
நீதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி தற்போது உலகின் நான்காவது பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது என்று பெருமையாகப் பேசினார். மாநிலத்தின் வளர்ச்சி, அதன்மூலம் நாட்டின் வளர்ச்சி என்று சில அறிவுரைகளையும் வழங்கினார் பிரதமர். 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக உருவாக்கப்படும் என்றும் சொன்னார்.
பிரதமரின் பொருளாதார வல்லரசு மற்றும் 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சிபெற்ற நாடாக உருவாக வேண்டும் என்ற இந்த இலக்கை அடைய உயர்கல்வி மிகமிக அவசியம். இதை மத்திய, மாநில அரசுகள் முதலில் புரிந்துகொண்டு உயர் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் இந்த இலக்கு சாத்தியம்.
குறிப்பாக, இந்தியாவில் அதுவும் தென்னிந்தியாவில் இன்னும் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டுமானால், தமிழகத்தில் தனியார் மற்றும் அரசு பல்கலைக்கழகங்கள் உயர் கல்வி தரவரிசையில் போட்டிபோட்டுக் கொண்டு முன்னேறுகின்றன. இந்தக் கல்வி நிறுவனங்களில் படித்த பல மாணவர்கள் உலகம் முழுவதும் முக்கிய பதவிகளில் அமர்ந்து அந்தப் பல்கலைக்கழகங்களுக்கும் உயர்கல்விக்கும் கிடைத்த அங்கீகாரம் இது என்று பெருமையாகப் பேசுகிறார்கள்.
நாம் வளர்ந்த நாடு என்ற இலக்கை அடைய இதெல்லாம் போதாது. 1976-இல் அவசரகால சட்டத்தின்போது அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு கொண்டுவரும் அரசியல் சட்டத்தைத் திருத்தினார். இந்த சட்டம் மாநிலங்களின் கல்வி வளர்ச்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்துகிறது என்பதுதான் உண்மை. இதன் விளைவு, மத்திய மாநில அரசுகள் கல்விக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யமுடியாமல் செய்துவிட்டது.
நிதி ஒதுக்கீடு விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு முக்கியத்துவம் தருவதில்லை. கல்விக்கான நிதி ஒதுக்கீடு என்பது போதுமானதாக இல்லை என்பதற்கு மத்திய அரசின் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையே சாட்சி.
ரூ. 50 லட்சம் கோடியில் ஒரு லட்சம் கோடி மட்டுமே கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த பட்ஜெட்டில் 2.5 சதவீதத்துக்கும் குறைவு. தேசிய கல்விக் கொள்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் செலவிட வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறது. 60 ஆண்டுகளுக்கு முன்பு கல்வியில் மாற்றம் செய்வதற்காக அமைக்கப்பட்ட கோத்தாரி ஆணையமும் கல்விக்காக 6 சதவீதம் செலவிட வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறது. 60 ஆண்டுகளுக்கு முன்பும் 6 %; இப்போதும் 6 %. ஆனாலும், நாம் மூன்று சதவீதத்திற்கு குறைவாகத்தான் இப்போதும் செலவு செய்து வருகிறோம்.
ஒரு நாட்டில் வறுமை ஒழிய வேலையில்லாத் திண்டாட்டம் குறைய உயர் கல்வி மிகமிக அவசியம். ஒருகுடும்பத்தில் ஒருவர் உயர் கல்வி பெற்றாலே, அந்தக் குடும்பம் பொருளாதார ரீதியாக நிச்சயம் வலுப்பெறும் என்பதுதான் உண்மை. ஒரு குடும்பத்துக்கான அதே அளவுகோல்தான் இந்த நாட்டுக்கும் சரி, மாநிலங்களுக்கும் சரி. எனவே, நாம் எந்த அளவுக்கு உயர் கல்விக்கு முக்கியத்துவம் தருகிறோமோ அதைப் பொருத்துத்தான் நமது வளர்ச்சி இலக்கு எல்லாமே.
