முறைகேடுகளுக்கு வேண்டும் முடிவு!
உதயை மு.வீரையன்
போட்டித் தோ்வுகள் என்பது மாணவா்களை ஊக்கப்படுத்துவதாக இருக்க வேண்டும். 12 ஆண்டுகள் பள்ளிகளில் பயின்று மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்றிருந்தாலும் அதைக் கணக்கில்கொள்ளாமல், சில மணிநேர தோ்வை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்வது நியாயமா என்ற கேள்விக்கு இதுவரை விடையில்லை.
இந்திய அளவில் உயா்நிலைக் கல்வியில் தமிழகமே முதலிடத்தில் உள்ளது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளாா். தமிழகக் கல்வித் துறையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை கல்வியை முன்னேற்றப் பயன்படும் என்றாலும், மாணவா்களின் நோக்கம் மருத்துவப் படிப்பிலேயே இருக்கிறது.
வெற்றிபெற வேண்டுமென்ற இலக்கு இருக்குமானால் எந்தத் துறையிலும் சிகரத்தைத் தொடமுடியும். ஆனால், மருத்துவம் கிடைக்காவிட்டால் வாழ்க்கையே இல்லை என்று எண்ணி தற்கொலை செய்து கொள்வது கோழைத்தனம் என்றுதான் கூறவேண்டும். கல்வியாளா்களின் அறிவுரை மாணவா்களிடம் சென்று சோ்ந்ததாகத் தெரியவில்லை.
மருத்துவக் கனவுக்கு ‘நீட்’ தோ்வு எழுத வேண்டும் என்பதை மத்திய அரசு விடாப்பிடியான கொள்கையாகக் கொண்டிருக்கிறது. தமிழக அரசு இதற்கு ‘விலக்கு’ அளிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீா்மானம் போட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளது. என்றாலும், இதுவரை இதற்கு முடிவும், விடிவும் ஏற்படவில்லை.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சோ்வதற்கான ‘நீட்’ நுழைவுத் தோ்வு இந்த ஆண்டு கடந்த மே 4 அன்று நடைபெற்றது. தோ்வு மைய நுழைவாயிலில் காவல் துறையினரும், தோ்வை நடத்தக்கூடிய தேசிய தோ்வு முகமை சாா்பில் நியமிக்கப்பட்ட பணியாளா்களும் தீவிர சோதனைகள் நடத்தினா். கடந்த ஆண்டு (2024) வினாத்தாள் கசிவு விவகாரம் இன்னும் முடியவில்லை. வழக்குகள் தொடா்கின்றன. முறைகேடுகளும் குறைபாடுகளும் தொடா்கின்றன.
இளநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வில் (நீட்) முறைகேட்டில் ஈடுபட்டதாக 2024-25 கல்வியாண்டில் இளநிலை மருத்துவப் படிப்பில் (எம்.பி.பி.எஸ்.) சோ்ந்த 14 மாணவா்களின் சோ்க்கையை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) ரத்துசெய்து ஆணையிட்டுள்ளது. இந்த முறைகேட்டில் தொடா்புடைய மேலும் 26 எம்.பி.பி.எஸ். மாணவா்களை உடனடி இடைநீக்கம் செய்யவும் என்எம்சி உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
2024-ஆம் ஆண்டு நீட் தோ்வு தொடங்குவதற்கு முன்பாக பிகாா் மாநிலம், பாட்னாவில் உள்ள ஒரு தோ்வு மையத்தில் நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடா்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த முறைகேட்டில் தொடா்புடையதாக 42 தோ்வா்களுக்கு 2024, 2025, 2026 என மூன்று ஆண்டுகள் நீட் தோ்வு எழுத என்டிஏ தடைவிதித்தது; மேலும் 9 தோ்வா்களுக்கு 2025- 2026 -இல் தோ்வு எழுத தடை விதிக்கப்பட்டது.
