காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் வளங்களைப் பாதுகாப்பதற்கும் நிலக்கரிக்குப் பதிலாக நீர் மின் சக்தியையும் புதைபடிவ எரிபொருள்களுக்குப் பதிலாக சூரிய ஆற்றலையும் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்குப் பதிலாக மின்சார வாகனங்களையும் பயன்படுத்தப் போவதாகவும் அதற்கான முயற்சிகள் தொடங்கிவிட்டதாகவும் உலக நாடுகள் கூறுகின்றன.
தூய்மையானவை, பசுமையானவை மற்றும் நிலையானவை எனச் சான்றளிக்கப்படும் மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் மின்கலன்களின் பின்னால் ரத்தச் சுவடு கொண்ட தீவிர வறுமையும் குழந்தைத் தொழிலாளர்களின் மிகப்பெரும் பங்கும் உள்ளன.
லித்தியம் மற்றும் கோபால்ட் ஆகியவை மின்கலன்களை உருவாக்கப் பயன்படும் அரிய உலோகங்கள். மின்கலனை நிலையாக வைத்து பாதுகாப்பாக செயல்பட வைக்கும் கோபால்ட் ஒரு நீல-சாம்பல் உலோகம். இது பூமியின் மேலோட்டில் அல்லது மேலோட்டுப் பாறைகளில் காணப்படுகிறது. புதிதாக தயாரிக்கப்படும் பாதிக்கும் மேற்பட்ட மின்சார வாகனங்களின் மின்கலன்களில் 4 முதல் 30 கிலோகிராம் வரை கோபால்ட் பயன்படுத்தப்படுகிறது. உலகத் தேவைக்கான கோபால்ட்டின் 70 சதவீதம் காங்கோ என்ற நாட்டிலிருந்து கிடைக்கிறது.
பூமிக்கடியில் உலகின் மிகப்பெரிய கோபால்ட் படிவைக் கொண்டுள்ள ஆப்பிரிக்க கண்டத்தின் இரண்டாவது பெரிய நாடான காங்கோவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 3,74,876 கோடி (49 பில்லியன் அமெரிக்க டாலர்). வன்முறை, வறுமை மற்றும் ஊழல் நிறைந்த காங்கோவின் 9.2 கோடி மக்கள்தொகையில் 20 லட்சம் மக்கள் கோபால்ட் உற்பத்தியை நம்பி வாழ்கின்றனர்.
பெரிய அளவிலான தொழில்துறை சுரங்கம் மற்றும் சிறிய அளவிலான கைவினைஞர் சுரங்கம் என்ற இரண்டு வழிகளில் கோபால்ட் காங்கோவில் வெட்டியெடுக்கப்படுகிறது. 20 முதல் 30 சதவீத கோபால்ட் வெட்டியெடுக்கப்படும் கைவினைஞர் சுரங்கங்களை நிர்வகிக்க காங்கோ நாட்டில் தொழிலாளர் சட்டங்களோ, பாதுகாப்பு நெறிமுறைகளோ இல்லை. இந்தச் சுரங்கங்களில் சுமார் 2 லட்சம் சுரங்கத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்; இவர்களில் குறைந்தது 40,000 பேர் குழந்தைகள்; அவர்களில் சிலர் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள்.
குறுகலான செங்குத்து சுரங்கங்களில் சிறார்கள் நுழைகின்றனர். உலை போன்று வெப்பம் கொண்ட சுரங்கத்தில் இவர்கள் மனிதாபிமானமற்ற முறையில் கோபால்ட்டை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த குழந்தைகள் தினமும் மரண வாயிலில் வாழ்வதாக காங்கோ நாட்டு சூழலியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தக் குழந்தைகள் சில நேரங்களில் மண் வெட்டிகளைப் பயன்படுத்தினாலும் பெரும்பாலும் வெறும் கைகளால் கோபால்ட்டை தோண்டி எடுக்கிறார்கள். அவர்களுக்கு முகமூடிகள், கையுறைகள் மற்றும் வேலை செய்யும்போது வழங்கப்படவேண்டிய உடைகள் வழங்கப்படுவதில்லை. மிகக் குறைவான நேரத்துக்கு மட்டுமே ஆக்சிஜன் வழங்கப்படும் சூழலில் இந்தக் குழந்தைகள் மணிக்கணக்கில் சுரங்கங்களில் தோண்டுகிறார்கள். பாறையைத் தோண்டி எடுத்தவுடன் அவர்கள் கோபால்ட்டை பிரித்து, கழுவி, பின் அவற்றை விற்பனை செய்வதற்காக சந்தைக்கு எடுத்துச் செல்கிறார்கள். இந்தக் குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் ஊதியம் ரூ.75 மட்டுமே. (ஒரு டாலரை விடக் குறைவு).
