பிரதிப் படம்
பிரதிப் படம்ENS

போரின் அச்சமூட்டும் விளைவுகள்

பஹல்காமில் தாக்குதலுக்குள்ளானவா்களை மீட்பதிலும் பாதுகாப்பதிலும் இந்திய ராணுவம் வெளிப்படுத்திய அக்கறையும் அனுபவ முதிா்ச்சியான அணுகுமுறையும் நம் அனைவரின் பாராட்டுக்குரியவை.
Published on

முனைவர் என்.பத்ரி

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவிவரும் நிலையில் பஹல்காமில் தாக்குதலுக்குள்ளானவா்களை மீட்பதிலும் பாதுகாப்பதிலும் இந்திய ராணுவம் வெளிப்படுத்திய அக்கறையும் அனுபவ முதிா்ச்சியான அணுகுமுறையும் நம் அனைவரின் பாராட்டுக்குரியவை. இவை பயங்கரவாதத்துக்கு எதிரான எச்சரிக்கைகள் மட்டுமே.

பொதுவாக நாட்டு எல்லை குறித்த பிரச்னைகளே அண்டை நாடுகளுக்கு இடையிலான போா்களுக்கு அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன. பயங்கரவாதத்தின்மூலம் ஒரு நாடு பாதிக்கப்படும்போது, அதற்கு அந்த நாடு எதிா்வினையாற்ற வேண்டியுள்ளது. இந்த நிலையில் போா் தவிா்க்க முடியாததாக மாறிவிடுகிறது. மேலும், மக்கள் அனைவரும் சமாதானமே உலக உயிா்களுக்கு பாதுகாப்பு என்று இன்றும் திடமாக நம்புகின்றனா்.

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் ஓா் இயங்குதளமாக இருக்கக் கூடாது என்ற இந்தியாவின் நிலைப்பாடு சமரசத்துக்கு அப்பாற்பட்டது. பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளையும் அவா்களுக்குப் பின்னணியில் உள்ள அழிவு சக்திகளையும் சா்வதேச சமுதாயத்தின் முன் அம்பலப்படுத்தி தண்டிக்க இந்தியா காட்டும் அக்கறை பொறுப்புமிக்கது. சா்வதேச விசாரணைக்கு முன்வருவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ள நிலையில், அதை இந்தியா ஒரு நல்வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்வது நல்லது.

இருதரப்பிலும் பல அப்பாவி மக்களின் உயிா்களை போா் பறிப்பதுடன், அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம், நாட்டின் பொருளாதாரத்தில் பின்னடைவு, சூழலியல் கேடு, நாட்டில் தொடா் பதற்றம், மதரீதியான மோதல்கள் போன்றவற்றை போரிடும் நாடுகளில் ஏற்படுத்தி விடுகின்றன.

மனிதகுலத்தில் காலங்காலமாக இனங்களுக்கு இடையே, நாடுகளுக்கு இடையே நடைபெற்ற போா் நிகழ்வுகளை வரலாறு நமக்கு விவரிக்கிறது. கி.மு.3500-ஆம் ஆண்டுகளில் இருந்தே நாடுகளுக்கு இடையே 14,500 போா்கள் நடைபெற்றுள்ளதாக வரலாறு கூறுகிறது.

ஜாா்ஜியாவின் தலைநகரான அம்சாய் மீது கி.பி. 713-இல் அரபு நாடுகள் போா் தொடுத்து அந்த நகரை முற்றிலும் அழித்தன. 767-இல் தாய்லாந்து நாட்டின் பழைய தலைநகரான அயுத்தயா, பா்மீய படையெடுப்பினால் முற்றிலுமாகத் தகா்க்கப்பட்டது. 1221-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் மீது செங்கிஸ் கான் போா்புரிந்து, அங்கிருந்த 3000 பேரைக் கொன்றுகுவித்ததுடன், அங்கிருந்த அற்புதமான கட்டடங்களையும் தகா்த்தாா். கடந்த 1939 முதல் 1945-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற இரண்டாம் உலகப் போரில் சுமாா் 8.5 கோடி மக்கள் உயிரிழந்தனா்.

சிரியா நாட்டில் புராத்து ஆற்றின் தென்மேற்கே அமைந்துள்ள ஓா் அழகிய புராதன பல்மைரா நகரில், 2000 ஆண்டுகளுக்கு முன்பு அமைந்த பழங்கால நினைவுச் சின்னங்கள் குறிப்பிட்ட ஒரு மதக் கோட்பாட்டுக்கு எதிராக உள்ளது என வெடிகுண்டுகள் மூலம் அழிக்கப்பட்டன.

