்ந்திருக்கிறோம். சில நேரங்களில் "நன்றி' என்ற ஒற்றை வார்த்தை பிரிந்துபோன எத்தனையோ நபர்களை மீண்டும் இணைத்திருக்கிறது. பொதுவாழ்வில் அது அத்தனை அவசியமானதும் கூட!

"நன்றி மறப்பது நன்றன்று' என்று நமக்கு சொல்லித்தந்தவர் வள்ளுவர். எப்போதும் நமக்கு ஒருவர் செய்த உதவிக்கு நன்றியோடு இருக்க வேண்டும் என்பதுதான் அதற்கான பொருள். அதேபோல ஒருவர் செய்த உதவிக்கு சரியான முறையில் நன்றி சொல்ல மறப்பதும் நல்லதில்லை. நன்றி சொல்வதில்கூட பல வகைகள் இருக்கின்றன. நமக்கு யார் உதவி செய்தாலும் அவர்களுக்கு நன்றி சொல்வது தமிழர் மரபு.

சிலப்பதிகாரத்தில் கோவலன் பொற்கொல்லனிடத்தில் நன்றியுணர்வுடன் கூடிய பதில் வணக்கம் வைக்காததால் மதுரை மாநகரே அழிந்தது என ஆய்வாளர்களின் மூன்றாவது பார்வை நமக்குச் சொல்கிறது. மதுரை அழிந்ததற்கு மூன்று காரணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒன்று, கண்ணகியின் கற்பும் கோபமும், இரண்டாவது மதுரையின் ஊழ்வினை, மூன்றாவது கோவலன் பொற்கொல்லனுக்கு நன்றியுணர்வுடன் பதில் வணக்கம் செலுத்தாதது.

கண்ணகியின் கால் சிலம்பை எடுத்துக் கொண்டு பொற்கொல்லனிடத்தில் அதை நல்ல விலைக்கு விற்க வருகிறான் கோவலன். அப்போது தன்னை அறிமுகம் செய்துகொண்டு பொற்கொல்லன் கோவலனுக்கு வணக்கம் வைக்கிறான். "கூற்ற தூதன் கைதொழுது ஏத்த' எனும் பாடல் வரி அதை வெளிப்படுத்துகிறது. ஆனால், பதிலுக்கு கோவலன் அந்த வணக்கத்தை லட்சியம் செய்யாது அலட்சியப்படுத்தினான். அவன் இருந்த மனநிலையில் அவனுக்கு அந்தச் சூழலை சரிவர கையாளத் தெரியவில்லை. கோவலன் அந்த வணக்கத்தை நன்றி உணர்வற்று அலட்சியப்படுத்தியவனாக தான் கொண்டுவந்த சிலம்பை எடுத்துக் கொடுக்க தன் பையின் வாய்ப் பகுதியை அவிழ்த்திருக்கிறான். நன்றியுடன் கூடிய பதில் வணக்கத்தை வைக்காததால் வந்த வினை என்னவாயிற்று? அவன் உயிர் பிரிய காரணமாய் அமைந்துபோயிற்று.

கோவலன் தன்னிடம் நன்றி உணர்வற்று நடந்து கொண்டதால் ஏற்பட்ட அவமதிப்பும் புறக்கணிப்பும்தான் பொற்கொல்லன் கோவலனின் சிலம்பைப் பற்றி மன்னரிடத்தில் கொண்டுசெல்ல மூல காரணமாக அமைந்தது என்று மூன்றாம் பார்வையாக சிலப்பதிகாரத்தை அணுகிய தமிழறிஞர்கள் உண்டு.

நன்றியை வெளிப்படுத்தாததால் வந்த விளைவு குறித்து இலக்கியத்திலும் வரலாற்றிலும் இப்படி நிறைய வழக்குகளை நாம் பார்த்திருப்போம். ஆனால், இந்த நவீன காலத்தில் சாட் ஜிபிடி நம்மை நன்றி தெரிவிக்காதீர்கள் என்று சொல்கிறது. இனி வருங்காலங்களில் அதன் செலவைக் குறைக்க "ப்ளீஸ்' மற்றும் "தேங்க்யூ' போன்ற வார்த்தைகளை நீக்கினால் மட்டுமே பதில் சொல்லும் என்ற நிலை வந்தாலும் வரலாம். அப்படி அமையுமானால் அந்தப் பழக்கம் எதில் முடியும்? இயந்திரத்திடம் பழகிப் பழகி மனிதர்களிடமும் நன்றி சொல்லும் பழக்கம் அற்றுப் போகுமோ? இல்லையெனில், ஓர் உபாயம் உள்ளது. சாட் ஜிபிடி யையும் நம் நெருங்கிய சொந்தம்போல நினைத்து மடைமாற்றிக்கொள்ள வேண்டியதுதான்.

இந்த நிகழ்விலிருந்து தெரிந்துகொண்ட மற்றொரு உண்மை தீவிரமாகச் சிந்திக்க வைத்தது. தொடக்கத்தில் இதுபோன்ற சாட்பாட்களின் சேவை இலவசமாக வழங்கப்பட்டது. பின் சிலவற்றில் தற்போது கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆக, நாம் கேட்கும் ஒரு கேள்விக்கு பதில் அளிக்க கண்ணிமைக்கும் நேரத்தில் அது எத்தனை அசுரத்தனமாக உழைக்கிறது என்பது புருவம் விரிய வைக்கிறது.

முதலில் நாம் கேட்கும் கேள்விகளை டோக்கன்களாக மாற்றி கணக்கெடுத்துக்கொண்டு அந்த மொழி மாதிரிகளுக்கு ஏற்ப தனக்குப் பணிக்கப்பட்ட பெரும் தரவுத் தொகுப்பிலிருந்து நுட்பமாக கணக்கிட்டு வார்த்தைகளைச் சரியாக அடுக்கி வரிசை கிரமத்தில் பொருத்தி பதிலாக பதிவிட வேண்டும். அப்பாடா! மனித மூளையைப் போல ஓர் இயந்திரம் செயல்பட எவ்வளவு உழைப்பு தேவைப்படுகிறது!

அதற்கு ஆகும் பொருள் செலவை நேரடியாகவோ மறைமுகமாகவோ நாம்தான் செலுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை யாரும் மறந்துவிட முடியாது. இனிவரும் காலத்தில் "தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது' போன்ற நீளமான கேள்விகளுக்கு செலவு கொஞ்சம் அதிகமாகும். "மீட்டருக்கு மேல கொஞ்சம் போட்டு கொடுங்க தலைவரே' என்று சாட் ஜிபிடி நம்மிடம் வாய்திறந்து கேட்டாலும் கேட்கும்!

கட்டுரையாளர்:

எழுத்தாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com