2014 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளுக்கிடையே காங்கோவில் கைவினைஞர் சுரங்கப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட சுரங்கத் தொழிலாளர்களில் குறைந்தது 80 பேர் இறந்துள்ளனர் என்று ஐ.நா. சபை நடத்தும் ஒகாபி என்ற காங்கோ நாட்டு வானொலி தெரிவித்துள்ளது. 2019-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு சுரங்க விபத்தில் 43 தொழிலாளர்கள் இறந்தனர். காங்கோவில் சட்டவிரோதமாக பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருக்கும் கோபால்ட் சுரங்கங்களினால் ஒவ்வோர் ஆண்டும் 2,000 சுரங்கத் தொழிலாளர்கள் இறப்பதாக பிரிட்டிஷ் அகாதெமி மதிப்பிடுகிறது. உயிர் வாழ்பவர்களில் பலர் நிரந்தர நுரையீரல் பாதிப்பு, தோல் தொற்று மற்றும் பிற வறுமைக்கு உள்ளாக்கும் காயங்களுடன் வாழ்கின்றனர்.
காங்கோவின் 19 தொழில்துறை சுரங்கங்களில் 15 சுரங்கங்களை தன்வசம் கொண்டுள்ள சீனா, குழந்தைத் தொழிலாளர்கள் உற்பத்தி செய்யும் கோபால்ட்டை கொள்முதல் செய்து மின்கலன்கள் தயாரிக்கும் பணியில் முன்னணியில் உள்ளது. நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தரவுகளின்படி கடந்த 15 ஆண்டுகளில் காங்கோவில் உள்ள வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களின் சுரங்கங்களை சீன நிறுவனங்கள் வாங்கியுள்ளன. கோபால்ட்டுக்கு ஈடாக காங்கோவின் உள்கட்டமைப்பு, பள்ளிகள் மற்றும் சாலைகள் போன்றவற்றில் பில்லியன் டாலரை முதலீடு செய்வதாக சீனா உறுதியளித்துள்ளது. பள்ளி செல்லும் சிறுவர்கள் கோபால்ட் சுரங்கப் பணிகளில் ஈடுபடும்போது சீனாவின் உறுதிமொழி எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது கல்வியாளர்களின் கேள்வி.
மின்சார வாகனங்கள் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனம் தனது மின்சார வாகனங்களில் கோபால்ட் இல்லாத மின்கலன்களைப் பயன்படுத்தப் போவதாக 2020-ஆம் ஆண்டில் அறிவித்தது. ஆனால், இந்த அறிவிப்பு வெளியான சில மாதங்களில் ஆண்டுக்கு 6,000 டன் கோபால்ட் பெறும்வகையில் க்ளென்கோர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது என்று ப்ளூம்பெர்க் குயின்ட் என்ற செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இதுபோன்றே வோல்வோ, ரெனால்ட், மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் வோக்ஸ்வாகன் உள்ளிட்ட உலகின் மிகப் பெரிய மின் வாகன உற்பத்தியாளர்கள் ஒருவிதத்தில் காங்கோவின் குழந்தைத் தொழிலாளர்களைப் பயன்படுத்தி வருகின்றன.
2021-ஆம் ஆண்டில் 65 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனையாகியுள்ள நிலையில், 2040- ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 6.6 கோடியாக உயரும் என்று சர்வதேச எரிசக்தி நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது. எனவே கோபால்ட்டின் தேவையும் 198 கோடி கிலோவாக உயரும். குழந்தைத் தொழிலாளர்களின் உழைப்பினால் உருவாகும் மின்கலன்களால் இயங்கும் மின்வாகனங்களை சிலர் காலநிலை மாற்றத்துக்கான தீர்வு என்று கூறலாம். உண்மையில் இது மனித உரிமை மீறல். காலநிலை மாற்றத்திற்கான தீர்வு என்பது மனித உரிமை மீறலில் இருக்கக் கூடாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.