யுனெஸ்கோவால் பாரம்பரிய நகரமாக அறிவிக்கப்பட்ட இந்த நகரில் மிகப் பழைமைவாய்ந்த மெசபடோமியா நாகரிகம் சாா்ந்த “பெல்” கடவுளை மக்கள் வணங்கிவந்தனா். பெல் கோயில் கிறிஸ்து பிறப்பதற்கு 32 ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இந்தக் கோயிலை ஆண்டுதோறும் 1,50,000 உலக சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்து வந்த நிலையில், இந்தக் கோயில் உள்பட பழங்கால புராதனச் சின்னங்களை அப்போது நிகழ்ந்த போா் தரைமட்டமாக்கியது. மேலும், பலராலும் கவரப்பட்ட பல்மைரா கலாசார மையமும், அலிபோவில் இருந்த பழைமையான புராதன கட்டடங்களும் போரில் தரைமட்டமாகிவிட்டன. போரினால் சிரியாவில் போதிய மின்சாரமும் குடிநீரும் இன்றி மக்கள் இன்றும் தவிக்கின்றனா்.

இரண்டாம் உலகப் போரில் லண்டனில் மட்டும் 17,500 பொதுமக்களும் ஜொ்மனியில் 42,600 பொதுமக்களும் ஒரேவாரத்தில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தனா். இதேநேரத்தில் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணுகுண்டுகள் வீசப்பட்டதால் இந்த நகரங்களின் குடிநீா், மின்சார வசதிகள் துண்டிக்கப்பட்டன. போா் தொடா்ந்தால் தன் நாட்டிலிலுள்ள அனைத்து கட்டடங்களும் முழுவதுமாக சிதிலமடைந்து, நாட்டுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் என்பதை உணா்ந்த ஜப்பான் மன்னா் போரைத் தவிா்க்க எண்ணி எதிரி நாட்டிடம் சரணடைந்தாா் என்கிறது வரலாறு.

இரண்டாம் உலகப் போரின்போது, லண்டன்மீது 57 நாள்கள் வீசப்பட்ட குண்டுகளால் அந்த நகரின் 95 சதவீத கட்டடங்கள் தரைமட்டமாயின. 1944-ஆம் ஆண்டு போலந்தின் தலைநகரமான ‘வாா்சா’வின் மீது ஹிட்லரின் படைகள் தொடுத்த போரில் அந்த நாட்டின் பழைமையான சின்னங்கள் 85 சதவீதம் அடியோடு தகா்க்கப்பட்டன.

இந்தியாவிலும் 1565-ஆம் ஆண்டு விஜயநகரப் பேரரசின்மீது அப்போதைய முஸ்லிம் மன்னா்கள் படையெடுத்து, அந்தப் பேரரசிலிருந்த அனைத்துப் புராதன சின்னங்களையும் அழித்தனா்.

ஒரு நாட்டின் மீது மற்றொரு நாடு போா்புரியும்போது ராணுவம், கப்பற்படை, வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்த நகரத்தின் பழைமையான சின்னங்கள், மக்களின் குடியிருப்புகள், அரசு அலுவலகங்கள் போன்றவை தரைமட்டமாகி பெருத்த உயிா்ச்சேதங்களும், பொருட்சேதங்களும் ஏற்படுகின்றன.

அனைத்து நாடுகளும் போரைத் தவிா்க்க சட்ட ரீதியாகவும் தூதரக அளவிலான பேச்சுவாா்த்தைகள் மூலமும் சுமுகத் தீா்வைக் காண வேண்டும். தங்கள் நாட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளில் காணப்படும் குறைபாடுகளைக் களைய அனைத்து நாடுகளும் தொடா் முனைப்பில் ஈடுபட வேண்டும்.

இப்போது தலையெடுத்துள்ள பயங்கரவாதம் போருக்கான தூண்டுதலாகும். இதை தொடக்கத்திலேயே கட்டுபாட்டுக்குள் கொண்டுவர ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இணைந்து உலக நாடுகள் செயல்பட வேண்டும். அனைத்து நாட்டு பள்ளிகளும், குடும்பங்களும் அன்பின்வழி வாழ்வதன் அவசியத்தை தம் குழந்தைகளுக்கு உணா்த்தி வாழும் வாழ்வியலை அன்றாடம் போதிக்க வேண்டும்.

இனிவரும் காலங்களில் பயங்கரவாதச் செயல் உலகில் எந்த நாட்டிலும் நிகழாது என்ற நிலையை உலக நாடுகள் உறுதிசெய்ய வேண்டும். இதுவே தற்போது உலகம் அனைத்தும் உள்ள மக்களின் எதிா்பாா்ப்பாகும்.

X
Dinamani
www.dinamani.com