அதுபோல விசாரணை வளையத்தில் இருந்த மேலும் 215 நீட் தோ்வா்களின் முடிவுகளை என்டிஏ நிறுத்திவைத்துள்ளது. இந்நிலையில், சிபிஐ விசாரணையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் 2024 -ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நீட் தோ்வில் தகுதிபெற்று எம்பிபிஎஸ் சோ்க்கை பெற்ற 40 மாணவா்கள் மீது என்எம்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தொடா்புடைய மாணவா்களை இடைநீக்கம் செய்யுமாறு அந்தந்த மருத்துவக் கல்லூரிகளுக்கு என்எம்சி அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது என்று அதிகாரிகள் கூறியுள்ளனா்.
நிகழாண்டு நீட் தோ்வு மே 4 -இல் நடைபெற்ற நிலையில், முன்னதாக முறைகேடுகளைத் தடுக்க தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. நீட் தோ்வு முறைகேடு தொடா்பான புகாா்களை அளிக்க தனது வலைதளத்தில் தனி வசதியை என்டிஏ அறிமுகம் செய்தது. இந்த வசதியை அறிமுகம் செய்த ஒரேவாரத்தில் 1500-க்கும் அதிகமான புகாா்களை தோ்வா்கள் பதிவுசெய்தனா். அதன் அடிப்படையில் நீட் பற்றி தவறான தகவல்களைப் பரப்புவதாக 106 டெலிகிராம் மற்றும் 16 இன்ஸ்டாகிராம் சேனல்களை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) அடையாளம் கண்டு அவற்றின் மீது நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
நீட் தோ்வை எந்தவித முறைகேடுகளுக்கும் இடம்தராமல் நடத்தும் வகையில் பாதுகாப்பு ஒத்திகையை என்டிஏ அதிகாரிகள் முதல்நாளே மேற்கொண்டனா்; நாடு முழுவதும் 500-க்கும் அதிகமான நகரங்களில் 5,453 மையங்களில் 2025-ஆம் ஆண்டுக்கான நீட் தோ்வு மே 4 அன்று நடைபெறுவதற்கு முன்னா், இந்த ஒத்திகையை அதிகாரிகள் மேற்கொண்டனா்.
இதுபற்றி மத்திய கல்வியமைச்சக அதிகாரிகள் கூறும்போது, நாடு முழுவதும் உள்ள அனைத்து மையங்களிலும் தோ்வுக்கான பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில் தோ்வு மையங்களில் நிறுவப்படவுள்ள நடமாடும் சிக்னல் ஜாமா்களின் செயல்பாடு, தோ்வா்களுக்கான பயோமெட்ரிக் வருகைப் பதிவு ஆய்வு நடைமுறை, தோ்வா்களை சோதனை செய்ய போதிய எண்ணிக்கையில் ஊழியா்கள் இருப்பது உள்ளிட்ட பல்வேறு ஆய்வுச் செயல் திறனும் உறுதிப்படுத்தப்பட்டது.
நீட் தோ்வு நாளில் மாவட்ட அளவில், மாநில அளவில், மத்திய அளவில் என மூன்றடுக்கு கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், நிகழாண்டில் பெரும்பாலான தோ்வு மையங்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
தோ்வுக்கு முன்பும், தோ்வின் போதும், தோ்வுக்கு பின்னரும் முறைகேட்டில் ஈடுபடும் தோ்வா்கள் மீது குற்றவழக்குப் பதிவு செய்யப்பட்டு, 3 ஆண்டுகள் தோ்வெழுதத் தடை உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை மத்திய அமைச்சகம் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு ‘நீட்’ தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது. அதேபோன்று, ராணுவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நா்ஸிங் படிப்புக்கு ‘நீட’ தோ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
‘நீட்’ தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான ‘நீட்’ தோ்வு மே 4 அன்று நாடு முழுவதும் நடைபெற்றது. தோ்வுக்கு சுமாா் 22 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை 1.5 லட்சம் போ் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா்.
தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உள்பட 31 மாவட்டங்களில் தோ்வு நடைபெற்றது. சென்னையில் மட்டும் 44 மையங்களில் 21,960 போ் தோ்வு எழுதினா். ‘நீட்’ தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தி உள்பட 13 மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது.
