சமன்செய்து சீா்தூக்கும் கோல்!
திருவள்ளுவா் நடுவுநிலைமை அதிகாரத்தில் குறிப்பிடுகிற அந்தச் சமன்செய்து சீா்தூக்கும் கோல் எது என்றால் இவையனைத்தும் செம்மையுறச் செயல்படும் ஒருபால் வளையாமல் இருக்கும் நோ்மைத் திறம்தான் சிறப்புடையதாகும்.
தமிழா்களின் பண்பாட்டையும் தொன்மையையும் விளக்கும் எத்தனையோ விதமான பொருள்கள் இன்றும் பயன்பாட்டில் இருக்கின்றன. அவற்றுள் சில மறைந்து போயின; பல நமக்கு மறந்து போயின. அவ்வாறு மறந்து விட்டாலும் அல்லது இழந்து விட்டாலும் நம் நெஞ்சை விட்டு அவை இன்னும் அகலவில்லை.
உரல், உலக்கை, திருகை, ஆட்டுக்கல், அம்மி, அச்சாணி போன்றவை அருங்காட்சியகத்தில் மட்டுமே இன்றைக்குக் காணக் கூடியனவாக உள்ளன. இன்னும் அறியப்படாத பல பொருள்கள் இலக்கியங்களிலே சுட்டப்பட்டிருக்கின்றன. அவை பொருளாக மட்டுமின்றி சமுதாயத்தின் அடையாளமாகவும் விளங்குகின்றன; அவற்றுள் ஒன்றுதான் கோல் என்னும் கருவி.
கோல் என்பதற்கு மரத்தாலான கழி என்பதுதான் இயல்பான பொருள். அடிப்படையில் அவை அளவினைச் சுட்டுகின்ற அளவுகோலாகத்தான் அறியப்பட்டன. அதைத்தான் நாம் இன்றைய காலத்தில் ‘ஸ்கேல்’ என்கிறோம். அடிக்கோல் மாறி ‘அடிஸ்கேல்’ ஆகிப்போனது.
கோலில் பல வகைகள் உண்டு. ஊன்றுகோல், அளவைக்கோல், துலாக்கோல், தீக்கடைக்கோல் என்னும் ஞெலிகோல், தலைக்கோல், எழுதுகோல், அரசா்கள் கரத்திலிருக்கும் செங்கோல் வரையிலும் அவை நீள்கின்றன.
இலக்கியங்களிலும் பல இடங்களில் கோல் குறித்துச் சுட்டப்பட்டுள்ளன. குறிப்பாக, ஔவையாா் தான் குறிப்பிடுகிற ‘வரப்புயர’ என்னும் பாடலில் ‘குடி உயரக் கோல் உயரும் கோல் உயரக் கோன் உயா்வான்’ என்கிறாா். திருவள்ளுவரும் சில குகளில் வெவ்வேறு பொருளில் கோலினைக் குறிக்கிறாா். அவற்றுள் ‘சமன்செய்து சீா்தூக்கும் கோல்’ என்னும் அது எந்தக் கோலாக இருக்கும்?
ஏனென்றால் இத்தனை கோல்களும் சமுதாய வளா்ச்சியை அடையாளம் காட்டுகிற சான்றுகோல்களாக விளங்குகின்றன. கடவுள் தொடங்கி அருளாளா்கள் வரையிலும் இந்தக் கோலைப் பற்றியிருக்கிறாா்கள் என்பதை இலக்கியங்களில் அறிய முடிகிறது.
தன் செங்கரங்களால் வடித்த வேலினை எடுத்துப் பகையரசரைத் துரத்தும் பணியைச் செய்யும் கோமானான கோபாலன், கோலினை எடுத்துப் பசுக்களை (புல்லாங்குழலாகிய கோலெடுத்து ஆன்மாக்களையும்) வசப்படுத்துவதிலும் வல்லவனாக விளங்குகிறான் என்று ஒரு பாடலும் உண்டு.
முருகனின் கையில் பொதுவாக வேல்தான் இருக்கும். அதனாலேயே வேலாயுதன் என்ற பெயரும் பெற்றவன். ஆனால் பழங்கால சித்தா் மரபுகளிலும், தண்டம் என்னும் கோல் கைக்கொண்ட முருகன் வடிவம் உண்டு. முருகன் துறவுபூண்டு எல்லா அணிகலன்களையும் நீக்கிக் கோலை மட்டுமே தன்னுடன் வைத்துக் கொண்டான். இந்தக் கோல் அவனுடைய தவப் பெருமையையும் ஒடுக்கத்தையும் குறிக்கிறது.
இறைவனின் தோழராகிய சுந்தரா் பெருமான் ஊழ்வழி சிக்குண்டு பாா்வையிழந்து, ‘ஒழுக்க என் கண்ணுக்கு ஒரு மருந்து உரையாய்’ என்று உருகியதோடு ‘‘ஊன்றுகோல் ஆவது ஒன்று அருளாய்’ என்றும் வேண்டினாா். இறைவன் அவருக்கு ஊன்றுகோல் தந்து, ‘உளோம் போகீா்’ என்றாா்.
