சென்னை மாநகராட்சி உபயோகமற்ற பொருள்களை வீடுகளிலிருந்து நேரடியாகச் சென்று பெறும் வரவேற்கக் கூடிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒரு முன்னெடுப்பு. நமது வீடுகளில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைத் தூய்மைப் பணியாளர்கள் தினமும் வாங்கிச் செல்கிறார்கள். இருப்பினும், இவற்றைத் தவிர்த்து, தாவரக் கழிவுகள், தேவையற்ற படுக்கைகள், உடைந்த தளவாடங்கள் உள்ளிட்டவற்றை மக்கள் குப்பையாகப் பொது இடங்களில் வீசிச் செல்கிறார்கள். இவை பொது இடங்களில் ஆங்காங்கே குவிந்து சுகாதாரச் சீர்கேடாகவும், நீர்நிலைகளில் அடைப்புகளாகவும் மாறி விடுகின்றன.
இதைத் தவிர்ப்பதற்காக, மாநகராட்சி சார்பில் வாரத்தில் சனிக்கிழமைதோறும் வீடுகளுக்கு நேரடியாகத் தூய்மைப் பணியாளர்கள் சென்று, உபயோகமற்ற பொருள்களைப் பெற்றுக் கொள்வார்கள். இந்தத் திட்டத்தை நாம் வெற்றிகரமாகச் செயல்படுத்திவிட்டால், நகரின் ஒட்டுமொத்தத் தூய்மை ஓரளவுக்கு சீரடைய வாய்ப்புள்ளது.
ஒவ்வொருவர் வீட்டிலும் தேவையற்ற பொருள்கள் குவிந்து கிடக்கின்றன. நுகர்வுக் கலாசாரம் பெருகிவிட்டதால், எதையாவது வாங்கிக் கொண்டே இருக்கிறோம். நாம் உபயோகித்த கட்டில், மேஜை போன்றவற்றை யாருக்காவது கொடுத்துவிடலாம் என்று நினைத்தால், பழைய பொருள்களைக் கொடுக்கின்றோம் என்று அவர்கள் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடும் என்ற அச்சம் உண்டாகிறது. எந்தப் பொருளும் நம் வீட்டை விட்டுப் போகாது; அனைத்தும் வீட்டை அடைத்துக் கொண்டு கிடக்கும்.
வீட்டுக்குள் இருக்கும் இந்தப் பொருள்களைத் தவிர, நம் வீட்டுக்கு வெளியே கண்களை உறுத்துவது கட்டடக் கழிவுகள். மக்கள் பெரும்பாலும் இரவில், சாலைகள், நடைபாதைகள் மற்றும் பிற இடங்களில் இவற்றைச் சட்டவிரோதமாகக் கொட்டிவிட்டுப் போய்விடுகிறார்கள். கட்டுமானக் கழிவு மேலாண்மை குறித்த விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் தெளிவாக இருக்க வேண்டும். சட்டவிரோதமாகக் கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிப்பதிலும், விதிகளைச் சரியாக அமல்படுத்துவதிலும் உள்ள குறைபாடுகள் சரிசெய்யப்பட வேண்டும்.
மேலை நாடுகளில் நம்மைப்போல் கட்டடக் கழிவுகளைத் தெருவில் போட்டு வைப்பதில்லை. வேலை நடக்கும்போது ஒரு பெரிய கலனில் போட்டு விடுகிறார்கள்; பின்னர், அதற்கான உரிமம் பெற்ற நிறுவனங்கள் அந்தக் கழிவுகளை அப்புறப்படுத்துகின்றன. ஆகவே, மாநகராட்சி இவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முதலில் மாநகராட்சி, அறிவித்திருக்கும் திட்டத்தை முழுவீச்சில் அமல்படுத்த வேண்டும். இந்தச் சேவையைப் பயன்படுத்தப் பொதுமக்கள் 1913 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற தகவல் பலருக்கும் சென்றடையவில்லை.
பிரிட்டன் போன்ற மேலை நாடுகளில், மக்கள் தாங்கள் விரும்பாத, ஆனால் இன்னும் பயன்படுத்தக்கூடிய பொருள்களை, குறிப்பாக சிறிய மற்றும் நல்ல நிலையிலுள்ள பொருள்களை, தங்கள் வீட்டின் முன் "எடுத்துச் செல்லுங்கள்' என்ற குறிப்புடன் வைத்துவிடுகிறார்கள். அங்கு இது ஒரு பொதுவான நடைமுறை; முறைசாரா மீண்டும் பயன்படுத்துதல் அல்லது பகிர்ந்து கொள்ளும் கலாசாரத்தின் ஒரு பகுதியாகும்.