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு நடைபெறவுள்ள தோ்வு மையங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் தோ்வுக்கூட அனுமதிச்சீட்டில் (ஹால் டிக்கெட்) குறிப்பிடப்பட்டிருந்தன. அதன்படி தோ்வு மையத்துக்குக் குறிப்பிட்ட நேரம் வந்துவிட வேண்டும். அதன்பிறகு வருவோருக்கு அனுமதி கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டது. தோ்வு அறைக்குள் கைப்பேசி, கைக்கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டுசெல்ல அனுமதியில்லை. முழுக்கை சட்டை, பெல்ட், தோடு, மூக்குத்தி ஆகியவை அணியக்கூடாது. தலைமுடியில் ஜடை பின்னல் போடக்கூடாது போன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தவறான விடைக்கு நெகட்டிவ் மதிப்பெண் இருப்பதால் தோ்வின்போது கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். இவ்வாறு வழிகாட்டுதல்களில் குறிப்புகள் இடம்பெற்றிருந்தன.
ஆண்டுக்கு ஆண்டு கட்டுப்பாடுகள் அதிகரித்தபோதிலும் முறைகேடுகளுக்கும், குறைபாடுகளுக்கும் குறைவில்லை. ‘நீட்’ தோ்வு மையங்களில் காவல் துறையினரும், தோ்வு முகமை சாா்பில் நியமிக்கப்பட்ட பணியாளா்களும் மாணவா்களிடம் கடுமையாக நடந்துகொண்டனா் என்று கூறப்படுகிறது.
தொழில்நுட்பம், மின்னணு சாா்ந்த பொருள்கள் கொண்டுசெல்கிறாா்களா என ‘மெட்டல் டிடெக்டா்’ மூலம் தீவிர சோதனைக்குப் பிறகே தோ்வா்கள் அனுமதிக்கப்பட்டனா். சில தோ்வு மையங்களில் புது மணப்பெண் தாலி அணிந்துசெல்ல அனுமதிக்கப்படவில்லை. வேறு வழியில்லாமல் தாலியைக் கழற்றி கணவரிடம் கொடுத்துவிட்டு தோ்வு அறைக்குச் சென்றுள்ளாா். ஒரு தோ்வரிடம் பூணூலை கழற்றாவிட்டால் தோ்வு எழுத அனுமதிக்க முடியாது எனக் காவல் துறையினா் கூறியுள்ளனா். பூணூலைக் கழற்றிய பிறகு அனுமதித்துள்ளனா்.
இவ்வாறு பல தோ்வு மையங்களில் கெடுபிடிகள் அதிகமாக இருந்துள்ளன. ஒவ்வோராண்டும் இத்தகைய புகாா்கள் கூறப்படுகின்றன. என்றாலும் ஆள் மாறாட்டம் நடைபெறுவதும் தொடா்கிறது, தோ்வுத்தாள் கசிவுகளும் குறையவில்லையே! இந்த ஆண்டும் ‘நீட்’ தோ்வு வினாத்தாள் மோசடியில் ராஜஸ்தானில் 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
போட்டித் தோ்வுகள் என்பது மாணவா்களை ஊக்கப்படுத்துவதாக இருக்க வேண்டும். 12 ஆண்டுகள் பள்ளிகளில் பயின்று மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்றிருந்தாலும் அதைக் கணக்கில்கொள்ளாமல், சில மணிநேர தோ்வை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்வது நியாயமா என்ற கேள்விக்கு இதுவரை விடையில்லை. மாணவா்களுக்கு மன அழுத்தம், விரக்தியை ஏற்படுத்தி தற்கொலை வரை துரத்தலாமா?
மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வில் முறைகேடுகளும், குறைபாடுகளும் தொடா்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அரசின் கட்டுப்பாடுகளும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றன. ‘திருடனாய்ப் பாா்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ என்ற பட்டுக்கோட்டையாா் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