தனிநபருக்கு கல்விக்காக உலக நாடுகள் செலவு செய்யும் தொகையை ஒப்பிடும்போது நம் நாட்டில் மிகக் குறைவாகவே செலவு செய்யப்படுகிறது. கல்விக்கான பொது செலவினங்களில் உலக அளவில் ஒரு தரவரிசை உள்ளது. தரவரிசையில் உள்ள 190 நாடுகளில் 155-ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு நாடுகளில் சராசரியாக தனிநபர் உயர் கல்விக்காக செய்யப்படும் செலவு 17,000 டாலர். அமெரிக்கா 35,000 டாலர் செலவு செய்கிறது. மக்கள்தொகையில் நம்முடன் போட்டி போடும் நாடான சீனா 2400 டாலர் செலவு செய்கிறது. ஆனால், இந்தியா செலவு செய்வது 260 டாலர் மட்டுமே. நாம் உயர் கல்வியில் மிகவும் பின்தங்கி இருப்பதற்கு காரணம் இதுதான்.
இங்கிலாந்து நாட்டில் பல அரசு பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. ஆனால், அந்தப் பல்கலைக்கழகங்களின் செயல்பாட்டில் அரசாங்கம் தலையிடுவது கிடையாது. அவர்களுக்கு முழுச் சுதந்திரம் தந்திருக்கிறார்கள். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஓர் ஆய்வு நடத்தி பல்கலைக்கழகங்களுக்குத் தேவைப்படும் ஆலோசனைகளை மட்டுமே அந்த நாட்டு அரசாங்கம் வழங்குகிறது. அமெரிக்காவிலும் இதே நடைமுறைதான். உயர் கல்வியில் அவர்களது வெற்றி ரகசியம் இதுதான்.
கல்விக்கு மத்திய, மாநில அரசுகள் செலவு செய்ய மிகவும் யோசிக்கின்றன. இது மிகவும் கசப்பான உண்மைதான். இதை மத்திய, மாநில அரசுகள் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். மற்ற இலவசங்களில் காட்டும் அக்கறையை கல்வியில் காட்ட மத்திய, மாநில அரசுகள் யோசிக்கின்றன. உயர்கல்வி கட்டாயம் இலவசமாக இருக்க வேண்டும். தனியார் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் கல்விக் கட்டணச் சுமையை மத்திய மாநில அரசுகள் ஏற்கவேண்டும். அது வட்டி இல்லா கடனாக தந்தாலும் சரி; மாணவர்களுக்கு அது உதவித்தொகையாக இருந்தாலும் சரி; எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால், அந்தச் சுமையை அரசுதான் ஏற்கவேண்டும்.
இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் உயர் கல்வி கற்றவர்கள் சதவீதம் 28தான். இது "கிராஸ் என்ரோல்மென்ட் ரேஷியோ' அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. வளர்ந்த நாடுகளில் உயர் கல்வி கற்றோர் 60 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை இருக்கின்றனர். உயர்கல்வி படிப்போர் எண்ணிக்கை உயரஉயர நமது பொருளாதாரம் உயரும். இந்த உண்மை மத்திய- மாநிலங்களில் ஆட்சி செய்பவர்களுக்கு தெரியாமல் இல்லை. ஆனாலும் ஏன் தயங்குகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
இதேபோன்று, பல்கலைக்கழகங்களை தரவரிசைப்படுத்த வேண்டும். சர்வதேச அமைப்புகள் சில உலக அளவில் உள்ள பல்கலைக்கழகங்களை தரவரிசைப்படுத்துகிறது. அப்படி தரவரிசைப்படுத்தும்போது ஐஐடி உள்பட சில இந்தியப் பல்கலைக்கழகங்களும் குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்களும் தரவரிசையில் ஆண்டுக்கு ஆண்டு முன்னேறிக்கொண்டே போய்க்கொண்டிருக்கின்றன. அதேபோல மத்திய மாநில அரசுகளும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளை தர வரிசைப்படுத்தி உயர் கல்வி முன்னேற்றத்துக்கு மற்ற நாடுகளுடன் போட்டிபோடும் அளவுக்கு நமது கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும்.