நல்ல நிலையில், பயன்படக்கூடிய நிலையிலுள்ள பொருள்கள் குப்பைக்குப் போவதைத் தடுக்க இது உதவுகிறது. சமூகத்தில் தேவை உள்ளவர்களுக்கு இலவசமாகப் பொருள்களை வழங்கி உதவ முடிகிறது. நமக்கு உபயோகமில்லாத பொருள்களை எளிதாக அப்புறப்படுத்தவும் ஏதுவாக இருக்கிறது. ஆனால், இவ்வாறு தினமும் வைப்பதில்லை; மாதத்தின் முதல் ஞாயிறன்று மட்டுமே வைக்கிறார்கள். தங்களின் வீட்டு முகவரியை ஆன்லைனில் தெரிவித்து விடுகிறார்கள். குழந்தைகளின் உடைகள், பொம்மைகள், புத்தகங்கள், கைப்பை, காலணிகள், கண்ணாடிக் குடுவைகள், தட்டுகள், தேநீர் கோப்பைகள் என எல்லாவற்றையும் அழகாக வைத்திருந்தார்கள். தேவைப்பட்டவர்கள் காரில் வந்து தேவையானதை மட்டும் எடுத்துப் போனார்கள். பேராசைப்பட்டு அனைத்தையும் அள்ளிப் போட்டுக்கொண்டு போகவில்லை.
இதில் வியப்பு என்னவென்றால், குழந்தைகளின் பொம்மைகள் மற்றும் விளையாட்டுப் பொருள்கள் அனைத்தும் மிகவும் நல்ல நிலையில் இருந்தன. உடைந்து போனது, பயனற்றது என எதுவும் இல்லை. எந்தப் பொருளையும் உடைக்கக் கூடாது, பொறுப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், அதன் தேவை முடிந்த பின் யாருக்காவது தர வேண்டும் என்றும் பிள்ளைகளுக்குச் சொல்லி வளர்க்கிறார்கள். அதனால் அந்தப் பொம்மைகள், சாமான்கள் எதுவும் பாழாகவில்லை. அடுத்த குழந்தைக்கு வேண்டும் என்று அவர்கள் பாதுகாத்து வைப்பதில்லை. கதவுகள் மூடப்பட்டு இருப்பதாலும், சாலைகளில் அதிக மக்கள் நடமாட்டம் இல்லாததாலும், யாரும் கூர்ந்து பார்க்காததாலும், மக்கள் கூச்சமின்றிப் பொருள்களை எடுத்துப் போகிறார்கள்.
எந்த வீட்டுக்கும் வாசலில் கேட் கிடையாது; இரண்டு அடி பக்கவாட்டு சுற்றுச்சுவர் மட்டுமே உள்ளது. முன்பக்கம் கேட் இல்லை. தெருவுக்கும் வீட்டுக்கும் இடையே நிறைய இடம் உள்ளது. அதனால் அங்கே பொருள்களை அழகாக வைத்து விடுகிறார்கள். சில வீடுகளில் ஆப்பிள்களைக்கூட ஒரு பையில் போட்டு வைத்துவிட்டு, "எடுத்துக் கொள்ளுங்கள்' என்று வைக்கிறார்கள்; தேவைப்படுவோர் எடுத்துச் செல்கிறார்கள்.
பெரிய பொருள்களை இவ்வாறு வாசலில் வைக்கக் கூடாது. இதற்கு உள்ளாட்சி மன்றத்தின் மொத்த கழிவு சேகரிப்பு சேவையைப் பயன்படுத்த வேண்டும். ஒரு சிலர் மட்டுமே வீட்டின் முன் வைக்கிறார்கள். சிலர் பொருள்களை அப்புறப்படுத்த வேறு சில வழிகளைப் பின்பற்றுகிறார்கள். இணையவழி தளங்கள் அல்லது குழுக்கள் மூலம் தாங்கள் கொடுக்க விரும்பும் பொருள்களைப் பட்டியலிடுகிறார்கள். இலவசமாகவோ அல்லது விலைக்கோ கொடுத்து விடுகிறார்கள். பயன்படுத்திய பொருள்களை விற்கும் கடைகள் தனியே உள்ளன. மிக மிக நல்ல நிலையில் உள்ள கம்பளி உடைகள், கைப் பைகள், போர்வைகள் ஆகியவற்றை இங்கு இலவசமாகக் கொடுத்து விட்டால், அவற்றை அவர்கள் விற்பனை செய்துவிட்டு, அந்த வருவாயைத் தொண்டு நிறுவனங்களுக்குக் கொடுத்து விடுகிறார்கள்.
இந்த நடைமுறையை நம் நாட்டில் முயற்சி செய்யலாம். தற்போது நிறைய அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. ஒவ்வொரு குடியிருப்பிலும் 500 - 1,000 வீடுகளுக்கு மேல் இருக்கின்றன. அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட மாதத்தில், தங்களுக்குத் தேவையில்லாத, அதேசமயம் பயன்படுத்தக்கூடிய பொருள்களைக் காட்சிப்படுத்தலாம்; அதற்கு ஒரு விலையையும் நிர்ணயிக்கலாம்; தேவைப்படுவோர் அந்தப் பொருள்களை வாங்கிக் கொள்வார்கள். இதையே ஒவ்வொரு நலச் சங்கமும் பின்பற்றலாம். இந்தத் திட்டம் ஓரளவுக்கு வெற்றி பெற்றால், ஒரு பொது இடத்தில் ஏற்பாடு செய்து இதை விரிவுபடுத்தலாம்.