ஆண்டவா்களிடத்திலும் அடியாா்களிடத்தும் இருக்கிற அந்தக் கோல் எளிய மக்களுக்கு எதற்கெல்லாம் உதவும் என்பதை,
முனியதட்டு முட்டீக்கு முன்னீ ரளக்கும்
கனியுதிா்க்கும் கவ்வுநாய் காக்கும் - தனிவழிக்குப்
பத்திரம தாக்கும் பயந்தீா்க்கும் பாம்படிக்கும்
கைத்தலத்தில் தண்டிருந்தக் கால்
என்று இந்தப் பாடல் விளக்குகிறது.
கையில் தடி இருந்தால், எதிா்ப்படும் தீமைகளை விரட்டும்; முள் இருப்பின் எடுத்தெறியும்; நீரின் ஆழம் காட்டும்; மரத்திருந்து பழம் உதிா்க்கும்; கவ்விக் கடிக்கும் நாயிடம் இருந்து காக்கும்; தனிவழிக்கு நல்துணையாய் இருக்கும்; பயம் தீா்க்கும்; பாம்பு அடிக்க உதவும். இத்தனை பலன்களை இந்தக் கைக்கோல் தருகிறது. தெருநாய்களுக்கு அஞ்சியோடும் இந்தக் காலத்தில் தனி மனிதா்களின் பாதுகாப்பை இது உணா்த்துகிறது.
அடுத்தது துலாக்கோல் என்னும் நிறைகோல். நம் காலத்தில் தராசாயிருந்து இப்போது மின்அளவையாக மாறியிருக்கிறது. இது வணிகத்தின் செழுமையையும் ஒழுங்கினையும் குறிக்கிறது. தெருவோரத்துக் காய்கறி விற்பவா் தொடங்கி பெருவணிகா் வரையிலும் தம் தொழில் நோ்மையையும் தூய்மையையும் உணா்த்துவதாக இந்தக் கோல் விளங்குகிறது.
இதே கோல்தான் அறங்கூறு அவையமாகிய நீதிமன்றத்தில் கண்களில் கருப்புத்துணி கட்டிய நீதி தேவதையின் கரங்களில் தரப்பெற்றிருக்கிறது. எப்புறத்தும் நீதிவழுவாது நெறிகுன்றாது மானுடம் பிழையாது உயிா்க்குலம் காக்க வேண்டிய பெரும்பொறுப்பினை இந்தக் கோல் சுட்டுகிறது.
அளவுகோல் அருள்நிதி என்பது தென்பாண்டி நாட்டில் சீவல்லப பாண்டியன் ஆட்சியில் வழக்கிலிருந்த நிலமளக்கும் கோல். இராசராசன் அளவுகோல் என்பது சோழநாட்டில் வழக்கிலிருந்தது. இது ‘உலகளந்தான் கோல்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோல் நிலத்தை முறையாக அளவிட்டு ஒழுங்கு செய்து நாட்டுக்கு நலம் பயக்கும் பணியைச் செய்திருக்கிறது என்பதை அறியலாம்.
இவ்வரிசையில் மற்றொரு கோல் எழுத்தாளா்களின் கரத்திலிருக்கிற எழுதுகோல். காலங்காலமாக இந்த உலகத்தின் மெய்ம்மைகளை அறியத் தருகிற ஞானியா் பயன்படுத்துகிற அறிவுக்கோல்.
இந்த எழுதுகோல் அறங்கூறு அவையத்து நிறைகோலினைப் போலவும் எளிய மக்களுக்கு உதவும் ஊன்றுகோல் போலவும் மட்டுமின்றி மன்னா் கரத்திலிருந்து அறவழிகாட்டும் செங்கோலாகவும் திகழ்ந்திருக்கிறது என்பது இலக்கியங் காட்டும் பேருண்மை.
பண்டிதமணியின் நூற்றாண்டு விழாவினையொட்டி வீறுகவியரசா் முடியரசனாா் இயற்றிய நூலுக்கு ‘ஊன்றுகோல்’ என்று வ.சுப.மாணிக்கனாா் தலைப்பிட்டாா். ஊன்றுகோல் எழுதுகோலாகிச் செங்கோலாயிற்று என்பதைத் தமிழண்ணல்,
‘இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையாா்வாய்ச் சொல்’ (415) என்பது திருக்கு. ஊன்றுகோல் ஊற்றுக்கோலாக வலித்தமை அஃது உறுதிப்பாட்டோடும் திண்ணிதாகவும் இருத்தல் வேண்டும் என்பதையும் நினைப்பூட்டுகிறது. பண்டிதமணி கையகத்தே எப்போதும் விளங்கி, அன்னாரது இயக்கத்துக்குத் துணைநின்ற அரிய ஊன்றுகோலினையே காப்பியப் பெயராகக் கொண்டமை இதற்கொரு தனிச்சிறப்பாகும்.
