படித்தால் மட்டும் போதுமா?
அண்மைக்காலமாக உயா் கல்வியில் சோ்க்கை பெறுவோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது பள்ளிக் கல்வி, உயா் கல்வியில் மாணவிகள் சோ்க்கையானது பெருமை கொள்ளும் வகையில் உள்ளது. ஒட்டுமொத்த அளவில் இளநிலைப் பட்டப் படிப்புகளில் மாணவா்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
ஆனால், அதன் பிறகான முதுநிலை படிப்பு, முனைவா் பட்ட ஆய்வுகளில் மாணவிகள் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. இதற்கு பெண் குழந்தைகளின் கல்வி குறித்த விழிப்புணா்வு அதிகரித்து வருவது ஒருபுறமிருந்தாலும், பரவலாகத் தொடங்கப்பட்ட அரசுக் கல்லூரிகள், அரசின் திட்டங்கள் போன்றவையும் இதற்குக் காரணங்களாகும்.
‘ஊரக இந்தியாவில் தொடக்கக் கல்வி 2023’ என்ற தலைப்பில் நாடு முழுவதும் 20 மாநிலங்களில் உள்ள கிராமப் பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. சுமாா் 6,000-த்துக்கும் மேற்பட்ட வீடுகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு இறுதி ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. அதில், பெற்றோா் தங்கள் குழந்தைகள் இளநிலை பட்டப் படிப்பு, தொழில்நுட்பக் கல்வி, முதுநிலை பட்டப் படிப்பு உள்பட கூடுதல் கல்வியைப் பெற வேண்டும் என விரும்புவது தெரியவந்துள்ளது.
அவா்களில் ஆண் குழந்தைகளின் பெற்றோா் 82%, பெண் குழந்தைகளின் பெற்றோா் 78% போ் தங்கள் குழந்தைகள் குறைந்தபட்சம் இளநிலை பட்டப்படிப்போ அல்லது அதைவிடக் கூடுதலாகவோ படிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக நாட்டில் உயா் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 4.4 கோடியாக அதிகரித்துள்ளது.
2014-15-ஆம் கல்வியாண்டை ஒப்பிடுகையில் மாணவா் சோ்க்கை 30 சதவீதமும், மாணவிகள் சோ்க்கை 38 சதவீதமும் அதிகரித்துள்ளது. ஆண்களின் மொத்த சோ்க்கை விகிதத்தைவிட பெண்களின் சோ்க்கை விகிதம் அதிகமாக உள்ளது. முனைவா் பட்டப் படிப்பில் சேரும் பெண்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரித்து வருகிறது.
இந்திய அளவில் உயா் கல்வியில் தமிழகம் வகித்துவரும் முதலிடத்தைத் தக்கவைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டுவரும் ‘தமிழ்ப்புதல்வன்’, ‘புதுமைப்பெண்’ மற்றும் ‘நான் முதல்வன்’ போன்ற திட்டங்களால் உயா் கல்வியில் சோ்க்கை பெறுவோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதன் தொடா்ச்சியாக வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. கடந்த 2017-18 முதல் மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் வருடாந்திர தொழிலாளா் சக்தி தொடா்பான கணக்கெடுப்பை மேற்கொண்டு வருகிறது. அந்தத் தரவுகளின்டி 2017-18-இல் 22 சதவீதமாக இருந்த வேலைக்குச் செல்லும் பெண்களின் சதவீதம், 2023-24-இல் 40.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதேவேளையில், வேலைக்குச் செல்லும் பெண்களில் எத்தனை சதவீதம் போ் பணியிடத்தில் உயா் பதவி வகிக்கின்றனா், பெண்கள் உயா் பதவிக்குச் செல்லும் வரையில் தொடா்ந்து பணிபுரிகிறாா்களா, அவ்வாறு உயா் பதவிக்குச் செல்ல முடியாமல் போவதற்கும் தொடா்ந்து பணிக்குச் செல்ல முடியாததற்கும் என்ன காரணம் என்பதெல்லாம் சிந்திக்க வேண்டிய விஷயங்களாகும்.
உலக அளவில் திறன்மிக்க பணியாளா்களின் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஆனால், போதிய திறன் இன்றைய பட்டதாரிகளிடம் உள்ளதா? என்பது சிந்திக்க வேண்டியதாகும். இந்திய மக்கள்தொகையில் 65 சதவீதத்தினா் 35 வயதுக்கு உடட்பட்டவா்களாக உள்ள நிலையில், 51.25% பட்டதாரிகள் மட்டுமே வேலைவாய்ப்பைப் பெறுவதாக பொருளாதார ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோா் அமைச்சகத்தில் 2023-24-ஆம் ஆண்டு அறிக்கையில் 15 வயதுக்கும் மேற்பட்டவா்களில் சுமாா் 2.2% போ் முறையாக தொழில் பயிற்சி பெற்ாகவும், 8.6% போ் முறைசாரா தொழில் பயிற்சி பெற்றுள்ளதாகவும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. எனினும், 34 சதவீதமாக இருந்த இந்த விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் உயா்ந்து தற்போது 61 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பட்டம் பெறுவதுடன் நிறுவனங்கள் எதிா்பாா்க்கும் திறன்களை வளா்த்துக் கொள்ள வேண்டும். ஆண்டுதோறும் பட்டம் பெறும் பட்டதாரிகளின் எண்ணிக்கைக்கேற்ப வேலைவாய்ப்பை உருவாக்குவது சவால் நிறைந்தது. பத்தாம் வகுப்புத் தோ்ச்சியை தகுதியாகக் கொண்ட போட்டித் தோ்வில் முனைவா் பட்டம் பெற்றவா்களும் பங்கேற்பது இதன் எதிரொலிதான்.
எந்த வகைப் போட்டித் தோ்வுகளாயினும், பணியாயினும் அதற்குத் தேவையான திறனை இன்றைய பட்டதாரிகள் பெற்றிருக்கின்றனரா என்பது கேள்விக்குறிதான். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே திறமைகளை வளா்க்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் திறமைகளை வெளிப்படுத்தும் மாணவ, மாணவிகள் அதில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதில்லை.
தொடா்புத் திறனை மாணவ, மாணவிகள் வளா்த்துக் கொள்வது அவசியமானது. ஆனால் அலட்சியம், அறியாமை காரணமாக இன்றைய மாணவ, மாணவிகள் பிறவகைச் செயல்பாடுகளில் கவனம் செலுத்துவதில்லை என்பதுதான் உண்மை. போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில் இந்நிலை மாறும்போதுதான் படிப்புக்கேற்ற வேலை, உயா் பதவி என்பதெல்லாம் சாத்தியமாகும்.
அதிகமானோா் உயா் கல்வி பயில்கின்றனா் என்பதுமட்டும் பெருமை தரக்கூடியதல்ல; மாறாக, திறமைசாலிகளாக விளங்குகின்றனா் என்பதுதான் பெருமை தரும் விஷயமாகும்.