மாநகராட்சியின் உபயோகமற்ற பொருளை வாங்கிப் பெறும் திட்டமானது, 15 மண்டலங்களிலும் நடைபெற்று, வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட வேண்டும். தீவிரமான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
ஒரு வயதுக் குழந்தை எடுத்தவுடன் நடந்து விடுகிறதா என்ன? அது எழும், விழும், ஒரு தப்படி வைக்கும்; மீண்டும் விழும்; சுதாரித்துக் கொண்டு எழுந்து நடக்கும். விழுந்து எழுந்து பின் நன்றாக நடக்கக் கற்றுக் கொள்ளும்; அதேபோல்தான் நம் திட்டங்களும் அவற்றின் முன்னெடுப்புகளும், மக்களின் மனப்பான்மையும்; தொடக்கத்தில் தொய்வு ஏற்படும், சுணக்கம் வரும். மக்கள் உடனே பழகிக் கொள்ள மாட்டார்கள்.
எண்மப் பரிவர்த்தனை வந்தபோது, "படிக்காதவர்களுக்கும், சிறு வியாபாரிகளுக்கும் இது பிடிபடுமா?, சாமானியர்களால் இந்தப் பரிவர்த்தனையை செய்ய முடியுமா?" என்று பல சந்தேகங்கள் எழுந்தன. தற்போது கீரை விற்கும் பெண்மணி, தெருவில் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்யும் தாத்தா, சமோசா விற்கும் நடைபாதை வியாபாரி என அனைவரும் எண்ம வர்த்தகம் செய்கிறார்கள்.
"குதிரையை தண்ணீருக்கு அருகே கொண்டு செல்லத்தான் முடியும், அதைக் குடிக்க வைக்க முடியாது' என்பார்கள். தற்போது அதைக் குடிக்க வைக்க முடியும். குதிரையின் வாயை அகலத் திறந்து, குழாய் மூலம் வம்படியாகத் தண்ணீரை உள்ளே செலுத்தி குடிக்க வைக்க முடியும். அதுபோல, எப்படியாவது, எந்த உத்தியையாவது கையாண்டு, மாநகராட்சி தொடங்கியுள்ள இந்த அருமையான திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த வேண்டும். 15 மண்டலங்களில் வெற்றி பெற்றுவிட்டால், பின் அனைத்து மண்டலங்களிலும் அதை அமல்படுத்த வேண்டும். அதற்குப் பிறகு, அனைத்து மாவட்டங்களுக்கும் இதைக் கொண்டு செல்லலாம்.
மக்கள் தாங்கள் பயன்படுத்தாத, ஆனால் நல்ல நிலையில் உள்ள பொருள்களை பிறருக்குக் கொடுப்பதில் உள்ள தயக்கத்தைப் போக்க வேண்டும். இதற்கு கலாசார ரீதியான மாற்றம் தேவை. சென்னை மாநகராட்சியின் இந்தத் திட்டம் ஒரு நல்ல தொடக்கப் புள்ளி. உபயோகமற்ற பொருள்களைப் பெற்றுச் செல்லும் பணியாளர்கள், அவற்றைத் தரம் பிரித்து, மறுபயன்பாட்டுக்கு அல்லது மறுசுழற்சிக்கு அனுப்புவதில் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு திட்டத்தின் வெற்றிக்கு, அதன் செயல்பாட்டில் உள்ள நேர்மையும், நம்பகத்தன்மையும் மிக முக்கியம்.
நகர்ப்புறங்களில் வீட்டுச் சங்கங்கள் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கங்கள் தாமாக முன்வந்து, பிரிட்டன் போன்ற நாடுகளில் உள்ள முறையைப் பின்பற்றி, "இலவசமாக எடுத்துச் செல்லுங்கள்' போன்ற நிகழ்வுகளைத் தொடங்கலாம்; மாநகராட்சிக்கு இது ஒரு சுமையைக் குறைக்கும்.
நீண்டகாலமாக அப்புறப்படுத்தப்படாமல் இருக்கும் கட்டடக் கழிவுகள், தேவையற்ற பொருள்கள் ஆகியவை குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கவும், அவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முனைப்புக் காட்ட வேண்டும். தண்டனைகள் இருந்தாலும், அவற்றைத் துல்லியமாக அமல்படுத்தும் போதுதான் மக்கள் சட்டங்களுக்கு மதிப்பளிப்பார்கள். தேவையில்லாதது வெளியேறட்டும்; தேவைப்படும் மாற்றம் வீட்டிலிருந்து தொடங்கட்டும்.
கட்டுரையாளர்:
பேராசிரியர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.