என்னைப் பொருத்தவரை உயர் கல்வி யாருடைய பொறுப்பு? மத்திய அரசா?, மாநில அரசா? என்ற கேள்வி எழுமானால் இருவருக்குமே சமமான பொறுப்பு என்றுதான் என் பதில் இருக்கும். இந்த விஷயத்தில் மத்திய-மாநில அரசுகள் அரசியல் அதிகாரப் போட்டியைத் தவிர்த்து நாட்டுநலன், மாநில நலன் என்று யோசிக்க வேண்டும். இதேபோல மத்திய அரசு கல்வித் துறையில் அல்லது கல்விக் கொள்கையில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமென்றால் அதற்கு முன்பு மாநில அரசின் கருத்துகளைக் கேட்கவேண்டும். அவர்கள் கருத்துக்கும் மதிப்பளிக்க வேண்டும். அப்போதுதான் நாம் உயர் கல்வியில் முன்னேற முடியும்.
தற்போது இந்தியாவில் 1,334 பல்கலைக்கழகங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 64 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் 22 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்திய அளவில் 51,939 கல்லூரிகள் உள்ளன. இவற்றுக்கான உள்கட்டமைப்பு, தரம் உயர்த்துதல், வகுப்பறைகள், ஆய்வகங்கள், பயிற்சிக் கூடங்கள், தொழில்நுட்ப கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதை பற்றி யோசிக்காமல் நாம் கல்வியை அரசியல் ஆக்கிக்கொண்டிருக்கிறோம். அரசு கல்வி நிறுவனங்களுக்கும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் சமத்துவமின்மை இல்லை என்பதும் இப்போது பேசப்படுகிறது. இதுவும் பேசித் தீர்க்க வேண்டிய சாத்தியமான ஒன்றுதான்.
உயர் கல்விக்கு பெரிய நிதி மூலதனம் தேவை. தற்போது உள்ள கல்வி கட்டமைப்பை முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டும். இதில் நாம் அரசியல் பார்க்கக் கூடாது. உயர் கல்வியைப் பொருத்தமட்டில், நமது நாட்டில் தற்போது 15.98 லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர்; இது போதாது; இந்த எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டும்.
ஆசிரியர்களுக்குப் பல நிலைகளில் பல்வேறு விதமான பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். உலக அளவில் கல்வியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நாம் கவனித்து அதற்கேற்றபடி ஆசிரியர்களை நாம் தயார்படுத்த வேண்டும். அதற்குப் பயிற்சிக்கான மாதிரிகள் உருவாக்குதல், பயிற்றுநர்களுக்கான பயிற்சி, பயிற்சிக் கருவிகள், பரிசோதனை என்று தொடர்ச்சியாக நாம் திட்டமிட வேண்டும். இவற்றை செயல்படுத்தாத பல்கலைக்கழகத்தின் அனுமதி ரத்து செய்யப்படும் என்றுகூட எச்சரிக்கை செய்யலாம்.
அதேபோல பல்கலைக்கழக மானியக் குழு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு மாநிலங்களை கட்டாயம் கலந்து ஆலோசிக்க வேண்டும். இப்போதுகூட பல்கலைக்கழக மானியக் குழுவின் சில விதிமுறைகளை சில மாநிலங்கள் ஏற்க மறுத்து உச்சநீதிமன்றத்தின் கதவைத் தட்டுகின்றன. இதெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும்.
தமிழகத்தில்கூட துணைவேந்தர்களை நியமிப்பதில் இப்போது மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. உயர்கல்வி இப்போது தட்டுத்தடுமாறிக் கொண்டிருக்கிறது. இதை ஆரோக்கியமான அணுகுமுறையாக என்னால் பார்க்க முடியவில்லை. மத்திய-மாநில அரசுகள் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டிய பிரச்னை இது. அதற்கு உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் சரியான தீர்வாகாது.
அரசியல் கட்சிகளும், மத்திய அரசும் மாநில அரசுகளும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒன்றாக கலந்துபேசி முடிவெடுத்தால்தான் நாட்டில் கல்வியும் வளரும்; பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும். உலகின் எந்த நாட்டிலும் கல்வி விவாதப் பொருளாக இன்றுவரை இருந்தது இல்லை. ஆனால், இந்தியாவில் கல்வி சர்ச்சைக்குரிய, விவாதத்துக்குரிய ஒரு முக்கிய இடத்தில் இருப்பது நாம் அனைவரும் மிகவும் வருத்தப்பட வேண்டிய ஒரு விஷயம்.
கட்டுரையாளர்:
வேந்தர்,
வி.ஐ.டி. பல்கலைக்கழகம், வேலூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.