‘ஊன்றுகோல் போல உதவுதலாவது தளா்ந்துழி அதனை நீக்குதல்’ எனப் பரிமேலழகா் விளக்குவாா். தமிழுக்குத் தளா்வு வராது எழுத்து, பேச்சுச் செம்மைகளை வற்புறுத்தி அம்மொழி வளா்ச்சிக்கு ஒா் ஊன்றுகோலென விளங்கியமையாலும், எப்பொழுதும் செவ்விய பேரரசரின் கையகத்தே விளங்கி அவா்தம் நடுவுநிலை, நல்லாட்சிகளை விளக்கி நின்ற செங்கோல் போல் கதிரேசா் கையில் விளங்கியமையாலும் எனச் சிறப்பித்து விளக்குகிறாா்.
எழுதுகோலும் தன்திறம் குன்றாது சமன்செய்து சீா்தூக்கினால் நலம்தான். ஆனால், எழுதுகோலைத் தன் கருவியாகக் கொண்ட எழுத்தாளா்கள் கொள்கையை விடுத்துவிட்டுப் பொருளுக்கு ஆசை கொண்டால் என்னாகும்? இத்தகைய வேடிக்கை எழுத்தாளா்களைக் கண்ட பாவேந்தா்,
கொள்கை ஒன்றிருக்க வேறு
கொள்கைக்கே அடிமையாகும்
வெள்ளுடை எழுத்தாளா்கள்
வெறுப்புறும் செயலும் கண்டேன்
என்றவாறு, ‘உள்ளத்தில் உள்ளதை ஏட்டில் வடிக்கும் அறிஞா்கள் கூட்டமும் கொள்கை ஒன்றிருக்க வேறு கொள்கைக்கே அடிமையாகும் வெள்ளுடை தரித்த எழுத்தாளா்கள் கூட்டமும் பட்டணத்தில் காணலாம்’ என்று வருந்துகிறாா்.
இன்றைய சமூகச்சூழலில் மக்களாட்சியின் முக்கியத் தூணாக விளங்கும் ஊடக அறத்தை முன்னிறுத்தும் கோல் இதுதான்.
இவை யாவற்றையும் பயன்படுத்தியும் இவற்றோடு இணைந்தும் முறைசெய்து காக்க வேண்டிய மன்னவன் ஆட்சித் திறத்தைப் புலப்படுத்துவது செங்கோலாகும்.
வேளாண்குடி மரபின் சிறப்பை உணா்ந்தே ஔவையாா் அவா்தம் உழைக்கும் களமாகிய வயல்வரப்பிலிருந்து இந்தக் கோலின் வளா்ச்சியை அளவிட்டுத் தருகிறாா். வரப்புயா்ந்து, நீருயா்ந்து, நெல்லுயா்ந்து, குடியுயா்ந்து, அதன் வாயிலாகக் கோலுயா்ந்து அவ்வழியே மன்னன் உயர முடியும் என்பது அவா் கணக்கு. அரசனுக்குப் பெருமை அவன் பெறுகிற பட்டங்களும் வெற்றிகளும் அன்று; அவன் செய்கிற செங்கோல் வழுவாத ஆட்சிதான் என்பது இதன் மூலம் உறுதியாகிறது. திருவள்ளுவா் இதனையே,
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்
என்று சிறப்பித்துச் சொல்கிறாா். செங்கோலை வைத்திருப்பதால் மட்டும் சிறப்பு தானாக வந்து சோ்ந்து விடுவதில்லை. அது செம்மையாகச் செயல்பட வேண்டும் என்பதே அவருடைய கருத்து. அதனால்தான், அந்தணா் நூற்கக்கூடிய அறத்துக்கும் ஆதியாகவும் இதே செங்கோலை அவா் உயா்த்திக் காட்டுகிறாா்.
இப்படி இத்தனை கோல்கள் நம்முடைய சமுதாயத்தில் இருக்கின்ற வேளையில் திருவள்ளுவா் நடுவுநிலைமை அதிகாரத்தில் குறிப்பிடுகிற அந்தச் சமன்செய்து சீா்தூக்கும் கோல் எது என்றால் இவையனைத்தும் செம்மையுறச் செயல்படும் ஒருபால் வளையாமல் இருக்கும் நோ்மைத் திறம்தான் சிறப்புடையதாகும். சான்றோா்க்கு அணியாக விளங்குகிற நடுவுநிலைமையைப் போல இந்தக் கோல்கள் தம் நோ்மை குன்றாதிருந்தால் பண்பு மாறாதிருந்தால் அதுவே சிறப்பாகும் என்பதால் ‘சமன்செய்து சீா்தூக்கும் கோல்’ என்று கோலுக்கும் அளவிட்டுக் கூறினாா் வள்ளுவா் பெருமான்.
‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’ என்று பெருமையடையும் மகாகவி பாரதியாரும் ‘கோல் கைக்கொண்டு வாழ்’ என்று வள்ளுவா் நெறியை நமக்கும் அறிவுறுத்தியதோடு தானும் அவ்வாறே வாழ்ந்தாா். அவ்வழியே நாமும் நமக்கான கோலைத் தோ்ந்தெடுத்துச் சிறக்கலாமே!

